மொழி மற்றும் கலைப் பாடங்களும்
அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தலாம்
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்:
07)
ஏழாம் வகுப்பு முதல் பருவ ஆங்கிலப் பாடத்தில்
கீழ்க்கண்ட ‘Do you know?’
பத்தி இடம்பெறுகிறது.
Do you know?
The Bermuda Triangle is one of the
greatest unsolved mysterious spots in the world. It is s triangular shaped area
in the North Atlantic Ocean. Hundreds of people and numerous boats, ships and
planes have disappeared inside this triangle. The reason for these
disappearances still remains a mystery. (page: 116, VII English)
இதைத் தோராயமாக பின்வருமாறு
மொழிபெயர்க்கலாம்.
உங்களுக்குத்
தெரியுமா?
‘பெர்முடா’ முக்கோணம் உலகில் மிகப்பெரிய விடை
காணமுடியாத மர்மமான இடங்களில் ஒன்றாகும். இது வட அட்லாண்டிக் பெருங்கடலின் முக்கோண
வடிவப் பகுதி. நூற்றுக்கணக்கான மக்கள், படகுகள், கப்பல்கள் மற்றும் விமானங்கள்
இப்பகுதியில் காணாமற்போயுள்ளன. இதற்கான காரணம் இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது.
‘பெர்முடா’ முக்கோணம் போன்ற பல்வேறு புனைவுகள்
உலகில் இருக்கின்றன. இவற்றை அறிவியல்பூர்வமாக அணுகாமல் மீண்டும் மீண்டும்
கற்பனைகளையே உருவாக்கிவிட உலகில் பெருங்கூட்டம் உண்டு. பல அறிவியல் விளக்கங்கள்
அளிக்கப்பட்ட போதிலும் வேற்றுக் கிரகவாசிகள் போன்ற புனைவுகளே நிலைத்து நிற்கின்றன.
சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகள் அடிப்படையில் இவை முதன்மை பெறுகின்றன. அவற்றை
அப்படியே ஏற்றுப் பரப்புவது பாடநூல்களுக்கு உகந்ததல்ல.
அண்மையில் இதை ஆய்வு செய்த ஆஸ்திரேலிய
அறிவியலாளர் கார்ல் க்ருஷெல்னிக், இயற்கை
மாற்றங்களை உணர மறுக்கும் மனிதத் தவறுகள், மிக மோசமான காலநிலை, அவ்விடத்தின் கடுமையான
நிலவியல் அமைப்பு ஆகிய அம்சங்களே இதற்குக் காரணம் என்பதை விளக்கியுள்ளார்.
‘பெர்முடா’ முக்கோணம் பகுதியில் படகுகள்,
கப்பல்கள் மற்றும் விமானங்கள் காணாமற்போவதற்கு வேறு காரணங்களோ, மர்மங்களோ இல்லை
என்று சொல்லி ‘மர்மம்’ எனும் புதிரை விடுவித்துள்ளார். எனவே இனியும் ‘மர்மம்’
எனும் பூச்சாண்டி காட்டாமலிருப்பது நலம்.
அறிவியல் மனப்போக்கை வளர்க்க அறிவியல்
பாடநூல்களால்தான் முடியும் என்பதில்லை. மொழி போன்ற கலைப் பாடங்களும் இந்தப்பணியைச்
செவ்வனே செய்யமுடியும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பீதியூட்டல்,
மூடநம்பிக்கைகளைப் பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது. மாறாக ‘fantasy’
ஐ உருவாக்குவது என்பது வேறு; ‘myth’ களை சமூகத்தில் பரவலாக்குவது பாடநூலின் பணியாக
இருக்கவியலாது.
(இன்னும் வரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக