‘மோபியஸ் பட்டை’ எனும் உருவகத்தில்
கிணற்றுத் தவளைகளை உருவாக்கும் ஏற்பாடு
(புதிய கல்விக்கொள்கையை ஏன் எதிர்க்க
வேண்டும்?)
மு.சிவகுருநாதன்
(நேற்று
மாலை - 07.07.2019 திருத்துறைப்பூண்டி சத்திரம் நடுநிலைப்பள்ளியில் ‘சீர் வாசகர் வட்டம்’
நடத்திய புதிய கல்விக்கொள்கை-2019 வரைவு பற்றிய கருத்தரங்க உரைக்கு தயாரிக்கப்பட்ட
குறிப்புகள். மேடைப்பேச்சில் எனக்கு உள்ள தடை காரணமாக சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டேன்.
கல்வியாளர் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் புதுச்சேரி தோழர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி
கல்விக்கொள்கையை விரிவாக ஆய்வு செய்து உரையாற்றினார். ‘சீர் வாசகர் வட்ட’த்தின் கவிஞர்
தம்பி கூட்டத்தை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார். எழுத்தாளர் மற்றும் ‘கிழக்குவாசல்
உதயம்’ ஆசிரியர் உத்தமசோழன், வழக்கறிஞர் தய். கந்தசாமி, தலைமையாசிரியர் வேதரெத்தினம்,
ஆசிரியர் எஸ்.சிவகுருநாதன் உள்ளிட்ட சுமார்
30 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். வரவேற்புரை சு. சுரேகா; நன்றியுரை ந. மகேந்திரன்.
முகநூல் நண்பர் முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூரைச்
சேர்ந்த ஆசிரியர் எஸ்.சிவகுருநாதனை முதன்முதலாக சந்தித்தேன். எனது முதல் மகள் கவிநிலா;
அவரது மகள் பெயரும் கவிநிலா!)
முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலாளர் டி.எஸ்.ஆர்.
சுப்பிரமணியம் புதிய கல்விக்கொள்கைக்கான வரைவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு 2016 இல்
ஏப்ரல் 30, 2016 இல் அப்போதைய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ரானியிடம்
217 அறிக்கை அறிக்கை அளித்தது. இதன் சுருக்கமாக ‘தேசிய கல்விக்கொள்கை 2016: வரைவிற்கான
உள்ளீடுகள்’ (‘தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழுவின் அறிக்கை’ எனும் துணைத்தலைப்புடன்…)
வெளியிடப்பட்டது. இக்குழுவில் இடம்பெற்றவர்கள் கல்வித்துறையுடன் தொடர்பற்றவர்கள் மட்டுமல்ல;
சிலர் இந்துத்துவப் பின்புலம் கொண்டவர்கள். கல்விப்புலத்தில் இவர்களது பின்புலம், சாய்வுகள்,
ஆய்வுகள் ஆகியன கவனத்தில் கொள்ளப்பட வேண்டியன.
டி.எஸ்.ஆர்.
சுப்பிரமணியம் அறிக்கை தாய்மொழிக் கல்வி பற்றி பேசியது. ஆனால் கே.கஸ்தூரிரங்கன் மும்மொழிக்
கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயல்கிறது. கடும் எதிர்ப்பிற்குப் பிறகு மூன்றாவது இந்திய
மொழி என்கின்றனர். தமிழக மக்கள் மூன்றாவதாக
எதற்கு இடம் கொடுப்பார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
அப்துல்கலாம்
போன்றோர் மட்டும் விஞ்ஞானிகளாகக் கொண்டாடப்படும் நாட்டில் இங்கு அறிவு என்பது இஸ்ரோ,
அணுசக்தி ஆகியவற்றை மையங்கொண்டே இயங்குவது விமர்சிக்கப்படவேண்டியது. அப்துல்கலாம் தனக்குத்
தொடர்பில்லாத துறைகளில் கருத்துரைப்பதையும் அவற்றைப் பொதுக்கருத்துகளாக மாற்றும் வேலைகளில்
ஈடுபட்டுவந்தார். அவரை பா.ஜ.க. மிக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. சில மணிநேரங்களில்
கூடங்குளம் அணுஉலையை ஆய்வுசெய்து பாதுகாப்பானது என நற்சான்று அளிக்கும் திறனை அவர்
பெற்றிருந்தார்! அணுக்கரு இயற்பியலில் அவர் நிபுணத்துவம் பெற்றவரில்லை. இங்கு கே.கஸ்தூரிரங்கன்
பயன்படுத்தப்பட்டுள்ளார்; அவ்வளவுதான்.
இஸ்ரோவில் பணிபுரியும் ஆட்களெல்லாம் ‘சர்வ ரோக
விஞ்ஞானிகள்’ (அனைத்துத்துறை விஞ்ஞானிகள்) ஆவதேன் என்ற கேள்வி மிக முதன்மையானது. அப்துல்கலாம்,
கே.கஸ்தூரிரங்கன், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் என்பதாகவே அறிவுலகம் கட்டமைக்கப்படக்கூடாது.
புதிய
ஐந்தாம் வகுப்பில் தமிழக அறிவியலாளர்கள் என்று ஐவரைப் பட்டியலிடுகின்றனர். அதில் ஒருவர்
பெயர் தவறாகச் சொல்லப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் ஐந்து தமிழக விஞ்ஞானிகள்
பெயரைச் சொல்லுமாறு கேட்டேன். அவர்கள் அப்துல்கலாம் என்ற பெயரைத்தாண்டி யாரையும் சொல்ல
அவர்களால் முடியவில்லை. சுனிதா வில்லியம்யஸ், கல்பனா சாவ்லா என்ற பதில்களும் கிடத்தன.
விவிலியத்தில் வரும் ‘நோவாப் பேழை’யில் நீங்கள் யாரை வைத்து பாதுகாக்க விரும்புகிறீர்கள்
எனக் கவிதையில் எழுதச் சொன்னபோது அனைவரும் அப்துல்கலாம் என்றே எழுதியதாக நண்பர் ஒருவர்
குறிப்பிட்டார். இவற்றை இந்திய அறிவுலக வீழ்ச்சி என்பதாகவே புரிந்துகொள்ள இயலும்.
அந்தப்பட்டியலில் உள்ளவர்கள்:
- முனைவர் M. S. சுவாமிநாதன் - மரபியல் - பசுமைப்புரட்சி
- சீனிவாச ராமானுஜன் - கணி்தம் - கலப்பு எண்கள்
- வெங்கட்ராமன் இராதாகிருஷ்ணன் - உயிரியல் - ரிபோசோமின் அமைப்பு (‘வெங்கி’ என்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்பதே சரி. வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் சர் சி.வி. ராமனின் மகன்; இயற்பியல் அறிஞர்.)
- முனைவர் A. P. J. அப்துல்கலாம் - வானூர்தி அறிவியல் - ஏவுகணைத் தயாரிப்பு
- சர். C. V. இராமன் - இயற்பியல் - ஒளிச்சி்தறல் (ஐந்தாம் வகுப்பு அறிவியல்,பக்.131)
இந்திய அறிவியல்
மாநாடுகளில் நிலை பஞ்சாப் ஜலந்தரில் வெளிப்பட்டது. நியூட்டன், ஐன்ஸ்டீன்,
வில்லியம் ஹாக்கின்ஸ் ஆகியோரது கண்டுபிடிப்புகள் தவறானவை என்று சொல்லி ‘மோடி
ஈர்ப்பு அலைகள்’ எனப்பெயரிட்ட போலி அறிவியல்
அறிஞர் ஒருவருக்கு மாநாட்டில் இடம் தரப்பட்டது மட்டுமல்ல; அவரது போலி ஆய்வுகளுக்கு
பல கோடி அரசுப்பணம் வழங்கப்பட்டது. இம்மாதிரியான மோசடி வேலைகளை எதிர்த்து 2009 இல்
வேதியியலுக்கு நோபல் பரிசு பெற்ற ‘வெங்கி’
என்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் மாநாட்டை ‘சர்க்கஸ், என்று வருணித்து இனி இந்திய
அறிவியல் மாநாடுகளில் கலந்துகொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தார்.
“உள்ளடங்கிய
சமமான கல்வியை வாழ்நாள் முழுதும் கற்கும் வாய்ப்புகள் உறுதி செய்தல்” (“to ensure
inclusive and equitable quality education and promote lifelong learning
opportunities for all”) என்று சொல்லும் இவ்வரைவு
அதற்கான வழிகளை அடைக்க முயற்சி செய்கிறது.
484 பக்கங்கள் ஆங்கிலத்தில் விரியும் இவ்வளவு விரிவான
அறிக்கைக்கு 51 பக்கங்களில் தமிழ்ச் சுருக்கம் ஒரு மாதம் கழித்து வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 10 பக்கங்களுக்கு மேல் வெறுமனே மோபியஸ் பட்டை (அ) நாடா மட்டுமே உள்ளது.
“மோபிய பட்டையின் வடிவம் அறிவின் நிலைத்து நீடிக்கும்,
வளருகின்ற, உயிரூட்டமுள்ள பண்பை அடையாளப்படுத்துகிறது – இதற்கு தொடக்கமும் இல்லை, முடிவும்
கிடையாது. அறிவின்
உருவாக்கம், மரபுவழி மாற்றம், பயன்பாடு, பரப்புதல் ஆகியவற்றை இந்தத் தொடரலையின் பகுதியாகவே
இந்தக் கொள்கை கருதுகிறது.”
அறிவு நிலையாக நீடித்திருக்கின்ற ஒன்றல்ல; மாறாக
மாறிக்கொண்டிருப்பது. கலிலியோ கலிலி, கோபர் நிக்கஸ், நீயூட்டன், ஐன்ஸ்டீன் என்று வளர்ந்துகொண்டிருப்பது
அறிவு. புவி தட்டையானது என்றோ, சூரியன் மட்டுமே இயங்கிறது என்றோ நிலையாக நம்பிக்கொண்டிருப்பதில்
அறிவு இல்லை. மதநம்பிக்கைகளில்தான் இது இருக்கிறது. இந்த நம்பிக்கைகளுக்கும் அறிவு,
கல்வி இவற்றிற்கும் துளியும் தொடர்பில்லை.
“மனித குலத்தின் ஒவ்வொரு யுகத்திலும், அறிவு
என்பது முந்தைய தலைமுறைகளால் உருவாக்கப்பட்டவைகளின் மொத்தத்தையும் அடையாளப்படுத்துகிறது.
தற்போதைய தலைமுறை தன்னுடையதேயான பங்களிப்பையும் இதனுடன் சேர்க்கிறது”.
இந்த மொத்தத்துவப் பண்பு ஆபத்தானது. அறிவு மொத்தமாகத்
திரண்டு வரும் வெள்ளமல்ல. இது தர்க்கம், பகுத்தறிவு, ஆய்வு போன்றவற்றால் விரிவடையும்.
எல்லாவற்றையும் ஏற்பதில் மட்டுமல்ல; மறுப்பதிலும் அறிவு இருக்கிறது. புதிய தலைமுறையின்
பங்களிப்பு முந்தியவற்றைப் பகுத்தாராய்ந்து மறுப்பதிலும் சீர்படுத்துவதிலும் உண்டு.
புதிய கல்விக்கொள்கை 1986, திருத்தப்பட்ட புதிய
கல்விக்கொள்கை 1986/92, கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 ஆகியவை நடைமுறைகளில் உரிய
பலன் தரவில்லை என்றும் இவ்வரைவு பேசுகிறது. அதற்கு மாற்றாக இவ்வளவு பக்கங்களில் எவ்விதத்
தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை. கல்விக் கொள்கைகளை வடிவமைப்பது நாவல் எழுதுவதைப்
போன்றதல்ல. ஆனால் அதுதான் நடந்துள்ளது.
சுருக்கமான என்ன செய்யவேண்டும் என்பதை சுமார்
100 பக்கங்களில் சொன்னால் போதும். ஆனால் இவர்கள் தமிழில் 51 பக்கங்களில் வெளியிட்ட
சுருக்கம் வரைவுவின் அடைப்படைகளை முற்றாக பிரபளிக்கவில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.
எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில் வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டைப் போக்குவதற்காக
இந்தச் சுருக்கம் வெளியாகியிருக்கிறதே தவிர வரைவின் சாரம் இதிலில்லை. இதை மட்டும் வாசிப்பவர்கள்
கொள்கையின் மறைமுகத் திட்டங்களை உணரமுடியாது.
மோபியஸ் நாடா அல்லது மோபியஸ் பட்டை என்பது காகித நாடாவின் ஒரு முனையினை
திருப்பி பின்
மறு முனையோடு
இணைத்து ஒட்டினால் மோபியஸ்
நாடா கிடைத்து விடும்.
இந்த நாடா எறும்பு அல்லது பூச்சி ஊர்ந்து சென்றால் காகிதத்தின் விளிம்பினைத்
தாண்டாமல் காகிதத்தின் இரு பக்கங்களிலும் செல்லமுடியும்.
இந்தப் பட்டை ஜெர்மனி கணிதவியல்
அறிஞர் ஆகஸ்ட் ஃபெர்டினான்ட் மோபியஸ் ஜோஹன் பெனடிக்ட் லிஸ்கிங் ஆகியோரால்
கண்டறியப்பட்டது.
கணிதவியல் (Mathematics), கட்டமைப்பியல் (Topology), இயற்பியல் (Physics) கலைகள் (Arts), இசை (Music), கணினி வரைகலை (Computer graphics) போன்ற பல்வேறு
துறைகளில் இது பயன்படுகிறது. ஆனால்
புதிய கல்விக்கொள்கைக்கான இந்த உருவகம் கிணற்றுத்
தவளை மனப்பான்மை, வேதமயச் சிந்தனை மரபுக்கு
தள்ளுவதை குறிப்பால் உணர்த்துவதாக கருதலாம்.
‘நீதி ஆயோக்’ போன்ற பெயர் மாற்ற வேலைகள் அரசியல்வாதிகள் செய்வது. இதைப்
பரிந்துரை செய்வதற்கு கல்விக்குழு எதற்கு? உச்சபட்ச அதிகாரம் கொண்ட இக்குழு எதை
சாதிக்கும்? பிரதமர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை ஆணையம் போன்றவை என்ன
செய்திருக்கின்றன. இதன் செயல்பாட்டுக்கு ஒடிசாவைத் தவிர வேறு உதாரணம் உண்டா? ‘கஜா’
புயலில் இவ்வாணையம் கிழித்தது என்ன? மத்தியில் இவ்வாறு அதிகாரத்தைக் குவிக்கும்
அமைப்புக்கள் தனியார்மயத்தையும் வணிகமயத்தையும் துரிதப்படுத்தும் வேலைகளைச்
செய்கின்றன. (எ.கா.) இந்திய சாலை மேம்பாட்டு ஆணையம். கல்வியை வணிகமாக்கும் வேலையை இந்த ‘ஆயோக்’
துரிதப்படுத்தும். கடந்த ஐந்தாண்டுகளில் எத்தகைய சீர்குலைவுகளில் ஈடுபட்டனர்
என்பதை நாமறிவோம். எனவே இவர்களிடம் நம்பிக்கை கொள்ள ஏதுமில்லை.
90% மேற்பட்ட ஆசிரியர்கள் பெயிலாக்கும்
நடைமுறைக்கு ஆதரவாகவே உள்ளனர். இந்நிலை மாறவேண்டும். 3, 5 மற்றும் 8 ஆம்
வகுப்பிற்கு பொதுத்தேர்வுகள் 9 -12 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருபருவத் தேர்வுகள்
என்பதை அவர்கள் ஆதரிக்கக் கூடும். மத்திய அரசு அடைவுத்தேர்வுகள் என்ற பெயரில் அதிகாரப்பூர்வமற்ற
தேர்வுகளை நடத்தி வருகிறது. இனி அதிகாரப்பூர்வ தேர்வுகள் மூலம் மாணவர்கள்
வடிகட்டப்படுவர். பெயிலாக்குவதன் வாயிலாக
மாணவர்களின் திறனை வளர்க்க இயலாது. ஓட்டுநர் உரிமம் பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
என்ற நிலையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து அதை ஐந்தாம் வகுப்பாக
குறைக்க ஒருபுறம் நடவடிக்கை, எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சியளிக்கும் நடைமுறையை
மாற்றுவது மறுபுறம். இந்த ஒதுக்கல் கொள்கை மிக மோசமானது.
‘மனித வள மேம்பாடு’ என்று சொல்வது இக்குழுவிற்கு
ஆகாது என்ற ஒன்றே இவர்களது சாய்வைப் புரிந்துகொள்ளப் போதுமானது. பொதுப்பட்டியலில் உள்ள கல்விக்கு மாநில அரசும்
ஒரு கல்விக்கொள்கையை உருவாக்கலாமே! அதற்கான சூழல் தமிழகத்தில் உள்ளதா? இருக்கின்ற
குறைவான நேரத்தில் இவை தொடர்பான பரப்புரைகள், எதிர்வினைகள் அதிகமாக வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக