வெள்ளி, ஜூலை 26, 2019

முரண்படும் பாடநூல்கள்


முரண்படும் பாடநூல்கள்

மு.சிவகுருநாதன்

(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 33)


       பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தொகுதி ஒன்றின் புவியியல் பகுதியில் ‘இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு’ எனும் முதல்பாடத்தில், ‘இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள்’ பட்டியலிடப்படுகின்றன. அதில் ஒன்று,

“நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை”. (பக்.104)

‘தென்னிந்திய ஆறுகளின் சிறப்பியல்புகளில்’ ஒன்று, 

“நீர் (புனல்) மின்சாரம் உற்பத்திக்கு ஏற்றது”. (பக்.105)

      புவியியல் அலகு 03 ‘வேளாண்மைக் கூறுகள்’. இதில் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் நிலவரைபடத்துடன் பட்டியலிடப்படுகின்றன. கடக அட்சக்கோட்டிற்கு  மேல் சம்பல், தாமோதர், கோசி, பகிரதி, சட்லெஜ், சிந்து போன்ற ஆறுகளில் செயல்படுத்தப்படும் நீர் மின்னாற்றல் நிலையங்களும் (பக்.130) அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவும் (பக்.131) சொல்லப்படுகிறது. இதில் சட்லெஜ் சிந்துவின் கிளையாறு. பாகிரதி கங்கை உற்பத்தியாகும் இடத்தில் வழங்கப்படும் பெயர். கோசி கங்கையின் துணையாறு. தாமோதர் ஆறு ஜார்க்கண்ட் மாநிலத்தில் சோட்டா நாகபுரி மேட்டுநிலத்தில் உருவாகும் ஆறு. மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகி யமுனையுடன் கலக்கும் ஆறு சம்பல். இதில் காந்தி சாகர் அணைக்கட்டில் மின்னுற்பத்தி நிலையம் செயல்படுகிறது. பாடநூல் அதை குறிப்பிடவில்லை. அங்கு மின்னுற்பத்தியே இல்லை என்கிறது. 
 
      இந்த ஆறுகள் வட இந்திய ஆறுகள்தானே! இவற்றில் பல்நோக்குத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாகச் சொல்கிறது. ஒரே பாடநூலின் 104 ஆம் பக்க கருத்தை 130, 131 பக்கங்களில் பாடநூலே மறுக்கிறது இந்நிலை தேவைதானா?  

      இப்பாடத்தின் தலைப்பில், ‘வடிகாலமைப்பு’ என்று சொல்வது பொருத்தமற்றது. ‘வடிநில அமைப்பு’ என்று சொல்வதே சரியானது. 

     5 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் அறிவியல் பாடத்தில் இடம்பெற்ற ‘சோளச் சிக்கல்’ இங்கு இருக்கிறது. வட மாநிலங்களில் மக்காச்சோளம், சோளம் போன்றவையும் தென் மாநிலங்களில் மக்காச்சோளம் மட்டும் விளைவதாக 133 பக்க அட்டவணை தெரிவிக்கிறது. பாட முகப்பிலும் (பக்.123) மக்காச்சோளம் படம் இடம்பெறுகிறது.

     ஆனால், சோளம் எனும் தலைப்பில் பாடநூல் கீழ்க்கண்ட கருத்துகளை முன்வைக்கிறது.


     “நம் நாட்டின் மூன்றாவது முக்கிய  உணவுப்பயிர் சோளம் ஆகும். இது ஆப்பிரிக்காவை பூர்விகமாகக் கொண்ட பயிராகும். இப்பயிர் வறட்சியான காலநிலையிலும் நன்கு வளரக்  கூடியது. இத்தானியத்தில் கார்போ-ஹைட்ரேட்,  புரதச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது பெரும்பாலான ஏழை மக்களுக்கு  மலிவான உணவாக விளங்குகிறது.  இது நாட்டின் பல பகுதிகளில் கால் நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கியப்பயிராகவும் இது விளங்குகிறது. மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும்  மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் இவற்றின்  முதன்மையான உற்பத்தியாளர்களாகும்”. (பக்.134)
 
‘கம்பு’  சிறுதானியம் பற்றிக் கீழ்க்கண்ட பத்தி பேசுகிறது.

       “கம்பு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட  ஒரு பயிராகும். இது ஏழை மக்களின் ஒரு முக்கிய உணவுப் பயிராகும். கம்பு பயிரின் தண்டுப்பகுதி  கால்நடைகளுக்கு தீவனமாகவும் வீட்டுக்கு கூறை வேய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது வறண்ட  பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. இந்தியாவில்  இராஜஸ்தான் முதன்மை உற்பத்தியாளராகவும்  அதைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள்
அதிக உற்பத்தியை தருபவைகளாகவும் உள்ளன”. (பக்.134)

     “கம்பு பயிரின் தண்டுப்பகுதி  கால்நடைகளுக்கு தீவனமாகவும் வீட்டுக்கு கூறை வேய்வதற்கும் பயன்படுத்தப்படுவதாகச்” சொல்லப்படுகிறது. கூறை அல்ல கூரை. கூறை என்பது ஆடையைக்குறிக்கும். (எ.கா.) கூறைப்புடவை. இங்கு சோள உற்பத்தி மிகவும் குறைவு. இந்நிலையில்  சோளம் “நாட்டின் பல பகுதிகளில் கால் நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுவதாகச்” சொல்வது எப்படி சரியாகும்? மக்காச்சோளத்தையே இவ்வாறு சொல்வதாக கருத இடமுள்ளது. கம்பு, சோளம் ஆகியன ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டதா? மக்காச்சோளம் தென் அமெரிக்கா (லத்தீன் அமெரிக்கா) நாடான பிரேசிலில் நாட்டில் முதலில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறகு வட அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்தது. பெரும்பாலும் கால்நடைத்தீவனமாகப் பயன்படுவது இதுதான். இந்த சோளச்சிக்கல் எந்த வகுப்புப் பாடத்திலும் தீரப்போவதில்லை. பாடநூல்களின் தெளிவின்மை  இதுவோர் சான்று. 


       கரும்பு இந்தியாவின் மிக முக்கியமான  வாணிபப்பயிராகும். இந்தியா கரும்பில் உலகின்  இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகும். இப்பயிர் சர்க்கரை தொழிற்சாலைக்கு மூலப் பொருளை அளிக்கிறது. இது நம் நாட்டின் இரண்டாவது  பெரிய தொழிற்சாலை பிரிவாகும். சர்க்கரை உற்பத்தியை தவிர வெல்லம், நாட்டுச்சக்கரை,  சாராய தொழிற்சாலைக்கான கரும்புச்சாறு  மற்றும் காகித தொழிற்சாலைக்கு தேவையான  கரும்பு சக்கைகளையும் அளிக்கிறது. (பக்.135)

    கரும்பிலிருந்து எடுக்கப்படுவது கரும்புச்சாறு. இதிலிருந்து சர்க்கரை, வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியன தயாரிக்கப்பட்டபிறகு இறுதியாக எஞ்சுவதே ‘மோலாசஸ்’ (molasses) எனப்படும் சாரய உற்பத்திக்கான மூலப்பொருள். இதை கரும்புச்சாறு என்று சொல்லாமல் வேறு மொழியாக்கங்களைக் கண்டடைவது நல்லது.

  ‘ஓத அலைக் காடுகள்’, எனும் தலைப்பில் கீழ்க்கண்டவாறு உள்ளது.

       “இக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு  முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்பு நிலக்காடுகள்  மற்றும் டெல்டா காடுகள் எனவும்  அழைக்கப்படுகின்றன. கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் இவ்வகை ஓதக்காடுகள் காணப்படுகின்றன. இவை ’’மாங்குரோவ் காடுகள்’’ என்றும் அழைக்கப்படுகின்றன”. (பக்.116)

      பொங்குமுகம், கழிமுகம் இரண்டு வெவ்வேறா? இரண்டிற்குமுள்ள வேறுபாடுகள் என்ன? ஆற்றுக் கழிமுகம், கடற்கழிமுகம் என்ற வேறுபாடுகள் உண்டா? ஓத அலைக்காடுகள், ஓதக்காடுகள் என்று சொல்வதன் தேவையென்ன? ஓத அலைகள் ஒரு குறிப்பிட்ட நாள்களில் மட்டும் தோன்றுபவை. இந்த ஓத அலைகள் இல்லையென்றால் இந்த சதுப்புநிலக் காடுகள் இருக்காதா? சதுப்புநிலக்காடுகள், அலையத்திக் காடுகள் என்றெல்லாம் சொல்லாக்கூடாதா? கங்கைச் சமவெளியில் ஆற்றுச் சதுப்புநிலங்கள் உண்டல்லவா! அவற்றை எவ்வாறு அழைப்பது? உவர் சதுப்புநிலங்களையும் நன்னீர் சதுப்புநிலங்களையும் வேறுபடுத்த வேண்டாமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.    

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக