திங்கள், ஜூலை 31, 2017

மீளும் நினைவுத்தடங்கள் (இரண்டாம் பகுதி)

மீளும் நினைவுத்தடங்கள் (இரண்டாம் பகுதி)

(ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி வெள்ளி விழா நினைவுகள்: 1992 – 2017)

மு.சிவகுருநாதன்

(இது ஒரு அனுபவப் பகிர்வு; சுயபுராணம். முந்தைய பதிவின் தொடர்ச்சி. விருப்பம் இல்லையேல் தாண்டிச் (Skip) செல்ல வேண்டுகிறேன். நன்றி!) 








           இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு தற்போது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் புத்தகங்களை வெளியிடுகிறது. ஆனால் அன்று கிடையாது. ‘பதிப்புச் செம்மல்’ கணபதியின் சாந்தா பப்ளிஷர்ஸ் நோட்ஸ்கள் போல நூல் வெளியிட அனுமதி பெற்றிருந்தனர். இவர்களது நூலில் இடம்பெற்ற உலகப்புகழ்பெற்ற வாசகம், (வரலாறு பாடப்பொருள்) “ஆசிரியர்களின் முக்கியத் தொழில் ஆடு, மாடு மேய்த்தலாகும்”, (இங்கு ஆரியர்கள் – ஆசிரியர்கள் என்ற பாடபேதம் உணர்க.)

     ஆர்.சுவாமிநாதன் என்னும் வரலாற்று விரிவுரையாளர் ஒரு தேர்ந்த இசைக்கலைஞரைப் போல தொடையைத் தட்டி பாடம் நடத்தக்கூடியவர். இவர் அடிக்கடி சொல்லும் வாசகம், “ஆசிரியப்பணி அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி”, என்பதாகும். ஒருகட்டத்தில் நாங்கள் மிகவும் வெறுத்துப் போய், “ஆசிரியப்பணி அற்பப்பணி; அதை நீ புறக்கணி”, என்று கிண்டல் செய்யும் நிலை உண்டானது.

     புவியியல் பாடத்திற்கு வெங்கடாசலம் விரிவுரையாளராக இருந்தார். சட்டை மேல் பொத்தானைப் போடுவதில்லை. அவர் ஒவ்வொரு முறை போடச் சொல்லும்போதும் போட்டுவீட்டு, பிறகு கழற்றிவிடுவதே வழக்கமாயிற்று. ஆனால் இப்போது தானாகவே போட்டுவிடுகிறேன். மேலும் மாணவர்களின் பொத்தான்கள், தலைமயிர் இத்யாதிகளைக் கவனிப்பதேயில்லை. இன்று மாணவர்களின் ‘ஹேர் ஸ்டைல்’ குறித்து பலவிதமான புகார்கள் வருகின்றன. இது அவ்வளவு பூதாகரமான ஒன்றல்ல என்பது என் கருத்து.

     நாங்கள் செல்லமாக ‘கிச்சு’ என்றழைக்கும் கிருஷ்ணசாமி English Phonetics அருமையாக நடத்துவார். அவர் சொன்னபிறகுதான் A S Hornby -ன் Oxford Advanced Learner’s Dictionary Of Current English வாங்கினேன். ஒவ்வொரு நாளும் பாடம் நடத்தத் துண்டுச்சீட்டில் குறிப்புகளுடன் வருவார். கூடவே அகராதி மற்றும் இதர நூல்களை மார்போடு அணைத்து வருவார். வகுப்பறைக்குள் இவற்றுடன் எவ்வாறு நுழைவது என்று அபிநயத்துடன் செய்து காட்டுவார். நாங்கள் பயிற்சி முடித்த சில ஆண்டுகளில் அவர் மரணமடைந்துவிட்டதை அறிந்து வருந்தினேன்.

    துரைராஜ், சுகுமார் போன்ற அறிவியல் விரிவுரையாளர்கள் அறிவியல் பாடபோதனையை மெருகூட்டினர். திருமயம், கரிகாலன் போன்ற அலுவலகப் பணியாளர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தோம். திருநாகேஸ்வரம் செல்லும்போது கரிகாலன் வீட்டுக்கு ஒருமுறை சென்று வந்தோம். பிற்காலத்தில் அவரும் இறந்த செய்தி அதிர்ச்சியளித்தது.

     ஆடுதுறை கடைத்தெருவில் சாந்தி ஸ்டோர்ஸ் என்னும் சிறிய துணிக்கடை; அழகு பன்னீர்செல்வத்திற்குச் சொந்தமானது. இவர் பட்டிமன்றப் பேச்சாளர், சைவத் தொண்டர். இவரைப்பற்றி மாணவர்கள் பல தகவல்கள் சொல்வதுண்டு. இவருடன் உரையாடித் திரும்புவதும், எப்போவதாவது குடந்தைக்குச் செல்வதும் உண்டு. ஒருமுறை மறைந்த கல்வெட்டு ஆய்வாளர் குடந்தை சேதுராமன் இல்லம் சென்று அவருடன் உரையாடித் திரும்பினோம். அவர் ராமன் & ராமன் நிறுவனத்தின் உரிமையாளர் என்று நினைக்கிறேன்.

     வகுப்புகள் தொடங்கப்பட்ட புதிதில் படித்த பள்ளி, +2 மதிப்பெண்கள், பாடப்பிரிவு ஆகியவற்றைக் கேட்பார்கள். ஷோபா என்னும் சக மாணவி யார் கேட்டாலும் ‘pure science’ என்று சொவது வழக்கம். அதன்பிறகு நானும் “pure maths.’ என்று சொல்லலானேன். இதை மறுத்து ஏன் என்று வினவியவர்கள் அதை மட்டும் அப்படியே எற்றதுதான் விநோதம். இன்றும் கூட ஒரு மாணவியிடம் “என்ன குருப்” என்று வினவும்போது ‘pure science’ என்று சொல்வதையே காணமுடிகிறது. கல்வியின் அபத்தங்களுள் இதுவும் ஒன்று. எவ்வளவு மாற்றங்கள் வரினும் அடிப்படையான மனமாற்றங்கள் வராத வரையில் கணிதவியல் இங்கு அறிவியலே அல்ல. இறுதிக்காலத்தில் சில நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வந்தது பிரச்சினையாகப் பட்டபோது “நான் பேசிக்கொள்கிறேன்”, என்று அனைவருக்கும் தெம்பளித்த ஷோபாவின் உறுதி பாராட்டிற்குரியது.

    இரண்டாம் ஆண்டுதான் விடுதி. முதலாண்டு தரங்கம்பாடி சாலையில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான நாட்டு ஓடு வேயப்பட்ட ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். பக்கத்துவீடு ராணியம்மாள் வீடு; அப்போதும் விடுதியிலும் எங்களுக்குப் பொங்கிப் போட்டவர் அவர். மூர்த்தி என்னும் பால்காரர். அவரது அம்மா இரு மாதங்கள் விடுதியில் சமைத்தார். அங்கிருந்து நடந்து வீரசோழனாற்று ரயில்வே பாலத்தைக் கடந்து வகுப்புகளுக்குச் செல்வோம். 1.5 கி.மீ. தொலைவிருக்கும்; மதியமும் நடந்து வந்துதான் சாப்பிட்டுத் திரும்புவோம்.

    பயிற்சியின் இறுதி நாள்களில் ஞாயிற்றுக் கிழமை அருகிலுள்ள நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வது என்று முடிவாகியது. குடந்தை அக்கா வீட்டில் தங்கியிருந்த மகாலெட்சுமியின் வீட்டிற்குச் சென்று மீன்குழம்பு, வறுவல்களுடன் மதிய உணவை முடித்தோம். மற்றொரு நாளில் க.அபிராமியின் வீட்டிற்குச் சென்றோம். பட்டு நெசவு செய்யும் சௌராஷ்டிரா குடும்பத்தை சேர்ந்த, அவரது தந்தை கண்ணன் விருந்துக்குப் பிறகு பாட்டுப்பாடி எங்களை மகிழ்வித்தார். பிறிதொருநாள் திருநாகேஸ்வரம் கோயில்களுக்குச் சென்றுவீடு அருகிலுள்ள லெட்சுமியின் இல்லம் என்றோம். அவரது தந்தை பக்கத்திலிருந்த தியேட்டர் மேலாளர். எனவே ஓடிக்கொண்டிருந்த மேட்னி ஷோவை சில நிமிடங்கள் பார்த்துவிட்டு வந்தோம்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடுதுறை செல்லவேண்டும் என்ற நண்பர் தியாகசுந்தரத்தின் ஆசைக்கிணங்க இரு சக்கர வாகனத்தில் கிளம்பி, ஆடுதுறை சீத்தா ராமவிலாசில் பூரிக்கிழங்கு சாப்பிட்டுவிட்டு, தரங்கம்பாடி சாலையில் இருக்கும் ராணியம்மாளிடம் நலம் விசாரித்துப்பின்பு பயிற்சி நிறுவனம் சென்றோம். அன்று விடுமுறையாதலால் யாருமில்லை. விடுதியும் பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் வைத்த புங்கை மரங்கள் பெரிதாக வளர்ந்திருந்தன. அதனருகே நின்று படமெடுத்துத் திரும்பினோம். திரும்பி வரும் வழியில் திருப்பனந்தாள் கன்னாரக்குடி குமாரை குடந்தை வீட்டில் சந்தித்துத் திரும்பினோம்.

     இப்போதும் ஆசிரியர்களிடம் நம்பிக்கை வைக்க ஒன்றுமில்லை. இதை மீண்டும் மீண்டும் பதிவு செய்வது வருத்தமாகவே உள்ளது. சமூக யதார்த்தம் சுடுகிறது. என்ன செய்ய? பயிற்சி முடித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஒரு சந்திப்பு நிகழ்வு நடத்தவேண்டுமென ‘சந்தன’ வீரப்பன் போல் வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை தஞ்சை ஆ.மகேஸ்வரன் வெளியிட்டிருந்தார். ஒருவகையில் இப்பதிவிற்கும் அவரே காரணம். வாட்ஸ் அப் குப்பைகளில் ஆடியோவை நான் கவனிப்பதில்லை. “ஆடியோ போட்டிருந்தேன், பதில் இல்லை”, என்றபோதே இவ்விவரம் எனக்குத் தெரிந்தது. வாட்ஸ் அப்பில் வந்து குவியும் ஆடியோ, வீடியோக்களைப் பார்த்தால் கட்டாயம் மனநல மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டிருக்கும்.

    Teacher Trainees 90-92 என்கிற வாட்ஸ் அப் குழுவைத் தொடங்கியதும் இதே நண்பர்தான். எனக்குத் தெரிந்த சில எண்களை இத்துடன் இணைத்துவிட்டேன். இப்போது சுமார் 15 நண்பர்கள் இக்குழுவில் உண்டு. பூசை, புனஸ்காரப் பதிவுகளுடன் கூடவே தியாகுவின் கடும் எதிர்வினைக்கு மத்தியில் இக்குழு இன்றும் வாழ்கிறது! மகேஸ்வரனைப் பற்றிய சுவாரசியமான தகவல்களைச் சொல்லியாகவேண்டும். அவர் இப்போது ஆசிரியர் இல்லை. 1995 பணி கிடைத்த ஒரு மாதத்தில் ஆசிரியர் பணியை விட்டுவிலகி இந்திய ஆயுள் காப்பிட்டுக் கழகப்பணிக்குச் சென்றுவிட்டார். இப்போது தஞ்சையில் பணிபுரிகிறார். சமூகப்பணியில் இருப்பதாகக் கூட கேள்விப்பட்டேன். அதைக்கூட எங்கும் விரிவாக பதிவு செய்ததில்லை. இப்போது நான் சென்ற பத்தியில் சொன்ன முதல்வரிக்கு உங்களுக்கு விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

    அரியலூர் து.பன்னீர்செல்வன் சந்திப்பு நிகழ்விற்கு முகநூல் வழியே தொடர்புகொண்டார். எந்த நாளும் யாருக்கும் ஒத்துவரவில்லை என்றார். மே மாதம் யாருக்கும் வசதியாக இல்லை போலும்! அப்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டாலும் 47 பேரில் சுமார் 15 பேரைத்தான் திரட்டமுடியும் என்பது எனது கருத்து. ஆண்களில் பன்னீர்செல்வன்தான் முதல்முதலில் திருமணம் செய்தவர். முத்தமிழ்ச்செல்வியுடன் சாதிமறுப்பு, காதல் திருமணம். இவருடைய மகன் தற்போது சீனாவில் மருத்துவம் படிக்கிறார்.

     மகேஸ்வரன் மிக நெருக்கமான தோழர். பல ஆண்டுகள் கடிதத் தொடர்பில் இருந்தோம். தஞ்சை மானம்புச்சாவடி வீட்டுக்கு நான் பலமுறை சென்றுள்ளேன். அவரும் ஒருமுறை எனது வீட்டுக்கு வந்துள்ளார். திருமணம், தஞ்சையில் மனை வாங்கும் முயற்சியில் அவருடைய உதவியைப் பெற்றேன். பின்னர் அம்முயற்சி கைவிடப்பட்டு திருவாரூரிலேயே தங்கிவிட்டேன்.

     பிறரனைவரும் ஆசிரியராக, குடும்பத்தில் அய்க்கியமாகி அனைத்தையும் மறந்து வாழத் தலைப்பட்டு விட்டோம் என்பதை இங்கு வருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. குடும்பச் சிறையில் சிக்காமல் வாழ்க்கூடிய வாய்ப்பு எனக்கும் நண்பர் தியாகசுந்தரத்திற்கும் கிடைத்தது. அந்த நல்வாய்ப்பை மே 10, 2010 இல் நான் தவறவிட்டேன்; அதுவே எனது திருமண நாள். அந்த வகையில் தியாகசுந்தரம் பாராட்டிற்குரியவர். அவர் தற்போது திருச்சி மாவட்டம் மணப்பறை அருகே ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியாகப் பணிபுரிகிறார். மதுரையை ஒட்டிய பகுதியில் ‘முதியோர் இல்லம்’ தொடங்கி தனது இறுதிக்காலத்தைத் திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறார்.

     1993 இல் தஞ்சை மகேஸ்வரனுடன் நடுக்காவிரி சீனிவாசன், செந்தலை நா.சீ. பாலகிருஷ்ணன் ஆகியோர் இல்லங்களுக்குச் சென்றுவிட்டு, இருவரும் கல்லணை சென்று இறங்கினோம். சில நிமடங்களில் கனமழை; ஓட்டிவந்து வந்த் பேருந்தில் ஏறிக்கொண்டோம். அதன்பிறகு வரலாற்றுப் புகழ்மிக்க செந்தலை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. செந்தலை பாலகிருஷ்ணனின் தந்தையார் ஶ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்தில் மரணமடைந்தது மிகுந்த அதிர்ச்சியளித்தது. இன்று பாலகிருஷ்ணன் பட்டதாரி தமிழாசிரியர்; சீனிவாசன் உதவி பெறும் பள்ளியில் முதுகலை ஆசிரியர்.

   துவரங்குறிச்சி மாறன் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர். மாணவர்களை பல்வேறு விளையாட்டுகளில் ஊக்கம் கொடுத்துச் செயல்படுவதாக அறிகிறேன். மகாதேவப்பட்டினம் உதயகுமாரும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக இருக்கிறார். பின்னத்தூர் மகேஷ்வரன் வெகுஜன எழுத்தாளராகிவிட்டார். எனது அறைத் தோழர்கள் சா.அண்ணாதுரை ஆலத்தம்பாடியிலும் து.மோகன் பட்டுக்கோட்டையிலும் பட்டதாரி ஆசிரியாகப் பணி புரிகின்றனர்.

   எஸ்.சிவராமன் முதுகலை வேதியியல் ஆசிரியர்; க.வேங்கடசுப்பிரமணியன், செந்தில்ராஜ் (செந்தில்குமார்), க.அகோரமூர்த்தி (ரமேஷ்) ஆகியோர் பட்டதாரி கணிதவியல் ஆசிரியர்கள். திருவாரூர் மாப்பிள்ளையான காரைக்கால் புதுத்துறை மு.ரா.ராஜகோபால் அங்கு பட்டதாரி ஆசிரியாக உள்ளார். நானறிந்த வரையில் க.சாந்தி, கோ.பாரத், சுந்தரபெருமாள்கோயில் பாரதி ஆகியோர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள். அருணகிரி பாபநாசத்திலும் ராஜூ தஞ்சாவூரிலும் உள்ளனர். செய்துல் ஃபாரூக் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியக்கூடும். சாத்தனூர் சந்திரமோகன் ஆடுதுறைக்கு வெகு அருகில் இருந்தவர். க.வேங்கடசுப்பிரமணியன், க.அகோரமூர்த்தி, சா.அண்ணாதுரை ஆகியோர் விரைவில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆக வாய்ப்பிருக்கிறது.

     எங்களுக்கு முன்னால், பின்னால் படித்த நண்பர்கள் சிலர் இன்றும் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சி. திருவாரூரில் க.நாகராஜன், (பட்டதாரி ஆசிரியர், தமிழ், திருக்குவளை) கண்ணன் (பட்டதாரி ஆசிரியர், கணிதவியல், அடியக்கமங்கலம்) போன்ற சீனியர்கள் இருக்கிறார்கள். திருநாகேஸ்வரம் ரவிச்சந்திரன், திருக்குவளை குருமூர்த்தி போன்றவர்களை பணி கிடைத்த தொடக்க காலத்தில் பார்த்ததோடு சரி. எங்களுக்கு ஜூனியர்களில் வாய்மூடாமல் பேசிக்கொண்டே இருந்த மன்னார்குடி முருகவேல் வாகன விபத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மரணடைந்தது வருத்தமளித்த நிகழ்வு. வேதாரண்யம் ஆயக்காரன்புலம் நண்பரைத் திருவாரூரில் (பெயர் நினைவுக்கு வரவில்லை) சந்தித்தேன். முத்துப்பேட்டை ஒன்றியத்தில் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்; மகன் கல்லூரியில் படிக்கிறார்.

      ஆட்டோஃகிராப் கையெட்டும் தொலைவில் இல்லை. பெயர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் நினைவின் புதர்ச் சரிவிலிருந்து மீட்டெடுக்கிறேன். இதற்கு ஆ.மகேஸ்வரனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

    மாற்றுக்கல்வி குறித்த பேச்சு, எழுத்து, சிந்தனை ஆகிய பன்னெடுங்காலமாக இங்கு பதிவாகியுள்ளது. ஆனால் கல்வியியல் பட்டயம், இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் இதற்கான எவ்வித அறிமுகம் கூட இல்லை. இந்தப் படிப்புகள் பாரம்பரிய குருகுலப் பொதுப்புத்திக்கு ஏற்ப ஆசிரியர்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. எனவே இதன் மூலம் நமது எல்லைகள் விரிவடையவும் கல்வியில் சிறிதளவிலேனும் மாற்றம் வருவதும் சாத்தியமே இல்லாத சூழல் உள்ளது.

      சுயகல்வி, வாசிப்பு மூலமே இவற்றைக் கண்டடைய வேண்டியுள்ளது. இது எல்லாருக்கும் சாத்தியப்படுமா என்ன? கல்வி குறித்த வாசிப்புகள், சுயதேடல் ஆகியவற்றைத் தூண்டவோ அல்லது சிறு சலனத்தை ஏற்படுத்தாத அமைப்புகளால் என்ன பலன்? கல்வியில் மாற்றங்கள் வர இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. இங்கு செய்யப்படும் மேற்பூச்சுகள் எதற்கும் உதவாதவை எனும்போது ஏக்கமே மிஞ்சுகிறது.

சனி, ஜூலை 29, 2017

மீளும் நினைவுத்தடங்கள் (முதல் பகுதி)

மீளும் நினைவுத்தடங்கள் (முதல் பகுதி)

(ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி வெள்ளி விழா நினைவுகள்: 1992 – 2017)

 
மு.சிவகுருநாதன்

         ஜூலை 13, 2017 (13.07.2017) கதிராமங்கலம் செல்லும் வழியில் ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தைக் கடக்க நேரிட்டது. ஒரு நல்வாய்ப்பாக பேருந்திலிருந்து இறங்கி நடந்த முன்னாள் முதல்வரும் எங்களுக்கு முதுநிலை விரிவுரையாளராகவும் (தமிழ்) இருந்த மணல்மேடு முனைவர் கே.கலியமூர்த்தி அவர்களை சாலையில் சந்தித்தேன். 2001 இல் பணி ஓய்வு பெற்று ஓய்வூதியப் பலன்களுக்காக இன்னும் அலைந்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

1992 இல் நிறுவனத்திலிருந்து வெளியே வரும் தஞ்சை ஆ.மகேஸ்வரன்


       இனிமையாக பேச, பழகக்கூடிய அவர்கள் மெல்லிய குரலில் சிறப்பாக பாடமெடுக்கக் கூடியவர். அவர் முதல்வராக பொறுப்பில் இருந்த சமயம், 1996 திருவாரூர் மாவட்டம் தொடங்கியிருந்த நேரத்தில் புதிய மாவட்டத்திற்கான பயிற்சி நிறுவனம் அமைக்க இடம் தேடி அலைந்துகொண்டிருந்தார். திருவாரூர் சாலைகளில் அவரைப் பார்த்த நான், என்னுடைய பழைய சைக்கிள் ஒன்றில் ஏற்றிக்கொண்டு சென்றேன். அப்போது காலில் அவருக்கு சிறு காயம் கூட ஏற்பட்டது. பின்னாளில் மன்னார்குடியில் நிறுவனம் அமைக்கப்பட்டது.

   அவர் எந்த ஒரு சிறு நிகழ்வையும் சுவைபட நீட்டி விவரிக்கும் குணமுடையவர். ஒருமுறை பயணத்தின்போது ‘மருதம்’ பெயரைப் பார்த்தவுடன் தமிழிலக்கிய இதழ் என நினைத்து கடையில் வாங்கி பேருந்தில் வாசிக்கப் புரட்டியபோது அதிர்ந்து, நடத்துநரிடமே அளித்துவிட்டு வந்த கதையைக் கூறினார். ஜெயமணி என்பவரால் நடத்தப்பட்ட பாலியல் அனுபவக்கதைகள் நிரம்பிய இதழ் அது. அக்காலத்தில் திரைச்சித்ரா, பருவகாலம், நீயூஸ் லைப் என நிறைய இதழ்கள் இன்றைய நடுத்தர இதழ்களைப் போல வந்து கொண்டிருந்தன.

2017 ஜூலை 13 இல் எடுத்த படம்.


    இங்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். எங்களுக்கு 11, 12 வகுப்புகளிலேயே ‘சரோஜாதேவி’ போன்ற படம் போட்ட புத்தகங்கள் அறிமுகமாகியிருந்தன. இதுவே சற்று தாமதந்தான். பள்ளங்கோயில் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தனது குறும்புகளால் விடுதி வகுப்பிற்கு மாற்றப்பட்ட நண்பன் ஜெரால்டு வண்டி வண்டியாய் செக்ஸ் பேசுவான். அப்போது நாங்கள் கூச்சத்தால் நெளிவோம். இவ்வளவிற்கு மிக நன்றாக படிக்கும் அவர் 450 க்கு (1988) மேல் மதிப்பெண் பெற்று பொறியியல் உயர்படிப்புகள் முடித்து பேராசிரியராக உள்ளார்.

    பயிற்சி நிறுவனத்திற்குத் தேர்வான 1000 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற நல்ல (!?) மாணவர்கள் ஜெரால்டைப்போல இல்லை. அவர்களிடம் குழந்தை உருவாவது, பிறப்பது உள்ளிட்ட பல பாலியல் கல்வி போதாமைகள் இருந்தன. அவற்றை என்னிடமிருந்த ‘மஞ்சள்’ பத்தரிக்கைகள் தீர்த்தன என்றே சொல்லவேண்டும்.

     ஒருமுறை நான் விடுப்பெடுத்த சமயம் கல்வி உளவியல் பாடமெடுக்கும் சி.கருப்பையன் வகுப்பில் ‘ஏ’ ஜோக் சொல்லுமாறு கேட்க, மாணவர்கள் அனைவரும் தலைகவிழ்ந்துகொள்ள, சட்டென சுமதி என்னும் மாணவி ஒரு ஜோக் சொல்லிவிட மாணவர்களுக்கு பெருத்த அவமானம். மறுநாள் இதைப் பகிர்ந்துகொண்டவர்களிடம் ‘சிலபஸ்’ இவ்வளவு படித்தும் பயனில்லையே என்று கடிந்துகொண்டேன். (‘சிலபஸ்’ என்பது என்னிடமிருந்த பாலியல் இதழ்கள்.)

    முனைவர் கலியமூர்த்திக்கு மூன்று பெண் மக்கள். முதல் மருமகன் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும்போது இறந்து போன சோகச் செய்தியைக் கூறினார். மேலதிக விவரங்களைப் பேச கால அவகாசமில்லை. நண்பர்கள் கதிராமங்கலம் செல்லக் காத்திருக்க அவரிடம் அலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றேன். புகைப்படமெடுக்க கூட மறந்து போனேன்.

     எங்களுடைய அணி 1990 – 1992 –ல் பயிற்சி முடித்தது. அன்றைய நிலவரப்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு இடங்கள் உண்டு. மொத்தம் 52 பேரில் 47 பேர் பயிற்சியை நிறைவு செய்தோம். அனைவரும் தேர்ச்சி பெற்றதோடு 45 பேர் உயர் சிறப்பிடம் பெற்றோம். இரண்டு பேர் முதலிடம் மட்டுமே பெற்றதற்கு அவர்களது கையெழுத்து மட்டுமே காரணம். தேர்வு என்று வந்துவிட்டால் குளிக்காமல் கொள்ளாமல் தேர்வு தொடங்கும் வரையில் புத்தகமும் கையுமாக அலையும் அகோரமூர்த்தி போன்றவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். தேர்வு இடைவெளிகளில் ஊர் சுற்றுவது, திரைப்படம் பார்ப்பது போன்றவை நமது பொழுதுபோக்கு. ஏற்கனவே பள்ளிகளில் படித்துவிட்ட பாடங்களை மீண்டும் படிப்பதில் விருப்பம் இருப்பதில்லை. செங்கிப்பட்டியைச் சேர்ந்த தோழி க.சாந்தி முதலிடம் பெற்றார்.

     மேலும் எங்களது சாதனைகள் பல. அப்போதைய கல்வி அமைச்சர் பேரா. க.அன்பழகனால் திறந்து வைக்கப்பட்டு இயங்காமலிருந்த விடுதிகளை நாங்களாகவே பங்களிப்பு முறையில் இயக்கினோம். பெண்கள் விடுதியில் ஒரே இடத்தில் மட்டும் சமைத்துச் சாப்பிட்டு வெற்றிகரமாக அடுத்த அணியினருடன் ஒப்படைத்து விடை பெற்றோம். இறுதிக்காலத்தில் ஒருநாள் மொட்டைமாடிக் கூத்துக்களால் அதிர அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததும் நடந்தது.

    அப்போதைய முதல்வர் மற்றும் விரிவுரையாளர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தனர். முதல்வர் (பொ) வெங்கட்ராமன் எங்களுடனே தங்கியிருந்தார். அணைக்கரை, கங்கை கொண்ட சோழபுரம் களப்பயணம் சென்றதும் சீரூடை வேண்டாம் என்று விரிவுரையாளர் சி.கருப்பையன் எங்களுக்கு ஆதரவாக இருந்ததும் மற்றொரு தரப்பு எங்களை காய்ந்ததும் நடந்தது.
      
     பொறுப்பு முதல்வர் கே.ரெங்கராஜன், இவர் பின்னாளில் திருத்துறைப்பூண்டி ஆண்கள், குடந்தை பேரறிஞர் அண்ணா ஆகிய அரசு மேனிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். மிகக்கடுமையாக நடந்துகொண்ட இவர் பயிற்சி முடித்த பிறகு அன்பாக ஆலோசனைகள் சொன்னதும் உண்டு. 30 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள், இரண்டு வகுப்புகள் மட்டுமே. எப்போதாவது ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி. இருப்பினும் எங்கள் வகுப்புகளுக்கு விரிவுரையாளர்கள் வருவது அரிது. எனவே வகுப்பறை அமைதி கெடும். தோழர்கள் சிவராமன், சிவகாமசுந்தரி ஆகியோரின் பாடல்கள் எங்களை கொஞ்சம் அமைதிப்படுத்தின. ஒருமுறை ஒட்டுமொத்தத் தண்டனையாக அனைவரையும் வெளியே நிற்கவைத்தார். திரும்ப உள்ளே அனுப்பும் போது கூச்சலிட்ட வகையில் நானும் தியாகசுந்தரமும் வீட்டுக்கு அனுப்பப்பட்டோம்.

      இவரது ஆலோசனைகளுள் ஒன்று 1994 ஆசிரியர் தேர்வு வாரிய நேர்காணலை திறம்பட கையாள்வது குறித்தது. 1990 இல் அவர் நடத்திய நேர்காணல் நினைவுக்கு வந்தது. சான்றிதழ் சரிபார்ப்பை அவ்வாறு நடத்தினார்கள். நேர்காணலுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. மூவரில் ஒருவர் கே.ரெங்கராஜன். IPKF க்கு விரிவாக்கம் என்ன எனக் கேட்டார். Indian Peace Keeping Force என்றேன். மீண்டும் கேட்டார் அதையேச் சொன்னேன். வெளியே வந்த பிறகுதான் தெரிந்தது இடைச்சொல்லை (of) விட்டுவிட்டோம் என்று. இதற்கு வேறு யாரும் சரியாக பதில் சொல்லியிருக்க வாய்ப்பில்லைதான். நண்பர்களிடம் சொன்னபோது யாரும் பதில் சொல்லவில்லை.

இந்தப் பதிலைச் சொல்லக் காரணம் முதன்முதலில் எழுத்துக்கூட்டிப் படிக்கத்தொடங்கிய ‘சுதேசமித்திரன்’ நாளிதழே. அவ்விதழ் நின்றவுடன் அப்பா ‘தினமணி’க்கு மாறினார். அப்போது ஏ.என்.சிவராமன் ஆசிரியர். பல மாறுபாடுகள் இருந்தபோதிலும் ‘தி இந்து’ வரும்வரை நமக்குப் படிக்க வேறு போக்கிடமில்லை. பள்ளங்கோயில் செயின்ட் ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளி விடுதியில் தங்கிப்படித்தபோது ‘தினமணி’ வாசிக்க சிரமப்பட்டேன். இறுதியில் அருகேயுள்ள கடியாச்சேரி சைக்கிள் கம்பெனி ஒன்றில் ‘தினமணி’ வாங்குவார்கள். மதிய உணவு இடைவேளையில் ஓடிச்சென்று படித்து வருவேன். அன்று உணவு இடைவேளை 1 மணி நேரம். இன்று 40 நிமிடங்கள்; சில இடங்களில் இன்னும் குறைவு. சாப்பிட்டு முடித்தவுடன் பாடநூலை எடுத்துக்கொள்ளவேண்டுமென கல்வித்துறை, அலுவலர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் ஒருசேர விரும்புகின்றனர்.

    அப்போது ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்து, எழுத்து, வடிவமைப்பில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்ட காலம். எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மேலும் 10 ஆம் வகுப்பு வரலாறு – புவியியல் பாடத்தில் சிந்துவெளி நாகரீகம் குறித்த பாடத்தில் எழுத்துமுறை பற்றிச் சொல்லும்போது ஐராவதம் மகாதேவன் பெயர் இருக்கும். (இப்போதைய பாடங்களில் சிந்துவெளி எழுத்துமுறை குறித்து அவ்வளவு விரிவாகப் பேசுவதில்லை. இந்தப் பாடத்திட்ட அரசியல் வேறுகதை!) அவர்தான் ‘தினமணி’ ஆசிரியர் என்பது எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம். நண்பர்களிடம் சொன்னாலும் இருக்காது என்று பிடிவாதம் பிடிப்பார்கள்.

     அப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருக்கும் ஷேக் மைதீன் அன்றாட வரலாற்று நிகழ்வுகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். மேலும் காங்கிரஸ் பற்றாளர், இன்னும் சொல்லப்போனால் ராஜூவ் காந்தி ரசிகர். அவர்தான் பத்தாம் வகுப்பிற்கு வரலாறு – புவியியல் ஆசிரியர். இந்திய அமைதிப்படை இலங்கை சென்றிருந்த சமயம், அதை ஆதரித்து அவர் பேசும்போது, விடுதலைப்புலிகள் ஆதரவானாக கடும் எதிர்ப்பை அவரிடம் பதிவு செய்தது உண்டு. மாணவர்களிடம் பொதுப்பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் அவரது பண்பு என்னை ஈர்த்தது.

     மயிலம் பகுதியிலிருந்து சிலகாலம் பணிபுரிந்த முதுநிலை விரிவுரையாளர் ஒருவருடன் (பெயர் நினைவில்லை) நான் படிக்கும் நூல்களைப் பகிர்ந்து கொண்டதும் இனிமையான அனுபவம். நான் படிக்கும் காலத்தில் நூல்களைப் பரிந்துரைக்கும் ஆசிரியர்களைக் கண்டதில்லை. திருக்குறள், பகவத்கீதை ஆகியவற்றைத் தாண்டி வாசிக்கச் சொன்னவர்களில்லை. நாளிதழ்கள் வாசிக்க வலியுறுத்தியதில்லை. பொத்தாம் பொதுவாக நாளிதழ் வாசிக்கச் சொல்வதிலும் பொருளில்லை என்றே சொல்லவேண்டும். இங்கு குப்பைகள் ஏராளம். நான் அவர்களுக்கு வாசிக்கப் புத்தங்கங்கள் வழங்கியுள்ளேன். இதுவே நமது கல்விமுறையின் அவலம்.

     அவர் சைவப் பற்றாளர். எனவே விடுமுறை நாள்களில் திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆகிய சைவ மடங்களுக்கும் சூரியனார் கோயில், திருவிடைமருதூர், கும்பகோணம் கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன். பிறகு அப்பாவின் ஆணைப்படி ஒருமுறை அம்மாவை இக்கோயில்களுக்கு அழைத்துச் செல்ல இது உதவியாக இருந்திருக்கிறது.

     சுமார் 15 பேரைத் தவிர அனைவரும் விடுதியில் தங்கியிருந்தோம். இப்போதைய தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து இதுவே ஒரே பயிற்சி (DIET) நிறுவனமாகும். தஞ்சையில் பெண்களுக்கு மட்டுமான பயிற்சிப்பள்ளி ஒன்று இருந்தது. தினசரி மாலை ஆடுதுறை கிளை நூலகம், விடுமுறை நாள்களில் கும்பகோணம் சிலிக்குயில், புத்தகப் பூங்கா, குடந்தைத் திரையரங்குகள் (காசி, வாசு, விஜயா, செல்வம், டைமண்ட், மீனாட்சி, லேனா போன்றவை) ஆடுதுறை சீத்தாராமாவிலாஸ், திருவிடைமருதூர் பஷீர் தியேட்டர்,, திருநீலக்குடி டூரிங் டாக்கீஸ் என பொழுதுகள் கழிந்தன. என்னைத்தேடி யாரேனும் வந்தால் நூலகத்திற்கு அனுப்புவது வழக்கமாக இருந்தது.

     ஒருமுறை தோழர் கோ.பாரத் உனது பெயரில் நூலகம் இருக்கிறது என்று சொல்லி ‘செந்தமிழ் சிவகுருநாதன்’ நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். மிகப்பழைய நூல்கள் அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை. அன்றைய நிலையில் தனித்தமிழ், காந்தி, பெரியார், அப்துல்ரகுமான், மேத்தா, எம்.எஸ்.உதயமூர்த்தி, கொஞ்சம் இடதுசாரி நூல்கள் என்பதாக கலவையான் வாசிப்பில் இருந்தேன். இரவில்கூட கைலி உடுத்தாமல் கதராடைகளுடன் உலா வந்த நேரமது.

     1992 இல் மகாமக உயிரிழப்புகள் நடந்தபோது அங்கிருந்தேன். அன்றைய தினத்திற்கு முன்பாக பலநாள்கள் கூட்டத்தை ரசிக்க குடந்தை சென்று திரும்பியிருக்கிறேன். மகாமக குளத்திற்குள்ளாக அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா குளிக்க குளியலறை ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஆனால் அன்று அவர்கள் அதில் குளிக்கவில்லை. குளத்துப் படிகளில் சசிகலாவும் ஜெயலலிதாவும் குடத்து நீரை மாற்றி மாற்றி ஊற்றிக்கொண்டார்கள். கூட்ட நெரிசலில் பலர் மாண்ட கதை உங்களுக்குத் தெரியுந்தானே. “அவர்களுக்கு நேரடி சொர்க்கம்”, என்று உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சொன்னதும், “அவாள் இவாள் தலையில் ஜலத்தை ஊற்றியதும் இவாள் அவாள் தலையில் ஜலத்தை ஊற்றியதும்”, விபத்து நடக்கக் காரணமாக சங்கராச்சாரி கண்டுபிடித்ததும் நிகழ்ந்தது. இந்நிகழ்வைப் பற்றி ‘உண்மை’ இதழுக்கு வசன கவிதை ஒன்று எழுதினேன்; பிரசுரமாகவில்லை. அன்று நான் செல்லமாட்டேன் என்று தெரிந்தாலும் மனம் பதைத்து, அப்பா அண்ணன் மு.இராமநாதன் அவர்களை அனுப்பி என்னைப் பார்த்து வரச்செய்ததும் நடந்தது.

   நரசிங்கம்பேட்டை உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் பயிற்சி எடுத்தோம். கண்ணெதிரே ஒரு மாணவன் காரில் அடிபட்டான். கார் எண்ணை மட்டுமே எங்களால் குறிக்கமுடிந்தது. இப்போது இன்னும் போக்குவரத்து கூடியுள்ளது. இன்றும் அப்பள்ளி ஆசிரியர்கள் சாலையில் மாணவர்களை பத்திரமாக அனுப்பி வைப்பதை கதிராமங்கலத்திலிருந்து திரும்புகையில் கண்டேன்.

    என்னைப் பார்க்க தந்தையார் அடிக்கடி வருவார். எனது நண்பர்களுடன் என்னைவிடவும் நெருக்கமாக அவர் உரையாடி அனைவரின் நட்பையும் பெற்றார். முதல் பட்டியலில் நான் தேர்வு செய்யப்படவில்லை. அப்போது கோவை மருத்துவக் கல்லூரியில் மருந்தாளுநர் படிப்பில் சேர்ந்திருந்தேன். ஆடுதுறையில் இடம் வாங்கித் தருகிறேன் என்று இரண்டாம் பட்டியலில் எனது பெயர் இருப்பதை அறிந்த ஒருவர் வீட்டுக்கு வந்தார். மருந்தாளுநர் படிப்பில் சேர்ந்துவிட்டதால் விருப்பமில்லை என மறுத்துவிட்டோம். எனக்கு அடுத்த நபரை பேரம் பேசவும் எனக்கு ஆணை கிடைக்காமலிருக்கவும் பெயரின் முன் எழுத்து, முகவரியை மாற்றித் தபால் அனுப்பப்பட்டது. கிளை அஞ்சலத்திருந்த அப்பாவுக்கு அது எளிதில் கிடைத்துவிட்டது.

     இதை ஒரு சுயமரியாதைப் பிரச்சினையாக எதிர்கொண்ட அவர் பெரும் போராட்டம் நடத்தி, திருத்தம் செய்த ஆணையைப் பெற்று கோவையிலிருந்து என்னை அழைத்து வந்தார். அப்போது மருந்தாளுநர் படிப்பு இரண்டு மாதத்தைத் தாண்டியிருந்தது. மருத்துவக் கல்லூரியில் இவ்வாண்டு இப்படிப்பை முடித்துக்கொண்டு அடுத்த வருடம் அங்கு செல்லுங்கள் என்று அறிவுரை கூறினர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு இந்த ஆணை பெறப்பட்டுள்ளது என்று சொல்லி பாதியில் திரும்பி வந்தோம்.

     இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதலும் கடைசியுமாக ஒரு ஆசிரியர் தேர்வு வாரியப் போட்டித்தேர்வின் மூலம் 1992 இல் முடித்த எங்கள் அணியில் சுமார் 20 பேருக்குப் பணி கிடைத்தது. இதரர்கள் மாவட்ட பதவி மூப்பின் அடிப்படையில் வெவ்வேறு காலகட்டங்களில் பணியில் சேர்ந்தனர்.

    10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள முதுகலைப் பாட ஆசிரியர்கள் அப்போது விருப்பத்தின் அடிப்படையில் நிறுவனத்திற்கு மாறுதல் பெற்றனர். தொடக்கநிலை வகுப்புகளுக்கு தொடர்பில்லாத அரசு எந்திரம் விழித்துக்கொண்டு பொருளியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் படித்தவர்களை மீண்டும் மேனிலைப்பள்ளிக்கே அனுப்ப முடிவு செய்தபோது, எஸ்.ராதாகிருஷ்ணன் போன்ற சிலர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றனர். அதிக ஓய்வு என்பதால் பலர் விரும்பி வந்தனர். தற்போது தேர்வு மூலம் விரிவுரையாளர்கள் நியமனம் நடக்கிறது.

      இன்று ஆசிரியர் பயிற்சிக்கு யாரும் விரும்பி வருவதில்லை; காரணம் வேலையில்லை என்பதே. பணியிடைப் பயிற்சிகளை அனைவருக்கும் தொடக்கக் கல்வி (SSA), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி (RMSA) போன்றவை தருகின்றன. பணியிடைப் பயிற்சி இவர்கள் வேலை இல்லை என்றாகிவிட்டது. இவர்கள் நடத்திய நன்னெறிக் கல்விப் பயிற்சி குறித்த அபத்தங்களை நான் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறேன். பார்க்க:

கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்? (பகுதி: 01)

http://musivagurunathan.blogspot.in/2017/02/01.html

கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்? (பகுதி: 02)

http://musivagurunathan.blogspot.in/2017/02/02-02.html

பணி முன் பயிற்சிக்கு பணி வாய்ப்புகள் இன்மை, ஆசிரியர் தகுதித் தேர்வு போன்ற காரணங்களால் யாரும் வருவதில்லை. இந்நிலையில் மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிலையங்கள் பெரும்பாலும் பேருக்கு இயங்குகின்றன. இவற்றை மேம்படுத்தும் எண்ணம் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இம்மாதிரியான நிறுவனங்கள், அமைப்புகளை உருவாக்கும் அதைச் சீரழிப்பதும் மத்திய, மாநில அரசுகளின் வேலையாக உள்ளது. சமீபத்திய உதாரணம்: செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்.

(தொடரும்)

(இரண்டாம் பகுதியுடன் நிறைவுறும்.)

வெள்ளி, ஜூலை 28, 2017

போராடத் தூண்டும் அரசுகள்

போராடத் தூண்டும் அரசுகள்

மு.சிவகுருநாதன்


      ஒரு முதுமரத்தைத் தேடி அகரத்திருநல்லூர் சுடுகாட்டிற்குச் சென்றபோது அவ்விடத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத ஒரு கட்டடம் காணப்பட்டது. இது என்ன என்று வினவியபோது டாஸ்மாக் என்று பதில் வந்தது.




     கடந்த ஒரு மாதமாகவே அங்கு கடை திறக்கப்போவதாக தகவல் வந்து கொண்டிருந்தது. அந்தக் கட்டடம் கட்டத் தொடங்கியதிலிருந்து பிரச்சினையும் ஆரம்பமானது. தொடர் போராட்டம் நடந்தபிறகு காவல்துறை குவிக்கப்பட்டது. பிறகு வேறு வழியின்றி கடை மூடிக்கிடக்கிறது. இந்த மூடல் தற்காலிமானதா. நிரந்தரமா எனத் தெரியவில்லை.

     இந்தப் போராட்டத்திற்கு பிற இடங்களில் நடக்கும் போராட்டங்களைப் போல ஊடக வெளிச்சம் அவ்வளவாக இல்லை. இவ்வளவிற்கும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்ருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இடமது. இந்தக் கடைக்குப் பின்புறம் ஓடம்போக்கியாறு; அதைத் தாண்டினால் தேசிய நெடுஞ்சாலை 67 (நாகப்படினம் – மைசூரு தேசிய நெடுஞ்சாலை). ஆனால் பாலம் இல்லை; எனவே 500 மீட்டரில் வராது போலும்!

     நெடுஞ்சாலை மதுக்கடைகள் பற்றிய உச்சநீதிமன்ற உத்தரவு எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் குக்கிராமங்களில், அன்றாட வாழ்வே போராட்டமாக வாழும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் மக்களுக்கு பேரிடரை உண்டு பண்ணுகிறது. காரில் போகிறவன் குடித்துவிட்டு அடிபட்டு சாகாமலிருக்க வாழ வழியற்ற ஏழைகள் அழிந்து போக வேண்டுமா? இதை நீதிமன்றங்கள் கவனிக்குமா என்ன?

      இந்தப் போராட்டங்கள் ஒருபுறம் மக்களை பிளவுபடுத்தியுள்ளன. இதைத்தான் அதிகார வர்க்கம் விரும்புகிறது. போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் / கொள்ளாதவர்கள் என ஊர் இரண்டுபட்டுள்ளது. கூடங்குளம், நெடுவாசல், கதிராமங்கலம் என எந்தப் போராட்டத்திற்கும் இதே நிலைதான்.

     போராட்டங்களினால் அம்மக்களின் அன்றாட வாழ்வு சிக்கலுக்குள்ளாகியுள்ளது. நாள்தோறும் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பை ஓட்டும் பலர் இங்குண்டு. அவர்கள் வேலைக்குச் செல்வதா அல்லது போராட்டத்திற்குச் செல்வதா? இதனால் ஊர் இரண்டுபட்டுள்ளது. சில குடும்பங்களை ஊரைவிட்டு விலக்கி வைத்திருப்பதாக மாணவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் மீண்டும் ஊரில் இணைய ரூ. 5001 அளிக்க வேண்டுமாம்! இந்த டாஸ்மாக் மக்களை எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்துகிறது பாருங்கள்.


     எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இத்தகைய குக்கிராமங்களில் வாழ்ந்துகொண்டுருக்கும் மக்கள் செய்த குற்றமென்ன? அவர்களது இயல்பு வாழ்க்கையை ஏன் குலைக்கிறீர்கள்? நெடுஞ்சாலைகளில் கடைகள் கூடாது எனும்போது இக்குக்கிராமங்கள் குறிவைக்கப்படுகின்றன.

     இங்கு கடை திறந்தால் என்னாவாகும்? நடக்கவே முடியாத இச்சாலைகளில் கார்களும் இரு சக்கர வாகனங்களும் அணிவகுக்கும். இரவு 7 மணிக்கே அடங்கிவிடும் ஊர் இனி இரவு 10 மணி வரை விழித்திருக்கும். இதுதான் தமிழக குக்கிராமங்களின் நிலை.

     மிக எளிய பெரிய அரசியல் பின்புலமற்ற மக்கள் அவர்களது அன்றாடத் தேவைகளை ஒதுக்கிவைத்துவிட்டு இவ்வாறாக திரளவேண்டிய கட்டாயத்தை அரசுகள் ஏற்படுத்தியுள்ளன.

     மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில் வாங்கிய விளமல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் கவுசிகன் பாட்டில் வெடித்து இறந்து போனான் (2012). இது பற்றிய எனது பதிவை கீழ்க்கண்ட இணைப்பில் காண்க.

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்

http://musivagurunathan.blogspot.in/2012/02/blog-post_29.html



     2016 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு 'படிப்படியாக மதுவிலக்கு' என்ற கொள்கை முடிவெடுத்து, ஜெ.ஜெயலலிதா இருக்கும்போது 500 கடைகளையும், பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு 500 மதுக்கடைகளும் மூடப்பட்டன.

     உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 3000 க்கு மேற்பட்ட கடைகளை மூடவேண்டி வந்த போது இந்த அரசு என்ன செய்திருக்க வேண்டும்? படிப்படியாக மதுவிலக்கு என்ற எங்களது கொள்கைப்படி இத்தீர்ப்பை வரவேற்று இவற்றை மீண்டும் திறக்க மாட்டோம் என்று உறுதியளித்திருக்க வேண்டாமா? ஆனால் நடந்தது என்ன?

     இவர்களுக்கு மதுக்கடைகளை மூடும் எண்ணம் அறவே கிடையாது. மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாக வேறுவழியின்றி மக்களை ஏமாற்ற விற்பனை இல்லாத 1000 கடைகளைப் பேருக்கு மூடிவிட்டு, இந்த 3000 கடைகளை மீண்டும் திறக்க அரசு எந்திரம் போர்க்கால அடிப்படையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

     ஒரேயடியாக பூரண மதுவிலக்கு கொண்டுவருவது நமது கோரிக்கையல்ல. அது சாத்தியமுமல்ல. டெங்கு போன்ற சாதாரண நோய்களைக் குணப்படுத்தவே நமது மருத்துவமனைகளும் வசதிகளும் போதாதவை. லட்சக்கணக்கிலுள்ள குடிநோயாளிகளுக்கு மாற்று ஏற்பாடு, சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையில் அதன் பின்விளைவுகள் கோரமானவை. இது குறித்து மேலதிக கருத்துகளுக்கு கீழ்க்கண்ட இரு இணப்புகளை வாசிக்கவும்.

டாஸ்மாக் வேண்டும்: ஓர் மதுவிலக்குச் சர்ச்சை

http://musivagurunathan.blogspot.in/2015/08/blog-post_12.html

டாஸ்மாக் தமிழகம்

http://musivagurunathan.blogspot.in/2012/12/blog-post_31.html

     மூடப்பட்ட கடைகளால் பணி இழந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசுத்துறைகளில் எவ்வளவோ காலியிடங்கள் உண்டு. ஆனால் அரசு செய்யாமல் தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல் கடை திறந்தால்தான் பணி என்று அழுத்தம் கொடுப்பதன் வாயிலாக, குக்கிராமங்களில் இவ்வாறு ஆளும், ஆண்ட கட்சிகளின் துணையோடு கடைகளைத் திறக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியது.

     சுடுகாடு, இடுகாடு அருகே ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தானே கடைகள் திறக்கப்படுகின்றன என்று சொல்வாரும் உண்டு. அந்த இடங்கள் தான் இயற்கை உபாதைக்கு ஒதுங்கும் இடமாக உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

     இம்மாதிரியான இடங்களில் அனைத்து வீடுகளுக்கும் முதலில் கழிப்பறை கட்டிக் கொடுத்து விட்டு, பிறகு மதுக்கடைகளைத் திறப்பது பற்றி யோசிக்கலாம்.

     பொதுக்கழிவறை, சுகாதார வளாகம் இருக்கிறதே என்று கேட்கவேண்டாம். அதைப் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். பள்ளிகளிலேயே கழிவறைகள் பயன்படுத்தும் நிலையில் இல்லை.

     தூய்மை இந்தியாவில் திறந்தவெளிக் கழிவறையா என்று வியப்படையவும் வேண்டாம். குத்தாலம் ஓ.என்.ஜி.சி. அதிகாரியும் எங்களிடம் இதைத்தான் கேட்டார். அதிகாரவர்க்கத்தால் இதுதான் முடியும். அவர்களை இங்கு ஒருநாள் தங்கவைத்தால்தான் நிலைமை உரைக்கும்.

     திருவாரூர் தேவர்கண்டநல்லூர் அருகே உச்சிமேடு என்ற ஊரில் குளிக்கரை அரசுப்பள்ளி மாணவர் ஒருவர் இறந்ததும் இன்னொரு மாணவரும் மற்றொருவரும் கடும் பாதிப்படைந்ததும் (2009) கதிராமங்கலம் நறுவெளியில் ஒரு பெண்மணியும் எரிவாயுக் குழாய் விபத்தால் பாதிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, ஏன் அவர்கள் திறந்தவெளிகளைப் பயன்படுத்துகிறார்கள் என எதிர்க்கேள்வி தொடுத்தார். அரசும் நாங்களும் கழிப்பறைக் கட்டித் தருகிறோமே என்றும் சொன்னார். எரிவாயுக் குழாய் தீவிபத்து பற்றி அவர் கடைசி வரை வாய் திறந்தாரில்லை.

     மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம், வருவாய்துறை ஆகிய தரப்பு முழுமையும் போர்க்கால அடைப்படையில் கடைகளைத் திறக்க ‘மெனக்கெடுவதையும்’ இலக்கு வைத்து விற்பனை செய்வதும் மாநில அரசின் சீரழிவுகளை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவிற்கு இவர்களுக்கு நன்றி சொல்லி சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டனர். அது குறித்த இரு பதிவுகளை இணைப்பில் காண்க.

யாருக்கு நன்றி சொல்வது?

http://musivagurunathan.blogspot.in/2017/04/blog-post.html

சுவரொட்டிக் கனவான்களே! மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறிடத்தில் திறப்பதற்கும் நன்றி சொல்லுங்கள்!!.

http://musivagurunathan.blogspot.in/2017/04/blog-post_18.html

      சுடுகாட்டுப் பகுதியில் ஒதுங்கும் மக்களைப் பேய், பிசாசுகளிடமிருந்து, காக்கவும் அவர்கள் பீதியடையாமலிருக்க இரவு 10 மணி ஆள்கள் நடமாட்டம் இருக்கவேண்டும் என்பதற்காகவே மதுக்கடை திறக்கப் படுகிறது என்றுகூட சொல்லலாம்!

      இதுபோல் திருவாரூர் தஞ்சாவூர் சாலையில் அம்மையப்பன் ஊராட்சிக்கு உள்பட்ட பாம்பாக்கைப் பகுதியில் கடை திறக்கும் முயற்சி அப்பகுதி மக்களைப் போராட்டத்தில் தள்ளியுள்ளது. இவ்வாறு விளிம்பு நிலை மக்களை வலுக்கட்டாயமாக போராட்டத்தில் தள்ளிவிட்டு, அப்போராட்டத்தை ஆதரித்துப் பேசுவோர், முகநூல் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் பதிவிடும் நபர்களை மிரட்டுவது, கைது செய்வது, குண்டர்கள் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது போன்ற ஜனநாயக விரோதச் செயல்களை வேடிக்கைப் பார்க்க முடியாது. வளர்மதி, திவ்யபாரதி, குபேரன் போன்றோரின் கைதுகளை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. இத்தகைய அரசுகள் நீண்டகாலம் நிலைக்காது. இவர்கள் மீண்டும் மக்களிடம் வந்தேயாகவேண்டும்.

      நமது மதுப்பழக்கம் கூடத் தொன்மையானதுதான். பனங்கள், தென்னங்கள் உள்ளிட்ட பாரம்பரிய பழங்குடிக் கலாச்சார இயற்கை மதுவகைகள் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. அவ்வை அதியமான் கள்ளுண்ணும் காட்சிப் புறநானூற்றுப் பாடல் (புறம் 235) வழியே விரியும்.

“சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும் மன்னே!
பெரிய கள் பெறினே, யாம் பாட தான் மகிழ்ந்துண்ணும்; மன்னே!” (புறம்:235)

(திணை பொதுவியல்; துறை கையறு நிலை, அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது. காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.)

      IMFL (Indian-made foreign liquor) வந்தபிறகு நிலைமை தலைகீழ். உள்நாட்டில் தயாராகும் அயல்நாட்டு மதுபானம் என்ற பெயரே அபத்தமல்லவா! இன்று தொல்குடி மக்களுக்குக் கூட இந்த மதுவகைகளுக்குப் பழக்கப்படுத்தி விட்டோம்.

      கள்ளச்சாராயம், போலி மது ஆகியவை ஆறாய் ஓட அரசுகள், இவற்றிற்கு எதிரான நடவடிக்கை எடுக்க மனமின்றி வாளாயிருக்கின்றன. தமிழகத்தை ஆளும், ஆண்ட இருபெரும் அரசியல் கட்சிகளும் தயாரிக்கும் இந்த மட்டகரமது வெளியில் விற்பனை செய்ய லாயக்கற்றவை. எனவேதான் அரசு கள்ளைத் தடைசெய்து தங்களது தலைவர்கள் மற்றும் அவர்களது பிநாமி சாராய ஆலைகளில் தயாரிக்கப்பட்ட தரம்குறைந்த மதுவை அரசே விற்பனை செய்யும் மோசமான சூழல் தமிழ்நாட்டிலுள்ளதை அவதானிக்க முடியும்.

       இங்கு நடப்பதோ கூட்டிக்கொள்ளை. சாராய ஆலைகள் கட்சித் தலைமை மற்ற மேல்மட்டத்தலைவர்கள் நிலையிலும் டாஸ்மாக் கடை பார்கள் அடுத்தடுத்த நிலையிலும் பகிந்துகொள்ளப்படுகின்றன. இந்நிலை என்று மாறுமோ?

வியாழன், ஜூலை 27, 2017

தொன்மையைத் தேடி… (இரண்டாம் பகுதி)

தொன்மையைத் தேடி… (இரண்டாம் பகுதி)

மு.சிவகுருநாதன்





       திருவாரூர் மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி 22.07.2017 மன்னார்குடி பின்லே மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. நம்முடைய அச்சத்தை மெய்பிக்க இங்கு பேசப்பட்ட செய்திகளே போதுமான சான்றுகளாகும். அமர்வதற்கு இடவசதி மற்றும் இருக்கை வசதிகள் இன்றி இம்மாதிரி கூட்டங்களும் பயிற்சிகளும் ஏன் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்று தெரியவில்லை? 100 பெருக்கு என்றால் அங்கு 50 பேருக்குத்தான் வசதிகள் இருக்கும். மீதிப்பேர் வரமாட்டார்கள் என்கிற எண்ணமா என்று கேட்கத் தோன்றுகிறது. இது அனைத்து வகையான பயிற்சிகளுக்கும் பொருந்தும். இன்று பொதுக்கூட்டங்களுக்குக் கூட அனைவருக்கும் நாற்காலிகள் போடப்படுகின்றன. பள்ளிக் கல்வித்துறை எப்போது திருந்துமெனத் தெரியவில்லை. இதில் தொன்மைக்குத் தகுதியான இடம் என்கிற பிதற்றல் வேறு.

      திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வரலாறு பாட முதுகலை ஆசிரியர், பின்லே மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியை, பாளையக்கோட்டை உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர், மன்னை ராஜகோபாலசாமி அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றியல் துறைத்தலைவர் காமராஜ், வரலாற்று விரிவுரையாளர் இளங்கோவன், திருமக்கோட்டை மின்வாரிய வேதியிலாளர் காந்தி லெனின் ஆகியோர் உரையாற்றினர்.

      மதிய உணவு இடைவேளை இல்லாமல் பிற்பகல் 2 மணிக்கு நன்றியுரை சொல்லி முடித்த பிறகும் பின்லே பள்ளியின் பெருமைபேசியும் படங்கள் திரையிட்டும் காந்தி லெனின் புகழ்பாடியும், அவரை பள்ளிகளுக்கு அழைக்க வேன்டுகோளும் விடுக்கப்பட்டது. இந்த ஆசிரியர்களுக்கு யாராவது நேர மேலாண்மையை கற்றுத் தந்தால் நல்லது. ஒருவர் மேப் குறிக்க டிப்ஸ் தந்தார். எதையும் தேர்வுக்கான கச்சாப்பொருளாக மாற்றும்போக்கு கண்டனத்திற்குரியது. மேடை ஆக்கிரமிப்பும் சுயமோக தம்பட்டங்களைக் குறைத்தால் மட்டுமே நேர மேலாண்மை சாத்தியப்படும்.

      தொன்மை என்றால் சுயபெருமை, தமிழ்ப்பெருமை, சோழப்பெருமை, சைவப்பெருமை போன்றவற்றைப் பேசுதல் என்கிற புரிதல் முதலில் மாறவேண்டும். பின்லே பள்ளி, மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் ஆகியவற்றில் பெருமை பேசுவதல்ல தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் பணி. ஆனால் அதுதான் நடந்தது. இயற்கையை நேசித்தல், பாதுகாத்தல், வரலாற்றைப் புரிந்துகொள்தல், ஆய்வு செய்தல், விமர்சனம் செய்தல், மாற்றுக்கருத்துகளை மதித்தல், சமூக நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை போன்ற பல்வேறு நோக்கங்களைக் கொண்டது என்று நான் கருதுகிறேன்.

       பள்ளித் தலைமையாசிரியை பின்லே பள்ளியின் பெருமையாக காந்தியின் வருகை மட்டுமல்ல; டி.டி.வி.தினகரன் இப்பள்ளி மாணவர் என்பதையும் பெருமை பொங்க குறிப்பிட்டார். சிந்துவெளி, கீழடித் தொன்மைகளுக்கு அடுத்தபடியாக பிற்காலச் சோழர்களின் தொன்மை ஆதாரங்களை மட்டும் விதந்தோதி தமிழக, மாவட்ட வரலாற்றை நிர்மாணிக்கும் போக்கை எப்படிப் புரிந்துகொள்வது? பிற்காலச் சோழ மற்றும் சைவ வரலாறுதான் இவர்களுக்கு மூலம். மேலும் அவற்றைத் தங்கள் வாய்வீச்சுக்குத் தக்கவாறு நீட்டி முழக்கி கைத்தட்டல்கள் பெறுவதன் மூலம் வரலாற்றைக் கொச்சைப் படுத்துகின்றனர்.

      மிக முக்கியமான, அற்புதமான, சிறப்பான, தொன்மையான, தமிழகத்திலேயே முதல் முதலாக என்ற சொற்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது வரலாற்று ஆய்வாகாது என்பதை இவர்கள் முதலில் உணரவேண்டும். 8 முதல் 13 ஆம் நூற்றாண்டு முடிய உள்ள காலக் கல்வெட்டுகளை மட்டும் கொண்டும் தமிழக வரலாற்றைச் சித்தரிப்பது அபத்தம். வர்த்தமானபுரீஸ்வரர் ஆலயம் இருப்பதால் பிற்காலச் சோழர்கள் சமணத்தை ஆதரித்தார்கள், சமணம் செழித்திருந்தது என்று சொல்லிவிடமுடியுமா என்ன?

      தீபங்குடி சமணப்பள்ளி நன்னிலத்தில் இருக்கிறது என்கிறார். இவர்கள் ஆய்வுகளின் தரம் அவ்வளவுதான். தீபங்குடி குடவாசல் வட்டத்தில் திருவாரூர் கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிருந்து 10 கி.மீ. தலைவில் அரசவனங்காட்டிற்கு அருகில் உள்ளது. கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளின்படி சாதிகள் பிறப்பின் அடிப்படையில் இல்லை, அவை தொழிலின் அடைப்படையிலேயே இருந்தன என்கிறார். புரோகிதர் தொழிலுக்கு இதர வருணம் அல்லது சாதியைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட்டதுண்டா? இதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உண்டா?

      தஞ்சை, திருவாரூர் கோயில்களில் தளிச்சேரி (தேவரடியார்கள்) பெண்டிர் இருந்தது பெருமையான செய்தியா என்ன? தேவதாசிகளைப் பற்றிய எவ்வளவோ ஆய்வுகள் வந்தாயிற்று; பொட்டுக்கட்டும் பழக்கத்தை ஒழித்தாயிற்று. ஆனால் இன்னும் நமது பெருமைப்பட்டியலில் அதற்கு இடமிருக்கிறது.

      இவை பற்றிய நிறைய ஆய்வுகள் வந்துவிட்டது. நாம்தான் அவற்றைச் சீண்டுவதில்லை. உதாரணத்திற்கு ஒன்றுமட்டும். பேரா.கே.ராஜய்யன் ஆங்கிலத்தில் எழுதி சா.தேவதாஸால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூலிருந்து சில வரிகள்.

      “சோழர்கள் அரசர்களாயிருந்தாலும், புரோகிதர், அமைச்சர், அலுவலர் என்னும் விதத்தில், பிராமணர் உண்மையான அதிகாரம் பெற்றிருந்ததனர். தமக்கே உரித்தான அக்கிரகாரங்களில் (அ) சதுர்வேதிமங்களங்களில், உணவையும் கல்வியையும் இலவசமாகப் பெற்று, அவர்கள் வாழ்ந்தனர். இப்பிராமணர்களின் நன்மைக்காக, மன்னர்கள் கோயில்களுக்கு கணிசமான மானியங்களைத் தந்தனர். தேவதாசிகளாகக் கோயில்களுக்குள் ஈர்க்கப்பட்டிருந்த கவர்ச்சியான யுவதியர், இசை, நடனம் (ம) தம் உடலால் பிராமணரை மகிழ்ச்சிப்படுத்தினர். மறுபுறத்தில், உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப்பட்டனர்”, (பக். 151, தமிழ்நாட்டு வரலாறு, பேரா. கே.ராஜய்யன், (மொ) சா. தேவதாஸ், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, ஆகஸ்ட் 2015, வில்லை: ரூ. 400)

      “பெரும்பாலான பண்ணைக்கூலிகள் அடிமைகளாய் (அ) கொத்தடிமைகளாய் வாழ்ந்தனர். குரூரமாய் நடத்தப்பட்டனர், விற்கப்பட்டனர், மீளவும் விற்கப்பட்டனர் என்பது தெளிவாகிறது. இவ்வடிமைகள் அதிகமானோரை கோயில்கள் வைத்திருந்தன”, (பக்.152, மேலே குறித்த நூல்.)

      “சைவமும் வைணவமும் ஏற்றம் பெற சமணமும் பௌத்தமும் நலியுற்றன. சோழர்களைப் பிராமணர்கள் கட்டுப்படுத்தியதாலும் பகை மிக்க மதங்கள் வதைக்கப்பட்டதாலும், ஆலயங்கள், மடங்கள், அக்கிரகாரங்களின் நிர்மாணத்திற்காக அரசநிதி திருப்பிவிடப் பட்டதாலும் இது தவிர்க்க முடியாததாக இருந்தது. சோழர்கள் சைவர்களாதலால், அவர்தம் மதம் சலுகையுடன் நடத்தப்பட்டது”, (பக்.152, 153, மேலே குறித்த அதே நூல்.)

      கல்வெட்டுக்களில்தான் நல்ல தமிழ் இருக்கிறது என்று ஏங்குபவர்கள் மொழியின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் மாற்றங்களை உணர மறுப்பது உண்மையான ஆய்வாகுமா? ‘பள்ளிக் கல்வித் துறை’ என்பதில் வல்லினம் மிகும் என்பதைப் போலவே ‘தொன்மைப் பாதுகாப்பிலும்’ மிகும் என்பதை உணர்ந்துகொள்வது எந்நாளோ? (தொன்மை பாதுகாப்பு என்றே எழுத்வதும், பதாகை வைப்பதும் தொடர்கிறது.) திருவள்ளூவர், ஏன் முதலாம் ராஜராஜன் பயன்படுத்திய சொற்களை இன்று நாம் அப்படியே பயன்படுத்துவதில்லை. மொழி இம்மாதிரி மாற்றங்கள் பெறுவது இயல்புதானே!

       தமிழ்நாட்டில் அடிமை முறை இருந்ததையும் பிராமணர் தவிர பிறர் இவ்வாறு அடிமையாக விற்கப்பட்டதும் அடிமைகளுக்கு சூலச்சின்னம் பொறிக்கப்பட்டது நடைபெற்றது. இவ்வாறே தேவதாசிகளுக்குப் பாதங்களில் சூலச்சின்னம் பொறிக்கப்பட்டது. (பார்க்க: தமிழகத்தில் அடிமை முறை, ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், விலை: 120) பிராமணர்களை அடிமைகளாக்க மநு தர்ம சாத்திரங்களில் வழியில்லை. அதுமட்டுமல்ல கொலை செய்த பிராமணர்களுக்குத் தண்டனையும் அளிக்க முடியாது. சோழ மன்னன் ஆதித்ய கரிகாலனைக் கொன்ற பிராமணர்களுக்கு அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்து, நாட்டைவிட்டு வெளியேற்றும் தண்டனையே வழங்கப்பட்டது. ஏனெனில் இங்கு மநு தர்மமே ஆட்சி செய்தது. அதை மேலும் வலுப்படுத்த திருவாரூர் மனுநீதிச்சோழன் கதைகள் போன்று பல கதைகள் உற்பத்தியாயின. நாம் இவற்றை வரலாறு, தொன்மை என்று மெச்சி வருகிறோம். வரலாறு, இச்சமூகம் நம்மை மன்னிக்காது.

     வரி என்பதற்கு ‘இறை’ என்னும் தமிழ்ப்பெயர் கண்டு மகிழும் நாம் அக்கால சமூகம் வரிக்கொடுமைகளால் பட்ட துன்பங்களை ஏன் கண்டுகொள்ள முடிவதில்லை? தானமளிக்கவும், கோயில் கோபுரங்கள் கட்டவும் ‘இறை’யும் கொள்ளையிடப்பட்ட பகை நாட்டுச் சொத்துகளுமே பயன்பட்டன. ‘இறை’யின் பெருமை பேசும்போது அதன் மறுபக்கமான ‘இறையிலி’ பற்றி பேசமறுப்பது எவ்வகையான ஆய்வு முறை?

      மின்வேதியிலாளர் காந்தி லெனின் பேச்சு, நழுவப்படம் மற்றும் ஒளிப்படக் காட்சிகள் அனைத்தும் அபத்தக் கூத்துகள். இவருக்கு ஒளிவட்ட பிம்பமும் பள்ளிகளில் பேச அழைக்கவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ‘அப்துல் கலாமைப்போல’ என்று மிகச்சரியாக பாராட்டியதாக தோன்றுகிறது.

       மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அகத்தியர் என்றார். இதைகொண்டு அவர் மனநோயைக் குணப்படுத்தினாராம்! தாமிரம் ஒரு மின்கடத்தி என்பதையும் தமிழர்கள் அறிந்திருந்தார்களாம்! அதனால் தாமிரப் பட்டயங்கள் பொறிக்கும் பழக்கம் இதனை ஒட்டி எழுந்ததாக விண்டுரைத்தார்!

        புவியின் ஈர்ப்பு சக்தி முழுமையும் சிதம்பரத்தில் குவிந்திருக்கும் (சிதம்பர) ரகசியம் மற்றும் நடராஜர் சிலை, ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடு, கடவுள் துகள் (Higgs Boson – இதைக் கடவுள் துகள் என்பதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது.) என்றெல்லாம் தினமும் வாட்ஸ் அப்பில் வரும் நூற்றுக்கணக்கான அரிய (!?) கண்டுபிடிப்புகளை வெளியிட்டு அசத்தினார்! எற்கனவே கண்ட பிள்ளையார் பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றோடு இவற்றையும் கல்வெட்டு அல்லது தாமிரப் பட்டயங்களில் பொறித்து வைத்தால் வருங்கால சந்ததிக்குப் பயன்படும்.

      நான்கு வேதங்கள், ஆகமங்கள், உயிர்நாடிகள் ஆகியவற்றைக் கொண்டு சிதம்பரம் கோயில் கட்டப்பட்டுள்ளதாம். வேதங்கள் யாருடையது? அங்கு நுழைந்த நந்தனை எரித்தது யார்? இன்றும் அந்தக் கோயில் யாருக்கானதாக உள்ளது. தேவாரத்தை, தமிழை, தமிழனை அனுமதிக்காத உள்ளே அனுமதிக்காத அதன் வழியே என்ன தமிழ்ப்பெருமை, தொன்மை வேண்டி கிடக்கிறது?

       சிந்துசமவெளி முத்திரை unicorn ஐ காட்டி விளக்கமளித்தார். இந்த உருவத்தை குதிரையாக ‘கிராபிக்ஸ்’ செய்து என்.எஸ்.ராஜாராம் என்பவர் உருவாக்கிய புனைவுகளை ஹார்வார்ட் பல்கலைக்கழக சமஸ்கிருத பேராசிரியர் மிஷேல் விட்ஸல், இந்தியவியல் அறிஞர் ஸ்டீவ் ஃபார்மர் ஆகியோர் கட்டுடைத்ததும் உலகறிந்த ஒன்று. இது ஒரு தொன்ம (புராணீக உருவம்) சிந்துவெளி மக்களின் படைப்பாற்றலுக்கு உதாரணம், அல்லது ‘நீல்கை’ எனும் மான் வகையினமாகவோ ‘ஒனேஜர்’ வகைக் கழுதையினமாகவோ இருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து. (பார்க்க: அ.மார்க்சின் ‘ஆரியகூத்து’ நூல், எதிர் வெளியீடு)

      சிந்து வெளி எழுத்துமுறை சித்திர வடிவக் குறியீடுகளாகும். பிற்கால கல்வெட்டு எழுத்துகள் படம் ஒன்றை சிந்துவெளி எழுத்தாகக் காட்டினார். இதுவே பிற்கால சோழர் கால கல்வெட்டு எழுத்துபோல காணப்பட்டது. பங்கேற்பாளர்கள், எதிர்வினை புரிய வினாக்கள் கேட்க அனுமதிக்கப்படவில்லை. எனவே இத்தகைய வரலாற்று உண்மைகளை (!?) பருகியபடியே ஆசிரிய சமூகம் கைதட்டிக் கலைந்தது.

      அக்கால கோயில்கள் பள்ளிகளாக இருந்ததாக பேசப்பட்டது. இது சமணப்பள்ளிக்கும் புத்த விகாரைக்கும் மட்டுமே பொருந்தது. சைவ, வைணவக் கோயில்கள் யாருக்கானதாக இருந்தது. இங்கு தமிழுக்கு வேலையில்லை. இவர்கள் மிகவும் விதந்தோதக்கூடிய முதலாம் ராஜராஜன் நூற்றுக்கணக்கான வேதபாடசாலைகள் அமைத்து சமஸ்கிருத மொழியையும் நான்கு வேதங்களையும் பிராமணர் படிக்க மட்டுமே வழி செய்தவன். தமிழுக்காக சிறு துரும்பையும் அசைக்காதவன். (பார்க்க: எனது நூல், கல்விக்குழப்பங்கள், பாரதி புத்தகாலய வெளியீடு, மார்ச் 2016, விலை: ரூ. 140)

      ‘மன்னர்குடி’ மன்னார்குடியாக திரிந்த வரலாற்றை மட்டும் சொல்பவர்கள், ‘மன்னர்குடி’யாக ஆவதற்கு முன்பு என்னவாக இருந்தது என்று உரைக்கவேண்டுமல்லவா! அரசர்களைக் கொண்டு மட்டும் வரலாறு எழுதும் அவலம் இது. திருவாரூர் திரு.வி.க. அரசுக்கல்லூரிப் பேராசிரியர் ஜான் பீட்டர் எழுதிய ஊர் பெயர் தொடர்பான நூல் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆய்வுகள் எல்லாம் வெறும் தலபுராணமாக இருக்கின்றதே ஒழிய வரலாற்று, சமூகவியல் ஆய்வாக மலரவில்லை என்பது வருந்தத்தக்கது. இந்த வகையில் இடப்பெயர் ஆய்வுகள் என்ற வகையில் ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்னும் ஆர்.பாலகிருஷ்ணனின் நூல் (பாரதி புத்தகாலய வெளியீடு: ஏப்ரல் 2016, விலை: ரூ. 150) குறிப்பிடத்தகுந்தது.

      நாட்டார் தெய்வங்களில் பல பெண் தெய்வங்கள் உண்டு. இவை பெரும்பாலும் கொலையுண்ட பெண்கள். குறிப்பாக சாதி ஆணவக்கொலையான பெண்களை தெய்வமாக்கி வழிபடும் போக்கு உள்ளது. மக்களின் குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடாகக் கூட இதைக் கருத இடமுண்டு. இவற்றையெல்லாம் தொன்மை என்று கொண்டாடுவதில் பொருளில்லை.

      வேதங்கள், நால் வர்ணங்கள், சாதிகள் கூட தொன்மையானதுதான்! இவற்றை பெருமையாக பேச சமூகத்தில் இடமுண்டா? ‘தொன்மை’ என்பதன் பொருளை உணர்ந்துகொள்வதில் நமக்கு சிக்கலிருக்கிறது. புதிய பார்வையும் அணுகுமுறையும் தேவைப்படுகிறது. தன்னிலை தவிர்த்து விலகி நின்று அணுகும் தன்மை இதற்கு அவசியம். சுயபெருமை கொள்வதில் ஒன்றுமில்லை.

       வரலாறு மக்களை முதன்மைப்படுத்த வேண்டும். மன்னர்கள் காலம் மாலையேறிவிட்டது. மக்களை மையப்படுத்தி வரலாறு எழுதப்படவேன்டும் என்ற குரல் பழைய போக்கை மாற்றி வருகிறது. மண்ணும் மனிதர்களும் இயற்கையும் தொன்மையாக தோற்றம் கொள்கையில் செயற்கை அணிகலன்கள் தேவையற்றுப் போகும். இதுவே நம்மை முன்னோக்கிச் செலுத்தும் பாதை.

(முற்றும்)

ஞாயிறு, ஜூலை 23, 2017

தொன்மையைத் தேடி… (முதல் பகுதி)

தொன்மையைத் தேடி… (முதல் பகுதி)

மு.சிவகுருநாதன் 
 
 

     வெறும் மனப்பாடத் தேர்வுகள், மதிப்பெண்கள் என்று வட்டமடிக்கும் சூழலை மாற்ற பாட இணைச்செயல்பாடுகள் ஓரளவிற்கு உதவும். எனவே இதை வரவேற்பதில் தப்பில்லை. ஆனால் இவை இங்கு எவ்விதம் புரிந்து கொள்ளப்படுகின்றன, மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குரிய ஒன்று.

     உதாரணமாக தமிழ் இலக்கிய மன்றங்கள் பலவற்றை தவறாகவே அறிமுகம் செய்கின்றன. இதிலுள்ள இலக்கியம் என்ற சொல்லை நீக்குவது நலம். இங்கு பேச்சுக்கலை இயல்பான ஒன்றை, மிகைப்படுத்தி, நாடகீயமாக செயற்கைத்தனம் நிரம்ப வெளிப்படுத்துவதைக் காணலாம். இதுதான் பேச்சு எனகிற தவறான புரிதலை மாணவர்களிடம் ஏற்படுத்தியிருப்பது வருந்தத்தக்கது. 


     இதேபோல் பலவற்றைச் சுட்டமுடியும். சமூக அறிவியல் பாடத்திற்கு ‘தொன்மைப் பாதுகாப்பு மன்றம் (Heritage Club) உள்ளது. இங்கு ‘தொன்மை’ என்பது எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது? கோயில்கள், கோபுரங்கள், கோட்டைகள், கருங்கல் சிற்பங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் போன்றவை மட்டுமே இங்கு தொன்மையாகப் பார்க்கக் கூடிய சூழல் உள்ளது. இவைகள் தொன்மையல்ல என்று சொல்ல வரவில்லை; இவை மட்டுமா என்ற வினா எழுவது தவிர்க்க முடியாது. இந்நிலை மாறவேண்டும். நமது மனப்பான்மைகளும் தப்பெண்ணங்களும் கூடவே கசடுகளும்.

     அந்த வகையில் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, திருவாரூர், மதுரை, காஞ்சிபுரம், மாகாபலிபுரம், வேலூர் போன்ற ஒரு சில இடங்கள் மட்டுமே தொன்மையானதாகும். கருங்கற்கோயில்கள் மட்டுமே ஆயிரமாண்டுகள் நிலைத்திருக்கும். செங்கற்களால் கட்டப்பட்ட மண்டபங்கள், கோயில்கள், பள்ளிகள், விகாரைகள் ஆகியவற்றின் வாழ்நாள் சிலநூறு ஆண்டுகள் மட்டுமே. இவை அடிக்கடி புதுப்பிக்கப்படும். இவற்றிற்கு வேதிக்கரைசல்கள் பூசிப் பாதுகாக்க வழியில்லை. எனவே இவை தொன்மையில் அடங்காதா?

     சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களை திருவாரூர் கும்பகோணம் சாலையில் அரசவனங்காட்டிற்கு அருகிலுள்ள தீபங்குடிக்கு அழைத்துச் சென்றோம். அங்கிருப்பது முதலாவது சமணத் தீர்த்தங்கரர் தீபநாயக சுவாமியின் (ரிஷப தேவர் / ஆதிபகவன்) திகம்பர சமணப்பள்ளி. இது செங்கற்களால் கட்டப்பட்டு, அடிக்கடி புதுப்பிக்கப்படும் சமணக் கோயில். கலிங்கத்துப்பரணி பாடிய பாடிய ஜெயங்கொண்டார் வாழ்ந்த ஊர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரே சமணப்பள்ளி இதுவே. இங்கு ஒருசில சமணக் குடும்பங்கள் உள்ளன. அன்று அருகிலுள்ள பெரும்பண்ணையூர் தேவாயத்திற்கும் சென்று வந்தோம். 


     திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட வரைபடத்தை ஒட்டும் சுவரொட்டியாக (stickers) தயாரித்து பள்ளிகளுக்கு வழங்கினர். (இப்படத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ஓடும் வளவனாற்றை நாகப்பட்டினம் மாவட்டத்திற்குத் தாரை வார்த்தது வேறு கதை!) அதில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பார்க்க வேண்டிய இடங்களும் அனைத்து புண்ணியத்தலங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. அதில் தீபங்குடிக்கு இடமில்லை. இதுதான் நமது நாட்டில் மதச்சார்பின்மை செயல்படும் நிலை! தொன்மை என்ற பேரில் மதவாதம் உயர்த்திப் பிடிக்கப்படுமோ என்ற அச்சம் மெலெழுகிறது.

    உண்மையில் எவை தொன்மையாக இருக்க முடியும்? மண், மலைகள், மரங்கள், காடுகள், கடல்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றுக்கு வயது நிர்ணயிக்க முடியுமா? தஞ்சை பெரியகோயிலுக்கு சுமார் 1000 வயது. காவிரிக்கும் அதன் கிளையாறுகளுக்கும் வயதென்ன? நக்கீரனின் ‘காடோடி’ நாவலில் வருமே மூதாய் மரம். இது ஒவ்வொரு ஊரிலும் இருக்குமல்லவா? (அப்படி ஒரு முதுமரத்தைத் தேடி அகரத்திருநல்லூர் செல்லும் போது வேறு ஒன்றையும் கண்டேன். அதைப் பிறகு பார்க்கலாம்.)

      நமது உடலின் மரபணுகூட தொன்மையானதுதான். இவை காலங்காலமாக கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மண், மலை, காடு, ஆறு ஆகியவற்றுடன் இருக்கும் உறவு பிரிக்கமுடியாத ஒன்று. இவற்றையெல்லாம் தொன்மையாக உணர நாம் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்? உயர்ந்த மாட மாளிகைகள், கோபுரங்களிலிருந்து எப்போது இறங்கி கீழே வரப்போகிறோம்? இந்த மண்ணையும் இயற்கையையும் என்று புரிந்துகொள்வோம்? இந்தத் தொன்மையின் வழியே இயற்கையை ரசிக்க, நேசிக்க, பாதுகாக்க முடியும்.

    என் முன்னோர்கள் பயன்படுத்திய மண்ணை, நீரை நானும் பயன்படுத்துகிறேன். அவர்களுக்கு சுவாசமளித்த மரங்கள் எனக்கும் ஆக்சிஜனைத் தருகின்றன. அவர்கள் பயன்படுத்திய மண், நீர், காற்று அனைத்தும் என் உடம்பில் இருக்கிறது. அவை மீண்டும் மீண்டும் எனக்கும் எனது சந்ததிக்கும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். நான் இவற்றிலும் தொன்மையை உணர்கிறேன். 
 


    இந்தத் தொன்மையை நேசிக்க, பாதுகாக்க விரும்புகிறேன். இந்த மண், மலைகள், காடுகள், மலைகள், இயற்கைத்தாவரங்கள், கடல்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் தொன்மை மிக்கவை. இவற்றைப் பாதுகாக்க, சுற்றுசூழலைப் பேண நாம் உறுதி ஏற்கவேண்டுமல்லவா? (குழந்தைகளை வேலைக்கு அமர்த்த மாட்டேன் என்று பள்ளிக்குழந்தைகள் உறுதி எடுக்க வைப்பதைப் போல இதற்கும் செய்துவிடவேண்டாம்!)

     இது இன்றைய காலத்தின் கட்டாயம். நாம் உணர்ந்து கொள்வதில் தாமதம் இருக்கக் கூடாது. உலகத்திலுள்ள தொன்மை மற்றும் கலாச்சார சின்னங்களைப் பாதுகாக்க முன்முயற்சி எடுத்துவரும் அய்.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு இதைத் தெளிவாக வரையறுத்துள்ளது. அதனால்தான் மேற்குத் தொடர்ச்சி மலையை (Western Guards) பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. நாம் எப்போது மாறப்போகிறோம்? அல்லது மாற்றிக் கொள்ளப் போகிறோம்?

(தொடரும்…)

செவ்வாய், ஜூலை 18, 2017

கோரிக்கைகளுக்கு ஏன் கட்டுப்பாடு?

கோரிக்கைகளுக்கு ஏன் கட்டுப்பாடு?

மு.சிவகுருநாதன்



           அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்றிலிருந்து (18.07.2017) பல கட்டப் போராட்டங்களை அறிவித்துள்ளன. போராடாமல் வாழ்க்கையில்லை; வரவேற்போம். ஆனால் சில ஆதங்கங்களைப் பகிர்ந்து கொள்வது அவசியமென்று கருதுகிறேன். 


      இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2015) ஆசிரியர் இயக்கங்கள் போராட்டத்தில் 15 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றின் போதாமைகளை விளக்கி எனது கருத்தை இப்பகுதியில் தெரிவித்திருந்தேன். இப்போது அரசு ஊழியர்கள் இயக்கங்களும் சேரும்போது கோரிக்கைகள் இன்னும் குறைவாக 3 என சுருங்கியதை ஏற்கமுடியவில்லை. கோரிக்கைகள் குறைவாக இருக்கவேண்டும் எனச் சுருக்கிக்கொள்வதை ஏற்க இயலவில்லை. 


      ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் செவ்வாய் கோளில் பணிபுரிபவர்கள் அல்ல. இந்த சமூகத்தின் பிரச்சினைகளைப் பிரதிபளிக்காமல் எங்களுக்காக மட்டும், பணப்பயன்களுக்காக மட்டுமே போராடுவோம் என்பது ஏற்புடையதாக இல்லை. 


     2015 போராட்டங்களின் கோரிக்கைகள் போதாமை அரசு ஊழியர்கள் இணையும்போது இன்னும் விரிந்த அளவில் சென்றிருக்க வேண்டிய நிலை, தற்போது மிக ஏமாற்றமளிக்கிறது. 


    நமது போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு வேண்டும். அதற்கு சமூகம் சார் சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த சமூகம் இப்போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு தரக்கூடிய சூழலும் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வாய்ப்பும் அமையும். 


     தனியார்மயத்தின் பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. கல்வி தனியார் மயமாவதால் அரசுப்பள்ளிகள் மூடக்கூடிய நிலையில் உள்ளன. வருங்காலங்களில் ஆசிரியர்கள் நியமனமே இருக்காது. தனியார் துறைகளில் சமூகநீதி, இடஒதுக்கீட்டுக்கு வேலை இல்லை. இனி எத்தனை பேருக்கு அரசு வேலைகள் கிடைக்கும்? அரசு ஊழியர்களுக்கும் இதுவேதான். 


     மத்திய மாநில அரசுகளின் தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிகம். இவை சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல; நடுத்தர வர்க்கத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும் இதன் தாக்கம் இருக்கவே செய்யும். இந்நிலையில் தமக்காக மட்டும் போராடுவது சாத்தியமில்லை. அனைவருக்காகவும் போராடவேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைந்த போராட்டங்கள் அவசியம். 


    வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. போன்ற வரிக்கொடுமைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரச் சிக்கல்கள், கூடங்குளம், நெடுவாசல், கதிராமங்கலம். நாகூர், மீத்தேன், ஹைட்ரோகார்பன், டாஸ்மாக் போன்று எண்ணற்ற பேர்டர்களுக்கு மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கட்டுள்ள நாம் அவற்றைக் கண்டுகொள்ளாமலிருப்பது தகுமா? 


    பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள், நீட் தேர்வுகள், மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு நமது மாணவர்களின் நலம் பாதிக்கப்படுதல், ஊழல், மதவாதம், சாதிய வெறி போன்றவற்றையெல்லாம் பிறகு யார்தான் பேசுவது? 


     தொழிற்சங்கள் குறுகிய நோக்கங்களுக்காக செயல்படாமல் பரந்த, சமூக நோக்கில் கடமையாற்றுவது இக்காலகட்டத்தில் அவசியத்தேவையாக உள்ளது. இதை போராட்டக்களத்தில் உள்ள அனைவரும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.



முந்தைய பதிவுகள் சிலவற்றைன் இணைப்புகள் கீழே:



ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்…

http://musivagurunathan.blogspot.in/2015/03/blog-post_22.html
 

ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு


http://musivagurunathan.blogspot.in/2015/10/blog-post.html



ஆசிரியர்களே! கல்விக்காகவும் சமூகத்திற்காகவும் போராடுங்கள்!

http://musivagurunathan.blogspot.in/2015/03/blog-post_7.html



இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்

திருவாரூர்

https://www.facebook.com/mu.sivagurunathan

http://musivagurunathan.blogspot.in/

பன்மை

https://panmai2010.wordpress.com/

மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com

வாட்ஸ் அப்: 9842802010

செல்: 9842402010

ஞாயிறு, ஜூலை 16, 2017

கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்

கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்

  (இன்று குடந்தையில் வெளியிடப்பட்ட எங்களின் உண்மை  அறியும் குழு அறிக்கை)

                                                                                                                                              கும்பகோணம்
ஜூலை 15, 2017
                                                       
        கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். கடந்த ஜூன் 30 முதல் இந்த ஊர் மக்கள் இப்பகுதியில் செயல்பட்டு வருகிற ‘எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனத்தையும்” (Oil and Natural Gas Corporation – ONGC) அரசையும் எதிர்த்துப் போராடிக் கொண்டுள்ள செய்தி தற்போது தமிழக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.  முப்பதாண்டு காலமாகக் காவிரியின் கடைமடைப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து எரிபொருளை உறிஞ்சி எடுத்து, விவசாய நிலங்களுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் எடுத்துச் செல்வதால் தம் நில வளம் மட்டுமின்றி, குடிநீர் உட்பட சுற்றுச் சூழல் பெரிய அளவில் மாசுபடுவதால் ONGC யின் செயல்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இன்று எழுந்துள்ளது. எரிபொருள் கசிவு ஒன்றை ஒட்டி நடந்த பிரச்சினையில் இன்று பத்து பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு மக்கள் தொடர் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.


      இது குறித்த உண்மைகளை ஆராய்ந்து மக்கள் முன் வைக்க கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள்:

பேரா.அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,
இரா.பாபு, மனித உரிமை ஆர்வலர், கடலூர்,
மு.சிவகுருநாதன், கல்வியாளர், திருவாரூர்,
வி.பி.இளங்கோவன், எழுத்தாளர், அம்மாசத்திரம், குடந்தை,
அகமட் ரிஸ்வான், பத்திரிகையாளர், நாகூர்


        இக்குழுவினர் ஜூலை 13, 14 தேதிகளில் கதிராமங்கலம், குற்றாலம், திருவாரூர் மாவட்டத்திலுள்ள விளமல், அடியக்கமங்கலம் முதலான பகுதிகளுக்குச் சென்று போராடும் மக்களைச் சந்தித்தோம். திருவாரூரை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட சிலரைச் சந்தித்தோம். எரிவாயுக் குழாய் வெடித்த பகுதிகளுக்கும் சென்றோம். பாதிக்கப்பட்டு உயிர் வாழும் மக்கள் சிலரது துயரக் கதைகளையும் பதிவு செய்து கொண்டோம். குத்தாலத்தில்  அமைந்துள்ள ONGC அலுவலகத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் ஜோசப், கார்பொரேட் செய்தித் தொடர்பாளர் ராஜசேகர் ஆகியோருடன் விரிவாகப் பேசினோம். ஜூன் 30 அன்று நெல் வயலொன்றின் வழியே சென்று கொண்டுள்ள எரிவாயுக் குழாய் வெடித்த இடத்திற்கு நாங்கள் சென்று பார்க்க முனைந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் எங்களை அருகே நெருங்க விடாமல் தடுத்தனர். நாட்கள் 15 ஆகியும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் இன்னும் வீசிக் கொண்டுள்ளது. அருகே நெருங்க அனுமதிக்காவிட்டாலும் சுமார் 20 அடி தொலைவில் நின்று குழாய் வெடித்த இடத்தைப் பார்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம்.

கதிராமங்கலம் மக்கள் சொன்னவை

       ஊர் மத்தியில் உள்ள அய்யனார் கோவில் முன்னுள்ள திடலில் இப்போது அந்த ஊர் மக்கள் தினந்தோறும் கூடி நாள் முழுக்கத் தம் கோரிக்கைகளை முழங்கிக் கொண்டும், பார்க்க வருபவர்களிடம் தம் பிரச்சினைகளை விளக்கிக்கொண்டும் அமர்ந்துள்ளனர். நாங்கள் சென்ற அன்று (ஜூலை 13) அப்படி அவர்கள் அமர்வது மூன்றாம் நாள். தினந்தோறும் அந்த ஊரில் ஒரு வார்டைச் சேர்ந்தவர்கள் உணவு சமைத்து மதியம் போராடுபவர்களுக்கு வழங்குகின்றனர். பெரிய அளவில் பெண்கள் பங்குபெறுவது குறிப்பிடத் தக்கது.

        போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்த கலையரசி (க/பெ) முருகன், ராஜு, கவிஞர் கதிரை முருகானந்தம், அப்போது அங்கு வந்திருந்த திமுக ஒன்றியச் செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் சமீபத்தில் நிகழ்ந்தவை குறித்துக் கூறியவை:

       “கதிராமங்கலம் மிக்க வளம் கொழித்த பூமி, நெல் தவிர நாட்டு வாழை, பச்சை வாழை, மஞ்சள் முதலியன பெரிய அளவில் சாகுபடியான நிலம் அது. எல்லாம் 2010 க்கு முன். அதன் பின் எல்லாம் பழங்கதை ஆயின. பாதி நிலம் இப்போது தரிசாகிவிட்டது. நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் ‘போர்’ மூலம் விவசாயத்திற்காக நீர் எடுக்க 80 அடி துளையிட்டால் போதும். இப்போது 200 அடி துளைத்தாலும் நீர் வருவதில்லை. குடி நீரும் பெரிய அளவில் மாசுபட்டு உள்ளது. குடி நீரில் எண்ணை மிதப்பதைக் காணலாம். தூய நீர் போலத் தோற்றமளிப்பது சிறிது நேரத்தில் மஞ்சளாகி விடுகிறது. ஒரு சிறுவனுக்கு குடி நீராலேயே இருதய நோய் வந்துள்ளது இன்னொரு சிறுவனுக்குச் சதைச் சிதைவு நோய் வந்துள்ளது. எல்லாவற்றிற்கும் காரணம் ONGC ஆழ் துளைக் கிணறுகள் தோண்டி எண்ணை உறிஞ்சுவதோடு அதை வயல்களுக்குக் கீழ் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் 2 கிமீ தொலைவு கொண்டு சென்று பின் விக்ரமன் ஆறு ஊடாக குத்தாலம் கொண்டு சென்று தேக்குவதுதான். இது குறித்த விழிப்புணர்வை பேராசிரியர் ஜெயராமன் அய்யா போன்றவர்கள் எங்களுக்கு ஏற்படுத்தினர்.

      “இது குறித்து நாங்கள் பலமுறை அரசு அதிகாரிகளையும் ONGC நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசியும் எந்தப் பயனுமில்லாத நிலையில் சென்ற மே 19 அன்று ONGC நிறுவனம் ஊருக்குள் கொண்டு வந்து ஏராளமான கருவிகளை இறக்கியது. இது ONGC தன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கான முயற்சி என்பதை உணர்ந்த நாங்கள் கூடிச் சென்று தடுத்தபோது அங்கு போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன. சாலை மறியல் செய்தபோது மாலை 5 மணிக்குள் எல்லாவற்றையும் அகற்றி விடுவதாக உத்தரவாதம் அளித்தனர். ஆனால் கண்துடைப்பாகச் சில லாரிகள் அளவு கருவிகள் மட்ட்டுமே திருப்பி எடுத்துச் செல்லப்பட்டன.

       “தொடர்ந்து ‘சமாதானக் கூட்டம்’ என்கிற பெயரில் மக்கள் பிரதிநிதிகள் அடிக்கடி அழைக்கப்பட்டனர். எங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்துக் கேட்பது என்பதற்குப் பதிலாக அவர்களின் கருத்துக்களை எங்கள் மீது திணிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஊர் மக்களைக் கலந்தாலோசித்து வந்து பேசுவதற்கும் உரிய அவகாசம் எங்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படவில்லை.

      “இதற்கிடையில் ஜூன் 2 அன்று ஊரில் திருவிழா. காளியாட்டம் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் பெரிய அளவில் போலீஸ் படை கொண்டு வந்து குவிக்கப்பட்டது. திருவிழா நடந்து கொண்டுள்ளதையும் பொருட்படுத்தாமல் கைது செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. திரண்டிருந்த மக்களும் சுமார் 400 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டோம். இரவில்தான் 10 பேர் தவிர இதரர் விடுதலை செய்யப்பட்டோம். சமாதானக் கூட்டத்தில் மக்கள் கருத்துக்களை உறுதியாகப் பேசியதாக அடையாளம் காணப்பட்ட அந்த 10 பேர்களும் கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊர் முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டு எங்கும் அச்சம் நிலவியது. நாங்கள் ஊரைப் புறக்கணித்துச் செல்வது என முடிவு செய்து அகன்று ஓட்டைக்கால் திடலுக்குச் சென்று தங்கினோம். கம்பர் வாழ்ந்த பகுதி என இதைச் சொல்வார்கள். சப் கலெக்டர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். உலகத் தரமான குழாய்கள் வழியேதான் இந்த எண்ணை, எரிவாயு எல்லாம் கொண்டு செல்லப்படுகிறது. அது உடையாது, தெறிக்காது, எந்தப் பயனும் இல்லை என்றெல்லாம் அந்த சப் கலெக்டர் உறுதி அளித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இறக்கப்பட்ட கருவிகள் முழுமையாக திருப்பி எடுத்துச் செல்லப்படும் எனவும், நல்ல குடிதண்ணீர் வழங்கப்படும் எனவும் உறுதி வழங்கப்பட்டது.
“இதை ஒட்டி கண்டனக் கூட்டம் ஒன்று குடந்தையில் நடத்தப்பட்டது. இரு முறை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மாசுபட்ட தண்ணீரை எல்லாம் காட்டி நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டினோம்..


     “இந்நிலையில்தான் ஜூன் 30 காலை வயல் பக்கம் சென்ற பெண்கள் கடும் துர்நாற்றத்துடன் வயலொன்றின் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு கடும் எரி சக்தியுடன் கூடிய வாயுவும் திரவமும் வெளிவந்து கொண்டிருந்ததைப் பார்த்து வந்து ஊருக்குள் கூறினர். அங்கு திரண்ட மக்கள் கூட்டம் சம்பவ இடத்தில் திரண்டது. யாரும் எளிதில் நுழைய இயலாமல் அங்கு கிடந்த முள், புதர் எல்லாவற்றையும் போட்டுத் தடுப்பு அமைத்து  மக்கள் அங்கு கூடி நின்றனர். செய்தி அறிந்து அங்கு பெரிய அளவில் போலீஸ் படை கொண்டு வந்து குவிக்கப்பட்டது. “உலகத்தரமான குழாய்” என உத்தரவாதம் அளித்த அதே சப்கலெக்டர் மறுபடியும் மக்களுடன் பேச்சு வார்த்தைக்கு அனுப்பப்பட்டார். அவருடன் பேச முடியாது என மறுத்தோம். மாவட்ட ஆட்சியர் வந்து பேசி அதன் பின் கசிவை அடைக்கட்டும் என்றோம். மாவட்ட ஆட்சியர் கடைசி வரை வரவில்லை. அனால் கடுமையாக அடித்து எங்களை விரட்ட அவர் ஆணையிட்டார். இடையில் தடுப்புக்காக நாங்கள் வெட்டிப்போட்ட அந்த முட்புதர் நெருப்புப் பிடித்தது. இதச் சாக்காக வைத்துக்கொண்டு கடுமையாக எங்கள் மீது தடியடிப் பிரயோகம் நடத்தி நாங்கள் அங்கிருந்து விரட்டப்பட்டோம். போலீஸ்காரர்கள் கடுமையாக அடித்ததோடு பெண்களை ஆபாசமாகத் திட்டவும் செய்தார்கள். ஜெயராமன் ஐயா உட்பட 10 பேர் கைது செய்து கொண்டு செல்லப்பட்டனர். வைக்கோல் போர் ஒன்றை நாங்கள் கொளுத்தியதாக முதலமைச்சர் சொல்வதெல்லாம் முழுப் பொய்.

    “அந்த 10 பேர்களும் உடனடியாக விடுதலை செய்யப்படணும். அவங்க மேல ;போட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும். ONGC யை இங்கிருந்து விரட்டி அடித்து காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஆக்கப்பட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது.”

வழக்குகள்

பந்தநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 1.Cr No. 126/2017 u/s 147, 506(11), 307, 3(1), 148, 294 b, 324,336, IPC 353,436 dt 01-07-2017
2.Cr No 127/2017 u/s 147,341,294 b, 353, 506(1), 505 (1) (b),r/w 3/1 PPd act dt 30-06-2017

இரண்டிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் : பேரா. ஜெயராமன், விடுதலைச்சுடர், தருமராஜன், செந்தில்குமார், முருகன், ரமேஷ், சிலம்பரசன், வெங்கட்ராமன், சந்தோஷ், சாமிநாதன்.

ONGC யினால் ஏற்படும்சுற்றுச் சூழல் கேடால் பாதிக்கப்பட்டோர் 

1.ஜெயலட்சுமி (க.பெ) பழனிவேல். வயது 60. கதிராமங்லத்திற்குள் உள்ள நறுவெளியைச் சேர்ந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் இரவு 10 மணி வாக்கில் கொல்லைப் பக்கம் சென்றுள்ளார். இங்குள்ள வீடுகளில் பெரும்பாலும் கழிப்பறைகள் கிடையாது. வெளியில்தான் செல்ல வேண்டும். அப்படிச் சென்று அவர் உட்கார்ந்த போது ONGC குழாய்கள் இரண்டின் இணைப்பு ஒன்று வெடித்து தீப்பற்றியது. முகத்தில் கடும் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெயலட்சுமி கும்பகோணத்தில் உள்ள அன்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். சுமார் 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்து உயிர் பிழைத்த அவருக்கு ரூ.75,000 இழப்பீடு அளிக்கப்பட்டது.

2.முத்துசரண் (த.பெ) நாராயணன். வயது 8. மூன்றாம் வகுப்பு படிக்கும் இச்சிறுவன் கூலி வேலை செய்யும் ஒருவரின் மகன். சென்ற ஜனவரியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு பல நாட்களுக்குப்பின் உடனடி உயிர் ஆபத்திலிருந்து தப்பியுள்ளான். இரத்தத்தில் கிருமி கலந்து இதயம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இப்படி ஆனதற்குக் குடிநீரே காரணம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இப்பகுதியில் உள்ள நீர் விஷமானதன் விளைவுதான் இந்தப் பாதிப்பு என அக்குடும்பத்தினர் உறுதியாகக் கூறுகின்றனர்.

      எமது குழுவைச் சேர்ந்த சிவகுருநாதன் இவ்வாறு ONGC குழாய்க் கசிவின் விளைவாக அருகில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள சில மரணங்கள் மற்றும் விபத்துகளைக் கடந்த சுமார் எட்டு ஆண்டுகளாகக் கவனத்தில் எடுத்து, நேரில் சென்று விசாரித்துப் பதிவுகள் செய்து வந்துள்ளார். அவரது ஆய்வில் வெளிக் கொணர்ந்துள்ள மேலும் சில உண்மைகள் வருமாறு.
  1. ஜூலை 30, 2011 சனி இரவு திருவாரூர் விளமல் – தியானபுரம் சாலையில் குறிஞ்சி நகருக்கு அருகில் ONGC எண்ணெய் / எரிவாயுக் குழாயில் லாரி ஏறி தீப்பற்றி எரிந்ததில் லாரி டிரைவரும் கிளீனரும் தீயில் கருகி இறந்தனர்.   செந்தாமரைச்செல்வி (12) என்ற சிறுமி காயமடைந்தார்.  அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த அந்த லாரி, அருகில் நின்றிருந்த மினி லாரி, கடை, வீடு, மரங்கள் என அவ்விடத்திலுள்ள அனைத்தும் எரிந்து சாம்பலானது. எரிவாயுக் குழாய் மண்ணுக்குள் புதைக்கப்படாமல் மக்கள் நடமாடும், வாகனங்கள் செல்லக்கூடிய பகுதிகளில் தரை மீது போடப்படும் அளவிற்கு மக்கள் பாதுகாப்பு குறித்து எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் ONGC நடந்துகொண்ட நிலை இதன் மூலம் அம்பலமானது. அதன் பின்புதான் இனி குழாய்களை எல்லா இடங்களிலும் மண்னுக்குள் புதைப்பது என்கிற நிலையை எடுத்ததாக நாங்கள் சந்தித்த அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர்.
4.. நவம்பர் 18, 2009 அன்று திருவாரூர் கமலாபுரம் அருகே தேவர்கண்ட நல்லூர் – உச்சிமேடு கிராமத்தின் ஆற்றங்கரைத் தோப்பில் காலைக்கடன் கழிக்கச் சென்ற கலியபெருமாள் (35) என்பவர் சிகரெட் பற்ற வைக்க, தீக்குச்சியை உரசியபோது ONGC எரிவாயுக் குழாயில் ஏற்பட்டிருந்த கசிவால் மூங்கில் காடுகள் நிறைந்த அவ்விடமே பற்றியெரிந்தது.  கலியபெருமாள் தவிர அங்கு ஏற்கனவே ஒதுங்கியிருந்த குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆனந்தராஜ் (14), சேதுபதி (14) உள்ளிட்ட மூவர் பலத்த காயமடைந்து பின்னர் இவர்களில் ஆனந்தராஜ் இறந்தார்.. கலியபெருமாளும் சேதுபதியும் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினர். சேதுபதி அவரது  தந்தை சேகர் ஆகியோரை சிவகுருநாதன்  சந்தித்து உரையாடினார்.. சேதுபதி 9 ம் வகுப்பு படிக்கும்போது இந்த விபத்து நடந்துள்ளது. அவரை சென்னை குளோபல் மருத்துவமனையில் ONGC. நிர்வாகம் அனுமதித்து உயிரைக் காப்பாற்றியது. கோரமான முகத்தைச் சரி செய்ய பிளாஸ்டிக் சர்ஜரி இன்னும் செய்யவில்லை. +2 க்குப் பிறகு தனியார் ஐ.டி.ஐ.யில் ஃபிட்டர்  படிப்பு முடித்த அவருக்கு ஓராண்டிற்கு முன்னர் வெள்ளக்குடி ONGC யில் மெக்கானிக் வேலை தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. அப்போதைய மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட  தன்  மகனுக்கும் கலியபெருமாளுக்கும் இறந்த சக மாணவன் ஆனந்தராஜ் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்துதர ONGC.யை வலியுறுத்தவில்லை என்பதையும் சேதுபதியின் தந்தை பகிர்ந்துகொண்டார்.

    ONGC க்கு எதிரான போராட்டங்களில் பங்குபெற்ற சமூக ஆர்வலரும் திருவாரூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினருமான ஜி.வரதராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இங்கு 10 ஆண்டுகளுக்கு மேலான பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. என்ணெய்க் கசிவால் விவாசாய நிலங்கள் பாழ்படுவது ஒருபுறம், விபத்துகளால் உயிரிழப்புகள் மறுபுறம். மாவட்ட  நிர்வாகமும் ONGC யும் இரு வழிகளில் இதனைக் கையாள்கின்றன. ஒன்று போராட்டக்காரர்களை பணம் போன்ற காரணிகளைக் கொண்டு கட்டுக்குள் கொண்டுவருவது, மற்றொன்று, இவர்களைப் பிளவுபடுத்துவது. இங்குள்ள சமூக விரோத சக்திகள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன” என்றார்.

“ மரணம், விபத்து, எரிவாயுக் குழாய் வெடிப்பு, கசிவு, விளைநிலம் பாழ், மூங்கில் மற்றும் மரத்தோட்டங்கள் தீயால் கருகுதல், தொடர்ந்து எரிய விடப்படும் எரிவாயுவால் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு, மழைக்குறைவு என ஏதோ ஒரு பாதிப்பு இங்குள்ள பல கிராமங்களில் உண்டு.” என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் என்கிறார் சிவகுருநாதன்.

ONGC சார்பில் சொல்லப்பட்டவை

     குத்தாலத்தில் உள்ள ONGC சேகரிப்பு நிலையத்திற்கு நாங்கள் சென்றபோது அங்கு ஏதோ ஒரு ‘மீட்டிங்’ நடக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றுபவராக அறியப்படுகிற 'நெல்' ஜெயராமன் மற்றும் கதிராமங்கலம் கிராமத்தில் 62 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்யும் ஸ்ரீராம் அய்யர்  ஆகியோர் அந்த ‘மீட்டிங்கிற்காக’ வந்து சேர்ந்தனர். எங்களை முதலில் சந்திக்க மறுத்த நிர்வாகம் இறுதியில் அவர்களின் ‘மீட்டிங்கிற்கு’ முன் சில நிமிடங்கள் பேசச் சம்மதித்தனர்.

ONGC யின் இப்பகுதித் தலைமையகமான காரைக்காலில் பணியாற்றும் கார்பொரேட் தொடர்பாளர் ஏ.பி.ராஜசேகர் எங்களிடம் சொன்னவற்றின் சுருக்கம்:

      “ONGC என்பது ஒரு மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனம் (public sector unit). இதை ஒழித்துக் கட்டுவதில் பல்வேறு சக்திகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி இப்பகுதியில் செயல்பட்டு வந்த ONGC மீது இபோது அபாண்டமாக இப்படித் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் உண்மையான பிரச்சினை 2010 முதல் காவிரி நீர் வரத்து பெருமளவில் இல்லாமற் போனதுதான். மழையும் இல்லை. எனவே நீர்மட்டம் இங்கு குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் கீழ்இறங்குவது மட்டுமின்றி அதன் உப்புத் தனமையும் அதிகரித்து வருகிறது. ஆந்திரப் பகுதிகளில் கோதாவரி பேசினிலும் நாங்கள் பலகாலமாக இதே முறையில் எரிவாயு மற்றும் திரவ எரிபொருள் எடுத்து வருகிறோம். இங்குள்ளதை விடச் சுமார் 14 மடங்கு அதிகம் எரிபொருள் அங்கு உறிஞ்சி எடுக்கப்படுகிறது. ஆனால் அங்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை புகார்கள் எழும்பவில்லை.

      இப்பகுதியிலும் கூட எந்தப் புகாரும் இதுவரை எழுந்ததில்லை. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் செயல்பட்டு வரும் 'நெல்' ஜெயராமன் மற்றும் இப்பகுதியில் 62 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்து வரும் ஶ்ரீராம் அய்யர் ஆகியோர் ONGC பணிகளால் எந்த பாதிப்புகளும் இல்லை என்று கூறுகின்றனர்.”

     இப்படிச் சொன்ன அந்த அதிகாரி இது தொடர்பாக ஒரு அறிக்கை ஒன்றை அவர்கள் வெளியிடப் போவதாக எங்களிடம் அதைக் காட்டினார். அதை வாசிக்கக் கேட்டபோது கையெழுத்தான பின் தருவதாகச் சொன்னார். அன்று குத்தாலம் ONGC அலுவலகத்தில் நடைபெற உள்ள ‘மீட்டிங்’ இது தொடர்பானதுதான் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். தொடர்ந்து அந்த அதிகாரி கூறியது:

     “நாங்கள் பயன்படுத்துவது துளைக் கிணறு முறை பலகாலமாக எல்லா நாடுகளிலும் பயன்படுவதுதான் (conventional drilling). 1984 முதல் நாங்கள் செய்து வருவதுதான். மீத்தேன் எடுக்கும் திட்டத்தில்தான் பக்கவாட்டில் நிலத்தடியில் துளையிடப்படும். அது மரபுவழிப்பட்ட முறை அல்ல (non conventional drilling). இதில் ஆபத்துகள் நேர வாய்ப்புண்டு. ஆனால் தற்போது ONGC இதை முழுமையாகக் கைவிட்டு விட்டது. தவிரவும் செங்குத்தாக ஆழ் துளை இட நாங்கள் பயன்படுத்தும் திரவம் முற்றிலும் விஷமற்றது. எந்த ஆபத்தும் இல்லாதது. CSIR முதலான நிறுவனங்களால் எந்த ஆபத்தும் இல்லாதது என உறுதி வழங்கப்பட்டது.

     ‘தண்ணீர் மாசுபடுகிறது என்றால் அதற்கும் எங்கள் செயல்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவிரவும் அப்பகுதி மக்களுக்கு ‘டாய்லெட்’ முதலான வசதிகளையும் நாங்கள் செய்துதருகிறோம். அவர்கள் வெளியில் சென்று இப்படிப் பாதிப்படையத் தேவையில்லை.

       “ஏதேனும் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாகச் சரி செய்து விடலாம். இந்தப் பிரச்சினையில் கூட ஜூன் 30 அன்று கசிவு ஏற்பட்ட போது அது காலை 8.30 மணிக்கு எங்களுக்குத் தெரிய வந்தது. 8.45 க்கு நாங்கள் அங்கிருந்தோம். 9 மணிக்கெல்லாம் எல்லாம் தயார் நிலையில் இருந்தது. அன்று மக்கள் அனுமதித்து இருந்தால் அப்போதே எல்லாவற்றையும் சரி செய்திருப்போம்.”

      ஆக தங்களின் நடவடிக்கைகளால் எந்த பாதிப்பும் இல்லை என்ற அந்த அதிகாரிக்கு நாங்கள் 2011 ல் விளமலில் ஏற்பட்ட விபத்தில் இருவர் இறந்தது தெரிந்திருக்கவில்லை. அருகில் இருந்த இன்னொரு அதிகாரி அதை ஒத்துக் கொண்டார். தலைமைப் பொறியாளர் ஜோசப், “இங்குள்ள மின்சாரக் கம்பிகளில் ஏற்படும் நெருப்புப் பொறிகள் தெறிப்பதை எல்லாமும் கூட எங்களால் ஏற்பட்டது எனக் கூறுகின்றார்கள்” எனக் கூறி அப்படி ஏதோ ஒரு சம்பவத்தையும் விளக்கினார்.

எமது பார்வைகள்

1.இப்பகுதி மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்கள் வாழ்வாதாரம் அழ்ந்து வருவதற்கு ONGC இப்பகுதியில் செய்து வரும் பணிகளே காரணம் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். கதிராமங்கலத்தைச் சேர்ந்த பட்டு நெசவாளி வைத்தீஸ்வரன் – கவிதா ஆகியோரின் மகன் வருண் குமார் (17) கடந்த சில ஆண்டுகளாக சதைச் சிதைவு நோய்க்கு ஆட்பட்டுள்ளார். இது மரபணு தொடர்பான வியாதியாயினும் தங்கள் மரபில் யாருக்கும் இதுவரை இப்படியான நோய்கள் வந்ததில்லை எனச் சொல்லும் பெற்றோர், தங்கள் மகனின் இந்த நோய்க்கு ONGC செயல்பாடுகளே காரணம் என உறுதியாக நம்புகின்றனர்.
  1. இப்படியான ஒரு நிலையில் அரசு தலையிட்டு உண்மை நிலையை வெளிக் கொணரவும், உரிய பாதுகாப்புகளை மேற்கோள்ளவும், பாதுகாப்புகள் சாத்தியமே இல்லை எனும்பட்சத்தில் திட்டத்தை விரிவுபடுத்துவதை நிறுத்துவதும், தேவையானால் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளவற்றையும் நிறுத்தி வைப்பதையும் செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு இதைக் கண்டுகொள்ளவே இல்லை. மக்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளையும், அச்சங்களையும் முன்வைத்துப் போராடும்போது காவல்துறையை அனுப்பித் தடியடி நடத்துவது, கைதுகள் செய்வது என்பது மட்டுமே தனது பணி என நினைத்துச் செயல்படுவது கண்டிக்கத் தக்கது.
  2. ONGC ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனம். பொதுத்துறை நிறுவனங்களிலேயே இரண்டாவது பெரிய ஒன்று. 68 சத ‘ஈக்விடி ஸ்டேக்’ உள்ள ஒரு லாபம் ஈட்டக்கூடிய துறை. 1958 ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவில் 26 பகுதிகளில் தன் பணிகளைச் செய்து வருகிறது. 11,000 கி.மீ நீளமுள்ள வாயுக் குழாய்களை அது பயன்படுத்தி எரிபொருளைக் கொண்டு செல்கிறது. இப்படியான ஒரு நிறுவனம் மக்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ளாமையும், மக்கள் பிரச்சினைகளில் அக்கறையற்றும் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத் தக்க ஒன்று. மக்கள் எதிர்ப்பால் இப்போது மீதேன் எடுப்பது கைவிடப்பட்ட பின்னர் அப்படி எடுப்பது ஆபத்தானது என இன்று ஏற்றுக்கொள்ளும் ONGC அதற்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது இதை வெளிப்படையாகக் கூறவில்லை. பத்திரிகைச் செய்திகளை விரிவாக ஆய்வு செய்தோமானால் மிகப் பெரிய விரிவாக்கத் திட்டங்களுடன் அது செயல்படுவதும் தேவையானால் சுற்றுச் சூழல் கலந்தாய்வுகளுக்கு விலக்களிக்க அது கோருவதும் விளங்குகிறது. ஆனால் அது குறித்து பகுதி சார்ந்த மக்களிடம் அது உரையாடுவதோ கருத்துக்கள் கேட்பதோ இல்லை. விபத்துக்கள் ஏற்பட்டு மூவர் இறந்தது வரை இந்த ஆபத்தான எரி பொருள் குழாய்களை குடியிருப்புப் பகுதிகள் வழியாகத் தரை மீது கிடத்தப்பட்டிருந்ததை  என்னவென்று புரிந்துகொள்வது. இன்று ONGC செயல்பாடுகளை ஆதரித்து மக்கள் மத்தியில் பேசுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஒரு அதிகாரிக்கு அந்தச் சம்பவமே தெரிந்திருக்கவில்லை என்பது ONGC யின் அலட்சியப் போக்கை விளக்கும். இப்படியான விபத்துக்களில் மக்கள் உயிர்கள் பலியாக்கப்பட்ட பின்தான் உரிய பாதுகாப்புகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படும் என்றால் இதன் பொருள் என்ன?  மக்கள்தான் ONGC யின் சோதனை எலிகளா?
  3. சுற்றுச் சூழல் ஆய்வு, அது தொடர்பான விதிமுறை கடைபிடிப்பு ஆகியவற்றை மீறுவதில் மிகவும் புகழ் வாய்ந்த வரலாற்றை உடையது ONGC. உரிய விதிமுறைகளைப் பின்பற்றுவது பற்றி அது கவலைப்படுவதே இல்லை. விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனச் சொல்லி காவிரிப் படுகையில் செயல்படும் இதன் எரிவாயுத் தளங்களில் 23 ஐ அனுமதிப்பட்டியலிலிருந்து மத்திய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் (Union Ministry of Environment, Forests and Climate Change) சென்ற மே 17, 2017ல் நீக்கியது குறிப்பிடத் தக்கது. இந்தச் செய்தியை மேலோட்டமாக வாசிக்கும்போது சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றில் ONGC பொறுப்பில்லாமல் நடந்துகொண்டாலும், மத்திய அரசு அக்கறையுடனும் பொறுப்புடன் நடந்து கொள்கிறது என்பது போலவும் தோன்றும். நுணுக்கமாகக் கவனித்தால்தான் இரண்டுமே மாநில மக்களைப்பற்றி இம்மியும் அக்கறையற்றுச் செயல்படுவது விளங்கும்.
      இன்னொரு செய்தியைக் கவனித்தால் இந்த உண்மை விளங்கும். சுற்றுச் சூழலைப் பாதிக்கவல்ல எந்த ஒரு திட்டமானாலும் பாதிக்கப்படுவார்கள் எனக் கருதப்படும் மக்களைக் கூட்டி பொதுக் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்பது விதி. மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தக் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பரிந்துரை செய்வது அவசியம். ஒப்பீட்டளவில் மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசு மக்களுக்கு நெருக்கமாக இருப்பதால் மக்கள் எதிர்க்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அது தயங்கும். சென்ற 2015ல்  காவிரிப் படுகையில் மேலும் 35 சோதனைக் கிணறுகளைத் தோண்ட ONGC திட்டமிட்டது. இவற்றில் 14 கடலூர் மாவட்டத்திலும் 9 நாகை மாவட்டத்திலும், 6 அரியலூரிலும், 5 தஞ்சாவூரிலும் அமைந்தன. இவற்றில் கடலூர் தவிர பிற மாவட்டங்களில் கருத்துத்துக் கணிப்புகள் நடந்தன. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை வழங்கத் தயங்கியது. சில காலம் பொறுத்திருந்த ONGC சென்ற 2015 மே 19 அன்று மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியது. பொதுக் கருத்துக் கணிப்புக் கேட்பது கால விரயத்தை ஏற்படுத்துகிறது எனவும், இது தொடர்பான இறுதி முடிவு எடுப்பதில் தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துகிறது எனவும் ONGC அதனிடம் புகார் கூறியது. அதை அப்படியே ஏற்ற மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் குழு உரிய அனுமதியை அளிக்குமாறு சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்தது. அதை ஏற்ற மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் சென்ற ஜூன் 9, 2015 அன்று அந்த 35 திட்டங்களுக்கும் மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அனுமதி வழங்கியது.

      சென்ற பிப் 15 (2017) அன்று மோடி தலைமையில் கூடிய ‘பொருளாதார விடயங்களுக்கான அமைச்சரவைக் குழு’ (Cabinet Committee on Economic Affairs) 31 பகுதிகளில் இயற்கை வாயு மற்றும் எண்ணை முதலான ஹைட்ரோ கார்பன் வளங்களைத் தோண்டி எடுப்பதற்கான அனுமதியை அளித்தது. 2016 ல் உருவாக்கப்பட்ட மோடி அரசின் “கண்டுபிடிக்கப்பட்ட சிறிய வயல்கள்” (Discovered Small Fields) திட்டத்தின் கீழ் இந்த அனுமதி அளிக்கப்பட்டது.
சென்ற ஜூன் 28 (2017) ல்  அந்த செய்தியின்படி காவிரி டெல்டா பகுதியில் மேலும் 110 சோதனைக் கிணறுகளைத் தோண்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் ONGC அனுமதி கோரியுள்ளது. ஒவ்வொரு கிணறு தோண்டவும் 2 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் எனவும் ‘நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்’ மூலம் உரிய நிலங்கள் குத்தகை அடிப்படையில் கைப்பற்றப்படும் எனவும், உற்பத்தி தொடங்கியவுடன் அந்த நிலங்கள் அவரவர் வசம் திருப்பித் தரப்படும் எனவும் கூறப்படுகிறது.

     தவிரவும் இப்போது மத்திய அரசு எல்லாவிதமான ஹைட்ரோ கார்பன்களை எடுக்கவும் ஒரே உரிமத்தை (sigle license) வழங்கும் முறையைக் கொண்டு வந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் எந்த அனுமதியும் பெறாமலேயே இப்படி ஹைட்ரோ கார்பன்களை உறிஞ்சி எடுக்கத் தொடங்கியுள்ளன. மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியைப் பெறாமலேயே இத்திட்டப்பணிகள் தொடங்கிவிட்டன என மாநில அமைச்சர் கருப்பண்ணன் இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. 

     1991 லேயே காவேரிப் படுகையிலிருந்து பெரிய அளவில் ஹைட்ரோ கார்பன் வளங்களை உறிஞ்சி எடுப்பதென ONGC திட்டமிட்டது. அப்போது அதனிடம் ஒன்பது “ரிக்” களும் 12 கிணறுகளுமே இருந்தன. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 10 மடங்கு உற்பத்தியை அதிகரிப்பது என அப்போது முடிவு செய்யப்பட்டது. மக்களின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் அந்தத் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
  1. 2010 க்குப் பின் ஏற்பட்ட வறட்சியின் விளைவாகத்தான் எல்லாப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன., அதற்கு முன் மக்களுக்கும் ONGC க்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது போலச் சொல்வதையும் ஏற்க இயலாது. மீத்தேன் எதிர்ப்பிற்கு முன்பே பல இடங்களில் ONGC .யை எதிர்த்துப் போராட்டங்கள் பல நடத்துள்ளன. தொடக்கத்தில்  பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஆகியன டேங்கரில் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது  தொடங்கி அவற்றை மறித்து போராட்டங்களும் நடைபெற்றன. தற்போது விளைநிலங்கள் வழியே குழாய் பதித்து எடுத்துச் செல்லும்போதும் உடைப்பு, விபத்து ஏற்படும் காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. .அடியக்கமங்கலம் பகுதியில் விளைநிலங்களில் பெட்ரோலியக் கசிவு மற்றும் எண்ணெய்ப் படலத்தால் பெருமளவு நிலங்கள் பாதிப்படைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கும் கடந்த பத்தாண்டுகளில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. இப்போது டேங்கர்களில் ஆயில் எடுத்துச் செல்லப்படுவதில்லை எனினும் இரவு நேரங்களில் ரகசியமாக இயக்கப்படும் டேங்கர்கள் வழியே எண்ணைய்க் கழிவுகள் வெள்ளக்குடி, கமலாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்த உண்மைகளை விளக்கி மக்களின் அச்சத்தைப் போக்க இதுவரை ONGC முயற்சித்ததில்லை. ‘வாட்ஸ் அப்பில்’ பொய்ச் செய்திகள் பரப்பப்படுகின்றன என்றார் எங்களிடம் பேசிய அதிகாரி. அப்படிப் பொறுப்பில்லாமல் சில வாட்ஸ் அப் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன என்பதில் உண்மை இருக்கலாம். அது ONGC தரப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவு என்பதையும், அது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அதரற்கு உள்ளது என்பதையும் அது ஏற்கவில்லை.இவ்வளவு காலங்களையும்  விட இப்போது திடீரென போராட்டங்கள் மேலுக்கு வருகின்றன என்றால் இப்போது அதிக அளவில் போராட்டங்கள் ஊடக வெளிச்சத்திற்கு வருகின்றன. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்திற்குப் பிறகு மக்களின் போர்க்குணமும் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளன என்பதை நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
  2. வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களிடம் நேரடியாகப் பேசி அவர்களின் ஐயங்களைப் போக்குவது என்பதற்குப் பதிலாக ஒரு சிலரைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கையூட்டு அளித்துத் தமக்கு ஆதரவாக முன் நிறுத்தும் வேலையை ONGC செய்வதாக ஒரு கருத்து மிகப் பரவலாக நிலவுவதை எங்களால் அறிய முடிந்தது.
  3. ஜூன் 30 சம்பவங்களைப் பொறுத்த மட்டில் அன்று காலை முதல் மக்கள் அங்கு கூடி நின்று மாவட்ட ஆட்சியர் அங்கு நேரடியாக வர வேண்டும் எனக் கோரியுள்ளனர். ஆபத்தான நிலையில் எரிவாயு கசிந்து கொண்டுள்ள சூழலில் தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் இறுதிவரை அங்கு வந்து மக்களைச் சந்திக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சப் கலெக்டர் ஏற்கனவே கொடுத்த உறுதி மொழிகள் பொய்த்துப் போனபின் மாவட்ட ஆட்சியரின் வாக்குறுதியை மட்டுமே நம்ப முடியும் என்கிற மக்களின் கருத்திற்கு மாவட்ட நிர்வாகம் மதிப்பளித்திருக்க வேண்டும். அன்று மட்டும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக வந்திருந்தால் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்திருக்கும். தேவை இல்லாமல் தடியடி நடத்தி, பத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்து, இன்று அம்மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதை எல்லாம் தவிர்த்திருக்கும் வாய்ப்பை மாவட்ட நிர்வாகமும் ஆட்சியரும் தவற விட்டதும், அன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட தடியடியும் கண்டிக்கத் தக்க ஒன்று.
எமது பரிந்துரைகள்
  1. சிறைவைக்கப்பட்டுள்ள பத்து பேர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் எந்த நிபந்தனைகளும் இன்றி நீக்கப்பட வேண்டும்.
  2. காவிரிப் படுகையில் எரிபொருள் தோண்டிவரும் ONGC யின் செயல்பாடுகளின் ஊடாகக் கடந்த காலத்தில் நடைபெற்ற விபத்துகள் மட்டுமின்றி மக்களின் நியாயமான ஐயங்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டு உரிய விசாரணை செய்ய பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணையத்தில் உரிய ஆலோசனைகள் வழங்க துறை சார்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மனித உரிமைச் செயலாளிகள் ஆகியோர் இணைக்கப்பட வேண்டும். தற்போது ஜூன் 30 அன்று நடைபெற்ற எரிவாயு மற்றும் திரவக் கசிவு தொடர்பாக ONGC அளவில் ஆய்வு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததை ஏற்க இயலாது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல அவர்களின் முடிவு நம்பகத் தன்மை உடையதல்ல.
  3. தற்போது கதிராமங்கலம் பகுதியில் ONGC யின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. முழுமையாக இந்த ஆய்வுகள் எல்லாம் செய்யப்பட்டு மக்களின் ஐயங்கள் எல்லாம் தெளிவாக்கப்பட்டு அது ஏற்கப்படும்வரை ONGC யின் பணிகள் இப்பகுதியில் நிறுத்தப்பட வேண்டும்.
  4. ONGC இப்பகுதியில் செய்துவருகிற, செய்யத் திட்டமிட்டுள்ள பணிகள், விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவை குறித்து பல செய்திகள் பத்திரிக்கைகளில் அவ்வப்போது வெளி வருகின்றன. பெரிய அளவில் விரிவாக்கப் பணிகள் திட்டமிடப்படுவதை அறிந்து கொள்ள முடிகிறது. இவை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை ஒன்றை உடனடியாக ONGC வெளியிட வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமைக்காக அது பலமுறை மத்திய – மாநில அரசு நிறுவனங்களாலும். இது குறித்த ஆர்வலர்களாலும் அது கண்டிக்கப்பட்டுள்ளது. அது குறித்தும் அந்த வெள்ளை அறிக்கை பேச வேண்டும்.
  5. எதிர்காலச் செயல்பாடுகள் அனைத்திலும் ஊர் மக்கள் ஏற்றூக் கொள்ளக் கூடிய உள்ளூர்த் தலைவர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து ONGC வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.
  6. அமைதியான முறையில், ஆனால் அதே நேரத்தில் உறுதியாகப் போராடி வரும் கதிராமங்கலம் மக்களை இக்குழு பாராட்டுகிறது.
  7. போராடுபவர்கள் வாட்ஸ் அப் முதலான நவீன சாதனங்களைப் பயன்படுத்தும்போது அதன் உண்மைத் தன்மைக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேறெங்கோ நடந்த ஒரு விபத்தைக் கதிராமங்கலத்தில் நடந்ததாக ஒரு பொய்யான செய்தி பரப்பப்பட்டதை எங்களிடம் பேசிய அதிகாரி சுட்டிக் காட்டினார். இது போன்ற செய்திப் பரப்பல்களில் நம்பகத் தன்மை மிக மிக முக்கியம் என்பதையும் நாங்கள் நினைவூட்டுகிறோம்.
தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை -20, செல்: 9444120582

(இந்த அறிக்கை   http://www.amarx.in   என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அ.மார்க்ஸ் அவர்களுக்கு நன்றி.)