வியாழன், ஜூலை 27, 2017

தொன்மையைத் தேடி… (இரண்டாம் பகுதி)

தொன்மையைத் தேடி… (இரண்டாம் பகுதி)

மு.சிவகுருநாதன்

       திருவாரூர் மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி 22.07.2017 மன்னார்குடி பின்லே மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. நம்முடைய அச்சத்தை மெய்பிக்க இங்கு பேசப்பட்ட செய்திகளே போதுமான சான்றுகளாகும். அமர்வதற்கு இடவசதி மற்றும் இருக்கை வசதிகள் இன்றி இம்மாதிரி கூட்டங்களும் பயிற்சிகளும் ஏன் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்று தெரியவில்லை? 100 பெருக்கு என்றால் அங்கு 50 பேருக்குத்தான் வசதிகள் இருக்கும். மீதிப்பேர் வரமாட்டார்கள் என்கிற எண்ணமா என்று கேட்கத் தோன்றுகிறது. இது அனைத்து வகையான பயிற்சிகளுக்கும் பொருந்தும். இன்று பொதுக்கூட்டங்களுக்குக் கூட அனைவருக்கும் நாற்காலிகள் போடப்படுகின்றன. பள்ளிக் கல்வித்துறை எப்போது திருந்துமெனத் தெரியவில்லை. இதில் தொன்மைக்குத் தகுதியான இடம் என்கிற பிதற்றல் வேறு.

      திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வரலாறு பாட முதுகலை ஆசிரியர், பின்லே மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியை, பாளையக்கோட்டை உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர், மன்னை ராஜகோபாலசாமி அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றியல் துறைத்தலைவர் காமராஜ், வரலாற்று விரிவுரையாளர் இளங்கோவன், திருமக்கோட்டை மின்வாரிய வேதியிலாளர் காந்தி லெனின் ஆகியோர் உரையாற்றினர்.

      மதிய உணவு இடைவேளை இல்லாமல் பிற்பகல் 2 மணிக்கு நன்றியுரை சொல்லி முடித்த பிறகும் பின்லே பள்ளியின் பெருமைபேசியும் படங்கள் திரையிட்டும் காந்தி லெனின் புகழ்பாடியும், அவரை பள்ளிகளுக்கு அழைக்க வேன்டுகோளும் விடுக்கப்பட்டது. இந்த ஆசிரியர்களுக்கு யாராவது நேர மேலாண்மையை கற்றுத் தந்தால் நல்லது. ஒருவர் மேப் குறிக்க டிப்ஸ் தந்தார். எதையும் தேர்வுக்கான கச்சாப்பொருளாக மாற்றும்போக்கு கண்டனத்திற்குரியது. மேடை ஆக்கிரமிப்பும் சுயமோக தம்பட்டங்களைக் குறைத்தால் மட்டுமே நேர மேலாண்மை சாத்தியப்படும்.

      தொன்மை என்றால் சுயபெருமை, தமிழ்ப்பெருமை, சோழப்பெருமை, சைவப்பெருமை போன்றவற்றைப் பேசுதல் என்கிற புரிதல் முதலில் மாறவேண்டும். பின்லே பள்ளி, மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் ஆகியவற்றில் பெருமை பேசுவதல்ல தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் பணி. ஆனால் அதுதான் நடந்தது. இயற்கையை நேசித்தல், பாதுகாத்தல், வரலாற்றைப் புரிந்துகொள்தல், ஆய்வு செய்தல், விமர்சனம் செய்தல், மாற்றுக்கருத்துகளை மதித்தல், சமூக நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை போன்ற பல்வேறு நோக்கங்களைக் கொண்டது என்று நான் கருதுகிறேன்.

       பள்ளித் தலைமையாசிரியை பின்லே பள்ளியின் பெருமையாக காந்தியின் வருகை மட்டுமல்ல; டி.டி.வி.தினகரன் இப்பள்ளி மாணவர் என்பதையும் பெருமை பொங்க குறிப்பிட்டார். சிந்துவெளி, கீழடித் தொன்மைகளுக்கு அடுத்தபடியாக பிற்காலச் சோழர்களின் தொன்மை ஆதாரங்களை மட்டும் விதந்தோதி தமிழக, மாவட்ட வரலாற்றை நிர்மாணிக்கும் போக்கை எப்படிப் புரிந்துகொள்வது? பிற்காலச் சோழ மற்றும் சைவ வரலாறுதான் இவர்களுக்கு மூலம். மேலும் அவற்றைத் தங்கள் வாய்வீச்சுக்குத் தக்கவாறு நீட்டி முழக்கி கைத்தட்டல்கள் பெறுவதன் மூலம் வரலாற்றைக் கொச்சைப் படுத்துகின்றனர்.

      மிக முக்கியமான, அற்புதமான, சிறப்பான, தொன்மையான, தமிழகத்திலேயே முதல் முதலாக என்ற சொற்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது வரலாற்று ஆய்வாகாது என்பதை இவர்கள் முதலில் உணரவேண்டும். 8 முதல் 13 ஆம் நூற்றாண்டு முடிய உள்ள காலக் கல்வெட்டுகளை மட்டும் கொண்டும் தமிழக வரலாற்றைச் சித்தரிப்பது அபத்தம். வர்த்தமானபுரீஸ்வரர் ஆலயம் இருப்பதால் பிற்காலச் சோழர்கள் சமணத்தை ஆதரித்தார்கள், சமணம் செழித்திருந்தது என்று சொல்லிவிடமுடியுமா என்ன?

      தீபங்குடி சமணப்பள்ளி நன்னிலத்தில் இருக்கிறது என்கிறார். இவர்கள் ஆய்வுகளின் தரம் அவ்வளவுதான். தீபங்குடி குடவாசல் வட்டத்தில் திருவாரூர் கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிருந்து 10 கி.மீ. தலைவில் அரசவனங்காட்டிற்கு அருகில் உள்ளது. கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளின்படி சாதிகள் பிறப்பின் அடிப்படையில் இல்லை, அவை தொழிலின் அடைப்படையிலேயே இருந்தன என்கிறார். புரோகிதர் தொழிலுக்கு இதர வருணம் அல்லது சாதியைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட்டதுண்டா? இதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உண்டா?

      தஞ்சை, திருவாரூர் கோயில்களில் தளிச்சேரி (தேவரடியார்கள்) பெண்டிர் இருந்தது பெருமையான செய்தியா என்ன? தேவதாசிகளைப் பற்றிய எவ்வளவோ ஆய்வுகள் வந்தாயிற்று; பொட்டுக்கட்டும் பழக்கத்தை ஒழித்தாயிற்று. ஆனால் இன்னும் நமது பெருமைப்பட்டியலில் அதற்கு இடமிருக்கிறது.

      இவை பற்றிய நிறைய ஆய்வுகள் வந்துவிட்டது. நாம்தான் அவற்றைச் சீண்டுவதில்லை. உதாரணத்திற்கு ஒன்றுமட்டும். பேரா.கே.ராஜய்யன் ஆங்கிலத்தில் எழுதி சா.தேவதாஸால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூலிருந்து சில வரிகள்.

      “சோழர்கள் அரசர்களாயிருந்தாலும், புரோகிதர், அமைச்சர், அலுவலர் என்னும் விதத்தில், பிராமணர் உண்மையான அதிகாரம் பெற்றிருந்ததனர். தமக்கே உரித்தான அக்கிரகாரங்களில் (அ) சதுர்வேதிமங்களங்களில், உணவையும் கல்வியையும் இலவசமாகப் பெற்று, அவர்கள் வாழ்ந்தனர். இப்பிராமணர்களின் நன்மைக்காக, மன்னர்கள் கோயில்களுக்கு கணிசமான மானியங்களைத் தந்தனர். தேவதாசிகளாகக் கோயில்களுக்குள் ஈர்க்கப்பட்டிருந்த கவர்ச்சியான யுவதியர், இசை, நடனம் (ம) தம் உடலால் பிராமணரை மகிழ்ச்சிப்படுத்தினர். மறுபுறத்தில், உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப்பட்டனர்”, (பக். 151, தமிழ்நாட்டு வரலாறு, பேரா. கே.ராஜய்யன், (மொ) சா. தேவதாஸ், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, ஆகஸ்ட் 2015, வில்லை: ரூ. 400)

      “பெரும்பாலான பண்ணைக்கூலிகள் அடிமைகளாய் (அ) கொத்தடிமைகளாய் வாழ்ந்தனர். குரூரமாய் நடத்தப்பட்டனர், விற்கப்பட்டனர், மீளவும் விற்கப்பட்டனர் என்பது தெளிவாகிறது. இவ்வடிமைகள் அதிகமானோரை கோயில்கள் வைத்திருந்தன”, (பக்.152, மேலே குறித்த நூல்.)

      “சைவமும் வைணவமும் ஏற்றம் பெற சமணமும் பௌத்தமும் நலியுற்றன. சோழர்களைப் பிராமணர்கள் கட்டுப்படுத்தியதாலும் பகை மிக்க மதங்கள் வதைக்கப்பட்டதாலும், ஆலயங்கள், மடங்கள், அக்கிரகாரங்களின் நிர்மாணத்திற்காக அரசநிதி திருப்பிவிடப் பட்டதாலும் இது தவிர்க்க முடியாததாக இருந்தது. சோழர்கள் சைவர்களாதலால், அவர்தம் மதம் சலுகையுடன் நடத்தப்பட்டது”, (பக்.152, 153, மேலே குறித்த அதே நூல்.)

      கல்வெட்டுக்களில்தான் நல்ல தமிழ் இருக்கிறது என்று ஏங்குபவர்கள் மொழியின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் மாற்றங்களை உணர மறுப்பது உண்மையான ஆய்வாகுமா? ‘பள்ளிக் கல்வித் துறை’ என்பதில் வல்லினம் மிகும் என்பதைப் போலவே ‘தொன்மைப் பாதுகாப்பிலும்’ மிகும் என்பதை உணர்ந்துகொள்வது எந்நாளோ? (தொன்மை பாதுகாப்பு என்றே எழுத்வதும், பதாகை வைப்பதும் தொடர்கிறது.) திருவள்ளூவர், ஏன் முதலாம் ராஜராஜன் பயன்படுத்திய சொற்களை இன்று நாம் அப்படியே பயன்படுத்துவதில்லை. மொழி இம்மாதிரி மாற்றங்கள் பெறுவது இயல்புதானே!

       தமிழ்நாட்டில் அடிமை முறை இருந்ததையும் பிராமணர் தவிர பிறர் இவ்வாறு அடிமையாக விற்கப்பட்டதும் அடிமைகளுக்கு சூலச்சின்னம் பொறிக்கப்பட்டது நடைபெற்றது. இவ்வாறே தேவதாசிகளுக்குப் பாதங்களில் சூலச்சின்னம் பொறிக்கப்பட்டது. (பார்க்க: தமிழகத்தில் அடிமை முறை, ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், விலை: 120) பிராமணர்களை அடிமைகளாக்க மநு தர்ம சாத்திரங்களில் வழியில்லை. அதுமட்டுமல்ல கொலை செய்த பிராமணர்களுக்குத் தண்டனையும் அளிக்க முடியாது. சோழ மன்னன் ஆதித்ய கரிகாலனைக் கொன்ற பிராமணர்களுக்கு அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்து, நாட்டைவிட்டு வெளியேற்றும் தண்டனையே வழங்கப்பட்டது. ஏனெனில் இங்கு மநு தர்மமே ஆட்சி செய்தது. அதை மேலும் வலுப்படுத்த திருவாரூர் மனுநீதிச்சோழன் கதைகள் போன்று பல கதைகள் உற்பத்தியாயின. நாம் இவற்றை வரலாறு, தொன்மை என்று மெச்சி வருகிறோம். வரலாறு, இச்சமூகம் நம்மை மன்னிக்காது.

     வரி என்பதற்கு ‘இறை’ என்னும் தமிழ்ப்பெயர் கண்டு மகிழும் நாம் அக்கால சமூகம் வரிக்கொடுமைகளால் பட்ட துன்பங்களை ஏன் கண்டுகொள்ள முடிவதில்லை? தானமளிக்கவும், கோயில் கோபுரங்கள் கட்டவும் ‘இறை’யும் கொள்ளையிடப்பட்ட பகை நாட்டுச் சொத்துகளுமே பயன்பட்டன. ‘இறை’யின் பெருமை பேசும்போது அதன் மறுபக்கமான ‘இறையிலி’ பற்றி பேசமறுப்பது எவ்வகையான ஆய்வு முறை?

      மின்வேதியிலாளர் காந்தி லெனின் பேச்சு, நழுவப்படம் மற்றும் ஒளிப்படக் காட்சிகள் அனைத்தும் அபத்தக் கூத்துகள். இவருக்கு ஒளிவட்ட பிம்பமும் பள்ளிகளில் பேச அழைக்கவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ‘அப்துல் கலாமைப்போல’ என்று மிகச்சரியாக பாராட்டியதாக தோன்றுகிறது.

       மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அகத்தியர் என்றார். இதைகொண்டு அவர் மனநோயைக் குணப்படுத்தினாராம்! தாமிரம் ஒரு மின்கடத்தி என்பதையும் தமிழர்கள் அறிந்திருந்தார்களாம்! அதனால் தாமிரப் பட்டயங்கள் பொறிக்கும் பழக்கம் இதனை ஒட்டி எழுந்ததாக விண்டுரைத்தார்!

        புவியின் ஈர்ப்பு சக்தி முழுமையும் சிதம்பரத்தில் குவிந்திருக்கும் (சிதம்பர) ரகசியம் மற்றும் நடராஜர் சிலை, ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடு, கடவுள் துகள் (Higgs Boson – இதைக் கடவுள் துகள் என்பதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது.) என்றெல்லாம் தினமும் வாட்ஸ் அப்பில் வரும் நூற்றுக்கணக்கான அரிய (!?) கண்டுபிடிப்புகளை வெளியிட்டு அசத்தினார்! எற்கனவே கண்ட பிள்ளையார் பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றோடு இவற்றையும் கல்வெட்டு அல்லது தாமிரப் பட்டயங்களில் பொறித்து வைத்தால் வருங்கால சந்ததிக்குப் பயன்படும்.

      நான்கு வேதங்கள், ஆகமங்கள், உயிர்நாடிகள் ஆகியவற்றைக் கொண்டு சிதம்பரம் கோயில் கட்டப்பட்டுள்ளதாம். வேதங்கள் யாருடையது? அங்கு நுழைந்த நந்தனை எரித்தது யார்? இன்றும் அந்தக் கோயில் யாருக்கானதாக உள்ளது. தேவாரத்தை, தமிழை, தமிழனை அனுமதிக்காத உள்ளே அனுமதிக்காத அதன் வழியே என்ன தமிழ்ப்பெருமை, தொன்மை வேண்டி கிடக்கிறது?

       சிந்துசமவெளி முத்திரை unicorn ஐ காட்டி விளக்கமளித்தார். இந்த உருவத்தை குதிரையாக ‘கிராபிக்ஸ்’ செய்து என்.எஸ்.ராஜாராம் என்பவர் உருவாக்கிய புனைவுகளை ஹார்வார்ட் பல்கலைக்கழக சமஸ்கிருத பேராசிரியர் மிஷேல் விட்ஸல், இந்தியவியல் அறிஞர் ஸ்டீவ் ஃபார்மர் ஆகியோர் கட்டுடைத்ததும் உலகறிந்த ஒன்று. இது ஒரு தொன்ம (புராணீக உருவம்) சிந்துவெளி மக்களின் படைப்பாற்றலுக்கு உதாரணம், அல்லது ‘நீல்கை’ எனும் மான் வகையினமாகவோ ‘ஒனேஜர்’ வகைக் கழுதையினமாகவோ இருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து. (பார்க்க: அ.மார்க்சின் ‘ஆரியகூத்து’ நூல், எதிர் வெளியீடு)

      சிந்து வெளி எழுத்துமுறை சித்திர வடிவக் குறியீடுகளாகும். பிற்கால கல்வெட்டு எழுத்துகள் படம் ஒன்றை சிந்துவெளி எழுத்தாகக் காட்டினார். இதுவே பிற்கால சோழர் கால கல்வெட்டு எழுத்துபோல காணப்பட்டது. பங்கேற்பாளர்கள், எதிர்வினை புரிய வினாக்கள் கேட்க அனுமதிக்கப்படவில்லை. எனவே இத்தகைய வரலாற்று உண்மைகளை (!?) பருகியபடியே ஆசிரிய சமூகம் கைதட்டிக் கலைந்தது.

      அக்கால கோயில்கள் பள்ளிகளாக இருந்ததாக பேசப்பட்டது. இது சமணப்பள்ளிக்கும் புத்த விகாரைக்கும் மட்டுமே பொருந்தது. சைவ, வைணவக் கோயில்கள் யாருக்கானதாக இருந்தது. இங்கு தமிழுக்கு வேலையில்லை. இவர்கள் மிகவும் விதந்தோதக்கூடிய முதலாம் ராஜராஜன் நூற்றுக்கணக்கான வேதபாடசாலைகள் அமைத்து சமஸ்கிருத மொழியையும் நான்கு வேதங்களையும் பிராமணர் படிக்க மட்டுமே வழி செய்தவன். தமிழுக்காக சிறு துரும்பையும் அசைக்காதவன். (பார்க்க: எனது நூல், கல்விக்குழப்பங்கள், பாரதி புத்தகாலய வெளியீடு, மார்ச் 2016, விலை: ரூ. 140)

      ‘மன்னர்குடி’ மன்னார்குடியாக திரிந்த வரலாற்றை மட்டும் சொல்பவர்கள், ‘மன்னர்குடி’யாக ஆவதற்கு முன்பு என்னவாக இருந்தது என்று உரைக்கவேண்டுமல்லவா! அரசர்களைக் கொண்டு மட்டும் வரலாறு எழுதும் அவலம் இது. திருவாரூர் திரு.வி.க. அரசுக்கல்லூரிப் பேராசிரியர் ஜான் பீட்டர் எழுதிய ஊர் பெயர் தொடர்பான நூல் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆய்வுகள் எல்லாம் வெறும் தலபுராணமாக இருக்கின்றதே ஒழிய வரலாற்று, சமூகவியல் ஆய்வாக மலரவில்லை என்பது வருந்தத்தக்கது. இந்த வகையில் இடப்பெயர் ஆய்வுகள் என்ற வகையில் ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்னும் ஆர்.பாலகிருஷ்ணனின் நூல் (பாரதி புத்தகாலய வெளியீடு: ஏப்ரல் 2016, விலை: ரூ. 150) குறிப்பிடத்தகுந்தது.

      நாட்டார் தெய்வங்களில் பல பெண் தெய்வங்கள் உண்டு. இவை பெரும்பாலும் கொலையுண்ட பெண்கள். குறிப்பாக சாதி ஆணவக்கொலையான பெண்களை தெய்வமாக்கி வழிபடும் போக்கு உள்ளது. மக்களின் குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடாகக் கூட இதைக் கருத இடமுண்டு. இவற்றையெல்லாம் தொன்மை என்று கொண்டாடுவதில் பொருளில்லை.

      வேதங்கள், நால் வர்ணங்கள், சாதிகள் கூட தொன்மையானதுதான்! இவற்றை பெருமையாக பேச சமூகத்தில் இடமுண்டா? ‘தொன்மை’ என்பதன் பொருளை உணர்ந்துகொள்வதில் நமக்கு சிக்கலிருக்கிறது. புதிய பார்வையும் அணுகுமுறையும் தேவைப்படுகிறது. தன்னிலை தவிர்த்து விலகி நின்று அணுகும் தன்மை இதற்கு அவசியம். சுயபெருமை கொள்வதில் ஒன்றுமில்லை.

       வரலாறு மக்களை முதன்மைப்படுத்த வேண்டும். மன்னர்கள் காலம் மாலையேறிவிட்டது. மக்களை மையப்படுத்தி வரலாறு எழுதப்படவேன்டும் என்ற குரல் பழைய போக்கை மாற்றி வருகிறது. மண்ணும் மனிதர்களும் இயற்கையும் தொன்மையாக தோற்றம் கொள்கையில் செயற்கை அணிகலன்கள் தேவையற்றுப் போகும். இதுவே நம்மை முன்னோக்கிச் செலுத்தும் பாதை.

(முற்றும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக