புதன், ஜூலை 24, 2019

தெளிவாகப் பாடநூல்கள் எழுதப்படும் காலம் வருமா?

தெளிவாகப் பாடநூல்கள் எழுதப்படும் காலம் வருமா? 

மு.சிவகுருநாதன்

(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 32)



       பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தொகுதி ஒன்றில் புவியியல் அலகு 05 ‘இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்’ எனும் பாடம் உள்ளது. பொதுவாக பாடங்களில் கையாளப்படும் மொழிநடை, மொழியாக்கம், செய்திகள், எழுத்துப் பிழைகள், ஒற்றுப்பிழைகள் போன்றவை படிப்பதற்கு எரிச்சல் ஏற்படுத்துவதாக உள்ளன. எடுத்துக்காட்டாக இந்த ஒரு பாடத்திலிருந்து மட்டும் சிலவற்றைக் கண்டு களிப்போம்.

   ‘மின்னனு, குருந்தகவல், பயனப்படகு, வாசணை, ஒன்றினைக்கப்பட்டு’ போன்ற பிழைகளுடன் அச்சிடப்படும் பாடநூல்கள் மாணவர்களிடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்? இதைப் பற்றிக் கல்வியாளர்கள் கூட கண்டுகொள்வதில்லை. (பிழைத் திருத்தப்பட்ட வடிவங்கள்: மின்னணு, குறுஞ்செய்தி, பயணப்படகு, வாசனை, ஒன்றிணைக்கப்பட்டு)

     ‘பெளதீக, சமூகப் பொருளாதார மற்றும் வரலாற்றுக் காரணிகள்’ (பக்.164)  சொல்லப்படுகின்றன. ஒன்று பௌதீகம் இயற்பியலாக வேண்டும் அல்லது வரலாறு சரித்திரமாகட்டும். 

     மனிதவள வளர்ச்சி குறியீடுகள் (UNDP) (பக்.170) என்பதில் அடைப்புக்குறிக்குள் UNDP ஏன் என்ற அய்யம் இயல்பாக எழுகிறது.  ‘as per UNDP’ (பக்.156) என்று ஆங்கிலத்தில் இருப்பது தமிழில் இவ்வாறு உருமாற்றம் கொள்கிறது. 

      சாலைப் போக்குவரத்து, “சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மலிவான போக்குவரத்தாகும்” (பக்.170) என்ற கருத்து எதன் அடிப்படையில் சொல்லப்படுகிறது என்று தெரியவில்லை. பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளது என்பதை ஏற்கலாம். மலிவு என்பதை ஏற்கவியலாது. பழைய பாடநூல்களைக் காப்பியடிப்பது நல்லதல்ல. (எ.கா. திருவாரூர்-தஞ்சை பேருந்துக் கட்டணம் ரூ.56, தொடர்வண்டிக் கட்டணம் ரூ.15)

         தனிமனித தகவல் தொடர்பில் தொலைபேசி, கைப்பேசி, இணையதளம், மின் அஞ்சல் (பிரித்துத்தான் எழுதுவார்கள்) போன்றவற்றுடன் தந்தியும் இடம் பெறுவது வியப்பளிக்கக் கூடியது. இந்தியாவில் தந்திச் சேவை 2013 ஜூலை 14 தேதியுடன் நிறுத்தப்பட்டது. 2019 லும் தகவல் தொடர்பில் தந்தி இருப்பது பாடநூலின் பெருமையை பறைசாற்றுவதாக உள்ளது! அது என்ன  குருந்தகவல் பிரதிகள்? ‘குறுந்தகவல் பிரதிகள்’ அல்லது  ‘குறுஞ்செய்திப் பிரதிகள்’ என்று பிழைத்திருத்தம் செய்தாலும் புரியவில்லையே! அதே பக்கத்தில் பிறிதோரிடத்தில் ‘பிரதி அஞ்சல்’ என்றும் உள்ளது. பிரதி, பிரதி அஞ்சல் என்று மொழியாக்கும் அபத்தத்தை என்ன சொல்ல?

     ஆங்கில வழியில் பார்த்தால் ‘mobile phone, short message services, fax’ (page: 163) என்று காற்புள்ளியுடன் உள்ளது. அய்யகோ! SMS ஐ சொல்லும்போது வாட்ச் அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களைச் சொல்லாமல் விடுவது ஏன்? ‘பிரதி’ என்றால்  ‘text’ ஐ குறிக்கும். இதை Xerox (நகல்) என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். ‘fax’ – தொலைநகல் என்று தமிழுலக வழக்கு. அது பாடநூல் தயாரிப்பாளர்களுக்கு எட்டுவதேயில்லை. பல்லாண்டுகளாக பாடநூல்களுக்கென்றே இம்மொழியாக்கம் செய்யப்படுவது வேதனை. 

     “இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 1995 இல் நிறுவப்பட்டது.  இது தரைவழி போக்குவரத்து  அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்”. (பக்.172)

உயர்சிந்தனை வினா

“இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) செயல்பாடுகள் என்ன என்பதைக் கண்டுபிடிக்கவும்”. (பக்.172)

“இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளை  மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் இந்திய அரசின்  தரைழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்  பொறுப்பாகும்”. (பக்.171)
 
   சென்ற பத்தாம் வகுப்பு சமச்சீர் பாடநூல் குறித்த கட்டுரை ஒன்றிலிருந்து சிலவரிகள் (‘கல்விக்குழப்பங்கள்’ நூலிலிருந்து…)

     “பத்தாம் வகுப்பில் ‘கட்டு, செயல்படுத்து, மாற்று’ (BOT – Build, Operate and Transfer) என்கிற தேசிய நெடுஞ்சாலைகளைத் தனியார்மயமாக்கும் ஒப்பந்தங்கள் குறித்தும் சொல்லப்படுகிறது. “தனியார் நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்த காலத்திற்குள் கட்டுமானச் செலவு செய்ததையும், லாபத்தையும் பெற்றபின் அரசிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விடுமாம்.” (இதிலுள்ள மோசடிகள் வேறுகதை.) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) பல சாலைகளைத் தனியாரிடம் அளித்துள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது என்று இன்னும் எத்தனை காலம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம்?

    இறுதியாக ஓர் தகவல். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையச் சட்டம் – 1988 மூலம் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு 1995 முதல் தன்னாட்சி பெற்ற அமைப்பாக தேசிய நெடுஞ்சாலைகளை மேலாண்மை செய்கிறது. அதாவது தேசிய நெடுஞ்சாலைகளை தனியாரிடம் விற்கிறது”.
    ‘தன்னாட்சி பெற்ற அமைப்பு’ எப்படி ஒரு அமைச்சகத்தின் கீழ் இயங்கமுடியும்? அப்படியென்றால் ‘தன்னாட்சி’ என்பதன் பொருளென்ன? இந்த அமைப்பின் செயல்பாடுகளை குறிப்பிட்ட அமைச்சக கட்டுப்படுத்த முடியுமா? தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்றவை செயல்பட நிதி ஒதுக்குவது மட்டுமே அரசு / அமைச்சகங்களின் பணி. அவை எடுக்கும் முடிவுகளில் தலையிட முடியாது என்பதே உண்மை.

     “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் - கொல்கத்தா, சென்னை சர்வதேச விமானநிலையம் - சென்னை,  இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் – புதுடெல்லி, சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான  நிலையம் - மும்பை, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் – திருவனந்தபுரம், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் – அகமதாபாத், பெங்களூரு சர்வதேச விமான நிலையம் பெங்களூரு, ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் – ஐதராபாத் போன்றவை முக்கியமான விமான நிலையங்கள் ஆகும்”. (பக்.177)

     பன்னாட்டு வணிகம், பன்னாட்டுச் சங்கம் என்றெல்லாம் மாற்றிவிட்டு இங்கு மட்டும் சர்வதேச விமான நிலையம் என்று எழுதுவதேன்? பன்னாட்டு விமான நிலையம் என்று சொல்லலாமே!  எல்லா விமான நிலையங்களுக்கும் பெயர்களைச் சொல்லிவிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையம் என்று எழுதவதன் உள்நோக்கமென்ன? பேரறிஞர் அண்ணா பன்னாட்டு முனையம் என்பதை மறைக்க வேண்டிய அவசியமென்ன?

         இந்திய ரயில்வே மண்டலங்கள் 16 என்று சொல்லி, 17 இடங்கள் அட்டவணைப்படுத்தப்படுகிறது. உண்மையில் 17 மண்டலங்கள் உள்ளன. அவற்றை 16 ஆக மாற்றியுள்ளனர். 

     ‘ஷெர்சா சூர்’ (பக்.171)  நம்ம ஊரு ‘புரோட்டா சூரி’ போலாகிவிட்டார். 

    நவசேவா (ஜவகர்லால் நேரு துறைமுகம்) (பக்.176) நவிமும்பையில் உள்ளது. இதைக் குறிப்பிட்டிருக்கலாம். ‘Print media’ அச்சு ஊடகம் என்பதே சரி. செய்தித்தாள் (பக்.179) என்று நாளிதழ்களை மட்டும் குறிக்கும். பிற அச்சு ஊடகங்களைக் குறிக்காது. 

     அரியானா மாநிலத்தின் ‘Gurgaon. நகரம் ‘குர்கயோன்’ என்று நீட்டி முழக்கப்படுகிறது. (பக்.175) இதை ‘குர்கான் / குர்ஹான்’ என்று எளிமையாகச் சொன்னால் ஏதாவது இழப்பு வந்திடுமா? 

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக