புதன், ஜூலை 03, 2019

பூசணிக்காயும் பறங்கிக்காயும்


பூசணிக்காயும் பறங்கிக்காயும் 

மு.சிவகுருநாதன்

(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 24) 




         இரண்டாம் வகுப்பு முதல் பருவ சூழ்நிலையியல் பாடப்பகுதியில் ‘நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள்’ என்னும் பாடத்தில் படர்கொடிகளில்  பூசணிக்காய், தர்பூசணி, முலாம்பழம் ஆகியவற்றில் கொடிகள் படத்துடன் (பக்.99) அறிமுகம் செய்யப்படுகின்றன. பல ஆண்டுகளாகவே பாடநூல்கள் பூசணிக்காய் என்ற பெயரில்  பறங்கிக்காயைத்தான் அறிமுகம் செய்கின்றன. இவை இரண்டும் ஒன்றல்ல. ஒரே பேரினமாகவும் வேறுபட்ட சிற்றினமாகவும் இருக்கலாம்.
 
      எடுத்துக்காட்டாக செம்பருத்தி, வெண்டைச்செடி ஆகியன ஹைபிஸ்கஸ் எனும் பேரினத்தைச் சார்ந்தவை; சிற்றினங்கள் வேறு. சில வட்டாரப் பகுதிகளில் பறங்கிக்காய் பூசணிக்காய் என்று சொல்லப்படலாம்!

      உலகில் பூசணிக்காய்கள் மஞ்சள், சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன.  இவை Cucurbita moschata  என்ற பொதுத் தாவரவியல் பெயரில் அழைக்கப்படுகின்றன. 



    க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பின்வருமாறு சொல்கிறது.

“பறங்கிகாய் பெ. (காய்கறியாகப் பயன்படுத்தும்) பக்கவாட்டில் புடைத்து உருண்டையாக உள்ள வெளிர் சிவப்பு நிறக் காய் (சில இடங்களில்) பூசணி; pumpkin” (பக்.699)

“பூசணி பெ. வெளிர்பச்சை நிறத்தில் தடித்த தோலுடைய நீர்ச்சத்து மிகுந்த உருண்டை வடிவக் காய் / அந்தக் காய் காய்க்கும் கொடி; squash gourd” ((பக்.757)

       பல்வேறு சத்துகள் நிறைந்த பூசணிக்காய் பசுமை நிறத்தின் மீது வெள்ளை மெழுகுப்படலம் போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கும். இதன் மேற்புறத்தில் பள்ளமான வரிகள் இருக்காது. ஆனால் பறங்கிக்காய் காயாக இருக்கும்போது பச்சையாகவும் பழமாகும்போது ஆங்கிலேயர்களின் தோல் நிறமாக மாறும். இதனால்தான் ஐரோப்பியரை நிறமடிப்படையில் இழிவுபடுத்தும் ‘பறங்கியர்’ என்று சொல் உருவாகியிருக்கக் கூடும்! பழத்தின் உள்பகுதி மஞ்சள் நிறமாகக் காணப்படும். எனவே பறங்கிக்காயை மஞ்சள் பூசணி என்று சொல்வாரும் உண்டு. பூசணிக்கு, நிற அடிப்படையில் சாம்பல் பூசணி என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
   
      பறங்கிக்காய், பூசணிக்காய் இரண்டுமே காய், கனி ஆகிய இரு நிலைகளிலும் உணவாகப் பயன்படுபவை. மேலும் இவற்றிற்கு மருத்துவக் குணங்கள் நிறைய உண்டு. இவற்றின் விதைகள் கூட மருந்தாகப் பயன்படுகிறது.  இவையிரண்டிற்குமான மிக முதன்மையான வேறுபாடு ‘விலக்கப்பட்ட கனி’ என்பதைப்போல பூசணிக்காய் விலக்கப்பட்ட காய் மற்றும் கனியாக மாற்றப்பட்டதுதான். இதற்கான மானுடவியல், சமூகவியல்  காரணிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியன.

     இன்று நகரங்களில் பூசணிக்காய் அனைவரும் சாப்பிடும் ஒன்றாக மாறியிருப்பினும் கிராமங்களில் அவ்வாறான சூழல் மிகவும் குறைவு. வைதீகர்கள் குயுக்தியாக சத்துகள் நிறைந்த பூசணிக்காயை வழிபாட்டுப் பொருளாக மாற்றி அவற்றை அடித்தட்டு மக்களது உணவிலிருந்து பறித்துக் கொண்டனர். எனவே இவை பூசைகளுக்குப் பயன்பட்டபிறகு பிராமணர்களுக்கான உணவாக மட்டும் மாறிப்போனது. இன்றும் திருஷ்டி கழித்தல் போன்ற சடங்குகளில் வீணாக்கப்படும் பூசணிக்காய்கள் மிக அதிகம். பறங்கிக்காயைவிட அதிக சதைப்பற்று சத்துகளும் நிறைந்த பூசணிக்காய் சாலையில் உடைக்கப்படுபோது விபத்துகள் நேரிடுகிறது. எனவே அரசு இதற்கு தடையாணை பிறப்பித்துள்ளது.

    பூசணிக்காய், பறங்கிக்காய் என இரு வெவ்வேறு பெயர்களும் பொருள்களும் தனித்தனியே இருக்கும் நிலையில் ஒன்றாகக் குழப்பது சரியல்ல. கிராமப்புற மாணவர்கள் இவற்றை எளிதில் இனம் கண்டுகொள்வர்.
   
   இதே பாடத்தில் நாற்காலி, முறம் போன்றவை மூங்கிலில் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக முறம் மூங்கிலைக் கொண்டு தயாரிக்கப்படுவதுண்டு. பெரும்பாலும் நாற்காலிகள் மூங்கிலைப் போன்ற  மற்றொரு புல்வகைத் தாவரமான பிரம்பு ஐக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை சில வட்டாரங்களில் 'மூங்கில் பிரம்பு' என்று சொல்கின்றனர். எனவே இவ்வாறு குழப்பமேற்படுகிறது போலும்!

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக