அறிவியல் மூடநம்பிக்கைகளை
வளர்க்க வேண்டுமா?
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான
விமர்சனத் தொடர்: 31)
பத்தாம் வகுப்பு அறிவியலில் அலகு 20
‘இனக்கலப்பு மற்றும் உயிர்த் தொழில்நுட்பம்’ எனும் பாடம்,
- நவீன விவசாய நடைமுறைகள் மற்றும் பயிர் மேம்பாடு
- பசுமைப்புரட்சி (நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர்ப்பெருக்கம், பூச்சிகள் / தீங்குயிரிகள் எதிர்ப்புத் திறனுக்கான பயிர்ப்பெருக்கம் மேம்பட்ட ஊட்டச்சத்து தரத்திற்கான பயிர்ப்பெருக்கம்)
- பயிர் பெருக்க மேம்பாட்டு நடைமுறைகள் (புதிய வகைத் தாவரங்களின் அறிமுகம், தேர்வு செய்தல், பன்மயப் பயிர்ப்பெருக்கம், சடுதிமாற்றப் பயிர்ப்பெருக்கம், கலப்பினமாக்கம்)
- விலங்கினக் கலப்பு (உட்கலப்பு, வெளிக்கலப்பு, ஹெட்டிரோசிஸ்)
- மரபுப்பொறியியல் (மரபுப்பொறியியல் தொழில்நுட்பம் அடிப்படைத் தேவைகள், ஜீன் குளோனிங்)
- மருத்துவத் துறையில் உயிர்த் தொழில்நுட்பவியல்
- குருத்தணுக்கள்
- டி.என்.ஏ. விரல் ரேகைத் தொழில்நுட்பம்
- மரபுப் பண்பு மாற்றப்பட்ட உயிரிகள்’ (GMOs)
என்ற
தலைப்புகளில் 11 பக்கங்களாக விரிகிறது.
ஓரிடத்தில்கூட இத்தகைய
தொழில்நுட்பத்தின் குறைபாடுகள், தீங்குகள் சொல்லப்படவில்லை. இவற்றை மதிப்பிடாமல்
போற்றிப் பாடுவது அறிவியல் மனப்பானமையை வளர்க்காது. இது ஓர் அறிவியல்
மூடநம்பிக்கையாக உள்ளது. அறிவியல் சிந்தனைகளைத் தூண்டுவது, அறிவியல் மனப்பான்மைகளை
வளர்ப்பதுமே அறிவியல் பாடநூலின் முதன்மைப் பணிகளாக இருக்க முடியும். ஆனால் இங்கு
நடப்பது வேறு.
ஓரிடத்தில் (ஹெட்டிரோசிஸ்) ‘விலங்குப்
பெருக்கத்தில் கலப்பின வீரியத்தின் விளைவுகள்’ எனும் தலைப்பைப் பார்க்கிறோம்.
ஆனால் அதனுள்ளே அவற்றின் நன்மைகளே சொல்லப்படுகின்றன. நன்மைகளை மட்டும் எழுதும்போது
அதற்கு விளைவுகள் என்று தலைப்பிடுவதும் தவறு.
‘மரபுப் பண்பு மாற்றப்பட்ட உயிரிகள்’ (GMOs - Genetically modified
organisms) பற்றிச் சொல்லப்பட்ட பத்திகளைக் காண்போம்.
“மரபுப்பாறியியலின் ஒரு மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சி, மரபுப்பண்பு மாற்றப்பட்ட உயிரிகளின் உற்பத்தி ஆகும். மரபுப் பண்பு மாற்றம் என்பது rDNA தொழில்நுட்பம் மூலம் உயிரினங்களில் விரும்பிய பண்புகளை ஏற்படுத்த
ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துவது அல்லது ஜீன்களை
விரும்பியபடி கையாள்வது ஆகும். புதிதாக உள் நுழைக்கப்படும் ஜீன் ‘அயல் ஜீன்’ எனப்படும். இம்முறையில் மாற்றப்பட்ட ஜீன் அல்லது புதிய
ஜீ்னைப் பெற்ற தாவர, விலங்குகள் மரபுப் பண்பு மாற்றப்பட்ட உயிரிகள் எனப்படும்.
இவ்விதம் மரபுப் பண்பு மாற்றப்பட்ட தாவரங்கள்
அதிக நிலைப்புத் தன்மை, உயர்த்தப்பட்ட
உணவூட்ட மதிப்பு, நோய்
எதிர்ப்புத் தன்மை மற்றும் மாறுபடும் சுற்றுச் சூழல் நிலைகளுக்குத் தாங்கும் தன்மை
கொண்டதாக விளங்குகின்றன.
அது போன்றே மரபுப்
பண்பு மாற்றப்பட்ட விலங்குகளும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த புரதங்கள் குறைவான
செலவில் உற்பத்தி செய்வதன் மூலம் கால்நடைகளின் தர மேம்பாட்டிற்கு உதவுகின்றன”.
பாடநூல் அட்டவணையில் உள்ள விவரங்கள்:
“மரபுப்பண்பு மாற்றம்
செய்யப்பட்ட சில தாவரங்கள் மற்றும் விலங்குகளின்
விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
நோக்கம் : மேம்படுத்தப்பட்ட கம்பளி தரம் மற்றும் உற்பத்தி
புகுத்தப்பட்ட ஜீன் :
சிஸ்டீன் அமினோ அமிலம் உற்பத்திக்கான
ஜீன்கள்
சாதனை : அயல் ஜீ்னைப் பெற்ற
செம்மறி ஆடு (ஜீன்
வெளிப்படுத்தப் பட்டது)
நோக்கம் : மீன்களில் அதிக வளர்ச்சி
புகுத்தப்பட்ட ஜீன் : சால்மன் அல்லது ரெயின்போ
ட்ரெளட் அல்லது
திலேப்பியா வளர்ச்சி ஹார்மோன் ஜீன்
சாதனை : அயல் ஜீ்னைப் பெற்ற மீன் (ஜீன் வெளிப்படுத்தப் பட்டது)
மரபுப் பண்பு மாற்றம்
செய்யப்பட்ட தாவரங்கள்
நோக்கம் : மேம்படுத்தப்பட்ட
ஊட்டச்சத்து தரத்திற்கான அரிசி
புகுத்தப்பட்ட ஜீன் : பீட்டா
கரோட்டின் ஜீன் (மனிதர்களில் வைட்டமின் A உற்பத்திக்கு பீட்டா கரோட்டின் ஜீன் தேவை)
சாதனை : “கோல்டன் ரைஸ்” (வைட்டமின் A குறைபாட்டைத் தவிர்க்கும், பீட்டா கரோட்டினை உற்பத்திச் செய்யும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி)
நோக்கம் : அதிக பயிர் உற்பத்தி
புகுத்தப்பட்ட ஜீன் : பேசில்லஸ்
துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியாவிலிருந்து பெறப்பட்ட Bt ஜீன் (Bt ஜீன் பூச்சிகளுக்கு எதிரான நச்சுத் தன்மையுடைய புரதத்தை உற்பத்திச் செய்கிறது).
சாதனை : பூச்சி எதிர்ப்புத் திறன் பெற்ற தாவரங்கள் (இத்தாவரங்கள் பூச்சிகளுக்கு எதிரான நச்சுத் தன்மை
வாய்ந்த புரதத்தினை உற்பத்தி செய்து, பூச்சித் தாக்குதலைத் தடுக்க வல்லவை)” (பக். 294,295)
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus thuringiensis - Bt) எனும் பாக்டீரியாவிடமிருந்து
பெறப்பட்ட பூச்சிகளுக்கு எதிரான நச்சுத் தன்மையுடைய
புரதத்தை உற்பத்தி செய்யும் மரபணுவால் பல்வேறு தீங்குகள் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.
இவற்றைப் பற்றிச் சிந்திக்கும் வாய்ப்பை பாடநூல் முற்றாக மறுக்கிறது. இதைத்தான் அறிவியல்
மூடநம்பிக்கை என்கிறோம்.
- மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் அடுத்த தலைமுறை விளைச்சலைத் தருவதில்லை. எனவே இவற்றிலிருந்து விதைகளை எடுத்துப் பயன்படுத்த இயலாது.
- இவை வேளாண்மையில் மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகத்தை நிலை நிறுத்துகின்றன. விதைகளுக்கு மீண்டும் அவர்களையே நாடவேண்டும்.
- சாதாரண இயற்கை வேளாண் பயிர்களும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் ஒரு பகுதியில் சாகுபடி செய்யப்படும்போது இவற்றிற்கிடைய ஏற்படும் மகரந்தச் சேர்க்கையால் இயற்கை வேளாண்மை அழியும்.
- இவற்றின் நச்சுத்தன்மை நன்மை செய்யும் பூச்சிகளையும் பாதிக்கும். எனவே உயிரினப்பன்மை பெரும் பாதிப்பிற்குள்ளாகும்.
- பொதுவாக எந்த ஒரு நஞ்சையும் நாளடைவில் எதிர்த்துத் தாக்குப்பிடிக்கவல்ல புதிய உயிரினங்கள் உண்டாகிவிடும். அதைப்போல Bt ரகங்களை பாதிக்கக்கூடிய புதிய பூச்சிகள் உருவாகும். Bt பருத்தியில் இவ்வாறு நடந்து விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன.
நமக்கு இதெல்லாம் தேவையில்லை. நம்மாழ்வார், ‘நெல்’
ஜெயராமன் ஆகியோரைப் பற்றிப் பாடநூல் குறிப்பிட்டால் போதும் என்கிற மனநிலை வந்துவிட்டோம்.
இப்பாடத்தில் ‘மேலும் தெரிந்துகொள்வோம்’ பகுதியில் மா.சா.
சுவாமிநாதன் ,
நம்மாழ்வார் ஆகிய இருவரும் அருகருகே குறிப்பிடப்படுகின்றனர். பசுமைப் புரட்சியும்
இயற்கை வேளாண்மையும் இன்று ஒன்றாகிவிட்டதன் குறியீடாக இதை எடுத்துக்கொள்ளலாம்.
இன்று எல்லாமே கார்ப்பரேட்களின் கைகளில். நாங்களும் இயற்கை விவசாயம் செய்கிறோம்
என்று வந்துவிட்டார்கள். அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ‘Amway’ பல்லாண்டாக நம்மை
ஏமாற்றிவரும் கதை தெரியுந்தானே!
மா.சா. சுவாமிநாதன் என்று தமிழ்ப்படுத்தி எழுதுகிறார்களாம்! அவர்
இப்படி எங்கேனும் எழுதியிருக்கிறாரா? மேலும் இதை விரித்து மான்கொம்பு
சாம்பசிவன் சுவாமிநாதன் என்று எழுதும் போது கோவிந்தசாமி நம்மாழ்வார் என்று
ஏன் எழுத முடியவில்லை? ‘இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை’ என்று நீட்டி
முழக்கும்போது நம்மாழ்வாரை ஏன் ‘இயற்கைத் தாத்தா’ என்று அழைக்கமுடியாது? அது
பொருத்தமாக இருக்கும்போது இது இருக்காதா என்ன? சும்மா அழைத்துத்தான் பாருங்களேன்!
அந்த இரு பத்திகளும் கீழே தரப்படுகின்றன.
“டாக்டர் மா.சா.
சுவாமிநாதன்
இந்திய
பசுமைப்புரட்சியில் முன்னணிப் பங்கு வகித்தவர், இந்திய விஞ்ஞானியான
டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் ஆவார்.
உருளைக் கிழங்கு, கோதுமை, நெல் மற்றும் சணல் ஆகிய பயிர்களில் அவர்
மேற்கொண்ட பயிர்ப்பெருக்க ஆய்வுகள் மிகவும் புகழ்பெற்றவையாகும். அவரது
பெரும் முயற்சிகளால் 1960 ஆம் ஆண்டில் 12 மில்லியன் டன்னாக இருந்த
கோதுமை உற்பத்தி, தற்போது 70 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. எனவே இவர்
“இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை” என பொருத்தமாக அழைக்கப்படுகிறார்.
டாக்டர். கோ.
நம்மாழ்வார்
டாக்டர். கோ. நம்மாழ்வார்
(1938-2013) ஒரு தமிழ் விவசாய விஞ்ஞானி, சுற்றுச் சூழல் ஆர்வலர்
மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் ஆவார். இவர் “வானகம் – நம்மாழ்வார் உயிர்
சூழல் நடுவம், உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்”
(NEFFFRGFST – வானகம்) என்ற அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் இயற்கை
வேளாண்மையின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கினார்.
(பக்.286)
இந்தியாவில்
பசுமைப்புரட்சி என்பது 1966-67 ஆண்டுகளில்
வேளாண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களைக் குறிக்கிறது. இதனால் 1960 களில் இந்தியாவை வாட்டிய
கடும் உணவுப்பஞ்சத்தைப் போக்க முடிந்தது. இன்று உணவு தானிய உற்பத்தி தன்னிறைவை அடைந்துவிட்டோம்.
அதனால் பசுமைப்புரட்சியின் தீய விளைவுகளான வீரிய விதைகள், வேதியுரங்கள், பூச்சிக்கொல்லிகள்
போன்றவற்றிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். பசுமைப்புரட்சியின் பெருமைகளை இன்னும்
பாடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ நார்மன் E போர்லாக்,
‘இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றரது செயல்பாடுகளில் கடும்
விமர்சனங்களும் உண்டு.
“இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது
– காரணங்கள் கூறு”, (பக்.297) என்று உயர்சிந்தனை
வினா கேட்கப்படுகிறது. இரண்டையும் ஒப்பிட்டு மதிப்பிடும் தன்மை பாடநூலில் இல்லை. அறிவியல்
மற்றும் வரலாற்றுப் பூர்வமாக இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மையை உண்டு பண்ணாமல்
எதையும் புகழ்ந்து தள்ளுவது அறிவியல் அணுகுமுறை அல்ல.
அன்றைய நிலையில் தேவைப்பட்ட பசுமைப்புரட்சி இன்று
வேளாண்மையுடன் முரண்பட்டு நிற்கிறது. எனவே அடுத்த கட்ட வளர்ச்சியாக இயற்கை வேளாண்மையுடன்
பயணிக்க வேண்டிய தேவையுள்ளது. இதையே இரண்டாம் பசுமைப்புரட்சி என்கின்றனர். பாடநூல்கள்
இதிலும் கவனம் செலுத்தவேண்டும். பன்னாட்டு வேளாண் நிறுவனங்களுக்கு விளம்பரத்தூதராக
இவை செயல்பட வேண்டாம்.
நம்மாழ்வாரின்
‘வானகம்’ அறக்கட்டளையின் ஆங்கில விரிவாக்கம் இது. “Nammalvar Ecological
Foundation For Farm Research and Global Food Security Trust (NEFFFRGFST)”. ‘அறக்கட்டளை’
மையமாக மாறியுள்ளது.
‘உயிரூட்டச்சத்தேற்றம்’ (Biofortification) என்னும் முறைப்படி
உருவாக்கப்பட்ட பயிர் ரகங்கள் பட்டியலிடப்படுகின்றன. இந்தியாவில்
உருவாக்கப்பட்டதாகச் சொல்லி “லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச்சோள ரகங்களான
புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா ஆகியன கூறப்படுகின்றன. படம் 20.2 இல் ‘புரோட்டினா
– லெசின் செறிந்த மக்காச்சோளம்’ எனும் பெயரில் சோளப்பயிரின் படம் இடம்
பெறுகிறது. (பக்.287)
சோளம்,
மக்காச்சோளம் குழப்பம் தீராது போலும்! ஐந்தாம் வகுப்பு அறிவியலில் சோளம் என்னும்
பெயரில் மக்காச்சோளப் படம்; (காண்க: விமர்சனத்
தொடர்: 18)
இங்கு மக்காச்சோளம் பெயரில் சோளப் பயிர்களின்
படம்! வாழட்டும் அறிவியல் மனப்பான்மை!
(இன்னும் வரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக