வெள்ளி, பிப்ரவரி 24, 2012

மாற்று மருத்துவ முறைகளை அழித்தொழிக்கும் முயற்சி

மாற்று மருத்துவ முறைகளை அழித்தொழிக்கும் முயற்சி     
                                                                                                    - மு. சிவகுருநாதன்

"மேற்கத்திய வைத்திய முறையை முற்றாகப் பின்பற்றவுமில்லாமல் அதன் அறிவியற் செறிவை மட்டும் இறக்கிக்கொண்டு (தொழில் நுட்பத்தையும் நுணுக்க அறிவையும் மட்டும் மையமாகக் கொள்ளாமல்) நமது பாரம்பரிய நாட்டு வைத்திய முறையுடன் இணைக்கப்பட்ட ஒரு வைத்திய முறை இங்கு உருவாக்கப்பட வேண்டும்.  நாட்டு வைத்திய ஆய்வுகட்கு முன்னுரிமை வழங்குவதோடு அதன் இயல்பான சனநாயகத்தன்மை காக்கப்பட்டு மருத்துவ நலச் சேவையில் அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்".                   
                                                                                                                                - அ.மார்க்ஸ்
(" நமது மருத்துவ நலப் பிரச்சினைகள்"   நூலில் மாற்று மருத்துவம் பற்றிய கோட்பாட்டுப் பார்வையின் அம்சங்களில் ஒன்று.)

நமது மத்திய - மாநில அரசுகள் கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, பொது விநியோகம் போன்று மக்களுக்கு சேவை மற்றும் மானியம் அளிக்க வேண்டியதிலிருந்து தங்களை முற்றாக விடுவித்துக் கொண்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் பணியைச் செவ்வனே செய்து வருகின்றன.  புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற கட்டிடங்களை ஏட்டிக்குப் போட்டியாக உலகத் தரம் வாய்ந்த (!?) மையப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக மாற்றும் வேலைகள் ஒருபுறமிருக்க, மருத்துவச் சுற்றுலா (Medical Tourism) என்று சொல்லி பன்னாட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருந்து கம்பெனிகள் கொள்ளை லாபமடிக்க வழிவகை செய்து கொடுப்பதுதான் இன்றைய அரசுகளின் பணியாக உள்ளது.

         இதிலும் தனியார் பெருமளவில் முதலீடு செய்துள்ள அலோபதி மருத்துவத்துறையை மட்டும் வளர்த்தெடுக்க, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற பல்வேறு மாற்று மருத்துவ முறைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட மத்திய, மாநில  அரசுகள் அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.  இதன் ஒரு வெளிப்பாடுதான் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு இவ்வாண்டு அங்கீகாரம் வழங்கப்படாமை மற்றும் முதுநிலை சித்த மருத்துவப் பிரிவிற்கு இடம் குறைப்பு, அது தொடர்பான மாணவர்கள் - பெற்றோர்கள் போராட்டம் எனத் தொடர்கிறது. 

தமிழ் மருத்துவம், சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம் என்று பல்வேறு பெயர்களில் வழங்கி வந்த தொன்மையான அழிந்துவரும் மருத்துவ முறைகளை முறையாக கற்பிப்பதற்காக 1964இல் பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி (Government Siddha Medical College) தொடங்கப்பட்டது.  இங்கு அண்மைக்காலம் வரையில் இளநிலை மருத்துவப் படிப்பு (BSMS - Bachelor of Siddha Medicine and Surgery)  100 இடங்களையும் முதுநிலை சித்த மருத்துப் படிப்பு (MD - Siddha) பொது மருத்துவம் -Maruthuvam, குணபாடம்-Gunapadam  (Pharmacology) , சிறப்பு மருத்துவம்-Sirappu Maruthuvam,, குழந்தை மருத்துவம்-Kuzhandai Maruthuvam,  நஞ்சு மருத்துவம்-Nanju Noolum Maruthuva Needhi Noolum, நோய் நாடல்- Noi Nadal (Pathology) ஆகிய ஆறு பிரிவுகளில் ஒரு பிரிவிற்கு தலா 20 பேர் வீதம் 120 பேர் படிக்கக் கூடியதாக இருந்தது.

      பின்னர் தொடங்கப்பட்ட சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இளநிலைப் படிப்பில் (BSMS) 50 இடங்களும்  பொது மருத்துவம்-Maruthuvam,  குணபாடம்-Gunapadam  (Pharmacology),  ஆகிய இரு பிரிவுகளில் தலா 10 பேர் முதுநிலைப் படிப்பும் (MD - Siddha) படிக்க வசதியும் இருந்தது.

     தாம்பரம் சானடோரியம் (அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை) தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் (NIS-National Institute of Siddha) ஆறு முதுகலைப் படிப்பு ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 8 இடங்கள் என மொத்தம் 48 இடங்கள் இருந்தன.  ஸ்ரீபெரும்புதூர், கோவை, கன்னியாகுமரி, மேற்கு தாம்பரம் போன்ற இடங்களில் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்ட போதும் அங்கெல்லாம் முதுநிலைமருத்துவப்படிப்பு  (MD-Siddha)  இல்லையென்பது   
இங்கு கவனிக்கத்தக்கது. 

      இதர மாற்று மருத்துவ முறைகளுக்காக மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இளங்கலை படிப்பு (BHMS - (Bachelor of Homoeopathic Medicine and Surgery)  50 இடங்களும் நாகர்கோயில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு(BAMS - Bachelor of Ayurvedic Medicine and Surgery) 48 இடங்களும் உள்ளன.யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ( BYNS-Bachelor of Naturopathy and Yogic Sciences), யுனானி  (BUMS - (Bachelor of Unani Medicine and Surgery) ஆகிய மாற்று முறை மருத்துவப்  பட்டப்படிப்புகளை   இந்தியாவிலுள்ள   பல தனியார் கல்லூரிகள் அளிக்கின்றன.   
  
        தமிழகத்தில்  அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.  இதுதான் தற்போது எழுந்திருக்கும் பிரச்சினைக்கு மூலகாரணம் என்று சொல்லலாம்.

மாற்று முறை மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்தும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமும் அதன் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜனும் மாற்று மருத்துவ முறைகளை ஒழிக்க திட்டமிட்டு செயல்படுவதற்கு பல உதாரணங்களைக் காட்ட முடியும்.


01. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா - இயற்கை மருத்துவம் போன்ற மாற்று மருத்துவ முறைகளின் பாடத்திட்டத்தில் பெருமளவில் மாற்றம் கொண்டு வருவது. இம்மாற்றம் அலோபதி மருத்துவத்தை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை அழிக்கும் செயல்தந்திரம்.

02. உடற்கூற்றியல்(Anatomy), உடலியங்கியல் (Physiology), உயிர் வேதியியல் 
(Bio chemistry), நுண்ணுயிரியல்(Micro-biology) , நோய் நாடல் (Pathology) போன்ற பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து அறவே அகற்றுதல்.

03. சித்தா இளங்கலைப் பட்டம் முன்பு BIM (Bachelor of Indian Medicine) என்று பட்டம் வழங்கப்பட்டது.  அது தற்போது BSMS ஆக மாறியுள்ளது.  மேலே குறிப்பிட்ட பாடங்கள் நீக்கப்படுவதால் BSMS என்பதை BSM என்று மாற்றி பட்டமளிக்கப் போவதாக தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தன்னிச்சையாக முடிவெடுத்தது.  இதைப் போலவே BHMS, BAMS, BUMS, BNYS ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளை முறையே BHM, BAM, BUM, BNY என மாற்றவும் திட்டமிட்டது.

       மாற்று முறை மருத்துவப் படிப்புக்களின் பெயர், பாடத்திட்டங்கள் ஆகியவற்றை மாற்றுவதற்கு  தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு   அதிகாரம் இல்லையென மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் (CCIM- Central Council of Indian Medicine) எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் இம்முயற்சி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

04. நவீன பாடத்திட்டம் (Modern Syllabus) இவர்களுக்குத் தேவையில்லை என்று சொன்னதோடு, மருத்துவருக்கு உள்ள அடையாளங்களான வெள்ளை மேலாடை(White over-coat), துடிப்புமானி (Stethoscope) போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது எனவும் சொன்னது.  அலோபதி மருத்துவர்கள், நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும் கூட இன்னமும் செஞ்சிலுவைச் சங்கத்தின் அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதை நிறுத்த முடியாத இவர்கள் மாற்று முறை மருத்துவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது கவனிக்கத்தக்கது.

05. மாற்று முறை மருத்துவர்கள் எந்தெந்த நோய்களுக்கு மட்டும் மருத்துவம் செய்யலாம், செய்யக் கூடாது என பட்டியல் வெளியிட்டது.

06. பல்வேறு உரிமைகளுக்காகப் போராடும் மாற்று மருத்துவ முறை மாணவர்களை மிரட்டுவது, இடைநீக்கம் போன்று பெரிய தண்டனைகள் வழங்குவது.

  தமிழக அரசும் மாற்று முறை மருத்துவமுறையை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கு தன்னால் இயன்ற பணிகளைச் செவ்வனே செய்து வருகிறது.  அவற்றைப் பட்டியலிட பக்கங்கள் போதாது. 

01. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியாகட்டும் நாகர்கோயில் கோட்டாறு அரசு ஆயுர்வேதக் கல்லூரியாகட்டும் கற்பிக்கப் போதுமான பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை நியமனம் செய்வதில்லை.  ஒப்பந்த அடிப்படையில்தான் பணி நியமனம் நடக்கிறது. முதல்வர் பணியிடம் காலியாகவே உள்ளது.பல ஆண்டுகளாக பொறுப்பு முதல்வர்தான் பணியில் உள்ளார்.நிரந்தர முதல்வர் நியமனம் இல்லை. அரசு அலோபதி மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்குழு வரும்போது போலியான ஏற்பாடுகள் செய்யப்படுவதுண்டு.  ஆனால் இங்கு அதைக் கூடச் செய்யாமல் அங்கீகாரம் ரத்தாவதற்கு தமிழக அரசு உதவி செய்திருக்கிறது.

02. கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கத் தேவையான கட்டிடங்கள், படுக்கைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளன.  மாவட்டந்தோறும் அரசு அலோபதி மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப் போவதாகச் சொல்லும் நமது அரசுகள் இரண்டு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் தலா ஒரு ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு ஓர் இடையீடு:

  அலோபதி மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து மட்டங்களில் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இருப்பதாக யாரும் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.  அலோபதி மருத்துவ முறைக்கு ஏதேனும் செய்யும் அரசுகள் மாற்று மருத்துவ முறைகளை  கை கழுவ முடிவு செய்துள்ளன. அலோபதி மருத்துவ முறையிலும் தனியாரை வளர்க்க அரசு மருத்துவமனைகள் பலியிடப்படுகின்றன.

03. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள சித்த மருந்து ஆராய்ச்சிப் பிரிவு, மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு ஆகியவற்றை சேலத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு தாரை வார்த்திருக்கிறார்கள்.  இங்கு ஆயிரக்கணக்கான  உலர்தாவரத் தொகுப்புகளும் (Herbarium) தாவர மாதிரிகளும் (Specimen)  சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.  தென் தமிழ்நாட்டின் பலவகையான மூலிகைத் தாவரங்கள் பற்றிய ஆய்வுகள் செய்யக்கூடிய இப்பிரிவுகளை ஏன் அரசு தனியாரிடம் வழங்க வேண்டும்? இப்பிரிவுகள் சித்த மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமின்றி தாவரவியல் படிக்கும் மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த ஆய்வுகளுக்கும் பெரியதும் பயன்படக் கூடியவை.

04. நாகர்கோயில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக் கட்டிடத்தில்தான் செயல்படுகிறது.  இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.  இக்கல்லூரிக்கென்று மூலிகைப் பண்ணை அமைக்க இடம் ஒதுக்கப்பட்ட போதும் அங்கு மூலிகைகளை வளர்க்க எந்தப் பணியும் நடைபெறவில்லை. 

05. 2004  இல் தாம்பரம் சானடோரித்திலுள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (NIS-National Institute of Siddha) தொடங்கப்பட்டது.  இதன் கட்டிட விரிவாக்கப் பணிகளுக்கு 2007-ல் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்ட போதும் இன்னமும் கட்டிடங்கள் வந்தபாடில்லை.  இங்கு 120 படுக்கைகள் கொண்ட அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை உள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டால்தான் இங்கு படுக்கை வசதிகளை அதிகரித்து இங்குள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு (MD - Siddha) இடங்களான 48  ஐ தக்க வைக்க முடியும்.

  இந்த (MD - Siddha) 48 இடங்கள் இவ்வாண்டு 25ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆறு முதுநிலைப் பிரிவுகளில் நான்கில் மட்டும், அதாவது MD - Siddha (பொது மருத்துவம்) - 6 இடங்கள், MD - Siddha (குணபாடம்) -  5 இடங்கள் MD - Siddha (சிறப்பு மருத்துவம்) - 7 இடங்கள் MD - Siddha (நஞ்சு மருத்துவம்) - 7 இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது  MD - Siddha (குழந்தை மருத்துவம்), MD - Siddha (நோய்நாடல்) ஆகிய பிரிவுகளில் இரு  மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என மத்திய இந்திய முறை  மருத்துவக் கவுன்சில் ( CCIM ) அறிவுறுத்தியுள்ளது.  இதைப்போல நாடெங்கும் சுமார் 120 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.

06. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிலவற்றில் மட்டும் சித்த மருத்துவப் பிரிவு உள்ளது.  அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைப் பிரிவுகளை ஏற்படுத்தினால்தான் உரிய தீர்வு கிடைக்கும்.  

07. மருத்துவர்கள், பிற பணியாளர்கள், மருந்துகள், படுக்கை வசதிகள் போன்றவை சரியாக இல்லாத மாற்றுமுறை மருத்துவமனைகள் நோயாளிகளைத் தூரப்படுத்தும் வேலையைத்தான் செய்கின்றன. பிறகெப்படி நோயாளிகள் இம்மருத்துவமனைகளை நாடுவர்? இம்மருத்துவமனைகளை இழுத்து மூட நோயாளிகள் வரவில்லை என்பது காரணமாக அரசால் சொல்லப்படுகிறது. இது திட்டமிட்ட சதிச்செயல் என்பதில் அய்யமில்லை.

  அலோபதி மருத்துவ முறைக்கு ஆதரவாகச் செயல்பட்டு மாற்று மருத்துவத்தை ஒழிக்கக்  கிளம்பியுள்ள   தமிழ்நாடு அரசு மற்றும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் ஒரு புறமிருக்க, மரபு வழி சித்த மருத்துவர்களும் இந்தப் படிப்புக்களுக்கு பெரும்பாலும் எதிராக இருக்கிறார்கள்.  இவர்கள் தங்களுடைய பிழைப்புக்குக் கேடு  வருமென இவர்கள் இந்த அரசுப் படிப்புகளை ஒழிக்க எண்ணுகிறார்கள்.  இவர்களில் சிலர் தனியாக சித்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்குகிறார்கள்.

பரம்பரை சித்த வைத்தியர்கள் என்று சொல்லப்படும் மரபு வழி சித்த மருத்துவர்கள் மருத்துவ நுணுக்கங்களையும் அவற்றின் தொழில் நுட்பங்களை தங்களின் வாரிசைத் தவிர வேறு எவருக்கும் சொல்லித் தர விரும்புவதில்லை.  இன்றுள்ள உலகமயச் சூழலில் அவர்கள் கல்லூரிகள் தொடங்குவது கூட மிகச் சிறந்த வியாபார உத்தியாகத்தான் இருக்க முடியும்.

இன்று மாற்று மருத்துவ முறைகளுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை உணர்ந்துள்ள சிலர் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர்.  சித்தா, ஆயுர்வேதம், யுனானி,யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் தனியாரால் தொடங்கப்படுகின்றன.  இவர்களுக்கு  அரசு மூலிகை மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளைத் தானமாக வழங்குகிறது. 

      இந்த மரபு வழி சித்த மருத்துவர்களுக்கும் பட்டப்படிப்பு படித்த (academic study)
 மருத்துவர்களுக்கும் உரையாடல் சாத்தியப்படவேண்டும். ஒருவர் மற்றவரை எதிரியாகப் பார்க்கும் போக்கு நல்லதல்ல. இந்த இரு தரப்பும் தங்களது அறிவுச் செல்வத்தை பரிமாறிக் கொள்வது இம்மருத்துவ முறையை மேலும் செழுமையாக்கும்.

  சேலம் சிவராஜ் சித்த மருத்துவக்கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் வேலுமயில் (40), கோயம்புத்தூர் RVS (30), கன்னியாகுமரி ADSVS (50),  மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் (40) ஆகிய தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் (40) மட்டும் இவ்வாண்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.  (அடைப்புக்குறிக்குள் அனுமதிக்கப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை.)

சேலத்தில் ஒரு தனியார் ஹோமியோபதி கல்லூரி (50), ஸ்ரீபெரும்புதூரில் தர்மா ஆயுர்வேதக் கல்லூரி (40) ஆகியன தொடங்கப்பட்டுள்ளது.  இவ்விரு கல்லூரிகளுக்கும் இவ்வாண்டு அனுமதி கிடைக்கவில்லை.

48 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு கிடைக்காத அனுமதி மேற்கு தாம்பரம்  ஸ்ரீசாய்ராம் சித்த மருத்துவக்கல்லூரிக்கு மட்டும் கிடைத்ததெப்படி? இந்தத் தனியார் கல்லூரி அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பெற்று CCIM-ன் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்து செய்தது என்றால் 48 ஆண்டுகால ஒரு அரசுக் கல்லூரியால் ஏன் இதைச் செய்ய முடியவில்லை?  தமிழ் என்று சொல்லி மொழி, இனப் பெருமை பேசி வரும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. அரசுகள் தமிழுக்கும் தமிழ் மருத்துவத்திற்கும் எதிராக எடுத்த நடவடிக்கையின் பலன்தான் இது. 

மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் (CCIM- Central Council of Indian Medicine) கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கல்லூரிகளுக்கு,  ஆயுஷ் துறையின்  (AYUSH -  Department of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy) இந்திய மருத்துவக் குழு  ஆய்வு செய்து அனுமதி வழங்குகிறது. பல்கலைக்கழகம்,  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சோதனை செய்து தரம் நிர்ணயிக்கும்  தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின்  ( NAC -  National Accreditation Committee)  செயல்பாடுகள் நாமறிந்ததுதான்.

2012 - 2013 ஆம் கல்வியாண்டிற்கான அனுமதி வழங்க இக்குழு பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்துள்ளது. வரும் கல்வியாண்டிற்கு அனுமதி கிடைத்து விடும் என்று செய்திகள் வருகின்றன.  நடப்புக் கல்வியாண்டில் (2011 - 2012)  என்னென்ன குறைபாடுகள் இருந்தன, ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்ற விவரத்துடன் வரும் கல்வியாண்டில் (2012 - 2013) அனுமதி வழங்குவதற்கான காரணங்கள், இவர்கள் சொன்ன என்னென்ன நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டன என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும்.   தமிழக அரசு இப்பிரச்சினை குறித்து வெள்ளை அறிக்கையொன்றை வெளியிட வேண்டும்.

     மத்திய இந்திய முறை  மருத்துவக் கவுன்சிலிடம்  ( CCIM ) உரிய அனுமதி பெறாமல் இளநிலை (BSMS) மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு (MD -siddha) எப்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதென்று தெரியவில்லை?  இந்த மாணவர்கள்தான் தங்கள் பெற்றோருடன் வகுப்புகள் தொடங்கக் கோரி கல்லூரி வளாகத்தில் பிப்ரவரி 06, 2012 முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.  மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் உடன் மாணவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பாத தமிழக அரசு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, நீதிமன்ற வழக்கு என்று காரணம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்கிறது.

சித்த மருத்துவ முதுகலைப் படிப்புக்கு (MD - Siddha) அனுமதி மறுத்த மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக வேதாரண்யம் டி. அருள்செல்வம் என்ற மாணவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  மாநில அரசு கூடங்குளம் பிரச்சினையில் மத்திய அரசிடம் கை காட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டதைப் போல இப்பிரச்சினையிலும் நடப்பது வேதனைக்குரியது.  

01. தமிழக அரசு தனது பொறுப்பை உணர்ந்து முந்தைய, தற்போதைய ஆட்சியின் குறைகளை நிவர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  அனுமதி கிடைக்காததற்குக் காரணமான சுகாதாரத்துறை அதிகாரிகள், சித்த மருத்துவக் கல்லூரிகள் சீர் குலைய பெரும்பங்கு வகித்த தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவர் மீது விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

02. தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (அலோபதி மருத்துவம்) கட்டுப்பாட்டிலிருந்து மாற்று முறை மருத்துவக் கல்லூரிகள் உடன் விடுவிக்கப்படவேண்டும். இந்திய மாற்று முறை மருத்துவத்திற்கென்று தனிப் பல்கலைக்கழகம்  தொடங்கவேண்டும்.

03. மாற்று முறை மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.  மருத்துவமனைகளை மேம்படுத்தி விரிவாக்க வேண்டும்.

04. அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்று முறை மருத்துவப் பிரிவுகள் தொடங்கி மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை உடன் நியமிக்க வேண்டும்.

05. மையப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளை உருவாக்குவதைத் தவிர்த்து அனைத்து மருத்துவ முறைகளை கையாளும் பன்மைத் தன்மையான  (treatment of plurality) சிகிச்சைமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

06. நான்கு மாவட்டத்திற்கு ஒன்று என மாற்று முறை மருத்துவக் கல்லூரிகளை அனைத்து வசதியுடனான  மருத்துவமனையுடன் இணைத்துத் தொடங்கப்பட வேண்டும். இதில்    சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட அனைத்திற்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இங்கு அப்பகுதியிலுள்ள வட்டாரத் தாவர மூலிகைப் பண்ணை அமைத்து ஆய்வு செய்ய வழிவகுக்கவேண்டும்.

07. போலி டாக்டர்களை கைது செய்வது என்ற போர்வையில் உண்மையிலேயே மாற்று மருத்துவ முறைகளைப் பின்பற்றும் மருத்துவர்களையும் கைது செய்யும் போக்கு நிறுத்தப்படவேண்டும்.

08. தொன்மையான தமிழ் மருத்துவம் (மூலிகை மருத்துவம்) மதம் மற்றும் ஆன்மிகத்துடன் இணைக்கப்பட்டு காவிமயமாகி வருவதைத் தடுத்து உண்மையான சித்த மருத்துவமாக மாற பாடத்திட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். நவீன மருத்துவ அறிவியலின் தன்மைகளை உள்வாங்கவேண்டும். தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் செய்வது போலின்றி  இந்த நோக்கில் பாடத்திட்டங்கள் (syllabus) மாற்றப்படவேண்டும்.

09. இந்திய மாற்று முறை மருத்துவர்கள் மற்றும் ஹோமியோபதி   மருத்துவர்கள் அலோபதி மருத்துவர்கள் போலில்லாமல் வணிகமயமாவதை  தடுத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றவேண்டும். இவற்றிலும் பன்னாட்டுக் கம்பெனிகள் நுழைந்து விட்டார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் விழிப்போடு இல்லாவிட்டால் அலோபதியைப் போல மாற்று மருத்துவத்தையும் சீரழித்து விடுவார்கள்.

   கோட்டூர்புரம் அண்ணா நினைவு நூலகம் உலகத்தரமான குழந்தைகள் மருத்துவமனையாகவும் புதிய தலைமைச் செயலகம் உலகத்தரம் வாய்ந்த அரசு பொது மருத்துவமனையாகவும் மாற்றப்போவதாகச் சொல்கிறார்களே! உலகத்தரத்தின் பொருள் என்ன? பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி ஓரிடத்தில்  மையப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளை (Multi speciality Hospitals)  உருவாக்குவதால் யாருக்கு பலன் கிடைக்கும்?  எளிய மருத்துவ வசதியில்லாத குக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் நிலை என்ன?

பிரும்மாண்டமான கட்டிடங்களைக் கட்டும், வடிவமைக்கும் ஒப்பந்தக்காரர்கள், அவர்கள் மூலம் பலனடையும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், கருவிகள் மற்றும் சாதனங்கள் உற்பத்தி செய்யும் / விற்கும் பெரிய நிறுவனங்களுக்கு மக்கள் பணம் அள்ளிக் கொடுக்கப்படப் போகிறது.  இறுதியில் மக்களுக்கு எந்தப் பலனும் விளையப் போவதில்லை. 

உலகிலேயே அலோபதி மருத்துவமுறைதான் அனைத்து நோய்களுக்கும் சர்வரோக நிவாரணி என்று ஒன்றை அதிகார மையமாக இருப்பதை நமது மக்கள் நல அரசுகள் (Welfare States) என்று சொல்லிக் கொள்பவர்கள் விரும்புவதுதான் நகைமுரண்.  இவர்களுக்கு மக்கள் நலன் குறித்த  கவலைகள் இல்லையென்பது உலகறிந்த ரகசியம். 

அரசு மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  அவருக்கு முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்த பிறகு அவருக்கு இருக்கும் நோய்க்குறிகளுக்கு ஏற்ப அலோபதி, சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா-இயற்கை மருத்துவம் ஆகிய பல்வேறு மருத்துவ முறைகளில் எது பொருத்தமானதோ அந்தப் பிரிவிற்கு அனுப்பி மருத்துவம் செய்யும் முறை இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்கும் போது எவ்வித பக்க விளைவுகளுமற்ற மற்றொரு  மருத்துவ முறைகளுடன் இணைந்த ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கும் (comprehensive  treatment) வாய்ப்பையும் நாம் மறுக்கக் கூடாது.  ஒரு மருத்துவ முறையைப் பயின்றவர்கள் நோய்கள் மற்றும் நோயாளிகளின் தன்மைகளுக்கேற்ப பிற மருத்துவ முறைகளைப் பரிந்துரை செய்வதும் பக்க விளைவுகள் அற்ற மாற்று மருத்துவ முறையின் கீழ் ஒருங்கிணைந்த - பரந்த ஜனநாயகப்பூர்வமான நோயாளிகளை முதன்மைப்படுத்தும் முறைகளே நமக்கு தற்போது தேவை. 

சித்த மருத்துவர்கள் துடிப்புமானி (Stethoscope) பயன்படுத்தாமல் நாடி பார்த்துதான் மருத்துவம் செய்ய வேண்டுமென்பது எவ்வளவு பெரிய வன்முறை?  இது மருத்துவத் துறையில் பன்மைத்துவத்தை (Plurality) அழிக்கும் முயற்சி.  இவற்றை மட்டுமல்ல, அனைத்து களங்களிலும் பன்மைத்தன்மையைப் பாதுகாக்க நாம் போராடியே தீரவேண்டும். இப்போது கட்டுரையின்  தொடக்க மேற்கோளை மீண்டும் ஒரு முறை படியுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக