செவ்வாய், ஏப்ரல் 24, 2012

தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?

தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?
                                                                      
                                                                                                                  - மு. சிவகுருநாதன்
 
      தேர்வு முறைகள் தொடங்கியதிலிருந்தே காப்பியடிக்கும் பழக்கமும்
தொடங்கியிருக்க வேண்டும்.  இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறும் சிறு நிகழ்வுகள் இப்போது பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றன.  மாணவர்கள்  பார்த்து கேட்டு எழுதுவதை கண்டு கொள்ளாமலிருப்பது, மாணவர்களுக்கு பிட்  சப்ளை செய்வது, நன்றாக படிக்கும் மாணவனின் விடைத்தாளை தேர்வறையில் உள்ள  அனைவருக்கும் வழங்குவது, அறைக்கண்காணிப்பாளர்களே சொல்லித் தருவது,  குறிப்பிட்ட பாட ஆசிரியரிடமிருந்து குறுஞ்செய்தி (SMS) மூலம் விடைகள் அனுப்பப்பட்டு  அவற்றை மாணவர்களுக்கு அளிப்பது என காப்பியடிக்கும்  கலாச்சாரம் கல்வித் துறையில் வெகு வேகமாக வளர்ந்துள்ளது.

       இந்த வகையில் பத்தாம் வகுப்பு கணித வினாத்தாளுக்குரிய விடைகள்
நகலெடுக்கப்பட்டு (XEROX) விநியோகிக்கப்பட்ட நிகழ்வு திருவண்ணாமலை
மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (இந்த மெட்ரிக்
முகமூடியை எப்போது கழற்றுவார்கள் என்று தெரியவில்லை) நடந்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் குறுஞ்செய்தி மூலம் விடைகளை அனுப்பிப் பெற்றளித்த ஆசிரியர் அறைக் கண்காணிப்புப் பணியிலிருந்து
விடுவிக்கப்பட்டார்.  அவர் அடுத்த தேர்வில் வேறு மாற்று வழியை 
கையாளக்கூடும்.

       அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் அடிக்கடி வினாத்தாளகள் முன்கூட்டியே நகலெடுத்து விற்பனை செய்யப்படுகின்றன. வினாத்தாள் முன் கூட்டியே வெளியாவது, தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவது போன்றவற்றை ஒழிக்க முடியாது என்று  சொல்வதற்கில்லை.  அதிகாரவர்க்கம் இவற்றின் மூலம் பெரும் பயனடைகிறது  என்பதே உண்மை.  தேர்தல் முறைகேடுகளைப் போல தேர்வு முறைகேடுகளும் ஒருவர்  மற்றவரைக் குறை சொல்வதற்கு பயன்படுத்துவார்களே தவிர எந்தத் தரப்பும் அவற்றில் ஈடுபடாமலிருப்பது இல்லை.

       ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியர் தனக்கு வந்த மின்னஞ்சல் புகாரை
புறக்கணிக்காமல் மேற்கொண்ட நடவடிக்கையால் இந்நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  பள்ளி அலுவலகத்திலேயே விடைகள் நகலெடுக்கப்பட்டது.  அறைக் கண்காணிப்பாளர்களிடம் விடைத் துண்டுகள் இருந்தது,  செல்போன் மூலம்  தேர்வின் போது உரையாடியது, அவர்களின் சட்டைப்பையிலிருந்து பறிமுதல்  செய்யப்பட்ட கவர் பணம் போன்றவை ஊடகத்தின் பார்வைக்கு வந்துள்ளன. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் இதைப் போல செயல்பட்டால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் பிடிபடும் என்பதில் அய்யமில்லை.

       அடிக்கடி மறதி நோய்க்காட்படும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் இதே
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2008-ல் நடந்த நிகழ்வை நினைவுப்படுத்துவது  மிகப் பொருத்தமாக இருக்கும்.  முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு நடத்திவரும் ஜீவா - வேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இவ்விதம் முறைகேடுகளில் ஈடுபட்டு  100/100 தேர்ச்சி விழுக்காட்டைப் பெற்றுவந்த நிலையில் 2008 மார்ச் பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கந்தசாமி, நேர்முக  உதவியாளர் சக்கரபாணி, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேனிலைப்
பள்ளித் தலைமையாசிரியர் பரசுராமன், ஆரணி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி  வேதியியல் ஆசிரியர் பரிமளா ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தேர்ச்சி விழுக்காடு 67% ஆகக் குறைந்தது.  
 
    இதனைத் தொடர்ந்து அப்போதிருந்த  தி.மு.க. அரசு முதன்மைக் கல்வி அலுவலர் கந்தசாமியை தூத்துக்குடிக்கும் நேர்முக உதவியாளர் சக்கரபாணியை ராமநாதபுரத்திற்கும் தலைமையாசிரியர்  பரசுராமனை ஒட்டப்பிடாரத்திற்கும் வேதியியல் ஆசிரியை பரிமளாவை  நாமக்கல்லுக்கும் இடம் மாற்றம் செய்து பழி தீர்த்துக் கொண்டது.  கும்பகோணம் தீ விபத்திற்குப் பிறகு கல்வி அதிகாரிகள் எடுக்கப்பட்ட  இரண்டாவது பெரிய நடவடிக்கை இதுவாக இருக்கக்கூடும்.

       இத்தகைய நிகழ்வுகள் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.  28.02.2009 அன்று விழுப்புரத்தில் கூடிய மக்கள் கல்வி கூட்டமைப்பு காப்பியடிக்கும் கலாச்சாரத்தை ஒழித்துக் கல்வித் தரத்தை  உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையும்  இங்கு குறிப்பிட வேண்டும். 
 
(பார்க்க: தமிழகப் பள்ளிக் கல்வி பிரச்சினைகளும் தீர்வுகளும் 
(தொ) பேரா. பிரபா. கல்விமணி
 - மக்கள் கல்விக் கூட்டமைப்பு வெளியீடு)

       இந்த மாதிரி நிகழ்வுகள் ஏற்படும் போது அனைவரும் வாய்க்கு வந்தபடி
கருத்துக்களை உதிர்ப்பது வாடிக்கையாகி விடுகிறது.  18.04.2012 அன்று
தினமணி தலையங்கம் இம்முறைகேடுகளுக்குக் காரணம் அரசுப் பள்ளிகள் என்று  சொல்கிறது.  இந்த தனியார் பள்ளியில் காப்பியடிக்கத் துணை போனவர்கள்  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றும், அவர்கள் பள்ளிக்கே வராமல்  மாணவர்களுக்குத் தேர்ச்சி அளிக்க இம்மாதிரியான முறைகேடுகளுக்குத் துணை  போவதாகவும் கண்டுபிடித்துள்ளது.

               முறைகேடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்களைக் கண்டிக்க வேண்டியது  நடுநிலையாளர்களின் கடமை.  அதற்கு இவர்கள்தான் காரணம் என்று முத்திரை  குத்துவதை ஏற்கமுடியாது.  மனிதன் தவறு செய்வது வாடிக்கையானது.  அந்த தவற்றைச் செய்யத் தூண்டுபவர்களை கண்டு கொள்ளாமல் விடுவது சரியா?

       மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பார்வையிடலின் போது அப்பள்ளி அலுவலகத்திலேயே  விடைகள் நகல் எடுக்கப்பட்டது, வகுப்பறையில் அறைக் கண்காணிப்பாளர்கள்  பையில் பணம், கத்தை கத்தையாக விடைத் துண்டுகள், அவர்களிடையேயான செல்போன்  உரையாடல்கள் ஆகியவை நடந்து பலர் கையும களவுமாக பிடிபட்ட போது இங்கு  என்னவிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது?

       அந்தத் தனியார் பள்ளி அலுவலர்கள் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் தொடர்ந்து பணிபுரிந்தனர்.  அறைக் கண்காணிப்பாளர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள்  மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைக்கு ஆணையிடப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.

       இந்த 7 பேரின் நடத்தை மிக இழிவானது.  இதற்குரிய தண்டனை அளிக்கப்பட்டாக வேண்டும். ஆனால் இதற்கு உதவி புரிந்த அப்பள்ளி நிர்வாகம், அலுவலர்கள்,  கல்வி அதிகாரிகள், அலுவர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படையினர் என அனைத்துத் தரப்பினரும் உரிய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  ஆனால் இங்கு என்ன நடக்கும்?  கூடிய  விரைவில் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார் என்பதை  மட்டும் இப்போது அனுமானிக்கலாம்.

       மாவட்டக் கல்வி அலுவலகம் தேர்வுப் பணிக்கு ஆசிரியர்களை நியமிக்கிறது. பல தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் இவர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.  அப்பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு துறை அலுவலர், அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உள்ளிட்டவர்கள்  நியமிக்கப்படுகின்றர்.  தேர்வு நடைபெறும் காலங்களில் அவர்களுக்கு நல்ல கவனிப்பு செய்யப்படுகிறது.  தேநீர், வடை அளித்தாலே மாணவர்கள்  காப்பியடிப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கும் ஆசிரியர்களும் இருக்கத்தான்செய்கிறார்கள்.  நேர்மையாக செயல்படும் ஒரு சிலரும் நமக்கேன் வீண் வம்பு  என்று நினைத்து பேசா மடந்தையாகி விடுகின்றனர்.  அம்மணமாக இருக்கும் ஊரில்  கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரன் என்ற நிலைதான் இவர்களுக்கு.

       அரசுத் தேர்வு முறைகேடுகளுக்கு கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை
உள்ள அனைத்து வகையான அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி
நிர்வாகங்கள், தனிப்பயிற்சி நடத்துவோர்   (Private Tuition Centres), அரசியல்வாதிகள்,  உள்ளூர் பெரும் பணக்காரர்கள் என்று பல்வேறு
தரப்பினருக்கும் இதில் பங்குண்டு.  இதில் ஏதேனும் ஒரு தரப்பை மட்டும்
குறை சொல்லி தப்பித்துக் கொள்வது இம்முறைகேடுகள் ஆண்டுதோறும் தொடர்வதை  ஊக்குவிப்பதாகும்.

       மாவட்ட ஆட்சியர் இம்முறைகேட்டை கையும் களவுமாக பிடிக்கும்போதே அவர்கள் ஏன் கைது செய்யவில்லை?  கிராம நிர்வாக அலுவலர் ரூ. 100/- பெற்றாலே கைது  செய்பவர்கள், இம்முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும் துறைரீதியான  நடவடிக்கைகள், விடுப்பில் செல்ல பரிந்துரைத்தல் என்ற மயிலிறகு சீண்டல்கள்  ஏனென்று தெரியவில்லை.  புதுச்சேரி கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம் தேர்வு  முறைகேட்டில் ஈடுபட்டதற்கு தமிழக காவல்துறை பல மாதங்கள் தேடியதே....  ஆனால் கையும் களவுமாக பிடித்த போது ஏன் கைது நடவடிக்கை இல்லை?  இதன் மூலம் பலரைக் காப்பாற்ற மாவட்ட ஆட்சியர் கைகள் கட்டப்பட்டிருப்பது
புலனாகிறது.

        யாரும் செயல்படுத்தப் போவதில்லை என்றாலும் வழக்கமான நமது பரிந்துரைகளை கீழே தருகிறேன்.

01. தேர்வில் காப்பியடிக்க உதவும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள்
போன்றவர்களுக்கு துறை ரீதியான தண்டனைகளைத் தவிர்த்து பணிக்காலம்
முழுமைக்கும் தேர்வுப் பணிக்கு லாயக்கற்றவர்கள் என்று அறிவிக்கலாம்.
இதைப் போலவே விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடு செய்பவர்களை  பணிக்காலம் முழுமையும் திருத்தும் பணியிலிருந்து விடுவிக்கலாம்.  தேர்தல்  பணிகளில் முறைகேடு செய்பவர்களை பணிக்காலம் முழுமைக்கும் தேர்தல் பணியாற்ற  தடை விதிக்கலாம்.

02. முறைகேடுகளில் ஈடுபடும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்தல்.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு மாற்றுப் பள்ளிகளில் சேர்க்க
வாய்ப்பில்லை என்றால் குறைந்தபட்சம் தேர்வு மையத்தையாவது ரத்த செய்ய வேண்டும்.

03. இப்போது பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சில குறிப்பிட்ட  பாடங்களுக்கு மட்டும் முதன்மைக் கண்காணிப்பாளராக வேறு பள்ளியின் தலைமையாசிரியர்  நியமனம் செய்யப்படுகிறார்.  இது பத்தாம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து அரசு பொதுத்தேர்விற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

04. ஒரு பள்ளியில் தேர்வு நடக்கும்போது அப்பள்ளியின் தாளாளர்,
தலைமையாசிரியர், ஆசிரியர்கள், எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் யாரும் அங்கு பணியில் இருக்கக் கூடாது என்ற நிலை வேண்டும்.

05. ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு சில குறிப்பிட்ட நபர்களையே தேர்வுப்
பணிக்கு அமர்த்துவதை கண்காணித்துத் தடை செய்ய வேண்டும்.

06. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆசிரியரல்லாத பறக்கும் படை
உருவாக்கப்பட வேண்டும்.  100% தேர்ச்சி காட்டும் பள்ளிகள் தனிக்
கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

07. பள்ளித் தேர்ச்சி 100% எனக்காட்டுவதற்கும் சில குறிப்பிட்ட
பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுப்பதற்கு தனிப்பட்ட மாணவர்களுக்கு சில
கல்வித் தொழிலகங்கள் (?!) உதவி புரிகின்றன.  இவற்றையும் தடுக்க வேண்டும்.

08. தேர்வறைகளில் செல்போன் முற்றிலும் தடை செய்யப்பட்டு, வெப் கேமரா
பொருத்தப்பட வேண்டும்.

09. பன்னிரண்டாம் வகுப்பு கணினித் தேர்வு போல ஒரு மதிப்பெண்
வினாக்களுக்கு OMR  தாள்கள் மூலம் பதிலளித்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்  மாணவர்களிடமிருந்து விடைத்தாளை திரும்பப் பெறலாம்.

10. தொடக்கக் கல்வியை சீர்படுத்தாமல் 10, 12 வகுப்புக்களில் முழுத்
தேர்ச்சி பெற வேண்டுமென அரசுப் பள்ளிகளுக்கு அரசும் அரசு அதிகாரிகளும்
கெடுபிடிகள் செய்வது நிறுத்தப்பட வேண்டும்.  அரசுப் பள்ளித் தேர்ச்சியை
தனியார் பள்ளியுடன் ஒப்பிடும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்.  அரசு,
அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் மாணவர்கள் மீது தொடுக்கும் தேர்வுகள் தொடர்பான உளவியல் தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்.

       தேர்தல் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறும் போது ஆசிரியர் அல்லாத  பிற துறைப் பணியாளர்களைக் கொண்டு தேர்தல் நடத்துவது, வெளி மாநில  போலீசாரைப் பயன்படுத்துவது, ராணுவம் அல்லது துணை ராணுவத்தைப்  பயன்படுத்துவது என்றெல்லாம் கோரிக்கை வைக்கப்படுவதைப் போல இங்கும்  தேர்வுப் பணிகளை ஆசிரியர்களைத் தவிர்த்துப் பிற துறை பணியாளர்களை வைத்து  அரசுத் தேர்வுகளை நடத்தலாம் என்றொரு யோசனையும் முன் வைக்கப்பட வாய்ப்பு
உண்டு.  ஆனால் அது இன்னும் பல்வேறு மோசடிகளுக்கு வழி வகுக்கும் என்பதில் அய்யமில்லை.

       பல வேலைகள் செய்வதை விட கீழ்க்கண்ட இரண்டில் ஏதேனும் ஒன்று செய்தாலே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

* இப்போதுள்ள மனப்பாடத் தேர்வு முறையை முற்றிலும் ஒழித்து
   மேம்படுத்தப்பட்ட புதிய தேர்வு முறையை அமல் செய்தல்
 
                            அல்லது
 
*கல்வி வியாபாரத்தை முழுவதுமாகத் தடை செய்து 
  தனியார் பள்ளிகளனைத்தையும் அரசுடைமையாக்குதல்.
 
மதுக்கடைகளை (TASMAC) நடத்தும் அரசுகளிடம் இதை எதிர்பார்ப்பது எவ்வளவு  பெரிய முட்டாள்தனம்......?

1 கருத்து:

மு.சிவகுருநாதன் சொன்னது…

அ.மார்க்ஸ் முக நூலில் எழுதிய குறிப்பு:



முன்னாள் அமைச்சர் வேலுவின் பள்ளித் தில்லுமுல்லு குறித்த செய்தி முக்கியமானது. அனுபவ பூர்வமாகவும் நடைமுறைச் சாத்தியம் உள்ளவைகளாகவும் உங்கள் பரிந்துரைகள் உள்ளன. அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம் என தினமணி எழுதியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனக்குத் தெரிந்து இப்போது பிரச்சினைக்குள்ளாகியிருக்கும் அதேபள்ளி நிர்வாகம் சென்ற ஆண்டு காப்பி அடிக்க ஒத்துழைக்க மறுத்த ஒரு அரசு பள்ளி ஆசிரியையை அடுத்த நாள் தேர்வுப்பணிக்கு வந்தபோது தேவையில்லை என அனுப்பிவைத்த செய்தியை நானறிவேன். அதேபோல இன்று சஸ்பென்ட் ஆகியுள்ள அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் மிகவும் நேர்மையானவர், கடமை தவறாத நல்லாசிரியர் என்கிற செய்தி முகநூலில் பதிவாகியுள்ளது.

கருத்துரையிடுக