திங்கள், ஜூலை 01, 2019

பாசிசத்தைக் கொண்டாடும் மனநிலை


பாசிசத்தைக் கொண்டாடும் மனநிலை 
 
மு.சிவகுருநாதன்  

(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 23) 



        20 ஆண்டுகளுக்கு முந்தையப் பாடநூல்களில் பாசிசம், நாசிசம் ஆகியவற்றின் நன்மைகளைத் தனியே தடித்த எழுத்துகளில் பட்டியலிட்ட வரலாறு உண்டு. ஆனால் இன்று அந்தளவிற்கு மோசமில்லை; நிலைமை ஒரளவு பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். இருப்பினும் நமது அடியாழத்திலுள்ள பாசிச ஆதரவு மனப்போக்கை அவ்வளவு எளிதில் விலக்கிவிட முடியுமா என்ன? 

   ஒரு பயிற்சியின்போது “ஹிட்லர் மிகவும் நல்லவர்; அவரைப்போல வரலாற்றில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் யாருமில்லை”, என்று ஒரு கருத்தாளர் கருத்துரைத்தார். மாற்றுச் சிந்தனை என்கிற போர்வையில் இம்மாதிரியான போலிச் சிந்தனைகள் தலையெடுப்பதுண்டு. ‘Gender Sensitization’ பற்றிய பயிற்சி அது என்பதும், கருத்தாளர் வரலாற்று ஆசிரியை என்பதும் இங்கு முரண்நகை. 

    பத்தாம் வகுப்பு வரலாற்றுப் பாடப்பகுதியில் ‘இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்’, ‘இரண்டாம் உலகப்போர்’ ஆகிய இரு பாடங்களில் ஹிட்லர், முசோலினி ஆகியோர் விவரிக்கப்படுகின்றனர். 

        கற்றலின் நோக்கங்களில், “பேரழிவு (Holocaust) என்பதையும், பாசிச  ஜெர்மனியில் யூதர்கள் பெரும் எண்ணிக்கையில்  கொல்லப்பட்டதையும் புரிந்துகொள்ளுதல்”, (பக்.39) என்று இருக்கிறது.

   முசோலினிக்கு (பக்.25) கடவுச்சீட்டு அளவு படமும் ஹிட்லருக்கு கைநீட்டி உறுதிமொழி எடுக்கும் படமும் (பக்.26) வெளியாகியுள்ளது.
    ‘Holocaust’ என்ற ஹிட்லரின் யூத இன அழித்தொழிப்பைக் குறுக்கும் சொல் ‘பேரழிவுப் படுகொலை ‘ என மொழிபயர்க்கப்படுகிறது. இச்சொல் கலைச்சொல் பட்டியலில் இல்லை. மாறாக கீழ்க்கண்ட ஒரே சொற்கள் இரு இடங்களில் இடம் பெறுகின்றன. ‘Holocaust’ ஐ உருமாற்றும் வேலைகள் நன்றாக நடக்கிறது.

பேரழிவு: Devastating – highly destructive or damage (பக்.18)
பேரழிவு: Devastating / havoc – total destruction (பக்.52)

     ‘Holocaust’ என்பதை ‘பேரழிவுப்படுகொலை’ என்பதாக மொழியாக்கம் செய்கின்றனர். பொதுவாகப் பயன்படுத்தப்படும் ‘பெரும் இன அழிப்பு’ அல்லது இனப்படுகொலை என்ற சொல்லில்  அதாவது இனம் என்பதை அகற்றுவது ஏன் என்று விளங்கவில்லை?  கடவுளுக்கு விலங்குகளை எரியூட்டிப் படைக்கும் பொருளைத்தரும் கிரேக்க மூலச்சொல்லும், சோகா (Shoah) ஈப்ரூ மொழி வேர்ச்சொல்லும் இனப்படுகொலை என்பதை உணர்த்துபவை. இந்த இனப்படுகொலைகள் இரண்டாம் உலகபோர் காலகட்டத்தில் குறிப்பாக 1941-1945 இல் நடத்தப்பட்டது என்றாலும் ஹிட்லர் பதவியேற்ற 1933 லேயே இதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன என்றே சொல்ல வேண்டும். 

     விளக்கம் எனும் பெயரில் இந்த இனப்படுகொலையை நியாயப்படுத்தும் அவலம் பாடநூலில் காணப்படுகிறது.

     “இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மானியர்களால் ஆறு மில்லியன் யூத மக்கள்  கொல்லப்பட்ட இனஅழிப்பை விளக்குவதற்கு 
பேரழிவுப்படுகொலை (Holocaust) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஹிட்லர் மற்றும் நாஜிகளுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலின் முக்கிய 
அம்சங்களின் ஒன்று யூதர்களை அழிப்பதாகும். ஜெர்மனியில் சாதாரணமாகவும் சொல்லப்போனால்  ஐரோப்பா முழுவதும் ஏற்கனவே நிலவிவந்த யூத எதிர்ப்பு உணர்வுகளை ஹிட்லர்  பயன்படுத்திக் கொண்டார். யூதர்கள் ஐரோப்பா முழுவதிலும் சிதறிக்கிடந்தனர். அவர்களில்  பலர் வணிகத் துறையிலும் கலைகளிலும்  தொழில் துறைகளிலும் புகழ்பெற்று விளங்கினர்.  வட்டித்தொழில் யூதர்களிடையே முக்கிய வணிக நடவடிக்கையாக இருந்தது. இது அவர்களுக்கு  எதிரான வெறுப்பை மேலும் வலுவடையச்  செய்தது. ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகர வணிகர் (Merchant of Venice) எனும் நாடகம் மக்களிடையே யூதர்களின் மீதிருந்த வெறுப்பையும்  அவநம்பிக்கையையும் படம் பிடித்துக் காட்டியது.  ஷைலாக்கின் பாத்திரம் யூதர்கள் குறித்த  மாறாத கருத்தாகும். ஃபிட்லர் ஆன் ரூஃப் (Fiddler on Roof) எனும் திரைப்படம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட  யூத-எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பற்றியதாகும். சார் மன்னனின் ஆணைப்படி ஒரு யூத கிராமத்திலிருந்த யூதர்கள் அனைவரும் வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டதை இத்திரைப்படம் காட்சிப்படுத்தியது”. (பக்.48)

    இனப்படுகொலையை நியாயப்படுத்த யூதர்கள் வட்டித்தொழிலில் ஈடுபட்டிருந்தனர் எனவும் இந்த வெறுப்பு ஹிட்லரால் உண்டாக்கப்பட்டதல்ல என்று சமாதானம் சொல்வது எதற்காக? எதன் பொருட்டும் பாசிசத்தை நியாயப்படுத்துவதும் ஒரு பாசிசச் சொல்லாடல்களே. பண்டமாற்று முறை ஒழிந்து ‘பணம்’ எனும் கருவி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே பணத்தை வாடகைக்கு விடும் (money lending) தொடங்கிவிட்டது. இத்தொழிலில் உலகமெல்லாம் பலர் ஈடுபட்டனர். வட்டியை மிகக்கடுமையாக எதிர்க்கும் மதமாக இஸ்லாம் உருவான பின்னணியும் இதுதான்.

    இடைக்காலத் தமிழகத்தின் வட்டித்தொழில் பற்றி 9 ஆம் வகுப்புப் பாடநூல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

     “வட்டிக்குக் கடன் வழங்குவதைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட கடன்  வழங்கும் முறையைப் பின்பற்றினர். கடன்  வழங்குவோர் மகஜன், சௌக்கார், போரா போன்ற பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாய்  இருந்தனர். தமிழ்மொழி பேசப்பட்ட பகுதிகளில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் கடன்  வழங்குவதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர்”. (பக்.165, 166, IX சமூக அறிவியல்)

    கொஞ்சம் ‘நம்ம’ ஊர் உதாரணத்தைக் காண்போம். இலங்கையில் மகிந்த ராஜபக்சவால் நடத்தப்பட்ட 2009 தமிழ் இனப்படுகொலைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிற்காலச் சோழர்கள் படையெடுப்பு, கொள்ளையிடல்கள் ஆகியவற்றைக் காரணமாகச் சொல்லி சமாதானம் அடையலாமா? பிற்காலச் சோழப்படையெடுப்பு பற்றிய எனது முந்தைய பதிவு ஒன்றிலிருந்து,

     “ஈழப்போரில் ஈழமண்டலம் முழுவதும் இவர்களது ஆளுகைக்கு வந்தது. ஈழத்தின் தலைநகராக இருந்த அனுராதபுரம் முற்றிலும் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பொலனருவ சோழர்களின் புதிய தலை நகரானது. இதற்கு ‘ஜனநாதமங்கலம்’ எனப் பெயரிட்டான்.

    போரில் புத்த மத விகாரைகள் அழிக்கப்பட்டன. செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன. பொலனருவ -ல் சிவன் கோயில் கட்டப்பட்டது. சிங்களத்துக் கிராமங்கள் தஞ்சைப் பெரியகோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டன.

    முதலாம் ராஜேந்திரன் ஈழமன்னனை வெற்றிகண்டு அவனது நாடு, முடி, பட்டத்தரசி, மகள், செல்வம், தேர்கள், இந்திரனின் தூய மாலை, அவனிடத்தில் விட்டுச் செல்லப்பட்ட பாண்டியனின் முடி ஆகியவற்றைக் கைப்பற்றினான் எனக் கரந்தைச் செப்பேடுகள் குறிப்பிடுகிறது. இதைப்பற்றி மகாவம்சம் கூறுவதாவது.

    “அரசன் ஐந்தாம் மகிந்தனின் 36 –ம் ஆட்சி ஆண்டில், மகேசியையும் அவனுக்கு மரபு வழியாகக் கிடைத்த அரிய அணிகலன்களையும், பதக்கங்களையும், அரசர்க்குரிய ஆபரணங்கள், விலை மிக்க வைர அணிகலன்களையும் கடவுளால் வழங்கப்பட்டதும் உடைக்க முடியாதுமான வாளையும், கிழிந்த துணி ஒன்றின் சிதைந்த பகுதியையும் சோழர்கள் கைப்பற்றினர். ஆனால் அரசன் அஞ்சி காட்டுக்குள் ஓடிவிட்டான். உடன்பாடு செய்துகொள்ளுவதாகச்ச் சொல்லி அவனை அவர்கள் உயிருடன் பிடித்துக்கொண்டார்கள். சோழப்படையினர் தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குச் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றில் இருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண் பட்ட இடங்களில் எல்லாம், பவுத்த சமயத்து மடங்களை அழித்து, இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்கள் போல, இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்.” (கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி நூல் மேற்கோள்)

     இங்குள்ள சிலர் இப்படையெடுப்பைக் கொண்டாடும் பாசிஸ்ட்களாக உள்ளனர். ஆனால் பாடநூல் பாசிச வடிவம் எடுக்கக்கூடாது. இந்தப் படையெடுப்போ, இனப்படுகொலையோ கொண்டாடத்தக்கதல்ல. ‘ஒரே நாடு ஒரே மொழி’, ‘ஒரே நாடு ஒரே ஆதார்’, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு ஒரே பாடத்திட்டம்’, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ (நாடே ஒன்றில்லாதபோது இந்த அடிப்படை மிக மோசமான பாசிசம்) என பாசிசம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்க்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.  
     'Holocaust and Its Fallout' (page: 42) என்று ஆங்கில வழியில் இருப்பதை, ‘பேரழிவும் பின்விளைவும்’ (பக்.47) மொழிபெயர்க்கும் பாசிசத்தை என்ன சொல்ல? முதலில் ‘இனம்’ கழற்றப்பட்டது. இப்போது ‘கொலைகளும்’ அகற்றப்படுகிறது.

          “ஹிட்லர் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர்  யூதர்கள் பலவழிகளில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.  அவர்களுக்கான சமூக உரிமைகள் மறுக்கப்பட்டன.  அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் ‘கெட்டோக்கள்' எனப்படும் ஒதுக்குபுறமான  பகுதிகளில் வாழ வற்புறுத்தப்பட்டனர். இவற்றைத் தொடர்ந்து நாஜிகள் யூதர்களை முற்றிலுமாகக் கொன்று குவிப்பதற்காக ‘இறுதித் தீர்வு’ எனும் கருத்தை முன்வைத்தனர். ஜெர்மனியில் வாழ்ந்த  யூதர்களும், ஜெர்மனியால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் வாழ்ந்த யூத இனத்தாரும் சுற்றி வளைக்கப்பட்டு, கால்நடைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள்மூலம் சித்ரவதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே அவர்கள் மனிதாபிமானமற்ற வாழ்க்கைச் சூழலுக்கும் சித்ரவதைகளுக்கும் அறிவியல் என்ற பெயரில் கொடுரமான மருத்துவப் பரிசோதனைகளுக்கும்  உள்ளாக்கப்பட்டு, இறுதியில் விஷவாயு நிரப்பப்பட்ட அறைகளில் அடைத்து வைத்துக் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 6 மில்லியன் யூதர்கள் இச்சித்ரவதை முகாம்களில்  கொல்லப்பட்டனர். பரின் இறுதிகட்டத்தில் பல்வேறு சித்ரவதை முகாம்களில் உயிரோடிருந்த யூதர்களை நேசநாடுகளின் ராணுவத்தினர் மீட்கும்வரை யூதப்படுகொலைத் தொடர்ந்து  நடத்தப்பட்டது. ஏனைய இனங்களைச்  சேர்ந்தோரும் குறிப்பாக ரோமானி ஜிப்சிகளும் சித்ரவதை முகாம்களில் கொல்லப்பட்டனர்”. (பக். 47,48)

     நுணுக்கமாக பரவும் பாசிச வெறி ஒருபுறம் பரவுவதும்,  மற்றொரு புறத்தில் கம்யூனிச வெறுப்பும் பாடநூலில் ஊடுருவதும் மிக மோசமான தன்மைகள்.

    Nazi என்பதை நாஜி என்று எழுதுவதுதானே முறை? சில இடங்களில் இவாறு எழுதப்படுகிறது. ஆனால் பல இடங்களில் ‘நாசி’ என்றும் நாசிசக்கட்சி என்று எழுதப்படுகிறது. Nazism நாசிசம் என்று சொல்வதாவது பரவாயில்லை. இங்கு வேறு பொருளில்லை.  ‘நாசிசக்கட்சி’ ரொம்ப அபத்தம். ஜார் (Tsar) ஐ ‘சார்’ என்பதும் தொடர்கிறது. இவர்களது தமிழார்வத்தைக் கண்டு  புல்லரிக்கிறது.

   ஆனால் மார்க்ஸிஸம் (பக்.15), சோஷியலிஸச் சிந்தனை (பக்.57) என்று மிகக்கடுமையாகச் சொல்கிறார்கள். இங்கு மட்டும் உச்சரிப்பு ஏன் முதன்மையாகிறது? மார்க்சியம், சோசலிசம் என்ற சொற்கள் பல்லாண்டுகளாக தமிழில் புழக்கத்திருப்பதை பாடநூல் எழுதியவர்கள் அறியவில்லையா?

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக