தவறான செய்திகளை
அளிக்கலாமா?
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான
விமர்சனத் தொடர்: 29)
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல்
பகுதியில் ‘அரசியல் கட்சிகள்’ என்றொரு பாடம் உள்ளது. இதில் அரசியல் கட்சிகளின்
பெயர்களையோ, சின்னங்களையோ பயன்படுத்தக் கூடாது என்கிற கொள்கை வகுத்துப் பாடம்
எழுதியுள்ளனர் போலும்! தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு எடுத்துக்காட்டுகள் அளிக்காமல்
பாடம் நீள்கிறது. ஒன்பதாம் வகுப்பிலும் இதே நிலைதான். இக்கொள்கை இறுதியில் மாறியுள்ளது.
வேளாண்மையைப்
பேசும்போது பயிர்வகைகளைச் சொல்லமாட்டோம் என்கிற கொள்கை எத்தகையது என்று விளக்கத்
தேவையில்லை. சாதிப்பெயரைச் சொல்வதில்லை எனும் கொள்கை பசும்பொன் முத்துராமலிங்கம்
எனும் தலைவருக்காக வளைக்கப்பட்டதை (7 தமிழ்) முன்பே கண்டோம்.
‘அரசியல்கட்சிகள்’
என்ற பெயரிலான பாடத்தில் அரசியல் கட்சிகளை பெயரைக் குறிப்பிடக்கூடாது என்பது
கொள்கை வகுத்தது ஏன்? அரசியல் கட்சிகளைச் சொல்லாமல் இப்பாடம் எப்படி
முழுமையடையும்? இறுதியாக சொல்லும் கட்சியின் பெயர்களையாவது சரியாகச் சொல்லித் தொலைத்திருக்கலாம்!
அதுவும் நடக்கவில்லை. மேலும் பல்வேறு பிழைகளுடன் இப்பத்தி இருக்கின்றது. பாடத்தில்
இடம்பெறும் பத்தியை கீழே காணலாம்.
ஆங்கில வழியில் ‘Electoral Symbols and its importance’ என்ற பத்திகள்,
“An electoral symbol is a standardised
symbol allocated to a political party. They play an important role in elections. They can be easily identified, understood, remembered and recognized by the voters. The Election commission has stopped allotting animals as symbols. The only exceptions are the lion and the elephant. The symbol of nationally recognized parties is standard throughout India. That symbol will not be allotted to any other party or individual. State parties are allotted to
certain symbols that no other party can use the symbol in that particular state but which different parties in different states can use the same symbol. (e.g Shiv Sena in Maharashtra and Jharkhand Mukti Morsha in Jharkhand use bow and arrow as their symbol). (page: 196)
தமிழ் வழியில் ‘தேர்தல் சின்னங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்’ என்ற பத்திகள்,
தேர்தல்
சின்னம் என்பது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட சின்னம் ஆகும். அது தேர்தலில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. தேர்தல் சின்னங்கள் வாக்காளர்களால் எளிதில் அறிந்து கொள்ளப்பட்டு நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. விலங்குகளின சின்னங்களை வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது. விதிவிலக்காக யானை மற்றும் சிங்கம் ஆகிய சின்னங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னம் நாடு முழுவதும் ஒன்றாக இருக்கும். இத்தகைய சின்னங்கள் வேறு எந்த கட்சிக்கும் அல்லது சுயேச்சை நபருக்கும் ஒதுக்கப்படமாட்டாது. மாநில கட்சிகளுக்கு
அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் இதை வேறு எந்த கட்சியும் அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் பயன்படுத்த இயலாது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநிலக்கட்சிகள் தங்களது மாநிலங்களில் இதே போன்ற சின்னத்தை பயன்படுத்தலாம். (உதாரணமாக மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோட்சா ஆகிய கட்சிகள் வில் மற்றும் அம்பு சின்னத்தை பயன்படுத்துகின்றன). (பக்.232)
‘ஜார்க்கண்ட் முக்தி மோட்சா’ என்று எழுதுவதைக் கவனிக்கவும். ‘முக்தி’ இருந்தால்
‘மோட்சா’ கிடைக்க வேண்டுமல்லவா! ஒரு கட்சியின் பெயரைக்கூடவா சரியாக எழுதமுடியாது?
நாளிதழ்களில் தினசரி இப்பெயர்கள் புழக்கத்தில்தானே உள்ளன. Jharkhand Mukti Morcha – JMM என்ற பெயரை ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா’ என்றே எழுதவேண்டும். இல்லாவிட்டால் ‘ஜார்க்கண்ட்
முக்தி மோர்சா’ என்று ஆங்கிலத்தை அப்படியே ஒலிபெயர்த்து
எழுதிவிட்டுப் போகட்டும். இங்கு எங்கிருந்து வந்தது ‘மோட்சா’?
‘மோர்ச்சா’ என்றால் முன்னணி (Front) என்று
பொருள். ஒரு காலத்தில் வி.பி.சிங்கின் ‘ஜன மோர்ச்சா’ (மக்கள் முன்னணி) இந்திய
அரசியலில் சிறப்பிடம் பெற்றது. ‘முக்தி’ என்பது விடுதலையைக் குறிக்கும்.
‘ஜார்க்கண்ட் விடுதலை முன்னணி’யே (Jharkhand
Liberation Front) ‘ஜார்க்கண்ட் முக்தி
மோர்ச்சா’ என்றழைக்கப்படுகிறது.
எப்போது ஒலிபெயர்த்து
எழுதுபவர்கள் ‘ஷிவ் சேனா’வை (Shiv Sena) மட்டும் ‘சிவ சேனை’ என்று எழுதுவது ஏன்? ‘மோட்சத்தை’ப்
போல இதில் சிவனையும் முடிச்சு போட வேண்டாம்! இது இந்துத்துவக் கட்சியாக
இருப்பினும் பெயரில் உள்ள ‘சிவ’ சிவனைக் குறிப்பதல்ல. ‘சிவாஜியின் ராணுவம்’ என்பதே இதன் பொருள். இரட்டைக்
குழந்தைகளின் (genes) கதைக்கு ஷங்கர் ஜீன்ஸ் (Jeans) என்று பெயர் வைக்கவில்லையா!
விதிவிலக்கான விலங்குகளின் சின்னங்கள் யானை, சிங்கம்
மட்டுமல்ல. சேவலும் உண்டு. (சேவல் பறவை என்பதால் அது விலங்குப் பட்டியலில் வராது போலும்!)
‘அகில இந்திய பார்வார்டு பிளாக்’ கட்சி (மேற்கு வங்காளம்), மகாராஷ்டிரவாதி கோமண்டக்
கட்சி (கோவா), மலைப் பிரதேச மக்கள் ஜனநாயகக் கட்சி (மேகலாயா) ஆகியவற்றுக்கு சிங்கம் சின்னமும் ‘பகுஜன் சமாஜ் கட்சி’க்கு (BSP) யானை சின்னமும்
அளிக்கப்பட்டுள்ளன. சிங்கம் சின்னம் அளிக்கப்பட்டவை மாநிலக் கட்சிகள். ‘பகுஜன் சமாஜ்
கட்சி’ தேசியக் கட்சியாக இருப்பினும் அதற்கு அசாமில் யானை சின்னம் கிடையாது. அங்கு
யானை சின்னம் ‘அசோம் கண பரிஷத்’ கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் BSP -க்கு
சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கப்படும்.
நாகா மக்கள் முன்னணி என்ற மாநிலக் கட்சிக்கு நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய
மாநிலங்களில் சேவல் சின்னம் உள்ளது.
இரட்டை இலை சின்னம் அ.இ.அ.தி.மு.க. (தமிழ்நாடு,
புதுச்சேரி), கேரள காங்கிரஸ் (எம்) ஆகிய மாநிலக் கட்சிகளுக்கு உண்டு. அதைப்போல சைக்கிள்
சின்னம் சமாஜ்வாதி (SP) கட்சி (உத்திரப்பிரதேசம்),
ஜம்மு காஷ்மீர் தேசியச் சிறுத்தைகள் கட்சி
(ஜம்மு காஷ்மீர்), தெலுங்கு தேசம் (ஆந்திரா, தெலங்கானா) ஆகியவற்றுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
(இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 13.04.2018 நிலவரம்.)
தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்கு விழுக்காட்டிற்கேற்ப
அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் மாற்றமடையும். அப்போது சின்னமும் மாறலாம். ‘Regional’ என்பதை ‘பிராந்தியம்’ என
மொழிபெயர்க்க வேண்டாம். மாநிலக் கட்சிகள் என்றாலே போதுமானது.
(இன்னும் வரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக