சனி, பிப்ரவரி 11, 2012

கானல் நீரான கல்வி உரிமை

கானல் நீரான கல்வி உரிமை
                                                                                        - மு. சிவகுருநாதன்



(மக்கள் கல்வி இயக்கம் வெளியிட்ட கல்வி உரிமைச் சட்டம் - நாம் ஏமாற்றப்பட்டக் கதை – என்ற குறுநூல் குறித்த பார்வை)

      கல்வியாளர் பேரா. அனில் சத்கோபால் எழுதிய பொதுப்பள்ளி முறை குறித்த கட்டுரை, தேர்வு முறைகேடுகள் குறித்த கே. சுப்பிரமணியன் எழுதிய கட்டுரை, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் முகுந்த் துபே எழுதிய ''கல்வி உரிமைச்சட்டம்'' என்ற பெயரில் நாம் ஏமாற்றப்பட்டதை வெளிப்படுத்தும் கட்டுரை என மூன்று கட்டுரைகளை பேரா. சே. கோச்சடை மொழிபெயர்ப்பில் மக்கள் கல்வி இயக்கத்தின்  8  -வது வெளியீடாக வந்துள்ளது.  இந்தூல் பற்றி "பொதுப்பள்ளி முறையும் கல்வி உரிமைச் சட்டமும்"  என்ற முன்னுரையை பேரா. அ. மார்க்ஸ் அளித்துள்ளார்.

       அ. மார்க்ஸ் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல்  சமச்சீர்க்கல்வி பிரச்சினை கல்வியில் அனைவரும் பங்கு பெற வழிவகுத்திருப்பது உண்மை தான்.  ஆனாலும் அப்பிரச்சினை ஓய்ந்த பிறகு கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகம் வெளிப்படாமல் தேங்கிப் போயிருக்கிற நிலையும் உள்ளது.  தற்போதிருக்கும் பாடநூற்களிலுள்ள களைய வேண்டிய முறைபாடுகள் இருக்கின்றன.  அவைகள் திருத்தப்படும்போது புதிய ஆட்சியாளர்களை தங்களுக்குச் சாதகமானவற்றை உள்ளே நுழைக்கும் அபாயம் குறித்த எச்சரிக்கையும் மிக அவசியம்.  தேர்வுகள் குறித்தும் அடுத்த கல்வியாண்டில் தமிழக அரசு அமல்படுத்தும் மூன்று பருவ முறைத் தேர்வுகள் பற்றியும் முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

      கோத்தாரி கல்வி ஆணையம் (1966-68) வலியுறுத்திய பொதுக்கல்வி முறையை (Common School System) அரசு தொடர்ந்து பாழாக்கியதோடு ''கட்டாய, இலவசக்கல்வி உரிமைச் சட்டம் 2009'' என்ற பெயரில் நாக்கில் தேன் தடவி ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

      கல்வியை தனியார்மயமாக்கியுள்ள அரசு வெறும் 25%  ஒதுக்கீடு என்ற வரையறை மூலம் மக்கள் வரிப்பணத்தைத் தனியார் கைகளுக்கு மாற்றிவிடும் பணியை செவ்வனே செய்து முடித்திருக்கிறது. கல்லாமையை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம் என்பதெல்லாம் வெற்று முழக்கங்களாக அரசுகள் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு பயன்படுவதாகவே இருக்கிறது.

      சில நெறிமுறைகளை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம் என்று சொல்கிற போது இவற்றை நீதிமன்றங்கள் கூட நிலைநாட்ட முடியாமற்போகும் அபாயத்தை முகுந்த் துபே வெளிப்படுத்துகிறார்.  பயிற்சி பெறாத ஆசிரியர்களை பணியில் அமர்த்துதல், பல் வகுப்புப் போதனை போன்றவற்றிற்கு கல்வி உரிமைச் சட்டம் சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது.

      கல்வி உரிமைச் சட்டம் 2009 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வந்து விட்டாலும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் அதற்குரிய சட்டங்களை வெளியிட்டு குறைபாடுகள் உள்ள இச்சட்டத்தை பெயரளவிலாவது செயல்படுத்த முனையவில்லை.  மிக அண்மையில் தான் தமிழக அரசு இதற்குரிய சட்டத்தை இயற்றியிருக்கிறது.  2012-2013 ஆம் கல்வியாண்டிலாவது இச்சட்டத்தை நிறைவேற்றுவார்கள் என்று நம்புவோம்.

       25%  ஒதுக்கீட்டிற்குரிய குழந்தைகளைத் தேர்வு செய்வதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சம் என தமிழக அரசு வருமான வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.  அரசு சலுகைகள் பெற வருமான வரம்பு ரூபாய் 1 லட்சம் என்று இருக்கும் போது இதற்கு மட்டும் ரூபாய் 2 லட்சம் வரம்பு நிர்ணயிப்பது சரியாக இல்லை.  இதனால் சாமான்ய மனிதர்களின் வீட்டுப் பிள்ளைகளை விட நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பலனடைவர்.

       கல்வி உரிமைச் சட்டத்திற்கான வயதெல்லையை 6-14 என்று வைத்திருப்பதன் மூலம் 0-6, 14-18 வயதுக் குழந்தைகளின் கல்வியை அரசு புறக்கணிப்பது தெளிவாகத் தெரிகிறது.  தொடர்ந்து நமது ஆட்சியாளர்கள் இந்த மாதிரியான போலி உரிமைச் சட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.  இதை இந்நூலுள்ள கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன.

       கல்வியைச் சீரழிப்பதில் தேர்வு தொடர்பான முறைகேடுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு உண்டு.  அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகள் தினமும் சந்தி சிரிக்கின்றன.  தேர்வில் காப்பியடித்தல், ஆள் மாறாட்டம், வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாதல் போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் கல்வித்துறையே சீரழிகிறது.

      பெரும்பாலான தனியார் பள்ளிகள் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க மாணவர்களுக்குத் தேர்வு அறையில் சொல்லிக் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.  இதற்கு கல்வித்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோர் உதவுகின்றனர்.

       இதற்காக தேர்வுகளை அறவே ஒழித்து விடுவது என்ற புரட்சிகரமான ஆலோசனை தீர்வாகாது என்றும் மாறாக தேர்வு அமைப்பிலுள்ள குறைகளைக் களைந்து கல்வித் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே. சுப்பிரமணியனின் கட்டுரை வலியுறுத்துகிறது.

         இன்று நமது மத்திய, மாநில அரசுகள் கல்வியைப் பற்றி சிறிதும் யோசிப்பதில்லை.  பாமர மக்களுக்கு கல்வி சரிவர சென்றடையத் தடையாக இருப்பது இன்றைய அரசுகளே என்றால் அது மிகையல்ல.  சமூகம் கல்வியின் பால் அக்கறையுள்ளோர் அரசுக்குக் கொடுக்கும் அழுத்தங்களின் விளைவாகவே ஏதேனும் சிறிய முன்னேற்றமாவது காணப்படுகிறது.

       பொதுமக்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பாரும் கல்வி பற்றிய சிந்தனையிலும் அதில் செய்ய வேண்டிய மாற்றங்களிலும் பங்கெடுக்க வேண்டும்.  கல்வியை சீரமைப்பது - ஒழுங்குபடுத்துவது போன்றவற்றிற்கு அரசுக்கு பல்வேறு இடங்களிலிருந்து நெருக்குதல்கள் தரப்பட வேண்டும்.  அப்போது கல்வியில் மட்டுமல்ல எதிலும் மாறுதல்கள் நிகழும்.
அந்த வகையில் பேரா. சே.கோச்சடையின் மொழி பெயர்ப்பில் கல்வியாளர் பேரா. பிரபா.கல்விமணி வெளியிட்டிருக்கும் இக்குறுநூல் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.


கல்வி உரிமைச் சட்டம் - நாம் ஏமாற்றப்பட்ட கதை.  

பேரா. அனில் சத் கோபால், கே. சுப்பிரமணியன், முகுந்த் துபே 

(மொ) பேரா. சே. கோச்சடை.

வெளியீடு :

    மக்கள் கல்வி இயக்கம்
    7-பாலையா இல்லம்
    பாரதிதாசன் நகர்,
    கல்லூரிச்சாலை,
    திண்டிவனம் - 604 001.
    செல் :  94426 22970. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக