சனி, ஜூலை 29, 2017

மீளும் நினைவுத்தடங்கள் (முதல் பகுதி)

மீளும் நினைவுத்தடங்கள் (முதல் பகுதி)

(ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி வெள்ளி விழா நினைவுகள்: 1992 – 2017)

 
மு.சிவகுருநாதன்

         ஜூலை 13, 2017 (13.07.2017) கதிராமங்கலம் செல்லும் வழியில் ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தைக் கடக்க நேரிட்டது. ஒரு நல்வாய்ப்பாக பேருந்திலிருந்து இறங்கி நடந்த முன்னாள் முதல்வரும் எங்களுக்கு முதுநிலை விரிவுரையாளராகவும் (தமிழ்) இருந்த மணல்மேடு முனைவர் கே.கலியமூர்த்தி அவர்களை சாலையில் சந்தித்தேன். 2001 இல் பணி ஓய்வு பெற்று ஓய்வூதியப் பலன்களுக்காக இன்னும் அலைந்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

1992 இல் நிறுவனத்திலிருந்து வெளியே வரும் தஞ்சை ஆ.மகேஸ்வரன்


       இனிமையாக பேச, பழகக்கூடிய அவர்கள் மெல்லிய குரலில் சிறப்பாக பாடமெடுக்கக் கூடியவர். அவர் முதல்வராக பொறுப்பில் இருந்த சமயம், 1996 திருவாரூர் மாவட்டம் தொடங்கியிருந்த நேரத்தில் புதிய மாவட்டத்திற்கான பயிற்சி நிறுவனம் அமைக்க இடம் தேடி அலைந்துகொண்டிருந்தார். திருவாரூர் சாலைகளில் அவரைப் பார்த்த நான், என்னுடைய பழைய சைக்கிள் ஒன்றில் ஏற்றிக்கொண்டு சென்றேன். அப்போது காலில் அவருக்கு சிறு காயம் கூட ஏற்பட்டது. பின்னாளில் மன்னார்குடியில் நிறுவனம் அமைக்கப்பட்டது.

   அவர் எந்த ஒரு சிறு நிகழ்வையும் சுவைபட நீட்டி விவரிக்கும் குணமுடையவர். ஒருமுறை பயணத்தின்போது ‘மருதம்’ பெயரைப் பார்த்தவுடன் தமிழிலக்கிய இதழ் என நினைத்து கடையில் வாங்கி பேருந்தில் வாசிக்கப் புரட்டியபோது அதிர்ந்து, நடத்துநரிடமே அளித்துவிட்டு வந்த கதையைக் கூறினார். ஜெயமணி என்பவரால் நடத்தப்பட்ட பாலியல் அனுபவக்கதைகள் நிரம்பிய இதழ் அது. அக்காலத்தில் திரைச்சித்ரா, பருவகாலம், நீயூஸ் லைப் என நிறைய இதழ்கள் இன்றைய நடுத்தர இதழ்களைப் போல வந்து கொண்டிருந்தன.

2017 ஜூலை 13 இல் எடுத்த படம்.


    இங்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். எங்களுக்கு 11, 12 வகுப்புகளிலேயே ‘சரோஜாதேவி’ போன்ற படம் போட்ட புத்தகங்கள் அறிமுகமாகியிருந்தன. இதுவே சற்று தாமதந்தான். பள்ளங்கோயில் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தனது குறும்புகளால் விடுதி வகுப்பிற்கு மாற்றப்பட்ட நண்பன் ஜெரால்டு வண்டி வண்டியாய் செக்ஸ் பேசுவான். அப்போது நாங்கள் கூச்சத்தால் நெளிவோம். இவ்வளவிற்கு மிக நன்றாக படிக்கும் அவர் 450 க்கு (1988) மேல் மதிப்பெண் பெற்று பொறியியல் உயர்படிப்புகள் முடித்து பேராசிரியராக உள்ளார்.

    பயிற்சி நிறுவனத்திற்குத் தேர்வான 1000 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற நல்ல (!?) மாணவர்கள் ஜெரால்டைப்போல இல்லை. அவர்களிடம் குழந்தை உருவாவது, பிறப்பது உள்ளிட்ட பல பாலியல் கல்வி போதாமைகள் இருந்தன. அவற்றை என்னிடமிருந்த ‘மஞ்சள்’ பத்தரிக்கைகள் தீர்த்தன என்றே சொல்லவேண்டும்.

     ஒருமுறை நான் விடுப்பெடுத்த சமயம் கல்வி உளவியல் பாடமெடுக்கும் சி.கருப்பையன் வகுப்பில் ‘ஏ’ ஜோக் சொல்லுமாறு கேட்க, மாணவர்கள் அனைவரும் தலைகவிழ்ந்துகொள்ள, சட்டென சுமதி என்னும் மாணவி ஒரு ஜோக் சொல்லிவிட மாணவர்களுக்கு பெருத்த அவமானம். மறுநாள் இதைப் பகிர்ந்துகொண்டவர்களிடம் ‘சிலபஸ்’ இவ்வளவு படித்தும் பயனில்லையே என்று கடிந்துகொண்டேன். (‘சிலபஸ்’ என்பது என்னிடமிருந்த பாலியல் இதழ்கள்.)

    முனைவர் கலியமூர்த்திக்கு மூன்று பெண் மக்கள். முதல் மருமகன் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும்போது இறந்து போன சோகச் செய்தியைக் கூறினார். மேலதிக விவரங்களைப் பேச கால அவகாசமில்லை. நண்பர்கள் கதிராமங்கலம் செல்லக் காத்திருக்க அவரிடம் அலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றேன். புகைப்படமெடுக்க கூட மறந்து போனேன்.

     எங்களுடைய அணி 1990 – 1992 –ல் பயிற்சி முடித்தது. அன்றைய நிலவரப்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு இடங்கள் உண்டு. மொத்தம் 52 பேரில் 47 பேர் பயிற்சியை நிறைவு செய்தோம். அனைவரும் தேர்ச்சி பெற்றதோடு 45 பேர் உயர் சிறப்பிடம் பெற்றோம். இரண்டு பேர் முதலிடம் மட்டுமே பெற்றதற்கு அவர்களது கையெழுத்து மட்டுமே காரணம். தேர்வு என்று வந்துவிட்டால் குளிக்காமல் கொள்ளாமல் தேர்வு தொடங்கும் வரையில் புத்தகமும் கையுமாக அலையும் அகோரமூர்த்தி போன்றவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். தேர்வு இடைவெளிகளில் ஊர் சுற்றுவது, திரைப்படம் பார்ப்பது போன்றவை நமது பொழுதுபோக்கு. ஏற்கனவே பள்ளிகளில் படித்துவிட்ட பாடங்களை மீண்டும் படிப்பதில் விருப்பம் இருப்பதில்லை. செங்கிப்பட்டியைச் சேர்ந்த தோழி க.சாந்தி முதலிடம் பெற்றார்.

     மேலும் எங்களது சாதனைகள் பல. அப்போதைய கல்வி அமைச்சர் பேரா. க.அன்பழகனால் திறந்து வைக்கப்பட்டு இயங்காமலிருந்த விடுதிகளை நாங்களாகவே பங்களிப்பு முறையில் இயக்கினோம். பெண்கள் விடுதியில் ஒரே இடத்தில் மட்டும் சமைத்துச் சாப்பிட்டு வெற்றிகரமாக அடுத்த அணியினருடன் ஒப்படைத்து விடை பெற்றோம். இறுதிக்காலத்தில் ஒருநாள் மொட்டைமாடிக் கூத்துக்களால் அதிர அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததும் நடந்தது.

    அப்போதைய முதல்வர் மற்றும் விரிவுரையாளர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தனர். முதல்வர் (பொ) வெங்கட்ராமன் எங்களுடனே தங்கியிருந்தார். அணைக்கரை, கங்கை கொண்ட சோழபுரம் களப்பயணம் சென்றதும் சீரூடை வேண்டாம் என்று விரிவுரையாளர் சி.கருப்பையன் எங்களுக்கு ஆதரவாக இருந்ததும் மற்றொரு தரப்பு எங்களை காய்ந்ததும் நடந்தது.
      
     பொறுப்பு முதல்வர் கே.ரெங்கராஜன், இவர் பின்னாளில் திருத்துறைப்பூண்டி ஆண்கள், குடந்தை பேரறிஞர் அண்ணா ஆகிய அரசு மேனிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். மிகக்கடுமையாக நடந்துகொண்ட இவர் பயிற்சி முடித்த பிறகு அன்பாக ஆலோசனைகள் சொன்னதும் உண்டு. 30 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள், இரண்டு வகுப்புகள் மட்டுமே. எப்போதாவது ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி. இருப்பினும் எங்கள் வகுப்புகளுக்கு விரிவுரையாளர்கள் வருவது அரிது. எனவே வகுப்பறை அமைதி கெடும். தோழர்கள் சிவராமன், சிவகாமசுந்தரி ஆகியோரின் பாடல்கள் எங்களை கொஞ்சம் அமைதிப்படுத்தின. ஒருமுறை ஒட்டுமொத்தத் தண்டனையாக அனைவரையும் வெளியே நிற்கவைத்தார். திரும்ப உள்ளே அனுப்பும் போது கூச்சலிட்ட வகையில் நானும் தியாகசுந்தரமும் வீட்டுக்கு அனுப்பப்பட்டோம்.

      இவரது ஆலோசனைகளுள் ஒன்று 1994 ஆசிரியர் தேர்வு வாரிய நேர்காணலை திறம்பட கையாள்வது குறித்தது. 1990 இல் அவர் நடத்திய நேர்காணல் நினைவுக்கு வந்தது. சான்றிதழ் சரிபார்ப்பை அவ்வாறு நடத்தினார்கள். நேர்காணலுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. மூவரில் ஒருவர் கே.ரெங்கராஜன். IPKF க்கு விரிவாக்கம் என்ன எனக் கேட்டார். Indian Peace Keeping Force என்றேன். மீண்டும் கேட்டார் அதையேச் சொன்னேன். வெளியே வந்த பிறகுதான் தெரிந்தது இடைச்சொல்லை (of) விட்டுவிட்டோம் என்று. இதற்கு வேறு யாரும் சரியாக பதில் சொல்லியிருக்க வாய்ப்பில்லைதான். நண்பர்களிடம் சொன்னபோது யாரும் பதில் சொல்லவில்லை.

இந்தப் பதிலைச் சொல்லக் காரணம் முதன்முதலில் எழுத்துக்கூட்டிப் படிக்கத்தொடங்கிய ‘சுதேசமித்திரன்’ நாளிதழே. அவ்விதழ் நின்றவுடன் அப்பா ‘தினமணி’க்கு மாறினார். அப்போது ஏ.என்.சிவராமன் ஆசிரியர். பல மாறுபாடுகள் இருந்தபோதிலும் ‘தி இந்து’ வரும்வரை நமக்குப் படிக்க வேறு போக்கிடமில்லை. பள்ளங்கோயில் செயின்ட் ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளி விடுதியில் தங்கிப்படித்தபோது ‘தினமணி’ வாசிக்க சிரமப்பட்டேன். இறுதியில் அருகேயுள்ள கடியாச்சேரி சைக்கிள் கம்பெனி ஒன்றில் ‘தினமணி’ வாங்குவார்கள். மதிய உணவு இடைவேளையில் ஓடிச்சென்று படித்து வருவேன். அன்று உணவு இடைவேளை 1 மணி நேரம். இன்று 40 நிமிடங்கள்; சில இடங்களில் இன்னும் குறைவு. சாப்பிட்டு முடித்தவுடன் பாடநூலை எடுத்துக்கொள்ளவேண்டுமென கல்வித்துறை, அலுவலர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் ஒருசேர விரும்புகின்றனர்.

    அப்போது ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்து, எழுத்து, வடிவமைப்பில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்ட காலம். எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மேலும் 10 ஆம் வகுப்பு வரலாறு – புவியியல் பாடத்தில் சிந்துவெளி நாகரீகம் குறித்த பாடத்தில் எழுத்துமுறை பற்றிச் சொல்லும்போது ஐராவதம் மகாதேவன் பெயர் இருக்கும். (இப்போதைய பாடங்களில் சிந்துவெளி எழுத்துமுறை குறித்து அவ்வளவு விரிவாகப் பேசுவதில்லை. இந்தப் பாடத்திட்ட அரசியல் வேறுகதை!) அவர்தான் ‘தினமணி’ ஆசிரியர் என்பது எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம். நண்பர்களிடம் சொன்னாலும் இருக்காது என்று பிடிவாதம் பிடிப்பார்கள்.

     அப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருக்கும் ஷேக் மைதீன் அன்றாட வரலாற்று நிகழ்வுகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். மேலும் காங்கிரஸ் பற்றாளர், இன்னும் சொல்லப்போனால் ராஜூவ் காந்தி ரசிகர். அவர்தான் பத்தாம் வகுப்பிற்கு வரலாறு – புவியியல் ஆசிரியர். இந்திய அமைதிப்படை இலங்கை சென்றிருந்த சமயம், அதை ஆதரித்து அவர் பேசும்போது, விடுதலைப்புலிகள் ஆதரவானாக கடும் எதிர்ப்பை அவரிடம் பதிவு செய்தது உண்டு. மாணவர்களிடம் பொதுப்பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் அவரது பண்பு என்னை ஈர்த்தது.

     மயிலம் பகுதியிலிருந்து சிலகாலம் பணிபுரிந்த முதுநிலை விரிவுரையாளர் ஒருவருடன் (பெயர் நினைவில்லை) நான் படிக்கும் நூல்களைப் பகிர்ந்து கொண்டதும் இனிமையான அனுபவம். நான் படிக்கும் காலத்தில் நூல்களைப் பரிந்துரைக்கும் ஆசிரியர்களைக் கண்டதில்லை. திருக்குறள், பகவத்கீதை ஆகியவற்றைத் தாண்டி வாசிக்கச் சொன்னவர்களில்லை. நாளிதழ்கள் வாசிக்க வலியுறுத்தியதில்லை. பொத்தாம் பொதுவாக நாளிதழ் வாசிக்கச் சொல்வதிலும் பொருளில்லை என்றே சொல்லவேண்டும். இங்கு குப்பைகள் ஏராளம். நான் அவர்களுக்கு வாசிக்கப் புத்தங்கங்கள் வழங்கியுள்ளேன். இதுவே நமது கல்விமுறையின் அவலம்.

     அவர் சைவப் பற்றாளர். எனவே விடுமுறை நாள்களில் திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆகிய சைவ மடங்களுக்கும் சூரியனார் கோயில், திருவிடைமருதூர், கும்பகோணம் கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன். பிறகு அப்பாவின் ஆணைப்படி ஒருமுறை அம்மாவை இக்கோயில்களுக்கு அழைத்துச் செல்ல இது உதவியாக இருந்திருக்கிறது.

     சுமார் 15 பேரைத் தவிர அனைவரும் விடுதியில் தங்கியிருந்தோம். இப்போதைய தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து இதுவே ஒரே பயிற்சி (DIET) நிறுவனமாகும். தஞ்சையில் பெண்களுக்கு மட்டுமான பயிற்சிப்பள்ளி ஒன்று இருந்தது. தினசரி மாலை ஆடுதுறை கிளை நூலகம், விடுமுறை நாள்களில் கும்பகோணம் சிலிக்குயில், புத்தகப் பூங்கா, குடந்தைத் திரையரங்குகள் (காசி, வாசு, விஜயா, செல்வம், டைமண்ட், மீனாட்சி, லேனா போன்றவை) ஆடுதுறை சீத்தாராமாவிலாஸ், திருவிடைமருதூர் பஷீர் தியேட்டர்,, திருநீலக்குடி டூரிங் டாக்கீஸ் என பொழுதுகள் கழிந்தன. என்னைத்தேடி யாரேனும் வந்தால் நூலகத்திற்கு அனுப்புவது வழக்கமாக இருந்தது.

     ஒருமுறை தோழர் கோ.பாரத் உனது பெயரில் நூலகம் இருக்கிறது என்று சொல்லி ‘செந்தமிழ் சிவகுருநாதன்’ நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். மிகப்பழைய நூல்கள் அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை. அன்றைய நிலையில் தனித்தமிழ், காந்தி, பெரியார், அப்துல்ரகுமான், மேத்தா, எம்.எஸ்.உதயமூர்த்தி, கொஞ்சம் இடதுசாரி நூல்கள் என்பதாக கலவையான் வாசிப்பில் இருந்தேன். இரவில்கூட கைலி உடுத்தாமல் கதராடைகளுடன் உலா வந்த நேரமது.

     1992 இல் மகாமக உயிரிழப்புகள் நடந்தபோது அங்கிருந்தேன். அன்றைய தினத்திற்கு முன்பாக பலநாள்கள் கூட்டத்தை ரசிக்க குடந்தை சென்று திரும்பியிருக்கிறேன். மகாமக குளத்திற்குள்ளாக அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா குளிக்க குளியலறை ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஆனால் அன்று அவர்கள் அதில் குளிக்கவில்லை. குளத்துப் படிகளில் சசிகலாவும் ஜெயலலிதாவும் குடத்து நீரை மாற்றி மாற்றி ஊற்றிக்கொண்டார்கள். கூட்ட நெரிசலில் பலர் மாண்ட கதை உங்களுக்குத் தெரியுந்தானே. “அவர்களுக்கு நேரடி சொர்க்கம்”, என்று உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சொன்னதும், “அவாள் இவாள் தலையில் ஜலத்தை ஊற்றியதும் இவாள் அவாள் தலையில் ஜலத்தை ஊற்றியதும்”, விபத்து நடக்கக் காரணமாக சங்கராச்சாரி கண்டுபிடித்ததும் நிகழ்ந்தது. இந்நிகழ்வைப் பற்றி ‘உண்மை’ இதழுக்கு வசன கவிதை ஒன்று எழுதினேன்; பிரசுரமாகவில்லை. அன்று நான் செல்லமாட்டேன் என்று தெரிந்தாலும் மனம் பதைத்து, அப்பா அண்ணன் மு.இராமநாதன் அவர்களை அனுப்பி என்னைப் பார்த்து வரச்செய்ததும் நடந்தது.

   நரசிங்கம்பேட்டை உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் பயிற்சி எடுத்தோம். கண்ணெதிரே ஒரு மாணவன் காரில் அடிபட்டான். கார் எண்ணை மட்டுமே எங்களால் குறிக்கமுடிந்தது. இப்போது இன்னும் போக்குவரத்து கூடியுள்ளது. இன்றும் அப்பள்ளி ஆசிரியர்கள் சாலையில் மாணவர்களை பத்திரமாக அனுப்பி வைப்பதை கதிராமங்கலத்திலிருந்து திரும்புகையில் கண்டேன்.

    என்னைப் பார்க்க தந்தையார் அடிக்கடி வருவார். எனது நண்பர்களுடன் என்னைவிடவும் நெருக்கமாக அவர் உரையாடி அனைவரின் நட்பையும் பெற்றார். முதல் பட்டியலில் நான் தேர்வு செய்யப்படவில்லை. அப்போது கோவை மருத்துவக் கல்லூரியில் மருந்தாளுநர் படிப்பில் சேர்ந்திருந்தேன். ஆடுதுறையில் இடம் வாங்கித் தருகிறேன் என்று இரண்டாம் பட்டியலில் எனது பெயர் இருப்பதை அறிந்த ஒருவர் வீட்டுக்கு வந்தார். மருந்தாளுநர் படிப்பில் சேர்ந்துவிட்டதால் விருப்பமில்லை என மறுத்துவிட்டோம். எனக்கு அடுத்த நபரை பேரம் பேசவும் எனக்கு ஆணை கிடைக்காமலிருக்கவும் பெயரின் முன் எழுத்து, முகவரியை மாற்றித் தபால் அனுப்பப்பட்டது. கிளை அஞ்சலத்திருந்த அப்பாவுக்கு அது எளிதில் கிடைத்துவிட்டது.

     இதை ஒரு சுயமரியாதைப் பிரச்சினையாக எதிர்கொண்ட அவர் பெரும் போராட்டம் நடத்தி, திருத்தம் செய்த ஆணையைப் பெற்று கோவையிலிருந்து என்னை அழைத்து வந்தார். அப்போது மருந்தாளுநர் படிப்பு இரண்டு மாதத்தைத் தாண்டியிருந்தது. மருத்துவக் கல்லூரியில் இவ்வாண்டு இப்படிப்பை முடித்துக்கொண்டு அடுத்த வருடம் அங்கு செல்லுங்கள் என்று அறிவுரை கூறினர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு இந்த ஆணை பெறப்பட்டுள்ளது என்று சொல்லி பாதியில் திரும்பி வந்தோம்.

     இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதலும் கடைசியுமாக ஒரு ஆசிரியர் தேர்வு வாரியப் போட்டித்தேர்வின் மூலம் 1992 இல் முடித்த எங்கள் அணியில் சுமார் 20 பேருக்குப் பணி கிடைத்தது. இதரர்கள் மாவட்ட பதவி மூப்பின் அடிப்படையில் வெவ்வேறு காலகட்டங்களில் பணியில் சேர்ந்தனர்.

    10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள முதுகலைப் பாட ஆசிரியர்கள் அப்போது விருப்பத்தின் அடிப்படையில் நிறுவனத்திற்கு மாறுதல் பெற்றனர். தொடக்கநிலை வகுப்புகளுக்கு தொடர்பில்லாத அரசு எந்திரம் விழித்துக்கொண்டு பொருளியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் படித்தவர்களை மீண்டும் மேனிலைப்பள்ளிக்கே அனுப்ப முடிவு செய்தபோது, எஸ்.ராதாகிருஷ்ணன் போன்ற சிலர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றனர். அதிக ஓய்வு என்பதால் பலர் விரும்பி வந்தனர். தற்போது தேர்வு மூலம் விரிவுரையாளர்கள் நியமனம் நடக்கிறது.

      இன்று ஆசிரியர் பயிற்சிக்கு யாரும் விரும்பி வருவதில்லை; காரணம் வேலையில்லை என்பதே. பணியிடைப் பயிற்சிகளை அனைவருக்கும் தொடக்கக் கல்வி (SSA), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி (RMSA) போன்றவை தருகின்றன. பணியிடைப் பயிற்சி இவர்கள் வேலை இல்லை என்றாகிவிட்டது. இவர்கள் நடத்திய நன்னெறிக் கல்விப் பயிற்சி குறித்த அபத்தங்களை நான் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறேன். பார்க்க:

கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்? (பகுதி: 01)

http://musivagurunathan.blogspot.in/2017/02/01.html

கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்? (பகுதி: 02)

http://musivagurunathan.blogspot.in/2017/02/02-02.html

பணி முன் பயிற்சிக்கு பணி வாய்ப்புகள் இன்மை, ஆசிரியர் தகுதித் தேர்வு போன்ற காரணங்களால் யாரும் வருவதில்லை. இந்நிலையில் மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிலையங்கள் பெரும்பாலும் பேருக்கு இயங்குகின்றன. இவற்றை மேம்படுத்தும் எண்ணம் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இம்மாதிரியான நிறுவனங்கள், அமைப்புகளை உருவாக்கும் அதைச் சீரழிப்பதும் மத்திய, மாநில அரசுகளின் வேலையாக உள்ளது. சமீபத்திய உதாரணம்: செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்.

(தொடரும்)

(இரண்டாம் பகுதியுடன் நிறைவுறும்.)

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நினைவுகள் இனிமையானவை

கருத்துரையிடுக