ஞாயிறு, ஜூலை 23, 2017

தொன்மையைத் தேடி… (முதல் பகுதி)

தொன்மையைத் தேடி… (முதல் பகுதி)

மு.சிவகுருநாதன் 
 
 

     வெறும் மனப்பாடத் தேர்வுகள், மதிப்பெண்கள் என்று வட்டமடிக்கும் சூழலை மாற்ற பாட இணைச்செயல்பாடுகள் ஓரளவிற்கு உதவும். எனவே இதை வரவேற்பதில் தப்பில்லை. ஆனால் இவை இங்கு எவ்விதம் புரிந்து கொள்ளப்படுகின்றன, மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குரிய ஒன்று.

     உதாரணமாக தமிழ் இலக்கிய மன்றங்கள் பலவற்றை தவறாகவே அறிமுகம் செய்கின்றன. இதிலுள்ள இலக்கியம் என்ற சொல்லை நீக்குவது நலம். இங்கு பேச்சுக்கலை இயல்பான ஒன்றை, மிகைப்படுத்தி, நாடகீயமாக செயற்கைத்தனம் நிரம்ப வெளிப்படுத்துவதைக் காணலாம். இதுதான் பேச்சு எனகிற தவறான புரிதலை மாணவர்களிடம் ஏற்படுத்தியிருப்பது வருந்தத்தக்கது. 


     இதேபோல் பலவற்றைச் சுட்டமுடியும். சமூக அறிவியல் பாடத்திற்கு ‘தொன்மைப் பாதுகாப்பு மன்றம் (Heritage Club) உள்ளது. இங்கு ‘தொன்மை’ என்பது எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது? கோயில்கள், கோபுரங்கள், கோட்டைகள், கருங்கல் சிற்பங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் போன்றவை மட்டுமே இங்கு தொன்மையாகப் பார்க்கக் கூடிய சூழல் உள்ளது. இவைகள் தொன்மையல்ல என்று சொல்ல வரவில்லை; இவை மட்டுமா என்ற வினா எழுவது தவிர்க்க முடியாது. இந்நிலை மாறவேண்டும். நமது மனப்பான்மைகளும் தப்பெண்ணங்களும் கூடவே கசடுகளும்.

     அந்த வகையில் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, திருவாரூர், மதுரை, காஞ்சிபுரம், மாகாபலிபுரம், வேலூர் போன்ற ஒரு சில இடங்கள் மட்டுமே தொன்மையானதாகும். கருங்கற்கோயில்கள் மட்டுமே ஆயிரமாண்டுகள் நிலைத்திருக்கும். செங்கற்களால் கட்டப்பட்ட மண்டபங்கள், கோயில்கள், பள்ளிகள், விகாரைகள் ஆகியவற்றின் வாழ்நாள் சிலநூறு ஆண்டுகள் மட்டுமே. இவை அடிக்கடி புதுப்பிக்கப்படும். இவற்றிற்கு வேதிக்கரைசல்கள் பூசிப் பாதுகாக்க வழியில்லை. எனவே இவை தொன்மையில் அடங்காதா?

     சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களை திருவாரூர் கும்பகோணம் சாலையில் அரசவனங்காட்டிற்கு அருகிலுள்ள தீபங்குடிக்கு அழைத்துச் சென்றோம். அங்கிருப்பது முதலாவது சமணத் தீர்த்தங்கரர் தீபநாயக சுவாமியின் (ரிஷப தேவர் / ஆதிபகவன்) திகம்பர சமணப்பள்ளி. இது செங்கற்களால் கட்டப்பட்டு, அடிக்கடி புதுப்பிக்கப்படும் சமணக் கோயில். கலிங்கத்துப்பரணி பாடிய பாடிய ஜெயங்கொண்டார் வாழ்ந்த ஊர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரே சமணப்பள்ளி இதுவே. இங்கு ஒருசில சமணக் குடும்பங்கள் உள்ளன. அன்று அருகிலுள்ள பெரும்பண்ணையூர் தேவாயத்திற்கும் சென்று வந்தோம். 


     திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட வரைபடத்தை ஒட்டும் சுவரொட்டியாக (stickers) தயாரித்து பள்ளிகளுக்கு வழங்கினர். (இப்படத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ஓடும் வளவனாற்றை நாகப்பட்டினம் மாவட்டத்திற்குத் தாரை வார்த்தது வேறு கதை!) அதில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பார்க்க வேண்டிய இடங்களும் அனைத்து புண்ணியத்தலங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. அதில் தீபங்குடிக்கு இடமில்லை. இதுதான் நமது நாட்டில் மதச்சார்பின்மை செயல்படும் நிலை! தொன்மை என்ற பேரில் மதவாதம் உயர்த்திப் பிடிக்கப்படுமோ என்ற அச்சம் மெலெழுகிறது.

    உண்மையில் எவை தொன்மையாக இருக்க முடியும்? மண், மலைகள், மரங்கள், காடுகள், கடல்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றுக்கு வயது நிர்ணயிக்க முடியுமா? தஞ்சை பெரியகோயிலுக்கு சுமார் 1000 வயது. காவிரிக்கும் அதன் கிளையாறுகளுக்கும் வயதென்ன? நக்கீரனின் ‘காடோடி’ நாவலில் வருமே மூதாய் மரம். இது ஒவ்வொரு ஊரிலும் இருக்குமல்லவா? (அப்படி ஒரு முதுமரத்தைத் தேடி அகரத்திருநல்லூர் செல்லும் போது வேறு ஒன்றையும் கண்டேன். அதைப் பிறகு பார்க்கலாம்.)

      நமது உடலின் மரபணுகூட தொன்மையானதுதான். இவை காலங்காலமாக கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மண், மலை, காடு, ஆறு ஆகியவற்றுடன் இருக்கும் உறவு பிரிக்கமுடியாத ஒன்று. இவற்றையெல்லாம் தொன்மையாக உணர நாம் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்? உயர்ந்த மாட மாளிகைகள், கோபுரங்களிலிருந்து எப்போது இறங்கி கீழே வரப்போகிறோம்? இந்த மண்ணையும் இயற்கையையும் என்று புரிந்துகொள்வோம்? இந்தத் தொன்மையின் வழியே இயற்கையை ரசிக்க, நேசிக்க, பாதுகாக்க முடியும்.

    என் முன்னோர்கள் பயன்படுத்திய மண்ணை, நீரை நானும் பயன்படுத்துகிறேன். அவர்களுக்கு சுவாசமளித்த மரங்கள் எனக்கும் ஆக்சிஜனைத் தருகின்றன. அவர்கள் பயன்படுத்திய மண், நீர், காற்று அனைத்தும் என் உடம்பில் இருக்கிறது. அவை மீண்டும் மீண்டும் எனக்கும் எனது சந்ததிக்கும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். நான் இவற்றிலும் தொன்மையை உணர்கிறேன். 
 


    இந்தத் தொன்மையை நேசிக்க, பாதுகாக்க விரும்புகிறேன். இந்த மண், மலைகள், காடுகள், மலைகள், இயற்கைத்தாவரங்கள், கடல்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் தொன்மை மிக்கவை. இவற்றைப் பாதுகாக்க, சுற்றுசூழலைப் பேண நாம் உறுதி ஏற்கவேண்டுமல்லவா? (குழந்தைகளை வேலைக்கு அமர்த்த மாட்டேன் என்று பள்ளிக்குழந்தைகள் உறுதி எடுக்க வைப்பதைப் போல இதற்கும் செய்துவிடவேண்டாம்!)

     இது இன்றைய காலத்தின் கட்டாயம். நாம் உணர்ந்து கொள்வதில் தாமதம் இருக்கக் கூடாது. உலகத்திலுள்ள தொன்மை மற்றும் கலாச்சார சின்னங்களைப் பாதுகாக்க முன்முயற்சி எடுத்துவரும் அய்.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு இதைத் தெளிவாக வரையறுத்துள்ளது. அதனால்தான் மேற்குத் தொடர்ச்சி மலையை (Western Guards) பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. நாம் எப்போது மாறப்போகிறோம்? அல்லது மாற்றிக் கொள்ளப் போகிறோம்?

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக