தலைமுறை நினைவுகள்
மு.சிவகுருநாதன்
எங்களது மூத்த பெரியம்மா திருமதி முத்துலெட்சுமி அம்மாள் 11/09/2020 அன்று மதியம் வயது முதிர்வால் காலமானார். இன்று மதியம் (12/09/2020) அவரது உடலைத் தகனம் செய்து திரும்பினோம். அவரது வயது கண்டிப்பாக 90 ஐத் தாண்டும். அதன் வழியே மூன்று தலைமுறைகளின் கதையும் விரியும். பல்வேறு இன்ப, துன்பங்களைத் தாங்கிப் பெருவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கரியாப்பட்டினம் கா.சந்தானம் - சிவக்கொழுந்து தம்பதிகள் எங்களது தந்தைவழி தாத்தா - பாட்டி. இவர்களுக்கு மூன்று பெண்கள், நான்கு ஆண்கள் என 7 குழந்தைகள்; பக்கிரி, இராமையா, முருகையன், முனியப்பன், லோகாம்பாள், கண்ணம்மாள், காமாட்சி என...
எங்களது அப்பா ச.முனியப்பன் கடைக்குட்டி. அவரது சிறுவயதிலேயே 1930 களின் மத்தியில் தந்தையை இழந்தது இக்குடும்பம். மூத்த பிள்ளைகளின் தோளில் குடும்பச்சுமைகள் விழுந்தது.
கூலிவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற மூத்தப்பிள்ளை பக்கிரி பெரும்பாடுபட்டார். மாடு மேய்த்தல், மர ஏறுதல் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார். 1990 களில் தொடக்கத்தில் அவர் காலமானார். அவருக்கு வாழ்க்கைத்துணையாக வந்தவர்தான் இந்த முத்துலெட்சுமி அம்மாள். குடும்பச் சுமையை இவரும் சேர்ந்தே சுமந்தார்.
தந்தையை இழந்த சோகமும் அவர் மீதான அன்பும் பக்கிரி, இராமையா ஆகிய இரு பெரியப்பாக்கள் தங்களது ஒரே ஆண் குழந்தைக்கு முறையே சந்தானம், சந்தான கிருஷ்ணன் என்று பெயரிட்டதில் வெளிப்படுகிறது. சந்தான கிருஷ்ணன் ஓராண்டிற்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
மிகுந்த சிரமங்களிடையே கரியாப்பட்டினத்தில் இருவரும் அண்ணாப்பேட்டையில் இருவருமாக நால்வருக்கும் சேர்த்து தலா 11 ஆண், பெண் குழந்தைகள் என பிற்காலத்தில் இருந்தது.
பெரியம்மாவிற்கு 15 வயதில் திருமணம் நடந்திருக்கும். அப்போது எனது அப்பாவிற்கு 10 வயது இருந்திருக்கலாம். 'சின்ன பிள்ளை' என்றழைத்து இன்னொரு தாயாக கவனித்துக் கொண்டவர் இவர். அடுத்தடுத்த அண்ணிகளைப் பற்றிச் சொல்லும்போது சிந்தாமணி, மணியம்மா என்று பெயரைக்குறிப்பிட்டுப் பேசும் எனது தந்தை இவரை மட்டும் 'கோடியக்கரை ஆச்சி' என்று மரியாதையுடன் விளிப்பது வழக்கமாக இருந்தது.
மூன்று அத்தைகளும் சில ஆண்டுகளில் விதவையாயினர். ஒரு அத்தை திருமணமான சில மாதங்களில் கணவனை இழந்து இவர்களோடு வாழ வேண்டிய நிர்ப்பந்தம். அந்தத் துயரங்களையும் குடும்பம் சேர்ந்தே கடந்தது.
பெரியப்பா - பெரியம்மாவின் முதல் மகள் கலைமணியை அத்தை மகன் மதியழகனுக்கு மணம் முடித்தனர். இன்று அவர்கள் இருவரும் உயிருடன் இல்லை.
எங்கள் குடும்பத்தின் முதலும் கடைசியுமான நெருங்கிய உறவுத்திருமணம் அது. அந்த அண்ணாப்பேட்டை அத்தையின் வீட்டில்தான் அப்பா முதலில் பள்ளியைத் தொடங்கினார் (1952). அந்த அத்தைதான் தனது தம்பியான எங்கப்பாவிற்கு பக்கத்து ஊரில் (திருக்குவளைக்கட்டளை) எங்கம்மாவைப் பெண் பார்த்துத் திருமணம் செய்துவைத்தார்.
எங்கள் அப்பா மீது சினங்கொள்ளும் நேரங்களில கண்ணம்மா அத்தையை அம்மா திட்டுவதும், நல்ல தருணங்களில் கனிவுடன் நினைவு கூர்வதும் அம்மாவின் வழக்கம் என்பதைப் பலதடவைக் கண்டுள்ளேன். காமாட்சி, கண்ணம்மா ஆகிய இரு அத்தைகளில் இறுதிக்காலம் எங்கள் வீட்டில் எங்களுடன் கழிந்தது. அவர்களையும் தனது தாய் தந்தையரையும் கவனித்துக் கொள்ளும் பெரும்பேறு பெற்றார் அம்மா.
20 கி.மீ. தூரத்திலுள்ள எங்கள் ஊருக்கு எளிதாக நடந்தே வந்துவிடுவார் பெரியப்பா. பெரியம்மா இறுதிக்காலத்தில் மறதி நோயால் அவதிப்பட்டார். (அல்சைமராகக் கூட இருக்கலாம்.)
வீட்டை விட்டு வெளியே சென்று கால்போன போக்கில் நெடுந்தொலைவு சென்று விடுவதும் பிறகு தேடிச் சென்று அழைத்து வருவதும் தொடர்கதையானது.
எல்லாருக்கும் முதுமை ஒரு கொடுமையாகவே இருக்கிறது. நடமாட்டத்தில் இருந்தாலும் படுக்கையிருந்தாலும் சிக்கலாகத்தான் இருக்கிறது.
பெரியம்மா நடமாட்டத்தில் இருந்தார். எங்களது அம்மா இரண்டாண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இரண்டுமே ஒரு வகையில் சோகமயமாகவே உள்ளது.
இறுதி ஆண்டுகளில் அவரைச் சென்று பார்க்காமலிருந்தது குற்ற உணர்வாய் எஞ்சி நிற்கிறது. வேறு எந்த குறிப்பிட்ட நோய்த்தொந்தரவும் இல்லாத நிலையில் இன்னும் பல ஆண்டுகள் வாழ்வார் என்று நினைத்திருந்தேன். இயற்கை அவரது வாழ்வை முடித்துக் கொண்டது.
எங்கள் குடும்ப வழியில் ஒரு மூத்த உறுப்பினர் என்ற வகையில் அவருடன் பழங்கதைகளை உரையாடி அறிய முடியாமற்போனது பெரும் இழப்பு. மூன்று தலைமுறை நினைவுகளுடன் அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார். எங்களது அம்மாவின் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்த சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.