திங்கள், ஜூலை 29, 2019

ஏழு தொன்மையான உலக மொழிகள்!?



ஏழு தொன்மையான உலக மொழிகள்!?  

 மு.சிவகுருநாதன்

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 35)




       12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடநூலில் தமிழின் தொன்மை கி.மு. 300 என வரையறுக்கப்பட்டதன் சர்ச்சை அரசியல் பிரச்சினையாக வெடித்துள்ளது. தவறு உடனடியாகத் திருத்தம் பெறும் என்றும் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கல்வியமைச்சர் அறிவித்துள்ளார். அவர்கள் மீது விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றன. இதுவரையில் பாடநூல்களில் 19 தவறுகள் திருத்தப்பட்டிருப்பதாகவும் குறைந்த கால வரையறைக்குள் பாடங்கள் தயாரிக்கப்பட்டது என்றும் அதனால் பிழைகள் நிகழ்ந்துவிட்டதாகவும் குறிப்பிட்டால் திருத்தம் செய்துவிடலாம் என்றும் அமைச்சர் சமாதானம் சொல்லியுள்ளார். 


          இன்றைய நாளிதழ்களில் (ஜூலை 29, 2019) அச்சுப்பிழை என்று கல்வியமைச்சர் சொன்னதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.  உண்மையில் இது அச்சுப்பிழை அல்ல; திருடப்பட்ட பிழை என்பதை இந்த ஆதாரம் மூலம் அறியலாம்.

       சென்ற கல்வியாண்டின் (2018-2019) இரண்டாம் பருவத்தில் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கானச் சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது. நாங்களும் மாணவர்களுக்குத் தெரிவித்தோம். இக்கல்வியாண்டில் (2019-2020) ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் திருத்திய பதிப்பு 2019 வெளியாகியுள்ளது. அவற்றில் பல பிழைகள் திருத்தப்படவில்லை. (அவற்றை விளக்கமாக தனியே கவனிப்போம்.) 

     இவ்வாண்டு 7,8,10 சமூக அறிவியல், 9 அறிவியல், 7 தமிழ், 11, 12 வரலாறு ஆகிய பாடங்களுக்கான திருத்தங்களுக்கான சுற்றறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. முறையாக இவை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரியவில்லை. இவை வைகுண்ட சுவாமிகள், காமராசர் பற்றிய திருத்தங்களும்  9 ஆம் வகுப்பு அறிவியலில் “கிராஃபைட் மின்சாரம் கடத்தும்” என்ற திருத்தமும் அடங்கும். இவர்களது திருத்தங்களின் நிலைக்காக இவற்றைச் சொல்ல வேண்டியுள்ளது. பிழைகள் வருவது இயல்புதான். ஒருவரே எழுதி அச்சுக்கு அனுப்பினால் பிழைகள் மலியலாம். பல அடுக்குகளில் பலர் இணைந்து கூட்டாக செய்யும் இப்பணியில் இவ்வாறு பிழைகள் மலிவது வியப்பாக உள்ளது.

  

   பேருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் அந்தக் கால ‘சரோஜாதேவி’ புத்தகங்களின் தரத்தில் ‘பொது அறிவு வினா விடைகள்’ என்றெல்லாம் புத்தகங்கள் விற்பனையாகும். அவற்றை வாங்கி அதை பள்ளிகளில் ஒப்பிக்கும் முறையும் வழக்கத்தில் இருக்கிறது. அதில் பாதிக்குமேல் தவறுகள் மலிந்திருக்கும். அதைப்போலவே இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தள பக்கங்களில் பகிரப்படும் செய்திகளை பாடநூல்களில் ஏற்றும் நிலை வந்துவிட்டது சீரழிவின் அடையாளம். 


   Dr. U. Ve. Swaminatha Aiyar known as Tamil Thatha  (1855-1942) and 
Damotharapillai (1832-1901) both Tamil scholars had collected old palm leaf and paper 
manuscripts and catalogued them. They had also edited most of the classical texts for 
the first time”. (Page:142) என்ற பத்தி மூலம் சாதிப்பெயர்கள் நீக்கம் தமிழ்ப்பாடத்திற்கு மட்டும் என்று உணரமுடிகிறது. இதிலும் விதிவிலக்குகள் உண்டு. 


          நான் பல முறை விக்கி பீடியாவை வரிக்குவரி காப்பியடித்து பாடநூல்கள் பல எழுதப்படுவதை உரிய ஆதாரங்களுடன் விளக்கி எழுதியுள்ளேன். இங்கு அதேதான் நடந்துள்ளது. ‘இந்தியா டுடே’ எனும் இணையப்பக்கத்தில் ‘Seven oldest languages in the world that are still in use’ என்ற கட்டுரை ஒன்றிலிருந்து இந்த செய்திகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களும் விக்கிபீடியாவைச் சான்றாகக் காட்டுகின்றனர். கி.மு. 2000 ஆண்டில் எழுதப்பட்ட சமஸ்கிருதத்தின் வரிவடிவத்தையும் அப்பக்கத்தில் நீங்கள் கண்டு களிக்கலாம்! இதன் மூலம் தேவநாகரி எழுத்துருக்களின் தொன்மையையும் நீங்கள் அறிந்தவர் ஆவீர்கள்! (வேறென்ன, தேவநாகரி லிபியில்தான்…) இணைப்பும் படமும் கீழே தரப்படுகின்றன.
 
Sanskrit: Origin (according to first appearance as script) - 2000 BC




    இக்கட்டுரையில் உள்ள தரவுகள் படி 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடநூலின் அலகு 05 இல் ‘Warm Up’ தயாரிக்கப்பட்டுள்ளது. (தரவுகள்: தமிழ் கி.மு.300, சமஸ்கிருதம் கி.மு.2000, கிரேக்கம் கி.மு.1500, சீன மொழி   கி.மு. 1250, ஹிப்ரு    கி.மு.1000, லத்தீன்   கி.மு.75, அரபு மொழி கி.பி.512)

c) The box below gives details of a few languages and their origin. Arrange them 
chronologically.

Chinese - 1250 BC (BCE) Hebrew - 1000 BC (BCE) Latin - 75 BC (BCE) Arabic - 512 AD (CE) Tamil - 300 BC (BCE) Greek - 1500 BC (BCE) Sanskrit - 2000 BC (BCE)  (Page:142)

    அந்த இணையப்பக்கத்தில் படத்துடன் கீழ்க்கண்ட விவரங்கள் உள்ளன. அவை நமது பாடநூலில் கையாளப்பட்டுள்ளன. இனி பாடநூல் தயாரிப்பு எப்படியிருக்கும் என்கிற நிலையை இது எடுத்துக்காட்டுகிறது. இன்று இணையத்தில் நிறைய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் உண்மை எது புனைவு எது எனப் பிரித்தறிய கடின உழைப்பு மற்றும்  ஆழமானத் தேடல் தேவைப்படுகிறது. இன்று வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் வதந்திகள் வரலாறாக மாறும் சூழல் மிகவும் ஆபத்தனாது. ‘தமிழ் அருவி’ப்பாடநூல்களில் திருநள்ளாறு, சிதம்பரம் குறித்த குப்பைகள் இவ்வாறே காப்பியடிக்கப்பட்டுள்ளன. அது தனியார் திருட்டுப் பாடநூலின் நிலை. அரசின் பாடநூலும் இவ்வாறு இருப்பது நமது அறிவுலக வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. 

Tamil: Origin (according to first appearance as script) - 300 BC
Sanskrit: Origin (according to first appearance as script) - 2000 BC
Greek: Origin (according to first appearance as script) - 1500 BC
Chinese: Origin (according to first appearance as script) - 1250 BC
Hebrew: Origin (according to first appearance as script) - 1000 BC
Latin: Origin (according to first appearance as script) - 75 BC
Arabic: Origin (according to first appearance as script) - 512 CE

     கீழ்க்கண்ட மற்றொரு இணையப்பக்கத்தில் வேறொரு பட்டியல் உள்ளது. அதில் ஹிப்ரு, தமிழ், சமஸ்கிருதம், பாரசீகம் என்ற வரிசையில் 10 மொழிகள் சுட்டப்படுகின்றன. இணைப்பையும் பட்டியலையும் தருகிறேன். 


Top 10 oldest languages still in use


  • Hebrew
  • Tamil
  • Sanskrit
  • Farsi/Persian
  • Lithuanian
  • Greek
  • Latin
  • Chinese
  • Basque
  • Arabic

  
            ஜார்ஜ் எல் ஹார்ட்ட்டின் கட்டுரை 2000 இல் எழுதப்பட்டது. அதை ஏன் பாடநூலில் வைக்க வேண்டும் என்ற குரல்கள் கூட கேட்கின்றன. இந்தக் கட்டுரையைப் பாடநூலில் வைத்ததற்கு உறுதியாக பாடநூல் குழுவினரைப் பாராட்டலாம். சிக்கல் ‘Warm Up’ இல் உள்ளது. அக்கட்டுரையில் இச்செய்திகள் இல்லை. 

     இதைப்போல எண்ணற்றத் தவறுகளை நான் சுட்டிக்காட்டியுள்ளேன். அதைப்பற்றி யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. 7 தமிழில் காமராசர் பற்றிய தவறான செய்தி, 10 சமூக அறிவியலில் வைகுண்ட சுவாமிகள் பற்றிய குறிப்புகள் மட்டுமே திருத்தம் செய்யப்பட்டுள்ளன. நினைவூட்டலுக்காக சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். 


  • “வடமொழிக்கும் தாயாகி நின்றவளே!”, என்ற வரிக்காக பெருஞ்சித்தரனாரின் பாடலின்  ஒரு பகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறு பகுதி  இணைக்கப்பட்டது. (10 தமிழ்)
  • வள்ளலாருடைய “தீவிரமான சிந்தனைகள் பழமைவாத சைவர்களை ஆழமாகப் புண்படுத்தியதாக”ச் சொல்லும் பாடநூல். (10 வரலாறு)
  • பண்டித அயோத்திதாசர்  பற்றிய பாடப்பகுதியில் அருட்திரு ஜான் ரத்தினம் என்ற பெயரை ‘ஜான் திரவியம்’ என்கிறது பாடநூல். மேலும் 1907-1914  காலகட்டத்தில் ‘ஒரு பைசாத் தமிழன்’ வந்ததாக செய்தி உள்ளது. 1907 இல் தொடங்கப்பட்ட ‘ஒரு பைசாத் தமிழன்’ இதழ் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த ஆண்டே (1908) ‘தமிழன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதை மறைக்கிறது. (10 வரலாறு)
  • எல்லா விமான நிலையங்களுக்கும் சூட்டப்பட்டப் பெயர்களைச் சொல்லிவிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையம் என்று எழுதப்படுகிறது. பேரறிஞர் அண்ணா பன்னாட்டு முனையம் என்பதை மறைக்கப்படுகிறது. (10 புவியியல்)
  • ‘மம்லுக் வம்சம்’ என்று சொல்லாமல் அடிமை வம்சம் என்று மீண்டும் மீண்டும் சொல்லுதல். (7 வரலாறு)

     இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. எனது தொடரில் பலவற்றைத் தொடர்ந்து சுட்டிக்க்கொண்டிருக்கிறேன். கண்டுகொள்வார் யாருமில்லை!

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக