ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

சோதிடம் சொல்லும் விஞ்ஞானிகள்


 சோதிடம் சொல்லும் விஞ்ஞானிகள்          - மு.சிவகுருநாதன்


(ஓர் முன் குறிப்பு:- 

                பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று கூலிக்கு மாரடிக்கும் பலர் விஞ்ஞானிகளாக இருப்பதில்லை என்பதே நடைமுறை உண்மை. திறந்த மனத்துடன் ஆய்வு செய்யும் மனப்போக்கு அறிவியலின் அரிச்சுவடி என்பதைக் கூட தெரியாதவர்களை எப்படி விஞ்ஞானிகள் என்று சொல்வது?   கூடங்குளம் விவகாரத்தில் அப்துல் கலாம் உள்பட விஞ்ஞானிகள் என்று நம்பப்பட்ட பலரது முகமுடிகள் கழன்று விழுந்துகொண்டே இருக்கின்றன. 'விஞ்ஞானிகள்' என்று இங்கு நான் குறிப்பிடுவது பொதுவான ஒரு பயன்பாட்டுக்கு தானே தவிர உண்மையான  விஞ்ஞானிகளை குறிக்க அல்ல. )   


      கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்தைத் தொடர்ந்து   மத்திய அரசு பேரா.முத்துநாயகம் தலைமையில் ஓர் குழுவை அமைத்தது. அக்குழுவில் இடம்பெற்ற அனைவரும் அணுஉலை ஆதரவாளர்கள். எனவே அவர்கள் அளித்த அறிக்கை நாம் எதிர்பார்த்ததுபோல் அணுஉலைக்கு ஆதரவாகவே இருந்தது.

        இதைப்போலவே அப்துல் கலாம் சுமார் 40 பக்கங்கள் நிறைந்த கட்டுரையுடன் கூடங்குளம் வந்து ஒருசில மணி நேரத்தில் பேராய்வு செய்து தனது ரெடிமேட் ஆய்வறிக்கையை வெளியிட்டு பெரும்புகழ் பெற்றார். இதைக் கண்ட இ.காங்கிரசார் அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக ஆக்க உதவி புரியாததை நினைத்து மிகவும் வருந்தியிருப்பார்கள்.

      தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியன் தலைமையில் அணுசக்திக்கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவொளி , ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயராகவன் ஆகிய நால்வர்  அடங்கிய நிபுணர் குழுவை  அமைத்தார். இக்குழுவில் அணுசக்திக்கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் இடம்பெற்றது பலரின் கண்டனத்திற்கு ஆளானது. நமக்கு இந்த நால்வர் குழு மீதும் பெரிய நம்பிக்கைகள் ஏதுமில்லை.

      இந்த நால்வர் குழு நேற்று  (18.02.2012) கூடங்குளம் அணுஉலையில் ஆய்வு செய்து  அணு விஞ்ஞானிகளுடன் உரையாடியது. இன்று  (19.02.2012) இந்த நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்களுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

        தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், இது ஓர் தொடக்கம்தான் என்று சொல்லியிருக்கிறார். கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களை தமிழக  நிபுணர் குழு நேரிடையாக சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்கவேண்டும். போராட்ட குழுவின் நிபுணர் குழுவையும் தமிழக நிபுணர் குழு சந்தித்துப் பேசவேண்டும் என்ற இரு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

      பேச்சுவார்த்தைக்குப் பிறகு  நிபுணர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், இனியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கீழ்க்கண்ட முடிவுகளைத் தெரிவித்துள்ளனர்.

 • கூடங்குளம் அணுஉலை மிகவும் பாதுகாப்பானது. இங்கு ஏழு அம்ச பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
 • கூடங்குளத்தில் சுனாமிபேரலை  வந்தாலும், 6.5 என்ற அளவில் நிலநடுக்கம்  வந்தாலும் கூடங்குளம் அணுஉலைக்கு ஆபத்து இல்லை
 • கூடங்குளம் அணு உலை கடல் மட்டத்திலிருந்து 25 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதனை விட  உயரமாக அணுஉலை அமைக்கப்பட்டுள்ளது.
 • மூன்றாவது தலைமுறையை சேர்ந்த மிகவும் முன்னேறிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • கூடங்குளம் அணு உலையில் அதிக சக்திவாய்ந்த ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு  இருந்ததை ஆய்வின் போது பார்த்தோம்.
 • மின்சாரம் தடைபட்டாலும் கூட கூடங்குளத்தில் இயற்கையாக குளிரூட்டும் வசதி உள்ளது.
 • கடல் நீர் வெப்பமடைய வாய்ப்பே இல்லை. எனவே  ஒரு மீன் கூட சாகாத வகையில் இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.
 • விஞ்ஞானிகளுடன் விரிவான ஆலோசனைகள்  நடத்தப்பட்டன.
 • போராட்டக்காரர்கள் மூலமாக மக்களின் உணர்வுகளை அறிய முடிந்தது.  

  நம்முன் எழும் கேள்விகள்:-

 • ஏழு பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் மட்டுமே இந்த அணுஉலை பாதுகாப்பானது என்ற முடிவுக்கு ஒரே நாளில் நிபுணர் குழு வந்ததெப்படி?
 • அப்துல் கலாம் ரிக்டர் அளவுகோலில் 6 அளவிற்கு நிலநடுக்கம் வந்தாலும் பாதிப்பில்லைஎன்றார். இவர்கள்  6.5 என்ற அளவில் நிலநடுக்கம்  வந்தாலும் பதிப்பு கிடையாது என எதன் அடிப்படையில் சொல்கிறார்கள்?
 • சுனாமிப் பேரலையாலும் ஒன்றும் ஆகாதென  சோதிடம் எப்படி இவர்களால் முடிகிறது?
 • சுனாமிப்பேரலை 25 கி.மீ. க்கு மேல் வராது என்ற நம்பிக்கை இவர்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?
 • மூன்றாவது தலைமுறை தொழில்நுட்பம் குறைபாடு அற்றது என அறுதியிட்டு எப்படி கூறமுடியும்?
 •  ஜப்பானில் அதிக சக்திவாய்ந்த ஜெனரேட்டர்கள் இல்லையா? அதனால்தான் புகுஷிமா  அணு உலையில் விபத்து ஏற்பட்டதா?
 • பேரிடர் நிகழும்போது  உங்களது தானியங்கி வசதிகள் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும்?
 •  அணுஉலை இயங்காதபோது மீன்கள் சாகாது என எப்படி இவர்களால் உறுதிப் படுத்தமுடிந்தது?    
 • அணு மின் நிலையம் கட்டுமானம், பாதுகாப்பு குறித்த ஆவணங்கள் தங்களிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதை சென்னை சென்று ஆய்வு செய்து அறிக்கை தருவதாகவும் சொல்லும் இவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அணு மின் நிலையப் பாதுகாப்பை உறுதி செய்வதெப்படி? 
 • அணு உலையை மட்டும் ஆய்வு செய்து அணு விஞ்ஞானிகளின் கருத்துக்களை மட்டும் கேட்கத் தெரிந்த இவர்களால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்களை சந்திக்க முடியாதது ஏன்? 
 • ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கவேண்டியவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டதெப்படி?  இக்குழு அமைக்கப்பட்டவுடன்  இந்த முடிவுதான் செய்யவேண்டுமென முன்கூட்டியே வலியுறுத்தப்பட்டதா? இதன் பின்னணியில் தமிழக அரசு இருக்கிறதோ என ஐயுறவேண்டியுள்ளது. 
   
    விஞ்ஞானிகள் என்று சொல்லப்படுபவர்கள் ஆளும் வர்க்கத்தின் முகவர்களாகவும் துளியும் அறிவியல்பார்வை அற்றவர்களாகவும் இருப்பது கூடங்குளம் விஷயத்தில் தெளிவாகிறது. இவர்களை விஞ்ஞானிகள் என்று சொல்வது மனித குலத்திற்காக பல்வேறு இன்னல்கள் பட்டு, உயிரையும் விட்டு எண்ணற்ற கண்டுபிடிப்புக்களை உலகிற்கு அளித்த பல அறிவியல் அறிஞர்களை இழிவு செய்வதாகும்.

       விஞ்ஞானிகள் என்ற போர்வையில் இவர்கள் அடிக்கும் லூட்டிகளைப் பார்க்கும்போது அப்துல் கலாம் ஆய்வு முடிவுகள் பற்றி அ.மார்க்ஸ் 'தீராநதி' (டிச.2011 ) இதழில் இறுதியாகக் குறிப்பிட்ட பாரதியின் வரிகளை மீண்டும் சொல்லத்தோன்றுகிறது.


“படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் 

                                                                          அய்யோண்ணு போவான்”
      
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக