திங்கள், ஜூலை 22, 2019

ஆட்சியாளர்களுக்காக அறிவியலைப் பலியிடலாமா?


ஆட்சியாளர்களுக்காக அறிவியலைப் பலியிடலாமா?

மு.சிவகுருநாதன்

(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 30)



      பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம் அலகு 22 ‘சுற்றுச்சூழல் வேளாண்மை’ எனும் பாடம். இதில் ‘புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க  இயலாத ஆற்றல் வளங்கள்’ பட்டியலிடப்படுகின்றன. அவற்றைக் காண்போம். ‘புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க  இயலாத ஆற்றல் வளங்கள்’, என்ற தலைப்பில் சொல்லப்படுவன: முதலில் ‘புதுப்பிக்க இயலாத (தீர்ந்து போகக் கூடிய) ஆற்றல் வளங்கள்’.

       “வளர்ச்சி மேம்பாட்டின் முக்கிய உள்ளீடு  ஆற்றலாகும். ஆற்றல் வளங்களின் விரிவாக்கம்  என்பது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள  விவசாய மற்றும் தொழில்துறை விரிவாக்கத்துடன் நேரடித் தொடர்புடையது. ஆற்றல் வளங்களை புதுப்பிக்க இயலாத மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்  வளங்கள் என இரு வகையாக வகைப்படுத்தலாம்.

புதுப்பிக்க இயலாத (தீர்ந்து போகக் கூடிய) ஆற்றல் வளங்கள்

        குறைந்த காலத்தில் தம்மைத் தாமே புதுப்பித்துக்  கொள்ள முடியாத ஆற்றல் மூலத்தில் இருந்து பெறப்படும்  ஆற்றல் புதுப்பிக்க இயலாத ஆற்றல் எனப்படும். இவை மிகக் குறைந்த அளவே இயற்கையில் கிடைக்கிறது.  புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்களாவன:  நிலக்கரி,  பெட்ரோலியம், இயற்கை வாயு மற்றும் அணுக்கரு  ஆற்றல். உலகின் ஆற்றல் தேவைகளில் 90% இந்த மரபுசார் ஆற்றல் மூலங்கள் மூலமும், 10% அணு ஆற்றல்  மூலமும் பெறப்படுகிறது”. (பக்.318)

    ஆங்கில வழியில், ‘Renewable and Non-Renewable Energy  Resources’ என்கிற தலைப்பில்  

     “Energy is an important input for development. The expansion of possible  energy resources has been directly related  with the pace of agricultural and industrial  development in every part of the world. Energy  resources can be classified as non-renewable  and renewable. 

Non-renewable (Exhaustible) energy  resources 

    Energy obtained from sources that  cannot renew themselves over a short period 
of time is known as non-renewable energy.  These are available in limited amount in nature.  They include coal, petroleum, natural gas and  nuclear power. These conventional energy  resources account for 90% of the world’s  production of commercial energy and nuclear  power account for 10%”. (page:318)
 
    நிலக்கரி,  பெட்ரோலியம், இயற்கை வாயு, அணுக்கரு  ஆற்றல் ஆகிய நான்கும் இதில் சொல்லப்படுகிறது. சரிதான். இறுதியில், “உலகின் ஆற்றல் தேவைகளில் 90% இந்த மரபுசார் ஆற்றல் மூலங்கள் மூலமும், 10% அணு ஆற்றல்  மூலமும் பெறப்படுகிறது”. (பக்.318) என்ற வரிகள் அதிர்ச்சியளிக்கின்றன. மரபுசார் ஆற்றல் மூலங்கள் 90% என்றால் அடுத்ததை மரபுசாரா ஆற்றல் மூலங்கள் 10% என்றுதானே சொல்லவேண்டும்? மரபுசார் ஆற்றலின் 90% இல் அணு ஆற்றல் அடங்குமே! அதை ஏன் தனியே, மீண்டும் சொல்லவேண்டும்? 10% கணக்குக் குளறுபடி தனிக்கதை. இந்தியாவில் அணு ஆற்றல் உற்பத்தி இன்னும் 3% ஐ எட்டவில்லை.

       அடுத்து, ‘புதுப்பிக்கத்தக்க (தீர்ந்து போகாத) ஆற்றல்வளங்கள்’ விளக்கப்படுகிறது.

        “இத்தகைய ஆற்றல் மூலங்கள் எப்போதும் அதிக  அளவில் கிடைக்கக் கூடியதும் இயற்கையாகத் தம்மை குறுகிய காலத்தில் புதுப்பித்துக் கொள்ளக் கூடியதும்  மற்றும் மிகக்குறைந்த செலவில் ஆற்றலை தொடர்ச்சியாக பெறும்படியும் உள்ள மூலங்களாகும். பெரும் அளவிலான மரபுசாரா ஆற்றல் மூலங்கள் உயிரி எரிபொருள், உயிரிப் பொருண்மை ஆற்றல்,  புவிவெப்ப ஆற்றல், நீராற்றல் (நீர் மின் ஆற்றல் மற்றும்  ஓத ஆற்றல்), சூரிய ஆற்றல் மற்றும் காற்றாற்றல் 
ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது”. (பக்.318)

    ஆங்கில வழிப்பாடநூலில், ‘Renewable (Inexhaustible) energy resources’ என்ற தலைப்பில்,

     “These energy resources are available in  unlimited amount in nature and they can  be renewed over a short period of time,  inexpensive and can be harvested continuously. These comprise the vast potential of non-conventional energy resources which include  biofuel, biomass energy, geothermal energy,  water energy (hydroelectric energy and tidal energy), solar energy, wave energy and wind  energy”.   (page:318)

    உயிரி எரிபொருள், உயிரிப் பொருண்மை ஆற்றல்,  புவிவெப்ப ஆற்றல், நீர் மின் ஆற்றல், ஓத ஆற்றல், சூரிய ஆற்றல், காற்றாற்றல்  ஆகியன புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளமாகப் பட்டியலிடப் பட்டுள்ளன. ‘biomass energy’ என்பதை ‘உயிரிப் பொருண்மை ஆற்றல்’ என மொழிபெயர்ப்பது நகைப்பிற்கிடமாக உள்ளது. “நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் ஆகியவை உயிரிப் பொருண்மை சிதைவின் மூலம்  உருவானவையாகும்” (பக்.319) என்று சொல்லும்போது நிலக்கரியையும் இப்பட்டியலில் இணைத்து விடுவார்களோ என்ற அச்சம் உண்டாகிறது. இறுதியில் அது வேறு விதமாக நடக்கிறது.

     தமிழ் வழியில் ‘புதைபடிவ எரிபொருள்கள்’ என்ற பத்தியில்,

        “புதைபடிவ எரிபொருட்கள் புவியின் மேல்  அடுக்கினுள் காணப்படுகின்றன. இவை பல  மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மடிந்த உயிரினங்கள் காற்றில்லா சூழலில் மட்குதல் போன்ற 
இயற்கை நிகழ்வுகள் காரணமாக  உருவானவையாகும். மடிந்த உயிரினங்கள் மேல்  மண் அடுக்குகள் மேலும் மேலும் படிவதால் உருவான  வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக  உயிரினங்கள் மெல்ல மெல்ல ஹைட்ரோ கார்பன்களாக மாற்றமடைந்தன. எடுத்துக்காட்டு:  பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இயற்கை வாயு”. (பக்.318,319)

      மேலும் நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்’, குறித்து,

        “நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் ஆகியவை இயற்கை வளங்கள் ஆகும். இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மடிந்த உயிரினங்கள் நிலத்தில் ஆழப் புதைந்து உயிரிப் பொருண்மை சிதைவின் மூலம்  உருவானவையாகும் இவை புதைபடிவ எரிபொருட்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு  அடுத்தபடியாக உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடு இந்தியாவாகும்.

      நிலக்கரி அனல் மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. பெட்ரோலியம், கச்சா எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. இது எண்ணெய்  சுத்திகரிப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆக  சுத்திகரிக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து, சரக்கு  ஊர்திகள், தொடர்வண்டிகள், கப்பல்கள் மற்றும் ஆகாய விமானங்களை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கச்சா எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கப்படும்  கெரோசின் மற்றும் திரவ மயமாக்கப்பட்ட பெட்ரோலிய  வாயு (LPG) ஆகியவை வீட்டு உபயோக எரிபொருளாக  உணவு சமைக்க பயன்படுத்தப்படுகின்றன. நிலக்கரி  மற்றும் பெட்ரோலிய எண்ணெய் இருப்புகள், நாம் தொடர்ந்து  அதிகமாகப் பயன்படுத்தினால் மிக  விரைவாகத் தீர்ந்து போகக்கூடிய நிலையில் உள்ளன.  இவை மேலும் உற்பத்தியாவதற்கு நீண்டகாலம்  ஆவதோடு இவ்வினை மிக மெதுவாகவும் நடைபெறக் கூடியது”. (பக்.319)
 
     நிலக்கரி மட்டுமல்ல இயற்கை எரிவாயு, டீசல் போன்றவையும் அனல் மின்னுற்பத்திக்கு பயன்படுகின்றன. ‘கெரோசின்’ என ஒலிபெயர்ப்பது ஏன்? ‘மண்ணெண்ணைய்’ ஐ பயன்படுத்த என்ன தடை? 


‘மரபுசாரா (மாற்று ஆற்றல்) மூலங்கள்’ என்னும் தலைப்பில்,

      “ஆற்றல் துறையில் நீடித்த வளர்ச்சியை நாம் பெற வேண்டுமெனில், விரைவாக தீர்ந்து போகும் மரபு சாரா  ஆற்றல் மூலங்களின் பயன்பாட்டைக் குறைத்து, பாதுகாத்து, அவற்றுக்குப் பதிலாக, சுற்றுச்சூழலுக்கு  மாசு ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை நாம் பயன்படுத்தவேண்டும். இதுவே ஆற்றல் நெருக்கடி 
நமக்கு உணர்த்துவதாகும். புதிய மரபுசாரா ஆற்றல்  மூலங்கள் எனப்படும் புதிய ஆற்றல் மூலங்களை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இது  உள்ளூர் மக்கள் தங்கள் ஆற்றல் தேவைகள் மற்றும்  வளங்களை கண்டறியும் முயற்சியைத் துவக்கவும் அவர்களுக்கு பயன்படக்கூடிய உத்திகளை வகுக்கவும் 
உதவிகரமாக இருக்கும்”. (பக்.319)

‘Non-Conventional  (Alternative) Energy  Resources’ ஆங்கிலத்தில்,  

     “The energy crisis has shown that for  sustainable development in energy sector we  must conserve the non-renewable conventional  resources from its rapid depletion and replace  them by non-polluting, renewable sources  which are environmentally clean.  Efforts are made to develop new sources  of energy which is called non-conventional  sources of energy. It would provide greater  initiative to local people who could assess their  needs and resources and plan a strategy that  could be useful to them”. (page:319)

        புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் சுற்றுச்சூழலுக்கு  மாசு ஏற்படுத்தாத, எளிதில் கிடைக்கின்ற, எளிதில் தீர்ந்து போகாதவை என்றெல்லாம் சொல்லிவிட்டு, தொடக்கத்தில்  “உயிரி எரிபொருள், உயிரிப் பொருண்மை ஆற்றல்,  புவிவெப்ப ஆற்றல், நீர் மின் ஆற்றல், ஓத ஆற்றல், சூரிய ஆற்றல், காற்றாற்றல்” ஆகியவற்றை ம்மட்டும் பட்டியலிட்டு, இறுதியில் ‘ஷேல் வாயு’வை இவற்றுடன் இணைக்க வேண்டிய தேவையென்ன? ஆட்சியாளர்களை மகிழ்ச்சிப்படுத்தவா?

      ‘ஷேல் வாயு’ எனும் தலைப்பில் தமிழ் வழியில்,

        “ஷேல் எனப்படுவது பூமியின் அடிப்புறத்தில்  அமைந்துள்ள சேறு மற்றும் தாதுக்கள் (குவார்ட்ஸ்  மற்றும் கால்சைட் ) அடங்கிய மென்மையான பாறை அடுக்குகளைக் குறிப்பதாகும். இப்பாறை அடுக்குகளின் இடையிலுள்ள துளைகளில் எண்ணெய் மற்றும்  வாயுக்கள் நிரம்பியிருக்கின்றன. இவ்வாயுக்கள் மற்றும் எண்ணெயினை வெளியே எடுக்க ஹைட்ராலிக் ப்ராக்சரிங் / ஹைட்ராலிக் முறிவு (பாறை அடுக்குகளின் மேல் எண்ணெய் மற்றும் வாயுக்கள் நிரம்பியுள்ள அடுக்கை அடையும் வரை ஆழமாகத் துளையிடப்படுதல்.)  என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஷேல் வாயுவினால் உண்டாகும் சுற்றுச்சூழல் விளைவுகள்

(i) ஷேல் வாயுக்களுக்காக இடப்படும் துளைகள் நிலத்தடி நீர் மட்டத்தினை வெகுவாகப் பாதித்து  குடிநீர் ஆதாரத்தை மாசுபடுத்துகிறது. மேலும் மண் வளத்தையும் பாதிக்கிறது.
(ii) நிலத்தடியில் உள்ள வாயுக்கள் மற்றும் எண்ணெயினை வெளியேற்ற பல மில்லியன் கன அளவு நீரைப் பயன்படுத்த வேண்டியிருப்பதால், இவை நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகப் பாதிக்கிறது.

மேலும் அறிந்து கொள்வோம்

      ஷேல் வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில்  ஆறு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை கேம்பே (குஜராத்), அஸ்ஸாம் – அரக்கான் (வட கிழக்குப் பகுதி), கோண்ட்வானா (மத்திய இந்தியா), கிருஷ்ணா கோதாவரி (கிழக்கு கடற்கரைப் பகுதி),  காவேரி மற்றும் இந்தோ- கங்கைப் வடிநிலப் பகுதி”. (பக்.321)

ஆங்கில வழியில் ‘Shale gas’,

     “Shale refers to the soft finely stratified  sedimentary rock that is formed from the  compaction of small old rocks containing mud and minerals – such as quartz and calcite,  trapped beneath earth’s surface. These rocks  contain fossil fuels like oil and gas in their pores.  The fuel is extracted by a technique  called hydraulic fracturing (drilling or well  boring of sedimentary rocks layers to reach  productive reservoir layers). 

Environmental concerns of shale gas (i) Shale drilling could affect groundwater reserves, which can contaminate the drinking water resources and also affect the fertility of the soil.
(ii) Million gallons of water is needed to break and release the shale gas, which inturn can affect the water table.

More to Know

      India has identified six basins as areas  for shale gas exploration: Cambay (Gujarat),  Assam-Arakan (North East), Gondwana  (Central India), Krishna Godavari onshore  (East Coast), Cauvery onshore and Indo-Gangetic basins”. (page:321)

      ‘hydraulic fracturing’ என்பது ‘ஹைட்ராலிக் ப்ராக்சரிங் / ஹைட்ராலிக் முறிவு’  என ஒலிபெயர்க்கப்படுகிறது. ‘நீரியல் விரிசல் / நீரியல் முறிவு’ எனும் சொற்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. காவிரிப் படுகையில்  நூற்றுக்கணக்கான இடங்களில் ‘மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் வாயு’ என்னும் பெயர்களில் கொண்டுவரப்படும் திட்டங்களை எதிர்த்து மக்கள் போராட்டம் கொதிநிலையில் இருக்கும் நேரத்தில்,  ‘ஷேல் வாயு’ மரபுசாரா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என அறிவியல் பாடம் எழுதுவதை எப்படிப் புரிந்து கொள்வது?

    இதன் சூழலியல் விளைவுகள்  இரண்டு சொல்லப்படுகின்றன. சூழலை மாசுபடுத்தும் இந்த ஆற்றல் எப்படி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பட்டியலில் இணைக்கப்பட்டது?

    மேலும், பூமியில் ஆழமாகத் துளையிட்டு இயற்கை வாயு எடுப்பதுபோல ‘ஷேல் வாயு’ எடுப்பதாகச் சொல்லப்படுவது அபத்தம். இந்தத் துளையின் வழியே நீரும் வேதிப்பொருள்களின் கரைசலும் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படும். நிலப்பரப்பு கழிவுகள் மற்றும் வேதிப்பொருள்களால் மாசடையும். அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் வசிக்காத இடங்களில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்துள்ளது கவனிக்க வேன்டியது.

          “ஷேல் வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில்  ஆறு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை கேம்பே (குஜராத்), அஸ்ஸாம் –அரக்கான் (வட கிழக்குப் பகுதி), கோண்ட்வானா (மத்திய இந்தியா), கிருஷ்ணா கோதாவரி (கிழக்கு கடற்கரைப் பகுதி),  காவேரி மற்றும் இந்தோ- கங்கைப் வடிநிலப் பகுதி”. (பக்.321)

    மேற்கண்ட பட்டியலில் காவிரி ஒளித்து வைக்கப்பட்டுள்ளதைக் காண்க. காவிரி டெல்டாவில் நூற்றுக்கு மேலான இடங்கள் ஷேல் கேஸ் எடுக்கப்படும் இடபட்டியலில் உள்ளன.
 
‘காற்றாலை’ என்ற தலைப்பில்,

          “காற்றாலை என்பது, காற்றால் உந்தப்படும் ஆற்றலானது சுழற்சி ஆற்றலாக மாற்றப்படுவதற்கு நீளமான இறக்கைகள் ஒரு சுழலும் அச்சுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு எந்திரமாகும். வேகமான காற்று, இறக்கைகள் மீது மோதி அவற்றினை சுழலச்  செய்கிறது. இறக்கைகள் சுழல்வதால் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னியற்றி செயல்பட்டு  மின்னாற்றல் உற்பத்தி ஆகிறது. ஒவ்வொரு  காற்றாலையில் இருந்து உற்பத்தி ஆகும் மின்சாரமும்  ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு வர்த்தக ரீதியில்  மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது”.  (பக்.321)

    உற்பத்தியான மின்சாரத்தை வர்த்தக ரீதியில் மீண்டும் உற்பத்தி செய்ய வேண்டுமா?

‘நீராற்றல்’ என்ற தலைப்பில்,

         “புவியின் மேற்பரப்பு ஏறக்குறைய 71% நீரால் சூழப்பட்டுள்ளது. ஓடும் நீரினில் இருந்து பெறப்படும்  ஆற்றல், மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. இவ்வாறு பெறப்படும் ஆற்றல் புனல் மின்னாற்றல் எனப்படும். புனல் மின் உற்பத்தி நிலையங்களில் மேலிருந்து வேகமாக கீழே விழும் நீர் அல்லது வேகமாக ஓடும் நீரின் இயக்க ஆற்றல்  மின்னாற்றலாகப் பெறப்படுகிறது. மலைப்பகுதிகள் இதற்கு மிகவும் ஏற்றவை. ஏனெனில் அதிக சரிவான  பகுதிகளிலிருந்து நீர் பெருமளவில் தொடர்ந்து வழிந்தோடி வருகின்றது. இவை சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் உண்டாக்காமலும், எவ்வித  கழிவையும் ஏற்படுத்தாமல் செயல்படக்கூடியவை. நீர் மின்சார நிலையங்கள், ஓடும் நீரிலுள்ள நிலை ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக்கூடியவை. இது நீர் மின்சாரம் எனப்படும்”. (பக்.322)

    மலைப்பகுதிகள், அணைகள் ஆகியவற்றிலிருந்து வேகமாக ஓடிவரும் நீரைப் பயன்படுத்தி  மின்சாரம் தயாரிக்க இயலாது. இப்படியே தொடர்ந்து சொல்லிக் கொடுக்கிறோம்.  நீரைக் குழாய்களின் வழியே செலுத்தி அதன்மூலம் விசையாழியை இயக்கியே நீர் (புனல்) மின்னாற்றல் பெறப்படுகிறது 

‘ஓத ஆற்றல்’ எனும் பகுதி,

       “ஓத ஆற்றல் எனப்படுவது கடலோரங்களில் உண்டாகும் கடல்நீரின் வேகமான இடப்பெயர்ச்சியினால் ஏற்படும் ஆற்றல் ஆகும். 
ஓதங்கள் என்பவை கடல் நீரின் மீது, புவியீர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, கடல்  நீர் மட்டம் உயர்வதும், தாழ்வதுமாகும். ஓத நீரோட்டம் என்பது மிக வேகமாக இடப்பெயர்ச்சி ஆகும் நீரினை, ஓதங்கள் உருவாக்குவதாகும். அவ்வாறு நிகழும் போது உண்டாகும் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி டர்பைன்களை இயங்கச் செய்வதன் மூலம் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படுகிறது.

ஓத ஆற்றலினால் உண்டாகும் நன்மைகள்:

(i) எவ்வித சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுத்துவதில்லை.
(ii) இவற்றுள் எவ்வித எரிபொருளும் பயன்படுத்தாததால் கழிவுகள் ஏதும் வெளியேறுவதில்லை.
(iii) ஓதங்கள் எப்போது உருவாகும் என்பதனை முன்னரே நம்மால் கணிக்க முடியும்.இதனால் இந்த ஆற்றலை நாம் தொடர்ச்சியாக பெறமுடியும்.
(iv) நீரின் அடர்த்தி காற்றை விட அதிகமாக உள்ளதால் மிக மெதுவான நீரின் இயக்கத்தினால் கூட, டர்பைனை இயங்கச் செய்வதால், மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது” (பக்.322)

      தலைப்பில் ‘ஒத ஆற்றல்’ என்று முதலெழுத்து குறிலாக உள்ளது. இறுதியாக, இதன் நன்மைகளைப் பாருங்கள். எனவேதான் இது மரபுசாரா ஆற்றலாகிறது. மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் ஆகியவற்றை எப்படி மரபுசாரா, தீர்ந்து போகாத ஆற்றல் வளமாக வரையறுக்க முடியும்?

      ‘மிக மெதுவான நீரின் இயக்கத்தினால் கூட’ மின்சாரம் தயாரிக்க முடியுமென்றால் இவற்றிற்கு ஓத அலைகள் (அமாவாசை, பௌர்ணமி நாள்களில் உருவாகும் உயர் அலைகள்) தேவையில்லை. சாதாரண அலைகளே போதுமென்றாகிறது. கேரளாவில் விழிஞ்சம் என்னுமிடத்தில் அலைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழகம் காற்றாலை, சூரிய ஆற்றலில் காட்டும் முனைப்பை அலைமின் ஆற்றல் காட்டினால் கூடுதல் மின்னுற்பத்தி கிடைக்கும். ஆனால் கூடங்குளம் அணு உலைப் பூங்காக்களை நம்பிச் சீரழிகிறோம். அது அணுக்கழிவு கிடங்காக மாறுவது குறித்த கவலைகூட நமக்கில்லை.

‘உயிரி வாயு’ என்னும் தலைப்பில்,

         “உயிரி வாயு என்பது மீத்தேன் (75%), ஹைட்ரஜன்  சல்பைட், கார்பன் – டை- ஆக்சைடு, மற்றும் ஹைட்ரஜன் சேர்ந்த கலவையாகும். இவ்வாயு விலங்குகள் மற்றும்  தாவரங்களின கழிவுகள், காற்றில்லாச் சூழலில் மட்கும்  போது (சிதைவடையும் போது) உருவாகிறது.  பொதுவாக  இவை “கோபர் கேஸ்” (கோபர் (ஹிந்தி) = மாட்டுச்  சாணம்) என்றும் அழைக்கப்படுகிறது”. (பக்.320)

‘Biogas’ ஆங்கில வழியில்,

      “Biogas is the mixture of methane (nearly  75 %), hydrogen sulphide, carbon dioxide and  hydrogen. It is produced by the decomposition  of animal wastes (cow dung) and plant wastes  in the absence of oxygen. It is also commonly  called as ‘Gobar gas’ since the starting material  used is cow dung which means gobar in Hindi”. (page:320)

    உயிரி வாயுவில் இருப்பது  ஹைட்ரஜன்  சல்பைட் அல்ல; ஹைட்ரஜன் சல்பைடு (Hydrogen Sulphide / Hydrogen Sulfide - H2S). இது  அழுகிய முட்டையின் மணமுடைய வாயு. ஹைட்ரஜன் சல்பைட் (Hydrogen Sulphyte / Sulphurous Acid - H2SO3) சல்பூரஸ் அமிலமாகும். ஹைட்ரஜன் சல்பேட் (Hydrogen Sulphite / Sulphuric Acid -  H2SO4) சல்பூரிக் (கந்தக) அமிலமாகும். ஒரு அறிவியல் பாடநூலில் இதைக்கூடக் கண்டுகொள்ளாமல் விடுவதும். ஷேல் கேஸை புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளமாகக் கட்டமைப்பதும் சரியா? ஒரு காலத்தில் மதத்தின் பிடியில் சிக்கியிருந்த அறிவியல் நிறைய உயிர்ப்பலிகளைக் கொடுத்து இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. இன்றைய மக்களாட்சிக் காலத்திலும் ஆட்சியாளர்களுக்காக அறிவியலைப் பலியிடுவது மிகவும் இழிவானது.

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக