வெள்ளி, ஜூலை 05, 2019

இந்திய அணு உலைகளின் மின்உற்பத்திக் கனவு!


இந்திய அணு உலைகளின் மின்உற்பத்திக் கனவு!

மு.சிவகுருநாதன்

(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 25) 



     அணுசக்தி, அணு உலைகளின் மின்னுற்பத்தி, கதிரியக்கம் போன்றவற்றில் தவறான தகவல்களை அளிப்பதையே பாடநூல்கள் கொள்கையாகவும் வரைவிலக்கணமாகவும் கொண்டுள்ளன. 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடநூலில் சில உண்மைகள் மட்டும் ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். குறிப்பாக, கதிரியக்கப் பாதிப்புகளை ஓரளவிற்கேனும் ஒத்துக்கொள்ள அறிவியல் பாடம் எழுதியவர்களுக்கும் மனம் வந்தது பாராட்டத்தக்கது.  10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் வழக்கமான அணுப் பெருமித உற்பத்தியில் ஈடுபடுகிறது. இரண்டு பாடங்களிலிருந்தும் அணுசக்தி தொடர்பான சிலவற்றைக் கவனிப்போம். 

        கதிரியக்கப் ‘பாதுகாப்பு வழிமுறைகள்’ குறித்து,

       “அன்றாடம் நீங்கள் சூரியனிடமிருந்து சில இயற்கைக் கதிரியக்கங்களைப் பெறுகின்றீர்கள். மேலும் மண் மற்றும் பாறைகள், வீட்டு உபயோகப் பொருள்களான தொலைக்காட்சி, நுண்ணலைச் சூடேற்றி (micro oven), அலை பேசி மற்றும் மருத்துவ துறையில் பயன்படும்  X கதிர்கள் ஆகியவற்றிலிருந்து கதிரியக்கங்கள் வெளியாகின்றன. இவை மிகக் குறைந்த செறிவைப் பெற்றுள்ளதால்  கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. அணுக்கரு சோதனைகளை வளிமண்டலத்திலும், பூமிக்கடியிலும் நிகழ்த்துவதால் வெளியாகும் கதிர்வீச்சுகளும், அணுக்கரு உலையிலிருந்து  வெளியாகும்  கதிர்வீச்சுகளுமே மனிதன் உருவாக்கிய  இரண்டாவது கதிரியக்க மூலமாகக் கருதப்படுகிறது”. (பக்.82, X அறிவியல்)
 
      “கவனக் குறைவாகவும் முறையின்றியும் கதிரியக்கப் பொருள்களை கையாள்வதால், மனிதர்களுக்குத் தீங்கினை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமானக் கதிர்வீச்சுகள் வெளியாகின்றன. மேலும் நீண்ட காலம்  கதிரியக்கங்களுக்கு மிக அருகில் பணி செய்யும் ஒருவரின் உடல்நலம் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதுடன் மரபியல் ரீதியாகவும் பாதிக்கப் படக்கூடும்”. (பக்.83, X அறிவியல்)

‘அனுமதிக்கப்பட்ட  கதிரியக்க அளவு’ பற்றி,

    “மனித உடலின்மீது கதிர்வீச்சுப் படும்போது பாதிப்பை ஏற்படுத்தாத கதிர்வீச்சின் பெரும அளவை பன்னாட்டு கதிரியக்கப் பாதுகாப்புக் கழகம் (ICRP) பரிந்துரை செய்துள்ளது. 20 மில்லி சிவர்ட் என்பதே ஓர் ஆண்டிற்கான கதிரியக்கப் பாதிப்பின் பாதுகாப்பான அளவாகும். இதனை ராண்ட்ஜன் அலகில் குறிப்பிடும்போது கதிர்வீச்சு ஒரு வாரத்திற்கு 100 மில்லி ராண்ட்ஜன் என்ற அளவில் இருக்க வேண்டும்.  கதிர்வீச்சுப் பாதிப்பு 100 R என்றிருந்தால் மிகவும் அபாயகரமான பாதிப்பான ரத்தப் புற்றுநோயை (ரத்தச் சிவப்பணுக்களின் அழிவு) ஏற்படுத்தும். கதிர்வீச்சுப் பாதிப்பு 600 R என்ற அளவில் இருக்கும்போது இறப்பை உண்டாகும்”.  (பக்.83, X அறிவியல்)

        அணு சக்தி மிக அதிகளவில் கிடைப்பதான ஒரு பாவனையை உருவாக்குவது தொடர்கிறது. பழைய பாடநூல்களிலும் இதே நிலைதான். இவர்களது வல்லாதிக்க கனவுகளுக்கு குழந்தைகளிடம் பொய்மைகளை விதைப்பது சரியா என்பதைக்கூட யோசிப்பதில்லை.

    10 ஆம் வகுப்பு சமூக அறிவியலில், ‘மரபுசார் ஆற்றல் வளங்கள்’ தலைப்பில் அனல் மின்சக்தி, அணுசக்தி  ஆகியன் விவரிக்கப்படுகின்றன. அவைகள் பின்வருமாறு: 

அ) அனல் மின்சக்தி

         “உயிரினப் படிமங்களான, நிலக்கரி, பெட்ரோலியம், டீ்சல் மற்றும் இயற்கை எரிவாயு  போன்றவற்றிலிருந்து அனல் மின்சக்தி தயாரிக்கப்படுகிறது. தேசிய அனல்மின் நிறுவனம் (NTPC) 1975-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்சமயம்  தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் 13 நிலக்கரி சார்  அனல்மின் திட்டங்களும் 7 இயற்கை எரிவாயு திரவ  எரிபொருள் சார்ந்த அனல்மின் திட்டங்களும் அசாம்,  பீ்கார், ஜார்கண்ட் ,சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் மேற்கு  வங்கம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இவை நிறுவப்பட்டு 90 சதவீதத்தை உற்பத்தி  செய்கின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்  அனல் மின் சக்தியில் 5 சதவீதத்தை தமிழ்நாடு உற்பத்தி  செய்கிறது. நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி  மற்றும் எண்ணூர் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய  அனல் மின் நிலையங்களாகும்”.

ஆ) அணுசக்தி 

        “அணுக்கரு பிளவு அல்லது இணையும்போது கவளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி  அணு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. யுரேனியம்  மற்றும் தோரியம் தாதுக்களிலிருந்து அணு்சகதி  பெறப்படுகிறது. இந்தியாவில் அணுமின் திட்டம் 1940- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பின்னர் 1948-ஆம்  ஆண்டில் டாடா அணு ஆராய்ச்சிக் கழகம் இத்துடன்  இணைக்கப்பட்டது. 320 மெகாவாட் உற்பத்தி  திறனுடன் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம்  1969 ஆம் அண்டு மும்பைக்கு அருகில் உள்ள  தாராப்பூரில் நிறுவப்பட்டது. பின்னர் இராஜஸ்தான்  மாநிலத்தில் கோட்டாவிற்கு அருகில் உள்ள (100  மெகாவாட்) இரவத் பட்டா (335 மெகாவாட்),  என்னுமிடத்தில் அணுமின் நிலையங்கள்  ஏற்படுததப்பட்டன. தமிழ்நாட்டில் கல்பாக்கம் (440  மெகாவாட்) மற்றும் கூடங்குளம் (2,000 மெகாவாட்),  உத்திரப்பிரதேசத்தில் நரோரா (235 மெகாவாட்),  கர்நாடகாவில் கைகா (235 மெகாவாட்), குஜராத்தில்  காக்கரபாரா (235 மெகாவாட்) ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன”.  (பக்.152, X சமூக அறிவியல்)

    அணுக்கரு உலைகளிலிருந்து அதிகளவு மின்னுற்பத்தி, இந்திய மின்னுற்பத்தியில் 5 வது வளம் அணுசக்தி என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை. இதர மின்னுற்பத்திகளில் பங்கைக் குறிப்பிடாமல் அதிக அளவு, 5 வது இடம் என்று சொல்வது மிகவும் அபத்தமானது. ஒப்பீடு இல்லாமல் சமூக அறிவியல் பாடத்தில் மெகாவாட் கணக்குகள் அடுக்கப்படுகின்றன. இதை நிறுவு திறன் (Installed Capacity) என்று மட்டுமே சொல்லவேண்டும். இவற்றின் உற்பத்தித்திறன் (Production Capacity)  மிகவும் குறைவு. நிறுவு திறனை எடுத்துக்கொண்டாலும் கூட மொத்த இந்திய மின்னுற்பத்தியில் அணுசக்தியின் பங்கு 2% க்கும் குறைவாக உள்ளதை அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

   அனல் மின்சக்தி, புனல் மின்சக்தி ஆகியவற்றின் உற்பத்திகளை விழுக்காட்டில் குறிப்பிட்டுவிட்டு அணு மின்சக்தி என்று வரும்போது  மெகாவாட் என்று பதற்றம் காட்டுவது ஏன்? இவர்கள் சொல்லும் மெகாவாட்களைக் கூட்டினால் 3665 மெ.வா.தான் கிடைக்கிறது. எல்லா உற்பத்தியையும் மெகாவாட் அல்லது விழுக்காட்டில் சொல்ல வேண்டும். இதிலிருந்தே இவர்களது மறைக்கும் உத்தி புலனாகும். இந்தி தேசியமொழி, ஆட்சிமொழி என்றெல்லாம் கதைப்பதைப்போல அணுமின் உற்பத்தி அதிகம் என்பதான கற்பனையை வளர்க்கப் பயன்படுவதாக எண்ணுகின்றனர்.

    31.05.2019 நிலவரப்படி இந்திய மின்னுற்பத்தி நிறுவு திறன் (அனைத்தும் மெகாவாட்டில். – MW)

Thermal (அனல் மின்னாற்றல்)       226279.34
Coal (நிலக்கரி)  200704.50
Gas (எரிவாயு)   24937.22
Diesel (டீசல்)      637.63

Nuclear (அணு மின்னாற்றல்)         6780.00
Hydro   (புனல் / நீர் மின்னாற்றல்)   45399.22
RES (Renewable Energy Sources) (புதுப்பிக்கக்கூடிய மின்னாற்றல்)  78359.04

Source: Ministry of New and Renewable Energy – MNRE (புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம்)

மொத்த மின்னுற்பத்தி நிறுவு திறன்: 356817.60

SHP - Small Hydro Power (சிறிய நீர் மின்னாற்றல்)  4594.15

Wind energy (காற்று மின்னாற்றல்)               35815.88

Bio power (உயிரி மின்னாற்றல்)  

Bio mass (உயிர்க்கழிவுகள்)                      9131.50
Waste energy (குப்பைகள்)                         138.30
Solar energy (சூரிய மின்னாற்றல்)                28679.21

மொத்த புதுப்பிக்கக்கூடிய மின்னாற்றல்        78359.04

     ‘அணுக்கரு உலையின் பயன்கள்’, என்ற தலைப்பில், “அணுக்கரு உலையானது அதிக அளவில் மின் உற்பத்திக்காகப் பயன்படுகிறது” (பக். 84) என்றும் ‘இந்திய அணுமின் நிலையங்கள்’ எனும் தலைப்பில் “இந்தியமின் உற்பத்தியில், அணு சக்தியானது ஐந்தாவது வளமாக உள்ளது”, (பக். 84) என்றும் சுட்டப்படுகிறது.

    மேலே கண்ட தரவுகள் மத்திய எரிசக்தி அமைச்சகத்தின்  அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பெறப்பட்டவை. அதிக அளவில் மின்னுற்பத்தி, அய்ந்தாவது மின்னுற்பத்தி வளம் ஆகியவற்றுக்கு எளிதில் விடை கிடைக்கும். இவற்றில் கடலலை மற்றும் ஓத சக்தி இடம்பெறவில்லை.

    நிறுவு திறனுக்கும் உற்பத்திக்கும் பாரதூரமான இடைவெளி உண்டு. நிறுவு திறனையை உற்பத்தித் திறன் என்று வைத்துக்கொண்டாலும்  அணு மின்சக்தியின் பங்களிப்பு 1.90% தான்! அனல், புனல் (நீர்), காற்று, சூரிய மின்னாற்றல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது  இடம் என்று சொல்வார்கள் போலும்! இதுவும் சரியல்ல.  உயிர்க் கழிவுகளிலிருந்து (Bio mass) கிடைக்கும் மின்னுற்பத்தி 9131.50 மெ.வா. ஆகும்.. இது அணுமின்னுற்பத்தியை (6780.00 மெ.வா.) விட அதிகம்.

   பாடநூல் இந்தியாவின் ஓத மற்றும் கடலலை சக்தி வளத்திறன் 40,000 மெ.வா. என்று மதிப்பிடுகிறது. (பக்.154) விழிஞ்சம் போன்று பல இடங்களில் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டால் பெறப்படும் மின்சாரம் அணு மின்னுற்பத்தியை விட அதிகமாக இருக்கும்.
   
    இந்தியா தனது வல்லரசுக் கனவிற்கும் அணு ஆயுத உற்பத்திக்கும் மக்களை பலிகடாவாக்குகிறது. இதற்காக அணு உலை, அணு மின்னுற்பத்தி தொடர்பான புனைவுகளையும் கற்பிதங்களையும் பரப்பி வருகிறது.

    2020 இல் இந்திய அணுசக்தி உற்பத்தி 30,000-40,000 மெ.வா. ஆக இருக்கும் என்று முந்தைய காங்கிரஸ் அரசில் முழங்கினர். 2008 இல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரணாப் முகர்ஜி, 2050 இல் நமது மின் பற்றாக்குறை 4,12,000 மெ.வாட்டாக இருக்கும். அதை அணு மின்னுற்பத்தி வெறும் 7,000 மெ.வாட்டாக குறைக்கும் என்றார். இது அரசியல்வாதியின் வெறும் பேச்சு மட்டுமல்ல. 2008 இல் இந்திய அணுசக்தித் துறையின் அப்போதைய தலைவர் அனில் ககோத்கர் இந்திய மின்தேவைக் கணிப்புகளை மட்டும் சரியாகவும் அணுமின் உற்பத்தியை 250% அதிகரித்தும் காட்டினார். இதன் அடிப்படையிலேயே  பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் பேசினார்.

   நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அணு சக்தி, அணு உலைகள் தொடர்பான் தரவுகளின் நிலை இதுதான். அணு உலைகளுக்கு மந்தனமாக டீசல் வாங்கப்பட்டு அதன்மூலம் மின்னுற்பத்திக் கணக்கு காட்டுவதானக் குற்றாச்சாட்டும் உண்டு. மிக வெளிப்படையாகப் பொய்களைச் சொல்லும் இத்துறைக்கு கிடைத்திருக்கும் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது என்று சொல்வதும் மக்களுக்கு உண்மைகளை மறைப்பது வாடிக்கையான நிகழ்வு.

     செர்னோபிள், மூன்று மைல் தீவு, புகுஷிமா அணு உலை விபத்துகளிலிருந்து நாம் ஏதேனும் பாடங்கள் கற்றுள்ளோமா? செர்னோபிளில் வெளியேறும் கதிர்வீச்சைத் தடுக்க இரும்புக் கவசம் அமைப்பதாக செய்தி வருகிறது. இந்திய அணு உலைகளில் எண்ணற்ற சிறு விபத்துகள் நடந்தும் அவை மூடி மறைக்கப்பட்டுள்ளன. கல்பாக்கம் அணுமின் நிலையக்  கனநீரில் தொழிலாளர்கள் குளித்த செய்திகளும் உண்டு.

   1957 லிருந்து இந்தியாவில் அணு உலைகள் இயங்குவதாகச் சொல்லப்படுகிறது. இதுவரையில் அணுக்கழிவுகளை என்ன செய்தனர்? அணு எரிபொருள்களை வழங்கியவர்கள் கழிவை முறையாகத் திரும்பப்பெற்றுக்கொண்டனரா? 60 ஆண்டுகளுக்குப் பிறகு கூடங்குளத்தில் அணுகழிவு மையம் அமைக்க திட்டமிடுகின்றனர்.

   இறுதியாக, நாம் சொல்ல வருவது இதுதான். பாடநூல்களில் அணுசக்தி ஆதரவுப் பரப்புரை செய்ய வேண்டாம். மாணவர்கள் தாங்களாகவே ‘மெய்ப்பொருளை’ அறிந்துகொள்வர்.

 (இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக