செவ்வாய், ஜூலை 16, 2019

வெறுப்பரசியலுக்கு இரையாகும் பள்ளிப் பாடநூல்கள் (இரண்டாம் பகுதி)


வெறுப்பரசியலுக்கு இரையாகும் பள்ளிப் பாடநூல்கள் (இரண்டாம் பகுதி)

 மு.சிவகுருநாதன் 

(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 28)        “மாலிக்கபூரின் படையெடுப்புக்குப் பின்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அரச குடும்பத்தைச்  சேர்ந்த பல அரசர்களால் பாண்டிய நாடு பிரித்துக்கொள்ளப்பட்டது. மதுரையில் டெல்லி  சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு  உருவாக்கப்பட்டது”. (பக்.160)

     இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி முகமது கோரியால் நிறுவப்பட்டது”. (பக்.177)

     ‘சரியா? தவறா?’ பகுதியில், “டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு  முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது”. (பக்.165)

      ‘டெல்லி சுல்தானியம்’ எனும் பாடத்தின் அறிமுகம் கீழ்க்கண்டவாறு இருக்கிறது. 

        “பதினொன்றாம் நூற்றாண்டில் வட இந்தியாவைக் கொள்ளையடித்த துருக்கியக் குதிரைப்படை வீரர்கள் அடுத்த நூற்றாண்டில் கங்கைச் சமவெளியைத் தங்கள் அரசியல் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றி பெற்றனர். அவர்களின் துணிச்சலும் மூர்க்கக்குணமுமே வெற்றிக்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், தங்களையும் தங்கள் நாட்டையும் காத்துக்கொள்ளத் தவறிய இந்திய அரசர்களின் இயலாமையே அவர்களின் வெற்றிக்கான உண்மைக்  காரணங்களாகும். இந்தியர்கள் தங்களிடையே ஒருவர் மேலொருவர் அவநம்பிக்கை கொண்டிருந்தனர். இஸ்லாமின் தொடக்கக் கால வெற்றிகளையும் அது பரவிவருவதையும் கவனத்தில் கொள்ளத் தவறினர். முஸ்லீம் வீரர்களின் மேம்பட்ட போர் செய்யும் ஆற்றல் அவர்களின் வெற்றிக்கு மற்றொரு காரணமாகும். இப்பாடத்தில் துருக்கியப் போர்வீரர்கள் எவ்வாறு இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவினர், பாபரின் வருகை வரை அவ்வாட்சியை எவ்வாறு நிலைகொள்ளச் செய்தனர் என்பன குறித்து நாம் விவாதிப்போம்”. (பக்.168)


        மம்லுக் வம்சத்தை அடிமை வம்சம் (1206 – 1290) என்றே குறிப்பிடுவதும் ஒருவகையான வெறுப்புணர்வின் வெளிப்பாடே! இம் மரபு “மம்லுக்” அரச மரபென்றும் அழைக்கப்பட்டதாம்! முஸ்லீம்களின் ஆட்சி, இஸ்லாமிய ஆட்சி, முஸ்லீம் அரசு எனத் தொடர்ந்து வருவதையும்,  இந்தத் தலைப்பில் சொல்லப்படுவதைக் கவனியுங்கள்.

      இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி முகமது கோரியால் கி.பி. (பொ.ஆ) 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. அவருக்கு மகன்கள் இல்லாத காரணத்தால் பன்டகன் (இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்) எனும் தனிவகை அடிமைகளைப் பேணினார். அவர்கள் மாகாண அளவில் ஆளுநர்களாகப் பதவியில் அமர்த்தப்பட்டுப் பின்னர் சுல்தான் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். 1206 இல் கோரியின் இறப்பிற்குப் பின்னர், அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார். அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார். இவ்வரச மரபு “மம்லுக்” அரச மரபென்றும் அழைக்கப்பட்டது. மம்லுக் எனும் அராபியவார்த்தைக்கு ‘அடிமை’ என்று பொருள். குத்புதீன் ஐபக், சம்சுதீன் இல்துமிஷ், கியாசுதீன் பால்பன் ஆகிய மூவரும் இவ்வம்சத்தைச்  சேர்ந்த மூன்று மாபெரும் சுல்தான்கள் ஆவர். அடிமை வம்சத்தினர் இத்துணைக்கண்டத்தை எண்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தனர்”. (பக். 168,169)
       
       கஜினி முகமது, முகமது கோரி, தரெய்ன் போர் பற்றி கூறப்படும் பத்திகள் கீழே தரப்படுகின்றன.

கஜினி மாமூது (கி.பி.(பொ.ஆ)  997 – 1030)

         “கஜினி மாமூது இந்தியாவின் மீது சூறையாடலை நோக்கமாகக் கொண்டதிடீர் படையெடுப்புகளைப் பதினேழு முறை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அக்காலக்கட்டத்தில் வட இந்தியா பல சிற்றரசுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றுள் ஒன்றான ஷாகி அரசு பஞ்சாப் முதல் காபூல் வரை பரவியிருந்தது. கன்னோஜ், குஜராத்,  காஷ்மீர், நேபாளம், மாளவம், பந்தேல்கண்டு ஆகியன ஏனைய முக்கிய அரசுகளாகும். ஷாகி அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளில் அதன் அரசர் ஜெயபாலர் 1001 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டார். இத்தோல்வியைப் பெருத்த அவமானமாகக்  கருதிய ஜெயபாலர் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார். அவருக்குப்பின் வந்த ஆனந்தபாலர் மாமூதுக்கு எதிராகப்  போரிட்டார். 1008ஆம் ஆண்டு பெஷாவருக்கு அருகேயுள்ள வைகிந்த் எனுமிடத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டார். வைகிந்தில் பெற்ற வெற்றியின் விளைவாக மாமூது பஞ்சாப் வரை தனது ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்தினார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின்  மீது அவர் மேற்கொண்ட படையெடுப்புகள் வட இந்தியாவின் செல்வச் செழிப்புமிக்க கோவில்களையும் நகரங்களையும்  கொள்ளையடிப்பதையே நோக்கமாகக்  கொண்டிருந்தன. 1011இல் பஞ்சாபிலுள்ள நாகர்கோட், டெல்லிக்கு அருகேயுள்ள தானேஸ்வர் ஆகிய நகரங்கள் அவரால் சூறையாடப்பட்டன. 1018ஆம் ஆண்டில் மாமூது புனித நகரமான மதுராவைக் கொள்ளையடித்தார்.  கன்னோஜையும் அவர் தாக்கினார். கன்னோஜின் அரசர் ராஜ்யபாலர் கன்னோஜைக் கைவிட்டுவிட்டு வெளியேறி பின்னர் இயற்கை எய்தினார். மாமூது பெரும் செல்வத்துடன் ஊர் திரும்பினார்.  அவருடைய அடுத்தப் படையெடுப்பு குஜராத்தின் மீதானதாகும். கி.பி. 1024இல் மாமூது முல்தானிலிருந்து புறப்பட்டு ராஜபுதனத்தின்  குறுக்கே படையெடுத்து வந்து சோலங்கி அரசர் முதலாம் பீமதேவரைத் தோற்கடித்து அன்கில்வாட் நகரைச் சூறையாடினார். மாமூது மிகவும் புகழ்பெற்ற சோமநாதபுரம் கோவிலைக்  கொள்ளையடித்து அங்கிருந்த கடவுள் சிலையை உடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் பின்னர் சிந்து பாலைவனத்தின் வழியாக அவர் நாடு திரும்பினார். இப்படையெடுப்பே இந்தியாவின் மீதான அவரின் இறுதிப் படையெடுப்பாகும். கி.பி. 1030இல் மாமூது  மரணமடைந்தார். கஜானாவியப் பேரரசு தோராயமாக பாரசீகம், ஆக்ஸஸுக்கு அப்பால் உள்ள பகுதிகள், ஆப்கானிஸ்தான், 
பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது”. ((பக்.146)

முகமது கோரி (1149 – 1206)

        “கோர் பகுதியைச் சேர்ந்த முகமது அல்லது முகமதுகோரி கஜினிக்குக் கப்பம் கட்டிய குறுநிலத் தலைவராக இருந்தவர். கஜினி மாமூதின் இறப்பிற்குப் பின்னர் சுதந்திரமானவரானார். கஜானாவியப் பேரரசின்  வீழ்ச்சியைச் சாதகமாக்கிக்கொண்ட முகமது  கோரி கஜினியைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தார். கஜினியில் தனது நிலையை வலுவானதாகவும் பாதுகாப்பானதாகவும்  ஆக்கிக்கொண்ட பின்னர் இவர் தனது கவனத்தை இந்தியா மீது திருப்பினார். கஜினி மாமூதைப் போலன்றி இவர் இந்தியாவைக்  கைப்பற்றி தனது பேரரசை விரிவாக்கம் செய்ய விரும்பினார். கி.பி. (பொ.ஆ) 1175 இல் முல்தானைக் கைப்பற்றிய அவர் அடுத்தடுத்த  படையெடுப்புகளின் மூலம் ஒட்டுமொத்த முல்தானையும் கைப்பற்றினார். 1186 இல் பஞ்சாப்பைத் தாக்கி அதனைக் கைப்பற்றினார்”.  (பக். 146,147)

       பிருதிவிராஜ் செளகானை மட்டும் பாடநூல் இந்து அரசர் என்று சொல்கிறது. அவருடன் கூட்டணி ஏற்படுத்திய வட இந்திய அரசர்கள் எனவும் சொல்லப்படுகின்றனர். இதற்கான தனிப்பட்ட காரணங்கள் உண்டா என்று தெரியவில்லை. விஜய நகர, பிற்காலச் சோழ, பிற்காலப் பாண்டிய அரசர்கள் அனைவரும் மதச்சார்பற்ற அரசர்களாக பாடநூலில் இருக்கின்றனர்.


  
தரெய்ன் போர் (1191 – 1192)

         “தாங்கள் அகப்பட்டுக்கொண்ட ஆபத்தான சூழலைப் புரிந்துகொண்ட வடஇந்திய இந்து அரசர்கள் பிருதிவிராஜ் செளகானின் 
தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கினர். நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவராகப்  பிருதிவிராஜ் சௌகான் 1191இல் டெல்லிக்கு  அருகே தரெய்ன் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார்.  இப்போர் முதலாம் தரெய்ன் போர் என்று அழைக்கப்படுகிறது. இத்தோல்விக்குப் பழி வாங்கும் பொருட்டு முகமது கோரி தீவிரமான ஏற்பாடுகளை மேற்கொண்டு பெரும்படையைத்  திரட்டினார். தன்னுடைய பெரும்படையோடு பெஷாவர், முல்தான் வழியாக லாகூரை வந்தடைந்தார். தன்னுடைய மேலாதிக்கத்தை அங்கீகரிக்குமாறும் ஒரு முஸ்லீமாக மாறும்படியும் அவர் பிருதிவிராஜ் சௌகானுக்குச்  செய்தியனுப்பினார். அதனை மறுத்த  பிருதிவிராஜ் போருக்குத் தயாரானார். பல இந்து அரசர்களும் குறுநிலத் தலைவர்களும்  அவருடன் அணிவகுத்தனர் 1192இல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜின் படைகளை முற்றிலுமாகத் தோற்கடித்த முகமதுகோரி அவரைக் கைது செய்து கொன்றார். 

        இரண்டாம் தரெய்ன் போர் ராஜபுத்திரர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய போராகும். அவர்களின் அரசியல் கௌரவம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. சௌகான் அரசு அப்போது  படையெடுத்து வந்தவரின் காலடியில் கிடந்தது. இவ்வாறு இந்தியாவில் ஆஜ்மீரில் முதல் இஸ்லாமிய அரசு உறுதியாக நிறுவப்பட்டது. இந்திய வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கியது. இரண்டாம் தரெய்ன் போரில் வெற்றி பெற்ற பின்னர் தனது நாட்டின் கிழக்கெல்லையில்  அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய துருக்கியரையும் மங்கோலியரையும் எதிர்கொள்வதற்காக முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார். கி.பி.  (பொ.ஆ) 1206இல் முகமதுகோரி இயற்கை எய்தவே இந்தியாவிலிருந்த அவருடைய திறமை வாய்ந்த தளபதி குத்புதீன் ஐபக் முகமது கோரிக்குச் சொந்தமாயிருந்த இந்தியப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டின்  கீழ்க் கொண்டுவந்த பின்னர் தன்னை ‘‘டெல்லியின் முதல் சுல்தான்’’ எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார்”. (பக்.147)

      அக்காலத்தில் எந்த மன்னருக்கும் நம்பிக்கைக்குரிய உதவியாளர் அல்லது ஆலோசகர்கள் இல்லாமலில்லை. அவர்களது ஆலோசனைகளின்படியே அரசும், நிர்வாகமும் இயங்கின. பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் இந்த இடத்தில் பிராமணர்கள் இருந்தனர். எனவே அவர்களுக்குச் சாதகமான பார்ப்பனீய அரசாக இவை செயல்பட வைக்கப்பட்டன. ரசியா பெண் அதுவும் இஸ்லாமியப் பெண்ணரசி என்பதால் நாலாந்தர கிசுகிசு பாணியிலமைந்த செய்திகளுக்குப் பாடநூல் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பது வேதனைக்குரியது.

      அன்றைய காலத்தில் நிகழ்ந்த பிரபுக்களின் ஆதிக்கப்போட்டி வரலாற்றில் யாவரும் அறிந்த ஒன்று. ஜலாலுதீன் யாகுத் இல்லாமலிருந்தாலுகூட அங்கு ஆதிக்கபோட்டி நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. சுல்தான் ரசியாவின் கொலையை நியாயப்படுத்தும் தொனி இக்குறிப்பில் உள்ளது. இதில் இஸ்லாம் வெறுப்புடன் பெண் வெறுப்பும் இணைந்து செயல்படுகிறது. 

    வதந்திகளை வரலாறாக்கக் கூடாது. நாற்பதின்மர் என்றும் சாகல்கனி எனவும் அழைக்கப்பட்ட துருக்கிய தலைமைகளுக்கும் பேரரசிற்கும் (சுல்தானியம்) எழுந்த அதிகாரப் போட்டியிலும் பெண் நாடாள்வதா என்ற ஆணாதிக்க வெறியுடன் இணைந்து சுல்தான் ரசியா கொலை செய்யப்பட்டார் என்பதே உண்மை. இவருக்குப் பின்னால் வந்த சுல்தான் பால்பன் துருக்கிய உயர்குடிகளின் அதிகாரங்களைத் தகர்த்தார் என்பதிருந்தே இவற்றை அனுமானிக்க இயலும்.

     துருக்கிய பிரபுக்கள் பெண்ணின் விழுமியங்களை அவள் தகர்ப்பதாகவும், ஒரு அபிசீனியப் பிரபுவான  யாகூத்கானிடம் (Yaqut khan) அதிக நட்புக் கொண்டுள்ளதாகவும்  குற்றம் சாட்டினர். யாகூத்கான் அரச நிலையத்திற்குக்  காவல்துறைக் கண்காணிப்பாளராக  நியமிக்கப்பட்டிருந்தார். அரசியுடன்  நெருக்கமாக இருக்க வேண்டியதையும்  உட்படுத்திய பதவி அது. ஆனால் சமகால வரலாற்று ஆசிரியர்கள் ரஜியாவுக்கு அவருடன் எந்தத் தனிப்பட்ட பழக்கமும் இருந்ததாகக் குற்றம் சாட்டவில்லை. குதிரையின் இருக்கை இருந்து இறங்குவதற்காக அவர் அவளைத் தூக்கினார் என்பதே அப்பெண் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. இக்குற்றச்சாட்டு அற்பத்தனமானது. ஏனென்றால், ரஜியா பொது இடத்தில் எப்போதும் யானை மீதுதான் சவாரி வருவாரே தவிர குதிரை மீதல்ல.  (பக்.105, மத்திய கால இந்திய வரலாறு- சதிஷ் சந்திரா, பாரதி புத்தகாலயம் வெளியீடு: டிச. 2016)

      “ரஸ்ஸியா, ஜலாலுதீன் யாகுத் எனும் எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப் பெரிதும் நம்பத் தொடங்கினார். அப்போக்கு துருக்கிய பிரபுக்கள் கலகம் செய்யக் காரணமாயிற்று. அவருக்கு எதிராகத் துருக்கிய பிரபுக்கள் செய்த
சதியால் 1240 இல் ரஸ்ஸியா கொலையுண்டார்”. (பக்.170)

முகமது பின் துக்ளக் (1325 – 1351)

        “முகமது பின் துக்ளக் மிகவும் கற்றறிந்த மனிதர். ஆனாலும் அவர் குரூரம் நிறைந்தவராவார். அலாவுதீன் நாடுகளைக் கைப்பற்றினார், கொள்ளையடித்தார். அவ்வரச குடும்பங்கள் தன்னைச் சார்ந்திருக்குமாறு செய்தார். அதற்கு நேர்மாறாக முகமது பின் துக்ளக் இத்துணைக்கண்டம் முழுவதையும் தனது நாடாக மாற்றக் கனவு கண்டார். தனது இறையாண்மையை விரிவு செய்வதற்கு வசதியாக தனது தலைநகரை டெல்லியிலிருந்து நாட்டின் மையப்பகுதியிலிருந்த தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரியின் பெயரையும் தௌலதாபாத் என மாற்றினார். தனது திட்டம் தவறானது என முகமது பின் துக்ளக் உணர்ந்ததால் மீண்டும் டெல்லிக்கே திரும்புமாறு அனைவருக்கும் ஆணையிட்டார். சுல்தானுடன் டெல்லி திரும்பிய மொராக்கோ நாட்டுப் பயணியான இபன் பதூதா டெல்லியை அடைந்தபோது அது,“காலியாக,      கைவிடப்பட்டதாக ஆனால் குறைந்தளவு மக்களுடன் இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார். டெல்லியிலிருந்து தௌலதாபாத் செல்ல நாற்பது நாட்கள் நடந்தே செல்ல வேண்டும். பெரும்பாலான மக்கள் தௌலதாபாத் புறப்பட்டுச் சென்றனர். சிலர் ஒளிந்து கொண்டனர். அவர்கள் கண்டுபிடிக்கப்படுகையில் அவர்களில் ஒருவர் பார்வையற்றவராக இருந்தபோதும் மற்றொருவர் பக்கவாத நோயாளியாக இருந்தபோதும் கொடூரமான தண்டனைக்கு  உள்ளாக்கப்பட்டனர். எட்டு அல்லது பத்து மைல் அளவு பரவியிருந்த அந்நகரைப் பற்றி ஒரு வரலாற்றறிஞர் “அனைத்தும் அழிக்கப்பட்டன. நகரத்தின் அரண்மனைகளில், கட்டடங்களில், புறநகர் பகுதிகளில் என எங்கும் ஒரு நாயோ, பூனையோ கூட விட்டுவைக்கப்படவில்லை எனும் அளவுக்கு முழுமையாகப் பாழானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.  அலாவுதீன் நிலவரியைத் தானியமாக வசூல் செய்யும் முறையைப் பின்பற்றினார். துக்ளக் நிலவரியை உயர்த்தியதோடு அதுமுதல் நிலவரி பணமாக வசூலிக்கப்படவேண்டுமென ஆணை பிறப்பித்தார். அது  பஞ்சகாலங்களில் பெரும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியது. போதுமான அளவுக்கு நாணயங்களோ, புதிய நாணயங்களை வெளியிடும் அளவுக்கு வெள்ளியோ கைவசம் இல்லை என்பதை அறிந்துகொண்ட துக்ளக் செப்பு நாணயங்களை அடையாளப் பணமாக வெளியிட்டார். வெகுவிரைவில் கள்ள நாணயங்கள் பெருகுவது அன்றாட நிகழ்ச்சியானது. இதன் விளைவாக ஒட்டு மொத்த வருவாய் நிர்வாகமுறை சீர்குலைந்தது. வெளிநாட்டு வணிகர்கள் வியாபாரத்தைநிறுத்தியதால் வணிகம் பாதிப்புக்குள்ளானது. சுல்தான் அடையாளப் பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு அதற்கு மாற்றாகத் தங்க,  வெள்ளி நாணயங்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அரசு திவாலானது. தோஆப் பகுதியில், முகமது, நிலவரியை  உயர்த்தியதன் விளைவாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் வெடித்தன. அவை கொடூரமான முறைகளில் அடக்கப்பட்டதால் விவசாயிகள்  வேளாண்மையைக் கைவிட்டனர். அதன் விளைவாக அடிக்கடிப் பஞ்சங்கள் ஏற்பட்டன. முகமது பின் துக்ளக் சுல்தானாக இருபத்தைந்து  ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்”. (பக்.173)
 
     முகமது பின் துக்ளக்கை பற்றிய அவதூறுகளுக்கு சென்ற பகுதியில் நிறைய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. சதீஷ் சந்திராவின் மத்திய கால இந்திய வரலாற்றிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. இபன் பதூதாவை மேற்கொள் காட்டி மோசமான வரலாறு கட்டமைக்கப்படுகிறது.  இதுவும் வெறுப்பரசியலின் உத்திகளில் ஒன்றாக இருப்பதை அவதானிக்கலாம்.

இஸ்லாமியக் கலை, கட்டடக்கலை

          “உயர்வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம் பிரபுக்கள், அதிகாரிகள், வீரர்கள் ஆகியோர் தங்கள் குடியிருப்புக் கட்டடங்களை முதலில்  நகரங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும்கட்டிக் கொண்டனர். அவற்றைச் சுற்றிப் பேரரசு பாணியிலான அழகு மிக்க மசூதிகளை டெல்லி முஸ்லீம் ஆட்சியாளர்கள் கட்டினர். மசூதிகளும் மதரசாக்களும் (கல்வி நிலையங்கள்) கட்டட வடிவத்தில் வேறுபட்டிருந்தன. குரானிலுள்ள வரிகளைச் செதுக்கி நேர்த்தியாகவும் நளினமாகவும் அலங்கரிக்கப்பட்ட கதவுகளும், சுவர்களும் அக்கட்டங்களுக்குத் தனித்தன்மையான தோற்றத்தை வழங்கின. அக்கட்டடங்களின் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும் அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்திருந்தன. எனவே அப்பாணி இந்தோ–சாராசானிக் கலைவடிவம் என அழைக்கப்பட்டது. குதுப்மினார். அலெய் தர்வாசா, குவ்வத் உல் இஸ்லாம் மசூதி, மோத்தி மசூதி, இல்துமிஷ், பால்பன் ஆகியோரின் கல்லறைகள், தௌலதாபாத், பிரோஷ் ஷா பாத் ஆகிய இடங்களிலுள்ள கோட்டைகள் என அனைத்தும் அப்பாணியில்  அமைக்கப்பட்டனவாகும்”. (பக்.176)

   தொடக்க கால பாரசீக பாணியிலமைந்த கட்டடங்கள் இந்தோ–சாராசானிக் கலைவடிவம் என்று அழைக்கப்பட்டதா?

சித்தூர் சூறையாடல் (1303)

   “சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்து விடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி ”ஜவ்ஹர்”  எனப்படும் சடங்கை நடத்தினர்,  இதன்படி  ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர். பெண்கள் தீப்புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்”. (பக்.172)

      சித்தூர் சூறையாடல் போன்று இந்திய (இந்து) மன்னர்களின் சூறையாடல்களை சொல்லவிடாமல் தடுப்பது எது? மேலும் இவர்களது படையெடுப்பு மற்றும் வெற்றிகளைப் பெருமிதமாகக் கொண்டாடும் போக்கு பாடநூலெங்கும் நிறைந்துள்ளது. முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் கால ஈழப்போர் சூறையாடல்களை வெற்றி, விரிவாக்கம், அதிகாரத்தை நிலைநாட்டுதல் எனும் பெருமிதச் சொல்லாடல்களாக மாற்றும் பாடநூல்களை கொஞ்சம் உற்று நோக்குங்கள்.  


முதலாம் ராஜராஜன் (கி.பி (பொ.ஆ) 985 -1014)

       “சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் ஆவார். அவர் காலத்தை வென்ற புகழை ஈட்டினார். தென்னிந்தியாவின் பெரும் பகுதியின் மீது சோழர்களின்  அதிகாரத்தை அவர் நிலைநாட்டினார். அவருடைய கப்பற்படையெடுப்புகள் மேலைக் கடற்கரையிலும் இலங்கையிலும்  சோழர்ஆட்சி விரிவடைவதற்கு வழிவகுத்தன. புகழ்பெற்ற ராஜராஜேஸ்வரம் கோவிலைத்(பிரகதீஸ்வரர் கோவில்) தஞ்சாவூரில் கட்டினார். அவருடைய மகனும் அவருக்குப்பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவருமான முதலாம் ராஜேந்திரன் (கி.பி. (பொ.ஆ) 1014 - 1044)  தந்தையைப் போலவே பேரரசை விரிவுபடுத்தி கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் சோழப்பேரரசு  தென்னிந்தியாவில் ஒரு வலுவான சக்தியாக விளங்கியது. கி.பி. (பொ.ஆ) 1023இல் அரியணை ஏறிய பின்னர் அவருடைய மிக முக்கியப் படையெடுப்பான வட இந்தியப் படையெடுப்பில் பல பகுதிகளைக்  கைப்பற்றினார். கங்கை கொண்டான் (கங்கையைக் கைப்பற்றியவர்) என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். வடஇந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் கோவில் எழுப்பப்பட்டது. அவருடைய கடற்படை ஸ்ரீவிஜயப் பேரரசைக் (தெற்கு சுமத்ரா) கைப்பற்ற அவருக்குத் துணைபுரிந்தது.  சோழர்களின் கடற்பகுதிகளின் மீதான கட்டுப்பாடு கடல் கடந்த வணிகம் செழித்தோங்க உதவியது”. (பக்.154)

    “மனு சாஸ்திரப்படி தான் ஆட்சிச் செய்வதாகக் கூறிய (பக்.161) பிற்காலப் பாண்டியர்களையோ, வேதக்கல்வியையும் சமஸ்கிருதத்தையும் உயர்த்திப்பிடித்த பிற்காலச் சோழர்களையும் (குறிப்பாக விஜயாலயன் மரபினர்) இந்து மன்னர்கள் என்றோ சைவ, வைணவ மன்னர்கள் என்று குறிப்பிடாமல் தமிழ் மன்னர்கள் என்பதும் வட இந்தியாவில் ராஜபுத்திரர் உள்ளிட்டவர்களை இந்து மன்னர்கள் என்று சொல்லாமல் இந்திய மன்னர்கள் என்பதும் பாசிச வெறுப்பரசியல் வெளிப்பாடு என்பதை மிக எளிதாக உணரலாம்.

    “பாண்டிய அரசர்கள் வேத நடைமுறைகளுக்கு  ஆதரவு நல்கினர். வேள்விக்குடிச் செப்பேடுகளும்  ஏனைய பொறிப்பியல் சான்றுகளும் சிறந்த பாண்டிய அரசர்கள் ஒவ்வொருவரும் செய்த அஸ்வமேத யாகம், ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய  வேள்வி போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன. பாண்டிய மன்னர்கள் சைவம், வைணவம்  ஆகிய இரண்டையும் சமமாகவே கருதினர் என்பதைப் பொறிப்புச் சான்றுகளின் தொடக்கப் பகுதிகள் உணர்த்துகின்றன. இரு பிரிவைச்  சேர்ந்தகோவில்களும் பாண்டிய மன்னர்களின்  ஆதரவைப் பெற்றிருந்தன. இக்கோவில்களுக்கு  நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன.  வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. அவை புனரமைக்கப்பட்டுப் புதிய கோபுரங்களும்  விசாலமான மண்டபங்களும் கட்டப்பட்டன.  புகழ் பெற்ற சைவ, வைணவ அடியார்கள்  (நாயன்மார்கள், ஆழ்வார்கள்) தமிழ் இலக்கிய  வளர்ச்சிக்கும், ஆன்மிக அறிவு மேம்பாட்டிற்கும்  பெரும் பங்களிப்பைச் செய்தனர்.  அக்காலப் பகுதியில் தீவிர மத மோதல்கள்  இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. அக்காலகட்டப் பக்தி இயக்கம் புறசமயத்தாரை வாதத்திற்குத் தூண்டின. அப்படிப்பட்ட விவாதப் போட்டிகளில்  பலமுறை பௌத்தர்களும் சமணர்களும்  தோற்கடிக்கப்பட்டதாகப் பக்தி இலக்கியங்கள்  குறிப்பிடுகின்றன. அக்காலப் பாண்டிய அரசர்கள்  தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆதரித்து  வளர்த்தனர்”. (பக்.162)

          “சோழர்கள் சைவத்தின் மீது மிகுதியான  பற்றுக் கொண்டவராவர். சிவபெருமானின்  திருவிளையாடல்கள் சைவ அடியார்களான  நாயன்மார்களால் பாடல்களாக இயற்றப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பியால்  தொகுக்கப்பட்ட அவை ’திருமுறைகள்’ என 
அழைக்கப்படுகின்றன. கோவில்கள் சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான  கோவில்கள் கட்டப்பட்டன. தஞ்சாவூர்,  கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம்  ஆகிய இடங்களிலுள்ள கோவில்கள்  சோழர்களின் கலைகளான கட்டடங்கள்,  சிற்பங்கள், செப்புச்சிலைகள் ஓவியங்கள்,  படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன. சோழர்கள் காலக் கோவில்கள்  வழிபாட்டிற்கான இடங்கள் மட்டுமல்லாமல்  பெருமளவு நிலங்களைச் சொந்தமாகக்  கொண்டிருந்தன. அவை கல்வியையும், பக்திக் கலைகளின் வடிவங்களான நடனம்,  இசை, நாடகம் ஆகியவற்றையும் வளர்த்தன. நடனமாதர், இசைக்கலைஞர்கள், பாடகர்கள்,  இசைக் கருவிகளை மீட்டுவோர், அர்ச்சகர்கள்  ஆகியோர் கோவில் பணியாளர்கள் ஆவர்”. (பக்.157)

   இவர்களது மதப்பற்று மற்றும் செயல்பாடுகள் மட்டும் எப்படி வெகு இயல்பானதாக கட்டமைக்கப்படுகிறது? வழிபாட்டிடம் மட்டுமல்லாமல் கோயில்களுக்கு பெருமளவு நிலங்கள் எங்கிருந்து வந்தது? சைவ, வைணவக் கோயில்கள் எந்தக் கல்வியை வளர்த்தன? இவை சமஸ்கிருத வேதபாடசாலையாகச் செயல்பட்ட வரலாற்றைத் திரித்து, பொய்மைகள், புனைவுகள் வாயிலாக, “சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள்’  - இக்கூற்றை உறுதிசெய்க”. (பக். 166) என்று உயர் சிந்தனை வினா (!?) வினவப்படுகிறது.
      கோயில் பணியாளர்கள் பட்டியலில் அர்ச்சகர்கள் இறுதியில் வருகின்றனர். இவர்களது அதிகாரங்கள்? நடனமாதர், இசைக்கலைஞர்கள், பாடகர்கள்,  இசைக் கருவிகளை மீட்டுவோர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட  உரிமைகள் எவை? நடனமாதர் எனப்படும் தேவதாசிகளின் நிலை? முந்தைய பாடநூல் இவர்களை ஆலய சேவகிகள் என்றது. இப்போது ஆலயப் பணியாளர்கள்? இதுதான்  மாற்றமா?
 
    அரசர்கள் அவர்கள் சார்ந்த மத அடிப்படையில் அணுகும் போக்கு மிகவும் அபாயகரமானது. குழந்தைகளிடம் வளர்க்கப்படும் வெறுப்பரசியல் சமூக அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்கக்கூடியது. எனது பழைய பதிவு ஒன்றிலிருந்து சில வரிகள் கீழே தரப்படுகின்றன.

     “முதலாம் ராஜராஜன் மதுரையை அழித்தான். கொல்லத்தை வெற்றிகொண்டான். தன்னுடைய தூதன் அவமதிக்கப்பட்டதற்காக 18 காடுகளைக் கடந்து சென்று உதகை அழித்ததை ஒட்டக்கூத்தர் எழுதுகிறார்.

      சோழ இளவரசன் முதலாம் ராஜேந்திரன் வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தபட்டு ‘பஞ்சவன் மாராயன்’ என்கிற பட்டமளிக்கப்பட்டது. கொங்கணம், துளுவம் ஆகிய நாடுகளை வென்றதோடு சேரரை அவர்களது மலை நாட்டிலிருந்து விரட்டியடித்தான்.

      ஈழப்போரில் ஈழமண்டலம் முழுவதும் இவர்களது ஆளுகைக்கு வந்தது. ஈழத்தின் தலைநகராக இருந்த அனுராதபுரம் முற்றிலும் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பொலனருவ சோழர்களின் புதிய தலை நகரானது. இதற்கு ‘ஜனநாதமங்கலம்’ எனப் பெயரிட்டான்.

      போரில் புத்த மத விகாரைகள் அழிக்கப்பட்டன. செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன. பொலனருவ -ல் சிவன் கோயில் கட்டப்பட்டது. சிங்களத்துக் கிராமங்கள் தஞ்சைப் பெரியகோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டன.

     முதலாம் ராஜேந்திரன் ஈழ மன்னனை வெற்றி கண்டு அவனது நாடு, முடி, பட்டத்தரசி, மகள், செல்வம், தேர்கள், இந்திரனின் தூய மாலை, அவனிடத்தில் விட்டுச் செல்லப்பட்ட பாண்டியனின் முடி ஆகியவற்றைக் கைப்பற்றினான் எனக் கரந்தைச் செப்பேடுகள் குறிப்பிடுகிறது. இதைப்பற்றி மகாவம்சம் கூறுவதாவது.

      “அரசன் ஐந்தாம் மகிந்தனின் 36 –ம் ஆட்சி ஆண்டில், மகேசியையும் அவனுக்கு மரபு வழியாகக் கிடைத்த அரிய அணிகலன்களையும், பதக்கங்களையும், அரசர்க்குரிய ஆபரணங்கள், விலை மிக்க வைர அணிகலன்களையும் கடவுளால் வழங்கப்பட்டதும் உடைக்க முடியாதுமான வாளையும், கிழிந்த துணி ஒன்றின் சிதைந்த பகுதியையும் சோழர்கள் கைப்பற்றினர். ஆனால் அரசன் அஞ்சி காட்டுக்குள் ஓடிவிட்டான். உடன்பாடு செய்துகொள்ளுவதாகச்ச் சொல்லி அவனை அவர்கள் உயிருடன் பிடித்துக்கொண்டார்கள். சோழப்படையினர் தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குச் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றில் இருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண் பட்ட இடங்களில் எல்லாம், பவுத்த சமயத்து மடங்களை அழித்து, இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்கள் போல, இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்.” (சோழர்கள்: கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி நூலிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் இது.)

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக