ஞாயிறு, ஜூலை 14, 2019

வெறுப்பரசியலுக்கு இரையாகும் பள்ளிப் பாடநூல்கள் (முதல்பகுதி)


வெறுப்பரசியலுக்கு இரையாகும் பள்ளிப் பாடநூல்கள் (முதல்பகுதி)


மு.சிவகுருநாதன் 


(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 27) 




         “ஆங்கிலேயர்கள் தங்களது  நாட்டிற்கு சென்ற  பிறகு இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவ  வேண்டுமென எண்ணி முஸ்லீம் தலைவர்கள்  மற்றும் அறிஞர்கள் புரட்சியில் கலந்துகொண்டனர்”. (VIII, சமூக அறிவியல், பக்.194&195)  என்ற இஸ்லாமிய வெறுப்புணர்வைத் தூண்டும் வரிகளை நீக்கிச் சொல்லியிருக்கிறார்கள். எந்த வகுப்பு பாடநூலை எடுத்துக் கொண்டாலும் அவற்றின் பக்கங்களில் வெறுப்பு விதைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்றை மட்டும் நீக்கிவிடுவது போதுமானதல்ல.


    ஏழாம் வகுப்பு சமூக அறிவியலில் முதல் பாடம் ‘இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்’. பாடநூல்கள் வெறுப்பரசியலின் படியில் சிக்கியுள்ளதை தெளிவாக உணர்த்தும் சில பகுதிகளை மட்டும் காண்போம்.

        “இச்சான்றுகள் பல்வகைப்பட்ட விவரங்களைக் கொண்டுள்ளன. சாதாரண மக்களின்  வாழ்நிலை குறித்துக் குறைவான  செய்திகளை மட்டுமே முன் வைக்கும்  இச்சான்றுகள் அரசர்களின் வாழ்க்கை பற்றி நேரடியான, செறிவான, அதிக எண்ணிக்கையிலான தகவல்களைக் வழங்குகின்றன. அரசர்களின் சாதனைகள்  பற்றிய அரசவையைச் சார்ந்தோரின்  கருத்துக்களும் வரலாற்று நிகழ்வுத் தொகுப்பாளர்களின் கருத்துக்களும்  பெரும்பாலும் ஒருதலைப்பட்சமானதாகவும்  மிகைப்படுத்தப்பட்டதாகவும் உயர்வு நவிற்சி  மொழி நடையிலுமே அமைந்திருக்கின்றன.  இடைக்கால இந்திய வரலாற்றைத் தெரிந்துகொள்ளக் கிடைக்கப்பெறும்  பல்வகைப்பட்ட சான்றுகளை நாம் ஆய்வு  செய்வோம்”. (பக்.125)

              என்ற பெரும் பீடிகையுடன் பாடம் தொடங்குகிறது. ஆனால் பாடங்கள் திசைமாறிச் செல்கின்றன. “பெரும்பாலும் ஒருதலைப்பட்சமானதாகவும்  மிகைப்படுத்தப்பட்டதாகவும் உயர்வு நவிற்சி  மொழி நடையிலும்” அமைந்த செய்திகளை வரலாறாக மாற்றும் செயல்பாடுகள் பாடங்கள் முழுதும் ஆக்ரமித்துள்ளன. குழந்தைகளிடம் வெறுப்புணர்வை வளர்க்கும் இத்தகைய செயல்கள் சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

   “முகமதுகோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின்  வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும்  பொறிக்கச் செய்திருந்தார். இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர்  மதவிசயங்களில் தாராளத்தன்மையுடன்  நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச்  சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது. (பக்.129)

      மேற்கண்ட வரிகள் சொல்வது என்ன? தொடக்ககால துருக்கிய படையெடுப்பாளர்கள் மதம் சார்ந்தவற்றில் தாராளத் தன்மையுடைவர்கள் என்றால், டெல்லி சுல்தான்கள்  தாராளத் தன்மையற்றவர்கள் என்பதுதானே! மேலும் சோமநாதபுரம் படையெடுப்பு மற்றும் கொள்ளையிடல் சார்ந்த சித்திரங்களை பாடநூல்கள் தொடர்ந்து இவ்வாறே எழுதுகின்றன. 

        “கஜினி மாமூதின் ஒரு படையெடுப்பின்போது அவருடன் அல்-பரூனி  (11ஆம் நூற்றாண்டு) இந்தியாவிற்கு வந்து  இங்குப் பத்து ஆண்டுகள் தங்கியிருந்தார். கஜினி மாமூதின் சோமநாதபுரப் படையெடுப்பு  குறித்தத் துல்லியமான தகவல்கள் இவர்  கொடுத்ததாகும்”. (பக்.131)

    இவர் எத்தகையத் துல்லியமான தகவல்களை அளித்தார்? அது வரலாற்றை எவ்வாறு கட்டமைக்கிறது? மேலதிக வாசிப்பிற்கு ரொமிலா தாப்பர் எழுதிய ‘சோமநாதர் – வரலாற்றின் பல குரல்கள்’ (தமிழில்: கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு: ஜன. 2017) நூலைப் பரிந்துரைக்கிறேன்..

     ‘நினைவுச் சின்னங்கள்’ எனும் தலைப்பு இவ்வாறு செல்கிறது.

     கோவில்கள், அரண்மனைகள், மசூதிகள், கல்லறைகள்,  கோட்டைகள், கோபுரங்கள், ஸ்தூபிகள் ஆகிய கட்டடங்கள் நிடனவுச் சின்னங்கள் எனும் வகையைச் சார்ந்தவையாகும். டில்லி சுல்தான்கள் புதுவகையான கட்டடக் கலையை அறிமுகம் செய்தனர். வளைவுகள்,  ஒடுங்கிய வடிவக்கோபுரங்கள், குவிமாடங்கள் ஆகியன அதன் முக்கியக் கூறுகளாகும். இந்த நினைவுச் சின்னங்களிலுள்ள கல்வெட்டுகள் வரலாற்றைக் கட்டமைக்கத் தேவைப்ப�டும் சிறந்த தகவல்களைக் கொண்டுள்ளன. இடைக்காலத்தைச் சேர்ந்த கஜுராகோ (மத்தியப்பிரகதசம்) எனுமிடத்திலுள்ள கோவில்கள், ராஜஸ்தான் மாநிலம், தில்வாரா (அபு குன்று) எனுமிடத்திலுள்ள கோவில்கள், கொனார்க்கில் (ஒடிசா) உள்ள கோவில்கள் ஆகியவை வடஇந்தியாவில் சமயத்தை  மையமாகக்  கொண்ட  பண்பாட்டின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துக்காள்ள சிறந்த  சான்றுகளாகும். தஞ்சாவூரிலுள்ள பெ�ரிய கோவில் (பிரகதீஸ்வரர் கோவில்), கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய  இடங்களிலுள்ள கோவில்கள் பிற்காலச் சோழர்கள் தமிழ்நாட்டில் கட்டியெழுப்பிய நேர்த்தியான பிரமாண்ட கட்டடங்களுக்கு அடையாளங்களாகும் (பக்.127,128)

     டெல்லி சுல்தான்கள் அறிமுகம் செய்த புதுவகையான கட்டடக்கலையின் பெயரென்ன?  வட இந்திய கோயில்கள் சமயத்தை மையமாகக் கொண்ட பண்பாட்டைப் பிரபளிக்கிறது என்றால்,  பிற்காலச் சோழர்கள் “தமிழ்நாட்டில் கட்டியெழுப்பிய நேர்த்தியான பிரமாண்ட கட்டடங்கள்”, எதைப் பிரதிபளிக்கிறது?

    “பதானி எழுதிய மற்றொரு நூலான “தாரிக்-இ-பதானி” (பதானியின் வரலாறு) ஒரு மிகச் சிறந்த நூலாகும். 1595 இல் வெளியிடப்பட்ட இந்நூல் மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது. அக்பருடைய ஆட்சியைப் பேசுகின்ற தொகுதி, குறிப்பாக மதக்கொள்கை குறித்து, ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக விமர்சனப்பூர்வமான கருத்துகளை முன்வைக்கிறது”. (பக்.130)

    நல்லது. பிற்காலச் சோழ அரசுகள், விஜயநகர அரசுகள் ஆகியவை பற்றி இத்தகைய ‘ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக விமர்சனப்பூர்வமான கருத்துகளை’ ஏன் காண முடியவில்லை? பாடநூல்களின் கண்களுக்கு இவை ஏன் புலப்படுவதேயில்லை?    
    
     ‘நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், சுயசரிதைகள்’, என்ற தலைப்பில் சொல்லப்படுவன: 

     “அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான்  நஸ்ருதின் மாமூதுவால் ஆதரிக்கப்பட்ட மின்கஜ்  உஸ் சிராஜ் என்பார் ’தபகத்-இ-நஸிரி’ எனும்  நூலை எழுதினார்”. (பக்.130)

    மம்லுக் வம்சம் அல்லது குலாம் வம்சம் என்பதைச் சொல்லாமல் அடிமை வம்சம் என்று ஏன் சொல்லவேண்டும்? ஐரோப்பியர்கள் – ஆங்கிலேயர்களை ‘பறங்கியர்’ என்றுகூட சொன்னதுண்டு. இவற்றில் வரலாற்றில் எழுதலாமா?

     “அராபியாவில் பிறந்த மொராக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதா (14ஆம் நூற்றாண்டு) மொராக்கோவிலிருந்து புறப்பட்டு  வடஆப்பிரிக்காவின் குறுக்காக எகிப்தை அடைந்து பின்னர் மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தடைந்தார். அவருடைய  பயணநூல் (ரிக்ளா [பயணங்கள்]) அவர்  பயணம் செய்த நாடுகளையும் மக்களையும்  பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது. அவருடைய கருத்தின்படி எகிப்தே செல்வம் கொழித்த நாடாகும். ஏனெனில்  மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் வணிகம் முழுவதும் எகிப்தின் வழியாகவே நடைபெற்றது. இந்தியாவின் சாதி குறித்தும்  சதி (உடன்கட்டை ஏறுதல்) பற்றியும் கூறியுள்ளார். வெளிநாட்டுத் துறைமுகங்களில்  இந்திய வணிகர்களின் விறுவிறுப்பான  வணிக நடவடிக்கைகள் குறித்தும் கடலில்  காணப்பட்ட இந்தியக் கப்பல்கள் பற்றியும் நாம்  அவரிடமிருந்து தெரிந்துகொள்கிறோம். டெல்லி ஒரு பரந்து விரிந்த, நேர்த்தியான நகரமென்று  அவர் விவரிக்கின்றார். இந்நாட்களில்தான் சுல்தான் முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கேயிருந்த தேவகிரிக்கு  (தௌலதாபாத்) மாற்றி டெல்லியைப்  பொட்டற்காடாக்கினார்”. (பக்.131)

    அரேபியா என்ற பெயர் ஏன் ‘அராபியா’ என்று எழுதப்படுகிறது? நேரடி மொழியாக்கமோ! முகமது பின் துக்ளக் டெல்லியில் மீத்தேன் எடுத்தாரா அல்லது அணுகுண்டுகளை வீசினாரா? எப்படி டெல்லி பொட்டற்காடானது? (‘பொட்டல் காடானது’ என்ற சொற்களின் சேர்க்கை ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருத்தமுடையதா? +1, +2 வகுப்புகளில் மேல்நிலை என்று எழுதும்போது ஏனிந்த குரூரம்?)  தலைநகர் மாற்றம் குறித்தும்  சதிஷ் சந்திரா எழுதிய ‘மத்திய கால இந்திய வரலாறு’ நூலிலிருந்து சில பத்திகள் கீழே தரப்படுகின்றன.

          “அலாவுதீன் கில்ஜிக்கு அடுத்து, ஒரு ஆட்சியாளர் என்ற முறையில் துணிவான பல பரிசோதனைகள் மற்றும் விவசாயத்தின் மீது நுனிப்பான அக்கறை காட்டியவர் என்கிற வகையில் முகமது பின் துக்ளக் (1324-51) மிகச் சிறப்பாக நினைவு கூறப்பட்டார். சில வகைகளில், முகமது பின் துக்ளக் அவர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்டுக் காட்டும்படியான மிகச் சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவர். மதத்தையும் தத்துவத்தையும் ஆழமாகக் கற்ற அவர், அவற்றுடன் விமர்சன முறையான, திறந்த மனதையும் பெற்றவர். முஸ்லீம் மறைஞானிகளுடன் மட்டுமல்லாமல், இந்து யோகிகள் மற்றும் ஜினா பிரபாசூரி (Jinaprabha Suri) போன்ற துறவிகளுடனும் கூட அவர் உரையாடினார். இது பல பழைமைவாத இறையிலாளர்களால் விரும்பப்படவில்லை. ஆகவே துக்ளக்கை ஒரு பகுத்தறிவாளர் என்று குற்றம் சுமத்தினர்கள். அதாவது மத நம்பிக்கை என்பதே உண்மையானது என்று ஏற்றுக் கொள்ளாதவர் என்ற பொருளில் இவ்விதம் குற்றம் சாட்டினார்கள். இதேபோல் அவர் அரசாங்க உயர்பதவிகளை மக்களுக்கு வழங்கும்போது, உயர்ந்த குடியில் பிறந்தவரா இல்லையா என்றெல்லாம் பார்க்காமல், யாருக்குத் தகுதியிருக்கிறதோ அவருக்கு அப்பதவியைத் தரத் தயாராக இருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் வெறுப்பு கொண்டவராகவும் பொறுமையற்றவராகவும் இருந்தார். அதனாலேயே அவருடைய பல சோதனைகள் தோல்வியடைந்ததோடு “நோயுற்ற கற்பிதக் கொள்கைவாதி” என்ற பெயரையும் பெற்றார்”. (பக்.139, மத்திய கால இந்திய வரலாறு – சதிஷ் சந்திரா, தமிழில்: வேட்டை எஸ். கண்ணன், பாரதி புத்தகாலய வெளியீடு: டிச.2016)

   “பல அதிகாரிகள், மற்றும்  அவர்களைப் பின்பற்றும் பணியாளர்கள், சுஃபி துறவிகள் உட்பட முன் நிலையான நபர்கள் போன்றவர்களை, தெளலதாபாத் என்று மறுபெயரிடப்பட்ட தேவகிரிக்கு மாறும்படி உத்தரவிட்டார். இத்தகைய பிரிவினர் இப்படி இடம் பெயர்வதற்குத் தேவையான, போதுமான அலுவலக நெருக்கடிகள் தரப்பட்டதாகத் தெரிகிறது. இத்துடன் அவர்களுக்கு உதவித் தொகைகள் தாராளமாகத் தரப்பட்டதோடு, தெளலதாபாத்தில் அவர்கள் இருப்பதற்கான ஏற்பாடுகளும் கூட செய்யப்பட்டன. இவர்களைத் தவிர பொதுமக்கள் யாரையும் இடம் பெயர்வதற்கான முயற்சிகள் முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. சுல்தான் இல்லாமலேயே டெல்லி பெரிய அளவில் மக்கள் தொகை உள்ள நகரமாக இருந்தது. சுல்தான் தேவகிரியில் இருந்தபோதும், நாணயங்கள் டெல்லியில் அச்சடிக்கப்பட்டது இதற்கான அத்தாட்சி. (பக்.140,141, மேலே குறிப்பிட்ட நூல்)   

    “இவ்விதம் தேவகிரியை இரண்டாவது தலைநகராக்குவதற்கான முயற்சி தோற்றுப் போனாலும் இந்தப் பெருந்தொகையோரின் இடப்பெயர்ச்சி எண்ணிக்கையளவில் நீண்ட கால ஆதாயங்களைப் பெற்றுத் தந்தது. தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதன் மூலம் வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவை ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாகக் கொண்டு வர இது உதவியது. மதப் புனிதர்கள் உள்படப்  பலர், தெளலாதாபாத் திற்குச் சென்று அங்கு குடியமர்ந்தனர். இவர்கள், துருக்கியர்கள் டெல்லியில் இருந்து தங்களோடு கொண்டு வந்த பண்பாடு, மதம் மற்றும் சமூகக் கருத்துக்களைத் தக்காணத்தில் பரவச் செய்வதற்கான வழி வகைகளாயினர். இதன் பயனாக வட இந்தியாவிற்கும் தென் இந்தியாவிற்கும் இடையே பண்பாட்டு ஒன்றிப்பு என்பதைப் போலவே தென் இந்தியாவிற்குள்ளேயே இத்தகைய ஒரு புதிய ஒன்றிப்பிற்கு வழி வகுத்தது. (பக்.141)

      முகமது பின் துக்ளக், அவர் காலத்தில் அடையாளப் பணத்தை (Token Currency) அறிமுகம் செய்தது அடுத்த ஒரு அடியாகும். பணம் என்பது வெறும் கைமாற்று நடவடிக்கைக்கான ஒரு ஊடகம் என்ற நிலையில், உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் இன்று அடையாளப் பணத்தைத்தான் - பொதுவாகக் காகிதச் சுற்றோட்ட ரொக்கத்தைத்தான் வைத்துள்ளன. (பக்.141)

             'அடையாளச் சுற்றோட்டப் பணம்' என்ற யோசனை இந்தியாவிற்கு புதியதாக இருந்ததால், வியாபாரிகளையும், பொது மனிதனையும் ஏற்கச்செய்வது கடினமாக இருந்தது. அதே சமயம் இப்புதிய நாணயத்தை மக்கள் போலி செய்வதை அரசாங்கம் தடுக்க முடிந்திருந்தால், துக்ளக் அதில் வெற்றி பெற்றிருப்பார். அரசாங்கத்தால் அவ்வாறு செய்ய முடியாமல் போனதால், சந்தைகளில் புதிய நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து போனது. இறுதியில் துக்ளக் அடையாளப் பணத்தைக் கைவிடுவது என்று தீர்மானித்தார். ஆகவே செம்பு நாணயத்திற்கு வெள்ளித் துண்டுகளை மாற்றித் தருவதாக வாக்குறுதி தந்தார். இந்த வழியில் பலர், புதிய நாணயங்களை மாற்றிக்கொண்டனர். ஆனால் பரிசோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட போலி நாணயங்கள் இவ்வாறு மாற்றப்படவில்லை. இப்படித் திரட்டப்பட்ட கள்ள நாணயங்கள் கோட்டைக்கு வெளியே கொட்டிக் குவிக்கப்பட்டன. பரணி இதுகுறித்துச் சொல்லும்போது, பல ஆண்டுகள் அப்படியே கிடந்தன என்று கூறுகிறார்.

       இத்தகைய இரண்டு பரிசோதனைகளும் தோற்றுப் போனதால், பேரரசின் பெருமிதம் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், பானத்தை விரயம் செய்ததையும் கூடப் பொருட்படுத்தியது. எவ்வாறாயினும் அரசாங்கம் விரைவிலேயே இதிலிருந்து மீண்டது. கி.பி. 1333 -ல் டெல்லிக்கு வந்த மொராக்கோ பயணியான இபன் பதூதா (Ibn Bat-tuta) இப்பரிசோதனைகளின் விளைவுகளால் எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ளவில்லை என்கிறார். (பக்.142)

          மேலும் இபன் பதூதா வெறும் சுற்றுலாப் பயணியாக மட்டும் இல்லை. அக்காலத்தில் இம்மாதிரியான பயணிகள் மன்னர்களின் அரவணைப்பில் இருந்தனர். அவர்களது பயணக்குறிப்புகளின் தன்மைகளுக்கு இதுவும் ஒரு காரணம். இன்னும் ஒரு படி மேலே சென்று இபன் பதூதா முகமது பின் துக்ளக் அரசாட்சியில் பிரபுவாக இருந்தார். நீதி வழங்கும் பணியாற்றினார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொராக்கோ சென்று அந்நாட்டு சுல்தானின் வேண்டுகோளின்படி தனது பயணக்கதைகளைச் சொல்ல, அவற்றை தொகுத்து எழுதினார்கள்.

     “தென்னிந்தியாவைப் பொறுத்தமட்டிலும்  பல அயல்நாட்டுப் பயணிகள் விஜயநகரம் வந்துள்ளனர். அவர்கள் விஜயநகர அரசைப்  பற்றிய முழுமையான விவரங்களை எழுதிவைத்துச் சென்றுள்ளனர். நிகோலோ கோண்டி எனும் இத்தாலியப் பயணி 1420 இல் விஜயநகர் வந்தார். 1443 இல் மத்திய ஆசியாவின் ஹீரட் நகரிலிருந்து (மத்திய ஆசியாவின் மாபெரும் அரசனான செங்கிஸ்கானின் அரசவை இருந்த இடம்) அப்துர் ரஸாக் விஜயநகருக்கு வந்தார். போர்த்துகீசியப் பயணியான டோமிங்கோ பயஸ் 1522இல் இந்நகருக்கு வருகை தந்தார். இவர்கள் அனைவரும் தங்கள் அவதானிப்புகளைப் பதிவு செய்துள்ளனர். அவை விஜயநகரப் பேரரசின் பெரும் சிறப்பை நாம் புரிந்து கொள்ள உதவுகின்றன”. (பக்.131)

     விஜயநகரப் பேரரசின் பெரும் சிறப்பை அறிய உதவும் பயணக்குறிப்புகள், டெல்லி சுல்தானியத்தை மட்டும் ஏன் சிறப்பாக சித்தரிக்க முடியவில்லை? நாம் X  பிறர் என்ற எதிர்வுகளின் அடிப்படையில் வரலாறு எழுதுவது வெறுப்பரசியலை வளர்க்கவே உதவும். டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள் போன்றோர் மிக மோசமான ஆட்சியாளர்கள்; விஜயநகர அரசர்கள் போன்ற இந்து மன்னர்கள் சிறப்பானவர்கள் என்கிற ரீதியில் வரலாற்றைக் கட்டமைக்கும் முறைமையிலிருந்து பாடநூல்கள் விடுபடவேண்டும். குழந்தைகளை வெறுப்பரசியலிருந்து மீட்டெடுக்கவும் வேண்டும்.

    விஜயநகரப் பேரரசு – ஃபெர்னாவோ நூனிஸின் வரலாற்றுப் பதிவுகள் என்னும் பயணக்குறிப்பு நூலொன்றையும் (மொழியாக்கம்: சா. தேவதாஸ், புது எழுத்து வெளியீடு: ஜூலை 2006) இங்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். 

  வரலாற்று ஆதாரங்களைப் பட்டியலிடும் இந்த பாடத்தின் நிலையே இதுவென்றால் பின்னால் வரும் ‘டெல்லி சுல்தானியம்’ போன்ற பாடங்கள் எப்படியிருக்கும்? அவற்றை அடுத்துப் பார்ப்போம்.

 (இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக