திங்கள், ஜூலை 03, 2017

அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்க வதை முகாம்

அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்க வதை முகாம்



மு.சிவகுருநாதன்


      ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் எவ்வாறு திட்டமிடப்படுகின்றன என்பது பல்லாண்டுகளாக புரியாத புதிர். போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து பகல் முழுக்க திருமண மண்டபங்களில் அடைத்து வைப்பது (தடுப்புக் காவல்) போன்ற நோக்கத்தைத் தவிர வேறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.



     கல்வித்துறையை புரட்டிப் போடுவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் எந்த புதிய உத்திகளையும் கைக்கொள்ளவில்லை. ஒருநாள் பகல் பொழுதை வெறுமனே எப்படி போக்குவது என்கிற செயல்திட்டத்தைத் தவிர வேறு சிந்தனையில்லை.



     அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்கத்தின் சார்பில் உயர் தொடக்க வகுப்புகளுக்கு (6 முதல் 8 முடிய) 01.07.2017 சனியன்று குறு வள மையப் பயிற்சி நட்டைபெற்றது. தலைப்பு: குழந்தைகளின் கற்றல் அடைவு பற்றிய கலந்துரையாடல். பள்ளியின் தர நிர்ணயம், மாணவர்களது முன்னேற்றம் சார்ந்த நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ளுதல், விவாதித்தல், என்பது இப்பயிற்சியின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? சுருக்கமான சில குறிப்புகள் மட்டும்.



  • உரையாடலுக்கான இடம், சாத்தியம் அறவே இல்லை.
  • இங்கு உரையாடல் என்பது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பேசுவதே.
  • ஆசிரியகளுக்கு ‘ரோல் மாடல்’ பட்டிமன்ற பேச்சாளிகள்/ வாய் வியாபாரிகள். இதன் தரம் சொல்லித்தெரிய வேண்டுவதில்லை.
  • இதில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என்ற பாகுபாடுகள் சாதியைப் போல.
  • இன்னொரு சாதியும் இருக்கிறது. அதுதான் பாட ஆசிரியர்கள்.
  • BRTE, ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் படும் துன்பங்களைப் பட்டியலிடுவது.
  • இவற்றைச் சொல்லும் இடம் இதுவல்ல. மேலதிகாரிகள் வரும்போது அமைதி காப்பது ஏன்?
  • உட்கார இருக்கைகள், காற்றோட்டமில்லாத வகுப்பறையில் 40 பேரை அடைத்து வைத்தால், அது பயிற்சிக் கூடமாக இருக்குமா? இல்லை வதை முகாம். ஹிட்லரின் வதை முகாமிற்கு இதற்கும் ஒரு வேறுபாடு மட்டுமே உண்டு. இங்கு நச்சு வாயு செலுத்தப்படாது; உயிருக்கு உத்திரவாதம்.
  • 50 பேர் படிக்கும் ஒரு நடுநிலைப்பள்ளிகளில் 80 ஆசிரியர்களுக்கு என்ன வசதிகள் இருக்கும்?
  • ‘தூய்மை இந்தியா’வின் படி திறந்த வெளிக் கழிப்பறைதான்.
  • சிறிய வகுப்பறை, சிறிய வாசல், படிக்கட்டுகள் இல்லை. சாய்வுப்பாதை உண்டு. (உபயம்: தேர்தல் ஆணையம்)
  • தேநீர் இடைவேளை, மதிய உணவு இடைநிலையில் 80 பேர்கள் நிற்க இடம் கூட இல்லை.
  • ஒன்றியப்பள்ளிக் கட்டடங்களை ஊராட்சி ஒன்றியமும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிக் கட்டடங்களை மாநில பொதுப்பணித்துறையும் கட்டி பராமரிக்கிறது. இவை ஏன் இவ்வளவு மோசமான தரத்தில் இருக்கிறது?
  • ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, பொதுப்பணித்துறை அலுவலங்கள், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் கட்டடங்கள் தரமாக இருக்க பள்ளிக் கட்டடங்கள் மட்டும் ஏனிப்படி? இங்கெல்லாம் ‘தமிழ் வாழ்க’ என பல்லாயிரம் யூனிட் செலவு செய்யப்படுகிறது மின்பற்றாக்குறை இருக்கும் நிலையில். (தமிழில் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கும் இவர்கள் ‘தமிழ் வாழ்க’ என்று ஒளிரவிடும் அபத்தம் தனிக்கதை.)
  • இது நவீன தீண்டாமை. மேம்பாலங்களை ஒரு முறை தரப்பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அரசுப்பள்ளிக் கட்டடங்களுக்கு இதை செய்தால் என்ன?
  • 40% மானியத்தில் (கையூட்டு என்றால் கோபப்படுவார்கள்.) கட்டப்படும் இவற்றின் தரம் சொல்லியா தெரியவேண்டும்.
  • கட்டடங்களின் தரமே கேள்விக்குள்ளாகும் போது கழிப்பறையின் தரம் சொல்ல வேண்டாம்.
  • நீர் வசதி இல்லாத கழிப்பறையைக் கட்டுவது ஏன்? இதை நீட்டிக்கொண்டே செல்லலாம். செப்டிக் டேங்க் இல்லாத கழிவறைகளும் இங்கு கட்டப்படுகின்றன.
  • ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் தரம் இதுதான். இக்குழந்தைகள் வீட்டிலும் பள்ளியிலும் இக்குறைகளைப் பொறுத்துக்கொண்டு வாழ்கிறார்கள்.
  • எனது வீட்டில் ரூ. 50,000 செலவில் போட்ட நீர் மூழ்கி மோட்டார் பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இயங்குவதும், பள்ளிகளில் ரூ. 2 லட்சத்திற்குப் போடப்பட்ட மோட்டார் சில மாதங்களில் இயங்காமற்போவதும் ஏன்? எல்லாம் 40% மானியந்தானே!

        இறுதியாக, அடிப்படை வசதிகளை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு செய்யாத பள்ளிகளும் அங்கு நோக்கமின்றி நடக்கும் பயிற்சிகளும் பாழ் என்பதை முதலில் உணரவேண்டும். வெற்றுப் பேச்சுகள் பலன் தராது; செயல்பாடுகளே இன்றைய கட்டாயத் தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக