ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

என்கவுன்ட்டர் கொலைகள் சாதிப்பதென்ன?

என்கவுன்ட்டர் கொலைகள்  சாதிப்பதென்ன?    -மு.சிவகுருநாதன் 

        சென்னையில் நடந்த இருவேறு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்து பேரை தமிழக காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது.   தேசிய மனித உரிமை ஆணையம்,உச்சநீதிமன்றம் ஆகியற்றின் பல்வேறு தீர்ப்புகள், ஆணைகள் எவற்றையும் இந்தியாவிலுள்ள எந்த மாநில காவல்துறையும் அரசுகளும் மதிப்பதில்லை. நாட்டில் பல மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அரங்கேறுகின்றன.

        என்கவுன்ட்டரில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வீர தீரப்பரிசுகள், பதவி உயர்வுகள் வழங்கப்படக்கூடாது என்கிற உத்தரவுகள் இருக்கும் நிலையிலும் எந்த அரசும் இவற்றை கடைபிடிக்காத காரணத்தால் நமது ராணுவமும் பாதுகாப்புப் படைகளும் இவ்வாறான போலி மோதல்களில் அடிக்கடி ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.

       சமூகத்தின் பொதுப்புத்தியும்  (common sense) நடுத்தர வர்க்க மனப்போக்கும்  என்கவுன்ட்டரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இது அரசுகளுக்கும் காவல்துறை மற்றும் ராணுவத்திற்கும் மிகவும் வசதியாகவுள்ளது.

    மத்திய புலனாய்வுத் துறை அதிகாரி (CBI) ரகோத்தமன்  ஓர் தொலைக்காட்சி விவாதத்தின் பொது காவல்துறைக்கு ஏன் துப்பாக்கிகள் அளிக்கிறீர்கள்? இதை மாற்றாமல் துப்பாக்கிகளை கொடுத்துவிட்டு பிறகு சுடக்கூடதென்பது எவ்வகையில் நியாயம் என்று ரொம்ப அறிவுப்பூர்வமாக வினா எழுப்பினார். குருவிக்காரர்களிடம் (வாக்ரிகள் / நெறிக்குரவர்கள்)  துப்பாக்கிகள் இருப்பதால் அவர்கள் குருவிகளை மட்டும் சுடுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது; நம்மையுந்தான் சுடுவார்கள் என்றார். 

       வாக்ரிகள் / நெறிக்குரவர்கள் என்று தங்களை அழைக்க விரும்பும் gypsy-களை  குருவிக்காரர்கள் என்று சொல்வது மிகவும் கண்டிக்கத்தது. அது போகட்டும். வாக்ரிகள் / நெறிக்குரவர்கள் எங்காவது மனிதர்களை சுட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதுகூட தெரியாத முன்னாள் சிபிஅய் அதிகாரிக்காக நாம் அனுதாபப்படவேண்டியுள்ளது.

     காவல்துறைக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தும் இவர்களை உயிருடன் பிடிக்கமுடியவில்லை என்று வழக்கமாக சொல்லும் வாதத்தையை ஏற்கவே முடியாது. ஒவ்வொரு என்கவுன்டரிலும் இவர்கள் இதையேதான் சொல்கிறார்கள். சுடப்பட்டு இறப்பவர் மார்பு மற்றும் தலைப்பகுதியில் குண்டடிபட்டு சாகுபவராகவும் போலீசார் மட்டும் கையில் மட்டும் சிறு காயங்களுடன் தப்பிப்பவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

   

      மனித உரிமை ஆணையங்கள்,உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மனித உரிமைப் போராளிகள் என்று பலதரப்பும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதும் என்கவுண்டர்கள் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன.

இந்த என்கவுண்டர்கள் மூலம் அரசும் காவல்துறையும் சாதிப்பதென்ன?

 • நீதிமன்றங்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.

 • நமது அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது.

 • மக்களின் கவனத்தை திசைதிருப்பப் பயன்படுகிறது.

 • அடிக்கடி நிகழும் கொலை - கொள்ளை நிகழ்வுகளை மறக்கவும் மடைமாற்றவும் உதவுகிறது.

 • தன்னுடைய எதிரிகளையும் அப்பாவிகளையும்  பழி வாங்கும் வாய்ப்பாக இது பயன்படுகிறது.

 • காவல்துறை இழந்த தன் மதிப்பை பொதுமக்களிடம் காத்துக்கொள்ள பேருதவி புரிகிறது.

 • காவல்துறை,ராணுவ பயங்கரவாதம் நாட்டில் வல்லாதிக்கத்திற்குதான் வழிவகுக்கும்.

 • அரசிற்கு பிடிக்காதவர்கள் மற்றும் எதிரிகளை பழிவாங்க உதவும்.

 • எப்போதும் உண்மைகள் வெளிவராமல்போகும்.

 • உண்மையான குற்றவாளிகள் யாரென்பது தெரியாமல் போகும்.

 • சில தொடர் சங்கிலி நிகழ்வுகள் முடிமறைக்கப்படும்.

 • அரசியல்வாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள தொடர்பு புதைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக