செவ்வாய், பிப்ரவரி 28, 2012

வேதாந்தா - ஸ்டெர்லைட்டுடன் சேர்த்து விரட்டப்பட வேண்டியவர்கள்

வேதாந்தா - ஸ்டெர்லைட்டுடன் சேர்த்து விரட்டப்பட வேண்டியவர்கள்
 
                                                                                                         - மு. சிவகுருநாதன் 
 
(பூவுலகின் நண்பர்கள், எதிர் வெளியீடு ஆகியோர் இணைந்து வெளியிட்ட சூழலியல் குற்றவாளி ஸ்டெர்லைட் (அட்டையில் - விரட்டப்பட வேண்டிய ஸ்டெர்லைட்) குறுநூல் பற்றிய விமர்சனப்பதிவு.)

            
 
       வேதாந்தா ரிசோர்சஸ் என்ற பன்னாட்டுத் தொழில் குழுமம் இந்தியாவில் தாமிரம், இரும்பு, நிலக்கரி போன்ற இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் பெருச்சாளியாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆப்பிரிக்கா கண்டத்திலும் இயற்கை வளங்களைக் கொள்ளையிடுகின்றது. நமது பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் போன்றோர் இந்நிறுவனங்களின் கை கூலிகளாகச் செயல்படுகின்றனர். ப. சிதம்பரத்திற்கும் வேதாந்தாவிற்கும் உள்ள தொடர்பை நாடே அறியும். அது  ப.சிதம்பரத்திற்கு வேண்டுமானால் மறந்து போயிருக்கலாம். 

       வேதாந்தா, சீசா கோவா, ஸ்டெர்லைட் என்ற பெயர்களில் இயங்கும் இந்நிறுவனம் சீசா - ஸ்டெர்லைட் என்ற பெயரில் இணைக்கப்பட்டு உலகில் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் ஏழாவது பெரிய நிறுவனமாக மாறவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. 

      நமது அரசுகளின் வளர்ச்சி என்பது ஏழைகளை, விவசாயிகளைக் கொன்று பணக்காரர்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் வாழ வைப்பதுதான். இந்த வளர்ச்சி 8%, 9%, 10% என்றெல்லாம் கணக்கு காட்டும் அரசியல்வாதிகளுக்கு , காந்தீயப் பொருளாதார மேதை ஜே.சி. குமரப்பா அவர்களின் கிராமத்து விவசாயியின் விலா எலும்புகளை வைத்து நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் அளவுகோல் கசப்பாகத்தான் இருக்கும். 

      தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் அடி வைத்த 1994 ஆம் ஆண்டு முதல் தொடரும் போராட்டங்களை ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க அமைப்பாளர் பி.மி. தமிழ்மாந்தனின் கட்டுரை ஆவணப்படுத்துகிறது. கூடங்குளத்தில் இத்தனை ஆண்டு காலம் தொடரும் போராட்டங்களை கண்டும்  காணாதிருந்துவிட்டு இவ்வளவு ஆண்டுகள் ஏன் போராடவில்லை என்று கூப்பாடு போடுகிறார்களே, அதைப்போல ஸ்டெர்லைட் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் அதிகார கும்பல் இருக்கத்தான் செய்யும். இக்கட்டுரை அவர்களது வாயை அடைக்கும். 
 
        மேலும் இக்கட்டுரையில் தமிழக அரசியல் கட்சிகளின் விலை போன தன்மை, விளம்பர மோகம், ஸ்டெர்லைட் நிர்வாகம் போராட்டக்காரர்களை சாதி ரீதியாக பிளவுப்படுத்த செய்த முயற்சிகள், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்பாடுகள், மக்களை மயக்கும் சலுகைகள், சுற்றுச்சூழலை புறந்தள்ளிய அமைச்சகம், நீதிமன்றங்களும் மக்கள் நலனைப் புறக்கணித்த நிலை போன்றவை வெளிப்படுத்தப்படுகின்றன. 
 
         1997 முதல் 1999 முடிய ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்துகள் இவற்றிற்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் கட்டிய அபராதத் தொகை போன்றவற்றைப் படிக்கும்போது இப்போராட்டங்களில் பின்னாலுள்ள உண்மை புலனாகிறது. இதிலிருந்து விரட்டப்பட வேண்டியவர்கள் ஸ்டெர்லைட் - வேதாந்தா மட்டுமல்ல; அதற்கு உதவிய ஆளும் வர்க்க முகவர்களையும் விரட்ட வேண்டிய அவசியம் புரியும். 

         சென்னை உயர்நீதி மன்ற உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் (NEERI - National Environmental Engineering Research Institute) அளித்த முதல் அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை, தமிழக அரசு, மத்திய அரசுத் துறைகள் செய்த அத்துமீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டு, அதனையொட்டி சென்னை உயர்நீதி மன்ற அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. 

       இத்தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் உயர்நீதி மன்றத் தீர்ப்பின் மூலம் நம்பிக்கை கீற்று துளிர் விட்டிருப்பதை வழக்கறிஞர் சுந்தர்ராஜன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நீரி (NEERI) மையம், மாசு சுத்திகரிப்புப் பிரிவு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் சுத்திகரிக்கப்பட்ட நீரில் உள்ள ஆர்சனிக், குரோமியம், ஈயம், செலேனியம் போன்றவற்றின் அளவு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ள அளவுகளுக்குள்ளாகவே ஸ்டெர்லைட் ஆலை பராமரித்து வருவதாகவும் இரண்டாவது அறிக்கையில் பொய் சொன்னது. இதற்கு விலை 1.22 கோடி ரூபாய் என சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமனின் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. 

     தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சகம், உச்சநீதிமன்றக் குழு என எல்லாத் தரப்பும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இத்தகைய நிறுவனங்களுக்கு பக்க பலமாகச் செயல்படுவதையும் மேற்கண்ட கட்டுரை விவரிக்கிறது. 

     ஒரு காலத்தில் கிழக்கிந்திய வணிகக் குழுவிற்கெதிராக இரு சுதேசிக் கப்பல்களை இயக்கிய வ.உ.சி.யால் பெருமைமிக்க நகரம் தூத்துக்குடி. இன்று இவ்வூரில் ஸ்டெர்லைட் போன்ற சுதந்திர இந்தியாவின் கொள்ளையிடும் அதிகார  வர்க்கத்தால் அனுமதிக்கப்படும் துயரங்களுக்கு எதிரான அடித்தட்டு மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டியுள்ளது. 

       இன்றைய வளர்ச்சிக் கோட்பாட்டின்படி தொழிற்சாலைகளின் விரிவாக்கமும் புதிய தொழிற்சாலைகளின் உருவாக்கமும் உலகெங்கும் நடைபெறுவதால்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி வருகிறது. நீர், நிலம், காற்று மாசுபடுதல், காலநிலை மாற்றம், ஓசோன் மண்டலம் மெலிவு, புவி வெப்பமடைதல், காடுகளின் பரப்பு குறைதல், பனியாறுகள் உருகுதல், கடல் மட்டம் உயர்தல், அரிய விலங்கு - தாவர இனங்கள் அழிதல் போன்ற பல்வேறு சீரழிவுகளை வெ. கஜேந்திரன் பட்டியலிடுகிறார். 

      செம்புத்தாதுவிலிருந்து செம்பை உற்பத்தி செய்ய பாலி மெட்டலர்ஜிக்கல் முறை, ஹைட்ரோ மெட்டலர்ஜிக்கல் முறை ஆகியன பயன்படுத்தப் படுகின்றன. இவ்விரண்டுமே சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துபவை என்று இக்கட்டுரை குறிப்பிடுகிறது. 
 
      வளர்ச்சிக் கோட்பாடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இணைந்து செல்ல வேண்டிய தேவையை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. தொழிற்சாலைகள் லாபத்தை மட்டும் கணக்கில் கொள்வதால் ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதையும் உணர்த்துகிறது. 

      இக்குறுநூலிலுள்ள சிறிய கட்டுரைகள் பூவுலகு சுற்றுச்சூழல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பரந்த வாசகர்களைச் சென்றடைய வாய்ப்பில்லை. எனவே, பூவுலகின் நண்பர்கள், எதிர் வெளியீடு ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கும் இக்குறுநூல் பரந்துபட்ட வாசகர்களை சென்றடைந்தால் மகிழ்ச்சியே. இருப்பினும் இந்நூலை மக்கள் பதிப்பாக அச்சிட்டு குறைந்த விலையில் தமிழகம் தோறும் விநியோகிக்க வேண்டியது அவசியம். 

      தூத்துக்குடி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு உலை, கம்பம் - தேவாரம் நியூட்ரினோ ஆய்வகம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான  பெரும் மக்கள் திரள்  போராட்டங்களை வெற்றியடைய  வைக்க இத்தகைய நூற்கள் பெரும் பங்காற்றும் என்பதை மறுக்க முடியாது. இம்மாதிரியான வெளியீடுகள் பரவலாக மக்களைச் சென்றடையும்போதுதான் விரட்டப்பட வேண்டியது ஸ்டெர்லைட் மட்டுமல்ல மன்மோகன்சிங்குகளும் ப.சிதம்பரங்களும் என்பதை மக்கள் உணர்வார்கள். 
 
 சூழலியல் குற்றவாளி ஸ்டெர்லைட் 
(அட்டையில் - விரட்டப்பட வேண்டிய ஸ்டெர்லைட்)
 
பக். 32                     விலை ரூ. 30/- 
 
 பூவுலகின் நண்பர்கள்,                                                       எதிர் வெளியீடு, 
 ஏ-2, அலங்கார் பிளாசா,                                                    96-நியூ ஸ்கீம் ரோடு, 
 425 - கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை,                              பொள்ளாச்சி - 642002, 
 கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010.         
                                                                                                     பேச: 04259 - 226012 
பேச: 044 - 26461455.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக