35 -வது சென்னைப்புத்தகக்கண்காட்சியின் இறுதி நாளில் ஓர் பருந்துப்பார்வை
இந்த ஆண்டின் 35 -வது சென்னைப்புத்தகக்கண்காட்சி ஜனவரி-05 முதல் 17 முடிய நடைபெற்றது. கூடங்குளம் பயணம், உடல்நலக்குறைவு, பிற பணிகள் என்று நீண்டதால் இவ்வாண்டு புத்தகக்கண்காட்சிக்குச் செல்ல முடியாமல் போய்விடுமோ என்ற பயம் தொற்றிக்கொண்டு விட்டது. கடைசியாக இறுதிநாளில் (17.02.2012) சென்னை சென்று திரும்பிய பிறகுதான் சற்று நிம்மதி ஏற்பட்டது.
எப்போதும் போலவே வழக்கமான பல்வேறு குறைபாடுகளுடன் புத்தகச் சந்தை நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இருப்பினும் புத்தகங்கள் மீது கொண்டுள்ள காதலால் இவற்றை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. சென்ற ஆண்டு (2011) டிசம்பர் மாதத்தில் தினமணியில் நடுப்பக்கத்தில் ஒரு வாசகர் இந்த புத்தகச் சந்தை பற்றிய கட்டுரையொன்றை எழுதியிருந்தார். அதிலுள்ள பெரும்பாலான கருத்துக்களில் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.
இதைப் போலவே பல்வேறு தரப்பிலும் பல குறைகள் சுட்டப்பட்டு அதற்குத் தகுந்த ஆலோசனைகள் பல்லாண்டுகளாக வழங்கப்பட்டு வந்த போதிலும் இந்நிகழ்வை நடத்தும் பாபாஸி (BAPASI), இக்குறைகளைக் களைவதற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.
இன்று நம்மைப் பீடித்துள்ள 'கார்ப்பரேட்' கலாச்சாரத்திற்கு புத்தகச் சந்தையும் தப்பவில்லை. 4 கடைகள் இணைந்து இருபுறமும் வழிகளுடன் அமைக்கப்பட்ட F வரிசைக் கடைகளின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இதற்கிடையே தனித்த சிறிய கடைகள் முடங்கி விடுகின்றன. ஒருவரின் ஒரு சில புத்தகங்களுக்காகவே (உ.ம் மல்லூரி) முழுக்க முழுக்க விளம்பரத்துடன் பல கடைகள் மிளிர்கின்றன. இவற்றை பாபாஸி அனுமதிப்பது விசித்திரமாக உள்ளது. பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பாபாஸி செயல்படுவது கவலை அளிக்கிறது. நான்கு புத்தகங்களை வெளியிட்ட ஒரு பதிப்பகத்திற்கு எதற்கு F வரிசை இடம் ஒதுக்கப்படுகிறது. பணம் மட்டுந்தான் அளவுகோலா?
புத்தகங்களின் விலை மலைக்க வைக்கிறது. நூலக ஆணைகளை நம்பி அதிக பக்கங்கள், அதிக விலையுள்ள புத்தகங்கள் தயாரிக்கப்படுவதாக கருதுகிறேன். இந்தப் புத்தகங்கள் குறிப்பாக நாவல்கள் நூலகங்களுக்குச் சென்றாலும் கூட இதன் விலையைக் கொண்டு பார்வை நூலாக (Reference Book) வைக்கப்படுமே தவிர எளிய வாசகனுக்குப் படிக்கக் கிடைக்கப் போவதில்லை. இந்த நிலைக்கு ஏதாவது தீர்வு கண்டாக வேண்டும். புத்தகங்களை பதிப்பித்து விற்றுவிட்டோம் என்று மகிழ்வதில் என்ன பயன்? படிக்க வாசகனைச் சென்றடையாத நூற்களால் என்ன பலன்?
F வரிசைக் கடைகளில் இருபுறமும் வழிகள் இருப்பதால் நெரிசல் குறைவு. சிறிய கடைகள் தொடராக அமைந்த பாதைகளில் குறிப்பு பாதை 1, 2, 9, 10 ஆகிய பாதைகள் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. புத்தகம் வாங்க வரும் வாசகர்கள் இப்பகுதிகளில் நுழைந்து வருவதே மிகச் சிரமமாக உள்ளது. இப்பாதைகள் கடைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்ததுபோல் அகலம் அதிகமாக அமைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சிறிய பதிப்பகங்கள் புத்தகச் சந்தைக்கு வரவேண்டாம் என்று சொல்லாமல் சொல்வது போல் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தகங்களின் விலையைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். உணவகத்தில் விற்கப்படும் தின்பண்டங்கள் மற்றும் பானங்களின் விலை ஐந்து நட்சத்திர விடுதிகளின் விலையில் இருக்கிறது. இதில் பெருமளவு லாபம் பெற வழி செய்யப்படுகிறது. எங்கோ தூரத்திலிருந்து புத்தகங்களைத் தேடி வரும் வாசகனின் பணப்பையை பிடுங்கிக் கொள்ளும் எத்தனமாகவே இதை நினைக்கத் தோன்றுகிறது. இங்கு தரப்படும் தரமில்லாத பண்டங்களுக்கு ஏனிந்த விலை? பாபாஸி ஏன் இதை அனுமதிக்கிறது?
இந்த மாதிரியான பல்வேறு பிரச்சினைகளின் காரணமாகவே வாசகர்கள் புத்தகக் கண்காட்சியின் எதிரே நடைபாதையிலுள்ள பழைய புத்தகக் கடைகளை அதிகம் மொய்க்கத் தொடங்கி விடுகின்றனர். புத்தகச் சந்தை வாசகர்களை உள்ளிழுப்பதை விட தூரப்படுத்தும் வேலையைத் தான் செய்கிறது.
மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, நெய்வேலி, காரைக்குடி, தஞ்சாவூர் என பல்வேறு இடங்களில் புத்தகச் சந்தைகள் நடத்தப்படுகின்றன. இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள வாசிப்பார்வம் மிக்கவர்கள் பலனடைய ஏதுவாக இருக்கிறது. ஆனால் இவை முழுமையானது அல்ல. பெருந்தேடல் மிக்கவர்களுக்கு சென்னைப் புத்தகக் கண்காட்சிதான் ஈடுகொடுக்க முடியும். இதனை இன்னும் மேம்படுத்தி தரமானதாக மாற்ற தொடர்புடையவர்கள் முயற்சிக்க வேண்டும்.
600 க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் சுமார் 50 கடைகள் மட்டும் ஓரளவிற்குத் தரமான சீரியஸ் இலக்கியம், சமூகம், அரசியல், வரலாறு என குறிப்பிடத் தகுந்த நூற்களைக் கொண்டுள்ளன. இவற்றை நோக்கியே எனது தேடல் அமைந்திருந்தது.
நுழைவுக் கட்டணம் தேவையா என்ற கருத்து ஒருபுறமிருக்க புத்தகக் கண்காட்சியின் கடைகள் வரைபடத்தை (Stall Layout) நுழைவுச் சீட்டுடன் இணைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதி புத்தகாலயத்தில் இது கிடைத்தது. இதை நுழைவுச் சீட்டுடன் இணைத்து வழங்கினால் பதிப்பகங்களை கால் வலிக்க தேடுவது குறையுமல்லவா! தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI - The Bookseller's and Publishers Association of South India) இது குறித்து யோசிக்க வேண்டும்.
ஆண்டுதோறும் நூல்கள் விற்பனை கோடிக்கணக்கில் அதிகரித்துள்ளதாக கணக்கு சொல்கிறார்கள். நாம் உடனே தமிழகத்தில் பெரிய அறிவுப் புரட்சி ஏற்பட்டு விட்டதாக கனவு காண முடியாது. தரமான நூற்களை வெளியிடும் பல சிறிய பதிப்பகங்களை அணுகி கேட்கும் போது வியாபாரம் சரியில்லை என்றுதான் சொல்கிறார்கள்.
புத்தகச் சந்தையில் விற்பனையாகும் பலகோடி நூற்கள் எத்தகைய தரத்தைச் சார்ந்தவை என கேள்வியெழுப்பினால் இதற்கு விடை கிடைக்கும். ஜோதிடம், வாஸ்து, சுய முன்னேற்றம், தேர்வுக்குப் போடப்படும் நோட்ஸ் போன்ற நூற்கள்தான் அதிகம் விற்பனையாவதாகச் சொல்கிறார்கள். இதை அறிவுப் புரட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது.
தினமணி சென்னைப் பதிப்பில் ஒரு பக்கத்தை புத்தகச் சந்தைக்காக ஒதுக்கி கண்காட்சி பற்றிய தகவல்களைக் கொடுத்தார்கள். இவற்றில் சில சாய்வுகள் இருப்பினும் பாராட்டத்தக்க முயற்சி என்பதில் அய்யமில்லை. வேறு பல இதழ்கள் புத்தகக் கண்காட்சியை அவ்வளவாக கண்டு கொள்ளாததென்னவோ உண்மை. தமிழில் எழுத்தாளப் பிரமுகர்கள் தாங்கள் வாங்கியிருக்கும் நூல்கள் பற்றிய பதிவைப் பார்க்கும் போது நமது எழுத்தாளர்கள் படிப்பதில் எவ்வளவு பின் தங்கியிருக்கிறார்கள் எனப்தை உணர முடிந்தது.
இன்று தமிழில் எழுதுபவர்கள் பெரும்பாலானோர் அதிகம் படிப்பது இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. அவர்களுடைய எழுத்தைப் பிறர் படிக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர்கள் சமகால எழுத்துக்களை வாசிப்பதில் பலர் அக்கறை காட்டுவதில்லை. வாசிப்புதான் எழுத்தையும் செழுமைப்படுத்தும்; கூடவே மனிதனையும்.
டிசம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து சென்னையில் பல்வேறு நூல் வெளியீட்டு விழாக்கள் நடந்த வண்ணம் இருந்தன. இவைகள் பெரும்பாலும் பதிப்பகங்களின் கார்ப்பரேட் தன்மைக்குச் சான்று பகர்ந்தன. சில பதிப்பகங்கள் தங்கள் அரங்கிலேயே நூற்களை வெளியிட்டன. 'எழுத்தாளன் செத்துவிட்டான்' என்று எவ்வளவோ கோட்பாடுகள் வந்த பிறகும் எழுத்தாளனுக்கும் இருக்கும் கவர்ச்சி மட்டும் இன்னும் குறையவில்லை. நூலாசிரியர்களிடம் கையொப்பம் வாங்க வாசகர்கள் முண்டியடிப்பது நடக்கத்தான் செய்கிறது. சினிமாக்காரர்கள் போன்று கவர்ச்சிப் போதையில் திளைக்கும் இவர்கள் எவ்வித சமூக பொறுப்புணர்வும் உடையவர்களாக இருப்பதில்லை. கூடங்குளம் அணு உலை எதிரப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் இவர்களது நிலைப்பாடு என்ன என்பது பற்றி இவர்களது வாசகர்கள்தான் வினா எழுப்ப வேண்டும்.
F - 35 அரங்கு நூலாசிரியர்களை சந்திக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தது. எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ச.தமிழ்ச்செல்வன், 'பரிக்க்ஷா', ஞாநி ஆகியோர் இறுதி நாளில் பார்வையாளர்களின் வினாக்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வினாக்களில் சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான குரல் கடுமையாக ஒலித்தது. அதற்கு ச. தமிழ்ச்செல்வனும், ஞாநியும் இட ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்திப் பதில் தந்து கொண்டிருந்தனர்.
மண்டல் குழுவின் பரிந்துரையான 27% ஐ 9% என மூன்றாண்டுகளுக்குப் பிரித்து வழங்கும் இன்றைய அவல நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ளாது 10 ஆண்டுகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கினால் போதும் என அம்பேத்கர் சொன்னார் என்று இடஒதுக்கீட்டுக்கு எதிரான இவர்களது கருத்துக்களுக்கு அம்பேத்கரை துணைக்கழைப்பது மிகவும் மோசமானதாகும். இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு இட ஒதுக்கீடு எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் உணருவதேயில்லை.
நான் வழக்கம் போல இவ்வாண்டு புத்தகச் சந்தையில் வாங்கிய சில நூற்களை இங்கு பட்டியலிடுகிறேன்.
1. NCBH - காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
-(மொ) -ஏ. சீனிவாசன்.
2. பாவை பப்ளிகேஷன்ஸ் - அடித்தள மக்கள் வரலாறு
- ஆ.சிவசுப்பிரமணியன்
3. விடியல் - சூழலியல் புரட்சி - ஜான் பெல்லமி ஃபாஸ்டர்
4. விடியல் - இந்திய வரலாறு ஓர் அறிமுகம் - டி.டி. கோசாம்பி
5. கருப்புப் பிரதிகள் - பஞ்சத்துக்கு புலி - ஷோபா சக்தி
6. தமிழர் பண்பாட்டு ஆய்வகம்
- சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர்.
7. கருத்து பட்டறை - பத்தினிப் பெண்டிர் அல்லோம்
(பரத்தையர் கணிகையர் தேவதாசியர் பற்றிய பதிவுகள்) - அ.கா. அழகர்சாமி
8. பாரதி புத்தகாலயம் - பசுவின் புனிதம் - டி.என்.ஜா.
- (மொ) வெ. கோவிந்தசாமி
9. பாரதி புத்தகாலயம் - பண்டையக் கால இந்தியா - டி.என்.ஜா.
- (மொ) அசோகன் முத்துசாமி
10. பாரதி புத்தகாலயம் - புதிய புத்தகம் பேசுது - அறியப்படாத தமிழ் உலகம்
(தொ) - பா. இளமாறன், ஜ. சிவகுமார், கோ. கணேஷ்
11. புலம் - குருதியில் மலர்ந்த மகளிர் தினம் (கிளாராவின் நினைவில்)
12. புலம் - தேசிய இனப்பிரச்சினை : - மார்க்சியம் சொல்வதென்ன?
- வி.ஐ.லெனின், ஜே.வி. ஸ்டாலின்
13. புலம் - சேகுவேராவின் கடிதங்கள் (மொ) உமர்
14. புலம் - பாபர் மசூதி # இராம ஜென்ம பூமி அயோத்தியில் ஒரு நேரடி கள ஆய்வு
(சமாதானத்தின் சாத்தியங்களும் சாத்தியமின்மைகளும்)
- அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன்.
15. புலம் - தமிழகப் பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப்பழங்குடி மக்கள்
- முனைவர். சி. நல்லதம்பி
16. வம்சி - மாமத யானை (கவிதைகள்) - குட்டி ரேவதி
17. முரண் - நல்ல முஸ்லீம், கெட்ட முஸ்லீம், இஸ்லாம், அமெரிக்க, தீவிரவாதத்திற்கெதிரானஉ உலகளாவிய போர்
- மஹ்மூத் மம்தானி
18. பூவுலகின் நண்பர்கள் மற்றும் எதிர் வெளியீடு - கூடங்குளம் அணுமின் திட்டம் இந்திய அணு மின் குழுமம் மேற்கொண்டிருக்கும் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வு முறையும் தமிழக - கேரள மக்களின் வாழ்வு மீதான அச்சுறுத்தலும்
19. பூவுலகின் நண்பர்கள் மற்றும் எதிர் வெளியீடு - விரட்டப்பட வேண்டிய ஸ்டெர்லைட் (சூழலியல் குற்றவாளி ஸ்டெர்லைட்)
20. உயிர்மை, தலித் முரசு, பூவுலகு, பயணி, வாசல், சமநிலைச் சமுதாயம் போன்ற பலரின் கூட்டு வெளியீடு
- கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் - அ. முத்துகிருஷ்ணன்
21. எதிர் வெளியீடு - ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் - (தமிழில்) உஷாதரன்
22. எதிர் வெளியீடு - வணக்கம் பஸ்தார் இந்திய மாவோயிஸ்ட் இயக்கத்தின் வெளிவராத ஐம்பதாண்டு கால வரலாறு - ராகுல் பாண்டிடா
(தமிழில்) மு.ந. புகழேந்தி
23. எதிர் வெளியீடு - அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி - ரிச்சா சக்சேனா
(தமிழில்) சி.எஸ். தேவநாதன்
24. எதிர் வெளியீடு - ஹோமியோபதியின் தந்தை சாமுவேல் ஹானிமன்
- வாழ்வும் நினைவுகளும் - விஜய் பிரதாப் ஜெயராமன்
25. முகம் - இந்திய அணுசக்தி திட்டம் அறிவிப்புகளும் உண்மையும்
- சுவ்ரத் ராஜு - (தமிழாக்கம்) அனாமதேயன்
சில இதழ்கள்:
01. மாற்றுவெளி 08, 09
02. படப்பெட்டி 05, 06
03. மணல் வீடு - 18
04. மற்றமை - 01
05. காலம் - 38
06. நீட்சி - 01
07. மந்திரச் சிமிழ் 07-௧௦
08 .புறநடை -01
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக