சனி, பிப்ரவரி 11, 2012

நமது கல்விமுறை எங்கே செல்கிறது?

நமது கல்விமுறை எங்கே செல்கிறது?    
                                                                                                  -மு.சிவகுருநாதன் 

ஆசிரியை  உமா மகேஸ்வரி


       சென்னையில் ஒரு  தனியார் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை  மாணவர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. சென்னை  பாரிமுனை அரண்மனைக்காரத் தெருவில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி மற்றும் வேதியியல் ஆசிரியையாகப் பணிபுரிந்த  மந்தைவெளி நார்மன் தெருவைச் சேர்ந்த ஆசிரியை  உமா மகேஸ்வரியை  (39) ஒன்பதாம் வகுப்புச் சேர்ந்த மாணவர் ஒருவர் கழுத்து மற்றும்  வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிரவைத்துள்ளது. 

     மேலை நாடுகளில் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களைச் சுட்டுக்கொல்லும் நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதுண்டு. நம் நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகளை பலர் எதிர்பார்த்திருக்கவில்லை. காரணம் அவர்கள்  நமது கல்விமுறையின் அவலங்களை பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. நான் வழக்கமாகச் சொல்லப்படும் மேலை-கீழை ஒப்பீடுகளை இங்கு சுட்டவில்லை. ஒரு உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்காக வருத்தப்படும் இந்த வேளையில் இதற்கான பின்னணி மற்றும் சமூக அவலங்கள் பற்றி நாம் இனியேனும் சிந்திக்கவேண்டிய தேவையை இந்நிகழ்வு உருவாக்கியிருக்கிறது.
 
    இந்நிகழ்வு ஆங்கிலோ இந்தியன் அல்லது மெட்ரிக்  பள்ளியில் நடைபெற்றுள்ளது எனப் பிரித்து அணுகவேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். அரசுப்பள்ளிகளிலும் அரசுப்பொதுத்தேர்வு, தேர்ச்சி, மதிப்பெண்கள் என மாணவர்களை வறுத்தெடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது. பள்ளிகளில் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிப்பதற்காக மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை அனைத்துநிலைகளிலும் அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு தீவிர உளவியல் நெருக்கடிகளை உருவாக்குகிறார்கள். 

       தமிழகத்தை முதல் மாநிலமாக்குவேன் என்று வருகின்ற ஆட்சியாளர்கள் முழங்குவதுபோல் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கல்வி அதிகாரிகளும் முழங்கத்தொடங்கிவிட்டார்கள். இதன் விளைவு ஆசிரியர்களையும் மாணவர்களையும் தீவிர மன உளைச்சலுக்கு உட்படுத்துகிறது. காலை-மாலை,  சனி-ஞாயிறு மற்றும் அனைத்து விடுமுறை  தினங்களிலும் சிறப்பு வகுப்புகள் என்றபெயரில் மாணவர்கள் வதைபடுகிறார்கள். மழையின்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கும்போது சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்கிற அறிவிப்பும் கூடவே வருவதைப் பார்க்கும்போது இதன் மறுபக்கம் புலனாகும்.

       தமிழகத்தில் மஞ்சள் பத்திரிக்கைகள், சீரழிவுச் சேனல்கள் நடத்துபவர்கள் கூட அரசுப் பொதுத்தேர்வு வருகிறபோது மாணவர்களையும் பெற்றோர்களையும் கூடவே ஆசிரியர்களையும் பீதியூட்டத் தொடங்கிவிடுகிறார்கள். தேர்வுக்குச் செல்வது போருக்குச் செல்வதுபோல் ஆகிவிட்டது. 'ஜெயித்துக்காட்டுவோம்' என்று கொலைவெறியை மாணவர்கள் மீது  ஏற்றுகிறார்கள்.

       ஓராண்டில் மனப்பாடத்திறனை மட்டும் மதிப்பிடும்   நமது தேர்வு முறை முற்றாக ஒழிக்கப்படவேண்டும். அதற்கு மாற்றாக  எளிய, சிறிய ஒருங்கிணைந்த மதிப்பீட்டு முறைகள் கொண்டுவரப்படவேண்டும். வரும் கல்வியாண்டில் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை அறிமுகம் செய்யப்படும் மூன்று பருவ முறை கூட வெறும் மனப்பாடத்திறனை மதிப்பிடும் முறைதானே தவிர பெரும் புரட்சிகரமான  ஒன்றல்ல. மாணவர்களின் ஒட்டுமொத்த திறன்களை மதிப்பிடாத தேர்வு முறைகளால் எவ்வித பலனுமில்லை. 

        மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும் பாடங்களைத் தவிர உடற்கல்வி, ஓவியம்,மதிப்புக்கல்வி,அறிவியல் தமிழ், சுற்றுச்சுழல் கல்வி, வாழ்க்கைக்கல்வி,வேளாண்மை ,கைத்தொழில்  உள்ளிட்ட  பாடங்களுக்கு சிறிது கூட நமது பள்ளிகளில் இடமிருப்பதில்லை. மதிப்புக்கல்வி  (value education)  மதக்கல்வியாக மாறிப்போனதுதான் இங்கு நடந்த விநோதம். உடற்கல்விப் பாடவேளையில்  மாணவர்கள் விளையாடாமல் படித்துக்கொண்டோ, தேர்வு எழுதிக்கொண்டோ இருப்பதை நாம் அன்றாடம் காணமுடியும்.

      பொதுத்தேர்வு எழுதும் மாணவன் சில மணிநேரம் தூங்குவது போக எஞ்சிய நேரம் முழுமையும் புத்தகமும் கையுமாக இருப்பதைத்தான் இந்த அருவெருக்கத்தக்க சமூகம் விரும்புகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மதிப்பெண் பெறும் ATM  எந்திரத்தைப்போல நினைப்பது மிகவும் கொடூரமானது. இந்த மாதிரியான எந்திரங்களை உருவாக்கும் தனியார் பள்ளிகளை இவர்கள் சரணடைகிறார்கள். அவை மாணவர்களின் சிறைக்கூடமாகத்தான் செயல்படுகின்றன. 

        இந்தக் கொலை நிகழ்வில்கூட இந்தி பாடம் சரியாகப் படிக்காமல் அம்மாணவன் குறைவான மதிப்பெண் வாங்கியதற்காக கண்டித்ததாகவும் பெற்றோரிடம் புகார் செய்ததாகவும் செய்தி வருகிறது. சமச்சீர்க்கல்விப் பாடநூற்கள் அமலில் உள்ள இந்த கல்வியாண்டில் அரசு அளித்துள்ள ஐந்து பாடங்களை விட கூடுதல் பாடங்களை இந்த தனியார் பள்ளிகள் ஏன் சொல்லித்தருகின்றன? ஒன்பதாம் வகுப்பில் இவ்வாறு செய்வதை அரசு ஏன் அனுமதிக்கிறது? அரசு ஏன் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?


      
       ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடங்களையும் பதினொன்றாம் வகுப்பில் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களையும் படிக்கவைத்து  தனியார் பள்ளி மாணவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இதை அரசும் கண்டுகொள்ளவதில்லை. பெற்றோர்களும் இதை விரும்பித்தான் அப்பள்ளிகளில் தன்பிள்ளைகளை சேர்க்கப் போட்டிபோடுகிறார்கள்.

       கல்வியை அரசு வியாபாரமாக்கியதன் விளைவு இது. முதலில் அரசு தனது கொள்கைகளை உடன் மாற்றிக்கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் வழக்கமான பழைமைப் பிடிப்புகளினின்று விடுபட்டு புதிய மாற்றங்களை உள்வாங்க வேண்டும். அதற்கு முறையான பயிற்சிகள்  அளிக்கப்படவேண்டும்.  பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மதிப்பெண் பெறும் எந்திரமாகக் கருதாமல் மானுட மதிப்புக்களை அறிந்து செயல்படவேண்டும்.


       இந்தக் கொலையை செய்தது அந்த மாணவன் மட்டுமல்ல. நமது அரசுகள், சமூகம், பள்ளிகள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என அனைத்துத்தரப்பிற்கும்  இந்தக் கொலையில் பங்குண்டு. இனியும் இதைப்போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க ஒட்டுமொத்த சமூகமும் திருந்தவேண்டும்.  இல்லாவிட்டால் இவைபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிவிடும். இது நடக்குமென்று தோன்றவில்லை.

2 கருத்துகள்:

யியற்கை சொன்னது…

நல்ல சமூக அக்கறையுள்ள கட்டுரை, ஆயினும் வழக்கம்போலவே தனியார் பள்ளி , வியாபாரம் என்ற சாடல்கள் சற்று சோர்வை தருகின்றன , என் மகன் அல்லது மகள் படிப்புக்கு இவ்ளோ தொகை செலவு செய்தேன் என்பதில் ஒரு குரூர சமூக சந்தோஷத்தை அடையும் பெற்றோர்களை ஏன் யாருமே கண்டுகொள்வதில்லை ? கழிவறையின் தப்ப முதல் என்ன அளவு இருக்கவேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு வரையறை செய்யும் அரசு பலிகளின் நிலை என்ன ? எல்லாவற்றிக்கும் மேலாக தனியார் பள்ளியில் மூவாயிரம் வாங்கும் ஆசிரியன் செய்யும் வேலையை அரசு பள்ளியில் முப்பதாயிரம் வாங்கும் வியாபாரிகள் அல்லது வட்டிகாரர்கள் ஏன் செய்வதில்லை ? இது போன்று இன்னும் நீளக்கூடும் கேள்விகள். தவிர கட்டுரையின் மற்ற அதாவது மாணவர்கள் சார்ந்த கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன்

மு.சிவகுருநாதன் சொன்னது…

அன்புள்ள இயற்கைசிவம்!
வணக்கம்.

எனது பதிவு குறித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

நடந்த கொலைக்கு அரசு, பள்ளிகள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் உள்ளிட்ட இந்த சமூகத்தை பொறுப்பாக்குவதே என் கட்டுரையின் நோக்கம். அரசுப்பள்ளி உயர்வு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மேலானவர்கள் என்று வழக்காட நான் வரவில்லை.

தேர்வு ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுவதுதான் ஒட்டுமொத்த சீர்கேட்டிற்கும் தொடக்கமாக உள்ளது. இந்த வேலையை அரசு பள்ளியில் முப்பதாயிரம் வாங்கும் வியாபாரிகளையும் வட்டிகாரர்களையும் செய்யச் சொல்வது நல்லதா? அப்படிச் செய்தால் நாட்டில் சீர்திருத்தப் பள்ளிகள்தான் நிரம்பி வழியும்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வியாபாரிகளாகவும் கந்து வட்டிகாரர்களாகவும் இருப்பதை விமர்சிக்கும் உங்களுக்கு தனியார் பள்ளி முதலாளிகள் மட்டும் இன்னும் கல்வித்தந்தைகளாக தெரிவதேன்?

பல அரசுப்பள்ளிகளில் தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகள் இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் பல தனியார் பள்ளிகளில் சில அரசுப்பள்ளிகளில் இருக்கும் வசதிகள் கூட இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

பல அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் இந்த மாணவர்களுக்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளை வைத்து பல நூறு மாணவர்களை சேர்த்து சுயநிதிப் பிரிவு தொடங்கி, சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறி கொள்ளையடிப்பதை என்னசொல்வது?
1964 இல் தொடங்கப்பட்ட பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்க மறுக்கும் மத்திய அரசு தனியார் சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் எவ்வித வசதிகளும் செய்ய மறுக்கும் நமது அரசுகள் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றை தினந்தோறும் கொள்ளையிட அனுமதிக்கின்றன.

நீளும் உங்களது கேள்விகள் எல்லாரையும் நோக்கிக் கேட்கப்படவேண்டுமென நான் விரும்புகிறேன்.
நன்றி.

அன்புடன்...

மு.சிவகுருநாதன்

கருத்துரையிடுக