வியாழன், ஜூன் 13, 2019

புராணக் குப்பைகளைப் பாடமாக்கி பிஞ்சுகளிடம் நஞ்சேற்றும் கொடுமை


புராணக் குப்பைகளைப் பாடமாக்கி பிஞ்சுகளிடம் நஞ்சேற்றும் கொடுமை

மு.சிவகுருநாதன்


   (நொய்டாவைச் சேர்ந்த மதுபன் எஜுகேஷனல் புக்ஸ் வெளியிட்ட தமிழ் அருவி எனும் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் குறித்து, மே 27, 2019 இல் ‘தனியார் பாடநூல் சர்ச்சை: நாசா வியந்த திருநள்ளாறு – சில குறிப்புகள்’ என்ற கட்டுரையொன்றை எழுதியிருந்தேன். இக்கட்டுரையை மதுரையில் வெளியாகும் ‘சஞ்சிகை’ எனும் கலை, இலக்கிய, சூழலியல் சிற்றிதழில் ஜூன், 2019 இதழில் வெளியிடப்பட்டது. அதன் ஆசிரியர் திரு கோ.முருகராஜ் அவர்களுக்கு நன்றி. அந்தப் பாடநூல் முழுமையாக இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது. எனவே மேலும் சில குறிப்புகள்.)






    மத்தியக் கல்வி வாரியத்தால் (CBSE) அங்கீகரிக்கப்பட்ட பாடநூலாம் இது! ‘நீட்’ போன்ற தேர்வை நடத்த இரண்டு ஆண்டுகளாகத் தடுமாறியதை நாமறிவோம்.  ‘நீட்’ தேர்வுகளுக்குப் பிறகு மக்கள் CBSE பாடத்திட்டதை நாடும் போக்கு அதிகரித்துள்ளது. அவர்கள் அனுமதித்த இந்தப் பாடநூலில் தரம் அவர்களின் தரத்தையும் சேர்த்தே கேள்விக் குறியாக்குகிறது. CBSE, NCERT பாடத்திட்டங்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை. மேலும் இவை வட இந்தியாவை முதன்மைப்படுத்தி, தமிழகத்தைப் புறக்கணிப்பவை. 


    இந்தியா போன்ற பன்மைத்துவ நாட்டில் (உண்மையில் இது நாடல்ல; நாடுகளின் ஒன்றியமே.)  தில்லி எல்லாருக்குமான பாடத்தை உருவாக்க இயலாது.  இவற்றுடன் ஒப்பிடும்போது, தமிழகப் புதிய பாடநூல்கள் எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் பெருமை மிதப்பில் வாளாயிருக்க இயலாது. இவற்றை இன்னும் மேம்படுத்தவும் பிழைகளைக் களையவும் சில ஆலோசனைகளையும் குறைகளையும் சுட்டிவருகிறேன்; கேட்கத்தான் ஆளில்லை. 

     திருநள்ளாறு குறித்த ஒரு பாடமே முன்பு சர்ச்சைக்குள்ளானது. அப்பாடமே நூலின் தரத்திற்கு சான்று. இந்த நான்காம் வகுப்புப் பாடநூலில் உள்ள (தமிழ் அருவி) மேலும் முட்டாள்தனமான, அறிவுக்குப் புறம்பான, வரலாற்றைத் திரிக்கும், குழந்தைகளிடம் நஞ்சை விதைக்கும் சில கருத்துகளை இங்கு தருகிறேன். இதற்குத் தனியே விளக்கம் தேவையில்லை. வாசித்தாலே இதன் அறிவீனம் எளிதில் புலப்படும்.  

 
     தெரிந்து கொள்க பகுதியில், “ஆலயங்களில் மணியோசை எழுப்புவதற்குக் காரணம் என்ன தெரியுமா?”, என்ற தலைப்பில்
     “கோயில் மணி ஒலிப்பதால் இட, வல மூளை இரண்டும் இணைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகின்றன. ஒலி முடியும் இறுதி 7 வினாடிகள் நம் உடலின் உள்ள ஏழு சக்கரங்களையும் தூண்டுகிறது”. (பக்.34) இதன் அறிவியல் ஆதாரங்கள், உண்மைகள் என்ன? 

    ‘நானாக இருந்தால்’ எனும் ஐம்பூதப்பாடல் பாடநூலாசிரியரால் எழுதப்பட்டுள்ளது. (பக்.35) இப்பாடலில் பயின்று வரும் பஞ்ச பூதங்களை அறிந்து எழுதுக. (பக்.36) என்ற வினாவும் உண்டு. 

  பூமியைக் காத்திடுவோம் பாடத்தில் “தாவரங்கள் எவ்வகையான காற்றை உட்கொள்கின்றன எனத் தெரியுமா?” என்று கேட்டு, ‘கார்பன் – டை- ஆக்ஸைடு’ என்று சொல்லி, (பக்.38) “மரங்கள்  கார்பன் – டை- ஆக்ஸைடைக் கிரகித்துக் கொண்டு, ஆக்ஸிஜனை வெளிவிடும்”(பக்.39) உட்கொள்ளுதல், கிரகித்தல் என்றெல்லாம் சொல்பவர்கள் ஒளிச்சேர்க்கை பற்றி பேசவே இல்லை. எனவே தாவரங்கள் கார்பன் – டை – ஆக்சைடை சுவாசிக்கும் என்ற பொய்மையைப் பரப்ப இது வழிகோலும். 

    தொழிற்சாலைக் கழிவுகளை, “நிலத்தடியில் செலுத்த வழிவகை செய்ய வேண்டும்”, (பக்.39) என்ன அருமையான் கண்டுபிடிப்பு? கூடங்குளம் அணு உலைக் கழிவுகளே அங்கேயே புதைக்க முயற்சிப்பதைப்போல எல்லாக் கழிவுகளை புதைத்துவிட்டால் போயிற்று!


   ‘தூய்மை இந்தியா’ திட்டப் பரப்புரையும் உண்டு. (பக்.42) 2019 அக். 02 க்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறையாம்! இன்னும் சில மாதங்கள் தான், பார்த்து விடுவோம்.

  ‘தமிழ் வாழ்க! வளர்க!’ பாடத்தில் கல்வெட்டு ஒன்றின்  படத்துடன் பின்வரும் செய்தி உள்ளது. “சிங்கப்பூரின் முதல் இந்துக் கோயிலான மாரியம்மன் கோயிலில் தமிழ்க் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதுவே முதல் கல்வெட்டு ஆகும்”. (பக்.46) முதலில் தமிழன் தோன்றிய இடமாகக்கூட இது இருக்கலாம்! 

   “தமிழ்நாட்டில் தலபுராணங்கள் எழுந்த காலத்தில் இலங்கையிலும் தலபுராணங்கள் எழுந்தன”, பக்.48) இருக்கலாம், அவற்றைக் கொண்டு நீங்கள் வரலாற்றையே எழுதுகிறீர்களே!  

  “தமிழ்நாட்டின் பெருமொழியாகத் தமிழ் மற்ற நாட்டினராலும் வளர்க்கப்படுவது பெருமைப்பட வேண்டிய செய்தி ஆகும்”. (பக்.48) ஆனால் உங்கள் அளவிற்கு தமிழை யாராலும் வளர்க்க இயலாது! 

    பழமொழிக் கதை ஒன்றில் பிறரை ஏமாற்றி பொருளை அபகரிக்க நினைக்கும் கதாபாத்திரம் ஒன்றின் பெயர் இராமசாமி! (பக்.55 & 56) எங்கள் ராமசாமி மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு சினம்? 

    “சூரியன் தோன்றி மறையும் இடம் -------------------------“ , (பக்.60) இதற்கு ‘கன்னியாகுமரி’ என்று எழுத வேண்டுமாம்!

    ‘தமிழனின் சித்த வைத்தியம்’ எனும் பெயரில் நண்டுவாக்களி கடித்ததற்கு  ‘கொப்பரைத் தேங்காய் தின்ன’ பரிந்துரைப்பது அபாயகரமானது. (பக்.67) எல்லாம் விக்கிபீடியா உபயம்! 


   18 வது பாடம் ‘சோழப் பேரரசும் சாதனையும்’. இதில் “சோழ வம்சத்தைத் தோற்றுவித்தவர் விஜயலாய சோழன் ஆவான். சோழ வம்சத்தில் தலைசிறந்தவர் பலர். அவர்களின் பெருமையைக் காண்போம்”, (பக்.78) என்று சொல்லி, கரிகால சோழன், இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன், சிபிச் சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் ஆகிய ஐவர் பட்டியலிடப்படுகின்றனர். 

  கரிகால சோழன், “வேளாண்மை செய்து பெறப்பட்ட கற்பூரம், பனிநீர், குங்குமம் போன்றவற்றை ஏற்றுமதி செய்தான்”. (பக்.79) இந்த வேளாண்மைத் தீரத்தை வியக்காமலிருக்க முடியாது! 

   தஞ்சைப் பெரிய கோவில் 81 டன் “விமானத்தின் நிழல் கீழே விழாது” (பக்.80) விமானமுல்ல; பிறகெப்படி நிழல் கீழே விழும்? உடைஞ்சு விழுந்தாதான் உண்டு! 

   “வாயுக் கடவுளுக்குக் கட்டப்பட்ட காளஹஸ்தி கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது”. (பக்.80) ஏன் இவரால் தமிழ்நாட்டில் கோயிலே கட்டப்படவில்லையா? 

     சிபிச் சக்கரவர்த்தி தலைப்பில், “புறாவைக் காப்பற்ற நினைத்த மன்னன் புறாவின் தசைக்குப் பதிலாகத் தன் கை, தொடையினின்றும் தசையை அறுத்து வைத்தும் சமமாகாத காரணத்தால் தன்னையே பருந்துக்குக் கொடுத்தான். சிறந்த கருணைமிக்கவர்கள் சோழ மன்னர்கள்”. (பக்.80)

    மனுநீதிச் சோழனின் புராணக்கதையைச் சொல்லி, “இவ்வாறாகச் சோழ மன்னர்கள் அரசு நியதிகளைச் சரியாகப் பின்பற்றினர். மக்களுக்கு வேண்டிய நலன்களைப் புரிந்தனர்”. (பக்.81)

  மேலும், “இவர்களது காலத்தில் ஒளவையார், காக்கைப் பாடினியார், வெள்ளிவீதியார் எனப் பெண்பாற்புலவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினர். சோழர் காலம் பொற்காலமாக விளங்கியது”. (பக்.81)

சோழர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பட்டியல்


  • கம்பர்
  • ஜெயங்கொண்டார்
  • கோவூர்கிழார்
  • ஒட்டக்கூத்தர்
  • ஒளவையார்
  • புகழேந்திப் புலவர் (பக்.82)


    “இராமாயணத்தில் இடம்பெறும் சிரவணன், தன் தாய் தந்தையைத் தோளில் சுமந்து கொண்டு சென்றவன். அவன் கதையை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்க”. (பக்.88) இந்தக் கதைகள் உருவாக்கும் நன்னெறிகள் எவை? 

  “கோதுமை குளிர்ந்த காலநிலையில் தான் வளரும்”. (பக்.104) சிம்லா, காஷ்மீர் மாதிரியா? கோதுமை விளைவது மிதவெப்ப மண்டலக் காலநிலை. 

   “அதியமான் தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை ஒளவைக்கு அருளியது போல; காரைக்கால் அம்மையார் தான் வைத்திருந்த இரு மாம்பழங்களில் ஒன்றினை இரவலர்க்குக் கொடுத்ததைப் போல; அதன் அப்பூதியடிகள் நாவுக்கரசருக்குத் தன் மகன் பாம்பின் நஞ்சால் இறந்த போதும் உணவு படைத்தது போல எந்தச் சூழ்நிலை வரினும் விருந்தோம்பும் உயர்ந்த குண உடையவர்கள் தமிழர்கள்”. (பக்.118)

   தெரிந்து கொள்க’ பகுதியில், “குடவோலைமுறை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தும் பழைய தேர்தல் முறை ஆகும். மக்கள் கூடித் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் பெயர்களை ஓலைச்சுவடியில் எழுதிப் பானையில் போட்டுக் குலுக்கல் முறையில்  தேர்ந்தெடுப்பது ஆகும்”. (பக்.119) “குடவோலை முறை என்றால் என்ன?” (பக்.120) என்ற வினாவும் உண்டு. 

    ‘பண்டையத் தமிழரின் பண்பாடு’ (பக்.116) என்ற 29 வது பாடத்தில் குருகுலக் கல்வியின் பெருமை சங்க இலக்கியங்கள் வாயிலாகப் பேசப்படுகிறது! 

    “பண்டைய தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கினர் என்பதைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். பொருளியலுக்கான இலக்கணத்தை வகுத்து வாழ்ந்து காட்டியுள்ளனர். வாழ்வுக்கு இலக்கணம் வகுத்ததோடு நின்றுவிடாமல் உலகம் போற்றும் பொய்யாமொழியாகிய திருக்குறளை உலகுக்குத் தந்து சிறப்புச் செய்துள்ளனர். ஆண்கள் மட்டும் கல்வி பயிலவில்லை. பெண்களுக்கும் கல்வி அளிக்கப்பட்டுள்ளது.  அவர்களும் பல பாடல்கள் பாடிச் சங்க இலக்கியத்துக்குப் பங்காற்றி உள்ளனர். ஒளவையார்,  காக்கைப் பாடினியார், வெள்ளிவீதியார் போன்ற பெண்பாற் புலவர்கள் தமிழர் பண்பாட்டை வெளிக்கொணர்ந்தனர். அனைவரும் குருகுலக்கல்வி முறையைப் பின்பற்றிக் கல்வி கற்று வந்தனர்”. (பக்.116) நல்லவேளை, ஏகலைவனிடம் கட்டைவிரல் கேட்டு வாங்கியதைப்போல இவர்களின் நாக்கை அறுக்கவில்லை; தப்பித்தார்கள்! 

     இவ்வளவு பெருமைகளைக் கொண்ட இப்பாடநூல்களை குழந்தைகள் கற்பது எவ்வளவு மோசமான வன்முறை. இதில் தவறுகளைத் திருத்த ஒன்றுமில்லை; முற்றிலும் குப்பை; தூக்கி வீசவேண்டிய பொருள்.  மலந்துடைக்க வேண்டுமானால் பயன்படுத்தலாம். 

    இது நான்காம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் மட்டுமே. இதைப்போல பிற வகுப்புப் பாடங்கள் எப்படியிருக்கும் நினைத்தால் பேரச்சமாக உள்ளது. இவை முற்றாக குழந்தைகளிடமிருந்து திரும்பப்பெற வேண்டும். 

   CBSE பள்ளிகள் இதைப் பயன்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும். CBSE க்கு விண்ணப்பம் அளித்த தனியார் சுயநிதிப்பள்ளிகளும் இப்பாடநூல்களைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான போக்கு. மத்திய கல்வி வாரியத்திற்கு விண்ணப்பித்து விட்டால் போதும். இவர்கள் CBSE பாடத்திட்டம் என்று சொல்லி வசூல் வேட்டையில் இறங்கி விடுகிறார்கள். (தொலைதூரக்கல்விப் பட்டத்திற்கு விண்ணப்பித்துவிட்டு, வேட்புமனுவில் பட்டம் போட்டுக்கொண்ட முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ரானி கதை தெரியுந்தானே!) 

   அங்கீகாரம் இல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவது போல, போலி CBSE பள்ளிகளை தமிழக அரசும் கல்வித்துறையும் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். CBSE அங்கீகாரமும் இல்லாமல், தமிழகப் பாடநூல்களைப் பயன்படுத்தாமல் உள்ள இந்த போலி CBSE பள்ளிகள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பள்ளிகளிலிருந்து இத்தகைய பாடநூல்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழக அரசின் பாடநூல்கள் வழங்கப்பட வேண்டும். தனியார் பாடநூல்களை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். அரசுப் பாடநூல்களிலுள்ள பிழைகளும் உடனடியாகக் களையப்பட வேண்டும். 

  முந்தைய கட்டுரையை வாசிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக