திங்கள், பிப்ரவரி 27, 2012

மெத்தப் படித்த மூஞ்சுறுகள்

மெத்தப் படித்த மூஞ்சுறுகள்                    -மு.சிவகுருநாதன் 


         கூடங்குளம் அணு உலைப் பிரச்சினையில் முதலில் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஏரோ நாட்டிகல் எஞ்சினியரிங் படித்த அப்துல் கலாம் களமிறங்கினார் அல்லது இறக்கப்பட்டார். அணு உலை பாதுகாப்பானது; இதனால் எவ்வித கதிரியக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லையென்றார். நிலவியல் படித்தவர் போல நிலநடுக்கம் வரவே வராதென்றார். பயப்படுபவர்கள் வரலாறு படிக்கமுடியாது என்று சொல்லி தனக்கு சம்மந்தம் இல்லாத அனைத்துத் துறைகளுக்கும்  தானே விஞ்ஞானி என்ற புதிய வரலாற்றைப் படித்தார். இதைப்பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. இனியும் எழுதி நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்றெண்ணுகிறேன்.

       அடுத்து புற்றுநோய் மருத்துவர் சாந்தா களமிறக்கப்பட்டார். ரேடியோதெரபி மருத்துவம் செய்யும் இவர்   back ground radiation,   front ground radiation  குறித்தெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்களில் அருளினார். காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை தோற்றது போங்கள்! அணு உலைப்  பகுதியில் இவர் ஏன் புற்றுநோய் மருத்துவமனை திறந்தார் என்ற கேள்விக்கு இன்னும் இவரிடமிருந்து பதிலில்லை. 

       அணு உலை  பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய அரசின் நிபுணர் குழு பேரா. முத்துநாயகம் குழுவிலும் இடம்பெற்ற பலர் அணு உலைக்கு ஆதரவானவர்கள். எனவே அவர்களின் அறிக்கையும் நாம் எதிர்பார்த்ததுபோல அணு உலைக்கு ஆதரவாகவே இருந்தது.


        தமிழக அரசு அமைத்த அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியன் தலைமையில் அணுசக்திக்கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவொளி , ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயராகவன் ஆகிய நால்வர்  அடங்கிய நிபுணர் குழுவும் தன்னுடைய இரு மணி நேர ஆய்வை முடித்து  பல்வேறு தரப்புக் கருத்துகளையும் கேட்டு, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கக்கூட பொறுமையின்றி உடன் தங்களுடைய வரலாற்று சிறப்புமிக்க ஆய்வுமுடிவுகளை வெளியிட்டு சென்னை திரும்பினர். இவர்களும் நிலவியல், புவியியல் நிபுணர்களைப் போன்று நிலநடுக்கம் வராது என்றனர்.

      அணு உலை ஆதரவுக் கும்பலில் லேட்டஸ்ட் வரவு  இந்திய பிரமோஸ் ஏவுகணையின் தலைமை கட்டுப்பாட்டாளர் விஞ்ஞானி டாக்டர் எ.சிவதாணுப் பிள்ளை. தமிழகத்தில் ஒரு பள்ளி விழாவில் பேசும்போது, நமக்கு மின்சாரம் வேண்டும் ; எனவே அணு உலையும் வேண்டும். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது. இவ்விஷயத்தில் நிபுணர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் தமிழக மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

     2014 இல் நிலவுக்கு ஆட்களை அனுப்பப்போவதாகவும்   தெரிவித்துள்ளார். சந்திராயன் -01 தோல்வியை இவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இன்னும் மக்களிடமும் மத்திய அரசிடமும் பொய்யான தகவல்களைச் சொல்லி சந்திராயன் -02  திட்டத்திற்கு நீதி ஒதுக்கீடும் அனுமதியும் பெறுகிறார்கள்.

       பலகாலம் செயல்புரிந்து இயங்கும் என இவர்களால் சொல்லப்பட்ட சந்திராயன் -01  வெறும் 312 நாட்கள்தான் இயக்கத்திற்குப் பிறகு பழுதடைந்தது. இவ்வளவு குறைந்த நாட்களிலேயே சந்திராயன் -01    90% பணிகளை முடித்துவிட்டது என்று வாய் கூசாது பொய் சொன்னார்கள்.  தமக்குத் தொடர்பில்லாத அணு சக்தித் துறை குறித்தும் பொய்யாக வாய்க்கு வந்தபடி இவர்கள் பேசத்  தொடங்கியுள்ளார்கள். இவர்களின் பிதாமகன் அப்துல் கலாம்!

       கிராமங்களில் மெத்தப் படித்த மூஞ்சுறு கழனிப் பானையில் விழுந்ததாம்!  என்றொரு சொலவடை உண்டு. இன்னும் மெத்தப் படித்த எத்தனை மூஞ்சுறுகள் கழனிப் பானையில் விழுமெனத் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக