ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

உலகில் முன் தோன்றியது தமிழும் தமிழ் நாகரிகமும் தான்!

உலகில் முன் தோன்றியது தமிழும் தமிழ் நாகரிகமும் தான்!

                                                                                                                       -மு.சிவகுருநாதன் 


       திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய இலக்கியச் சந்திப்பு நிகழ்வு நேற்று  (04.02.2012)  மாலை 5 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதி  கெளரிசாமி  நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. நாவலாசிரியர் சோலை சுந்தரபெருமாள் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் பொதுச்செயலர் புலவர் எண்கண் சா.மணி வரவேற்றுப் பேசினார்.

        நாவலாசிரியர் சோலை சுந்தரபெருமாள் தனது தலைமையுரையில் அரங்கில் கூட்டம் குறைவாக உள்ளதைக் குறிப்பிட்டு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வாளர் அளிக்கும் அரிய புதையல்களை பலருக்கும் நீங்கள் கொண்டுசேர்க்கவேண்டுமென வலியுறுத்தினார். பார்வையாளர்கள்  ஒவ்வொருவரும்   1000  பேருக்குச் சமமானவர்கள் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
 

      இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் புரவலர் அ.மோகன்தாசு முன்னிலை வகிக்க திறனாய்வாளர் சி.அறிவுறுவோன் சிந்து சமவெளி ஆய்வாளர் பூர்ண சந்திர ஜீவா அவர்களைப் பற்றி ஒரு சிறிய அறிமுக உரை நிகழ்த்தினார்.   பூர்ண சந்திர ஜீவாவின் ஆய்வுச் சிறப்புக்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய தோழர் அறிவுறுவோன் ஆய்வாளரின் தந்தை இந்திய வான்படையிலும் தாய் செவிலியராகவும் பணியாற்றி நாட்டுக்குழைத்த குடும்பப் பாரம்பரியம் கொண்டவர் என்றும் தனது ஆய்வுகளுக்காக தன்னுடைய இளமையில் பெரும்பகுதியை தொலைத்தவர் என்றும் குறிப்பிட்டார். வாழ்வில் இளமை மிகவும் முக்கியமானது. அதைத் தொலைப்பது அளப்பரிய தியாகம் என்றார்.

       "சிந்துவெளித் தமிழரும் தமிழும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய  ஆய்வாளர்  பூர்ண சந்திர ஜீவா,  தனது இந்த பெயரைப் பார்த்த உடன் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று வினவப்படுவதாக குறிப்பிட்டு தனது தந்தையாரின் திராவிட,பொதுவுடைமை இயக்கத் தொடர்புகளை சொல்லி, பொதுவுடைமை இயக்கத் தலைவர் P.C. சோஷி என்று அன்புடன் அழைக்கப்பட்ட பூர்ண சந்திர சோஷி, ஜீவானந்தம் ஆகியோரின் பெயர்களை இணைத்து பெயர் வைக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். மறைமலையடிகளின்  தனித்தமிழ் இயக்க ஈடுபாட்டால் தன்னுடைய பெயரை  'நிறைமதி உயிரன்'   என்று மாற்றி பாடநூற்களில் எழுதி தந்தையிடம் அடிவாங்கிய கதையை சுவைபடக் குறிப்பிட்டார்.

        திராவிடம் என்பது  தமிழைத்தான் குறிக்கும் என்று உறுதியுடன் சொல்லி திராவிடம் என்பது பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்றார். 2004 இல் தான் வெளியிட்ட ஆய்வு நூலில் முந்து தமிழ் (pro-tamil) என்ற புதிய சொல்லாக்கத்தைப்  பயன்படுத்தி பெருத்த விமர்சனத்திற்குள்ளானதாகவும் தெரிவித்தார். தமிழும் தமிழ் நாகரிகமும் உலகில் முதலில் தோன்றியது என்பதுதான் தனது ஆய்வு முடிவு என்று உறுதியாக தெரிவித்த பூர்ண சந்திர ஜீவா இதை நீங்களும் அனைவரிடமும் சொல்லுங்கள், இதை யாரும் மறுக்கமுடியாது என்றார். புதுமைபித்தன்  உலகில் பிறந்த முதல் குரங்கு தமிழ் குரங்குதான் என கிண்டலாகக் குறிப்பிட்டாலும் ஏன் அதுகூட உண்மையாகவும் இருக்கலாம் என்றும் சொன்னார்.

        சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் வைக்கபட்டதுதானே தவிர இது தமிழ் நாகரிகமே என்பதில் துளியும் அய்யமில்லை என்றார். களிபங்கன் , அம்மையப்பன்  இரண்டும் ஒன்றுதான் என்றுசொல்லி தமிழ் சொல்லுக்கும் பிறமொழி சொல்லுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிட்டார். பஞ்சதிராவிடம் என்பது தமிழ்,தெலுங்கு, கன்னடம், குஜராத்தி,மராத்தி ஆகிய 5 மொழிகளைக் குறிக்கும் என்றும் தமிழிலிருந்து   முதலில் பிரிந்தது தெலுங்கு என்றார். மலையாளம் 700 ஆண்டுகளாகத்தான் தனி மொழியாக அறியப்படுகிறது என்றும் சொன்னார்.

         ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிக்கொண்டிருந்தபோது ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும்  காட்டுமிராண்டிகளாகத் திரிந்து கொண்டிருந்தனர் என்றும் பிற்காலத்தில்தான் அவர்கள் அறிவியல் முன்னேற்றத்தினால் மேலுக்கு வந்தனர் என்றார். தமிழர்கள் இங்கிருந்து கொண்டு சென்று பரப்பியதுதான் சுமேரிய நாகரிகம் என்றார். கடல் கடந்து பரவிச் செல்வதில் மிகுந்த ஈடுபாடுள்ள தமிழர்கள் மூலம் உலகம் முழுவதும் தமிழ் மொழியும் தமிழ் நாகரிகமும் பரவியது. தமிழ் மொழி வாயிலாகத்தான் பிறமொழிகள் பிறப்பெடுத்தன என்று விளக்கினார்.

       ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தாமும் பிற நான்கு நண்பர்களும் சேர்ந்து எவ்வித அரசு,தனியார் உதவியின்றி தமிழகம் முழுவதும் சுற்றி பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தியிருப்பதாகவும் அதிலிருந்துதான் தான் இம்முடிபுகளை வந்தடைந்ததாகவும் எமது ஆய்வுகள் இன்னும் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
  
        இறுதியாக படக்காட்சி மூலம் தனது ஆய்வுகளை விளக்குவதாகச் சொன்னார். நான் அவசர வேலை காரணமாக அக்காட்சிகளை காண வாய்ப்பின்றி  திரும்பவேண்டியதாயிற்று. அவரது ஆய்வு நூற்களை படித்தபிறகு இதுகுறித்து விளக்கமாக இப்பகுதியில் விவாதிப்போம்.

    பேரா.தி.நடராஜன் நன்றி நவில விழா இனிது நிறைவடைந்திருக்கும்.  இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் பொதுச் செயலர் புலவர் எண்கண் சா.மணி சிறப்பாக செய்திருந்தார். வழக்கம் போல கூட்டம் குறைவாக இருந்ததுதான் பெருங்குறை. இதைத் தவிர்க்கமுடியாது.  

2 கருத்துகள்:

Ezhilram Desent சொன்னது…

வரலாற்றை படிக்கின்றோம்,சிந்து வெளி நாகரிக மக்களை கண்டுபிடிப்போம் என்று ஏமாற்றும் கூட்டத்தின் நடுவில் தமிழ் பற்றுடனும் நேர்மையாகவும் நடந்து கொண்டவர் பூரணச்சந்திரன் அவர்கள்.அவருடைய 'சிந்து வெளியில் முந்து தமிழ்' புத்தகத்தை படித்துள்ளேன். மிக அறபுதம், சரியான சான்றுகளுடன் சிந்து எழுத்துகளை விளக்கியுள்ளார். என்னுடைய கிராம நூலகத்திலிருந்து பெற்றேன் அப்புத்தகத்தை.திராவிடர்களே சிந்து வெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள்(100%).

Ezhilram Desent சொன்னது…

சிந்து வெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள் திராவிடர்களே என்பதை நிரூபிக்கும் உண்மை புத்தகம் பூரணசந்திரன் அவர்கள் எழுதிய 'சிந்து வெளியில் முந்து தமிழ்'. பல சான்றுகளுடன் நிரூபித்துள்ளார் மிக அற்புதம். Infact i got this book from my villege library.

கருத்துரையிடுக