இந்தியாவின் பன்முகத்தன்மையைக்
குலைக்கும் முயற்சி
மு.சிவகுருநாதன்
(புதிய கல்விக் கொள்கை 2019 வரைவு பற்றிய
எனது கட்டுரை ‘குங்குமச்சிமிழ் – கல்வி வேலை வழிகாட்டி’ – ஜூலை 01-15, 2019 மாதமிருமுறை இதழில் வெளியானது. பக்க வரையறை கருதி
சில வரிகள் என்னால் நீக்கப்பட்டன. அக்கட்டுரையின் முழு வடிவத்தை இங்கு வெளியிடுகிறேன்.
குங்குமச்சிமிழ் – கல்வி வேலை வழிகாட்டி இதழுக்கும் உதவி ஆசிரியர் தோ.திருத்துவராஜ்
அவர்களுக்கும் நன்றி.)
புதிய
கல்விக் கொள்கை 2019 வரைவை மாநில மொழிகளில் வெளியிடாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டு
30 நாள்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் அளிப்பதிலிருந்தே மத்திய அரசின் பாசிசம் முகம்
வெளிப்படுகிறது. எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளிலும் வெளியிட்டு, 6 மாத கால அவகாசமளித்து, இந்தியா முழுவதிலும் பரந்த அளவிலான விவாதங்கள் நடத்தப்பட்டே
கல்வியில் மாற்றங்கள் கொண்டுவருவதே மக்களாட்சி நடைமுறையாகும்.
இருப்பினும்
பொதுப்பட்டியலில் உள்ள கல்விக்கு மத்திய அரசு மட்டும் எப்படி கொள்கைகளை வகுக்க முடியும்?
உண்மையில் மாநில அரசுகளிடமிருந்து கருத்துகளைப் பெற்று அவற்றைத் தொகுக்கும் வேலையைத்தான்
மத்திய அரசு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி கல்வியில் மாநிலங்களுக்குண்டான உரிமைகளை
முற்றாக பறிக்கும் முயற்சி இவ்வரைவில் இருப்பதும் கவலைக்குரிய அம்சம்.
2016
இல் வெளியிட்ட கல்விக்கொள்கைக்கான சில உள்ளீடுகள் வெளியிட்ட குழுவினர், பின்னர் கஸ்தூரிரங்கன்
தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவின் இடம் பெற்றவர்களின் தரம், சாய்வு ஆகிய கேள்விக்குள்ளாக்கப்பட
வேண்டியன.
ஏற்கனவே
இக்குழுவினரின் அரசியல், அறிவுப்புல சார்புகள் குறித்த பல்வேறு விமர்சனங்கள்
எழுந்துள்ளன.
இஸ்ரோவின் தலைவராக இருந்த கஸ்தூரிரங்கன் கல்வியில்
செய்த ஆய்வுகள் மற்றும் பங்களிப்புகள் என்ன? இக்கல்விக்குழுவிற்கு தலைமையேற்கும் அளவிலான
அவரது தகுதிகள் என்ன? விண்வெளி, அணுசக்தி, வெளியுறவு ஆகிய துறைகளில் பணிசெய்தவர்கள்
நாட்டின் சட்டங்களைத் தீர்மானிக்கலாம் என்றால் மக்களாட்சி முறைகள் எதற்கு? என்கிற கேள்வியும்
தவிர்க்க முடியாதது. ஆளும்கட்சியின் மதவாதக் கொள்கைக்கு ஆதரவான வரைவை கல்வியாளர்கள்
என்ற போர்வையில் இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
'India
centred education system' என்று வரைவு அறிக்கையில் சொல்லப்படுகிறது. இந்திய மையக் கல்வி, இந்தியக் கல்வி
என்று சொல்வதெல்லாம் என்ன? இந்தியாவில்
ஒற்றை மையக் கல்வி எப்போதாவது இருந்திருக்கிறதா? ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு தேர்தல்
போன்ற பாசிசச் சொல்லாடல்களில் ஒரு கல்விமுறையும் சேர்வது மிகவும் அபாயகரமான
போக்கு. இந்தியப் பன்முகத்தன்மை, கூட்டாட்சித் தத்துவம், அரசியலமைப்பு ஆகியவற்றை இது
கேலிக்குள்ளாக்குகின்றது.
இந்தியாவில் சமண, பவுத்த, ஆசீவகத்
தத்துவங்களின் அவைதீகக் கல்வி முறை இருந்துள்ளது. அதற்கு முன்னதாகவும் சிறப்பான
கல்வி முறை இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிந்துவெளி போன்ற நகர
நாகரிகங்கள் சாத்தியப்பட்டிருக்காது. இங்கு அவற்றைப் பற்றிப் பேசுவதான தொனியே இல்லை. வேதக்கல்வி / குருகுலக் கல்வியே இந்திய
ஒற்றைக் கல்வி முறையாக முன்மொழியப்படுகிறது. பாரம்பரியக் கல்வி, தாராளமய கலைக்கல்வி
எனும் பெயரில் இவர்கள் எதைப்
பரிந்துரைக்கின்றனர் என்பதை விளக்க வேண்டியதில்லை.
‘இந்திய அறிவியல் அறிவைப்
பாடத்திட்டத்தில் சேர்த்தல்’ என்பதன் பின்னணியும் இதுதான். இதுவும் ஒற்றை அடையாளமுள்ள
ஒன்றல்ல. கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள் அறிவியலாக எதை முன்னிறுத்தினார்கள், அறிவியல்
மாநாடுகள் எப்படி நடந்தன என்பதையும் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் நிலைமை நன்கு
விளங்கும்.
மாநிலப்
பட்டியலில் இருந்த கல்வித்துறை நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு
மாற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பதிகாரங்கள் தனிச்சட்டங்கள் மூலம் ஒன்றன்பின் ஒன்றாக பறிக்கப்பட்டது போல,
இன்று மாநிலங்களுக்கு இருக்கும் கல்வியதிகாரங்களை ஒவ்வொன்றாக பறிப்பது நமது
நாட்டின் பன்மைத்தன்மையைச் சீர்குலைக்கும் முயற்சியாகவே இருக்கும்.
திட்டக்குழுவைக் கலைத்து ‘நிதி ஆயோக்’ உண்டாக்கப்பட்டது. நிதி மத்திய
அரசின் பட்டியலில் வருவது. பொதுப்பட்டியலுள்ள கல்வித்துறைக்கு தேசிய அளவில்
பிரதமர் தலைமையிலான (தேசியக்
கல்வி ஆணையம்) உச்ச அதிகார அமைப்பாக ராஷ்டிரிய சிக்ஷ ஆயோக் (RSA)
உருவாக்குவதும் மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்துவதும் கல்வியில் கேடுகளை
உண்டாக்கும். இந்த அமைப்புகள் மூலம் கல்வித்துறையில் தங்களுக்குத் தேவையானவற்றை
நிறைவேற்றவும் தனியார் மயத்திற்கும் வழி தேடுகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
இந்தியச் சாலைகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதைப்போலவே இந்த ஆணையம் பள்ளிக்கல்வி
தொடங்கி உயர்கல்வி வரை விற்பனை செய்யப்போவதுதான் உண்மை நிலவரம்.
பல்கலைக்கழக மானியக்குழுவை (UGC) கலைத்துவிட்டு
உயர்கல்விக்கான ஆணையம் (HEGC) அமைப்பது, கல்வியில்
தனியாரின் ஆதிக்கத்தை அதிகரிப்பது, கல்வியை முற்றாக தனியார் மயமாக்குவது போன்ற கொள்கைகளுக்கான
முன்னெடுப்பே பன்னாட்டுத் தரத்திற்கு இணையான கல்வி, பன்னாட்டுப் பல்கலைக் கழகங்கள்
செயல்பட அனுமதித்தல் போன்ற கருத்துகள் என்பதை
அவதானிக்கலாம். மேலும் தகுதி அடிப்படையில் ஊக்க ஊதியம், பதவி உயர்வு என்பதன் மூலம்
இடஒதுக்கீடு போன்ற சமூக நீதி மற்றும் சமத்துவச் செயலூக்க நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்படும். இந்த ஒழுங்குமுறை ஆணையங்களின்
செயல்பாடுகள் நாமறிந்த ஒன்றுதான். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுத்துறை
நிறுவனமான BSNL ஐ என்ன நிலையில் வைத்திருக்கிறது? தனியாருக்குச் சேவையாற்றவே இவ்வித
அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.
தேசியக் கல்வி ஆணையம்
போன்று மாநிலங்களும் மாநிலக் கல்வி ஆணையத்தை (ராஜ்ய சிக்ஷ ஆயோக்) உருவாக்கிக் கொள்ளலாமாம்!
இதற்கு என்ன அதிகாரங்கள் இருக்கும்? இது பெயரளவிலான அமைப்பாகவே இருக்கும். மத்தியக்
கல்வித்திட்டத்தை வழிமொழிய ஓர் அமைப்பு தேவையா?
இருக்கின்ற
அமைப்பின் பெயரை மாற்றுவது, அதை ஒன்றுமில்லாமல் செய்வது என்று கடந்த 5 ஆண்டுகளில்
செய்த செயல்களை இன்னும் கூடுதலாகச் செய்யப் போகின்றனர். ‘மனிதவள மேம்பாடு’ என்று
சொல்வது கூட இவர்களுக்கு கசக்கிறது. எனவே கல்வித்துறை என்று சொல்லப்
பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தைகளால் பலமொழிகளைக் கற்றுக்கொள்ள முடியுமாம்! அவர்கள் என்ன பொதி
சுமக்கும் கழுதைகளா? மும்மொழித் திட்டமும் அதன் மூலம் மறைமுகமாக இந்தியைத்
திணிக்கும் முயற்சிகளும் மிக மோசமானவை. பாலி, பிராகிருதம், பாரசீக மொழிகளுக்கு
தேசிய நிறுவனங்களை அமைத்தல் என்பதில் தமிழுக்கு ஏன் இடமில்லை? சமஸ்கிருதம் படிக்க அனைத்து உயர்கல்வி
நிறுவனங்களிலும் வசதி செய்யப்படும்போது அதைவிட மேம்பட்ட தமிழுக்குரிய இடம் என்ன
என்ற கேள்வி எழுகிறது. இவர்களுடைய நோக்கம்
சமஸ்கிருதம், இந்தி ஆகியவற்றைத் திணிப்பதன்றி வேறில்லை.
3, 5 மற்றும் 8 வகுப்புகளில்
பொதுத்தேர்வுகள் நடத்தும் முறைகளும் தேசிய அளவிலான தேர்வுகளும் கல்விப்புலத்திலிருந்து சாதாரண ஏழை,
எளிய மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மாநில
அரசின் பாடத்திட்டத்தை கவனத்தில் கொள்ளாமல் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளும் அடைவுத்
தேர்வுகளும் கல்வியில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
9 -12 வகுப்புகளை மேனிலைக் கல்வியாக மாற்றுவது,
இவற்றில் எட்டுப் பருவத்தேர்வுகள் (3 x 8 = 24) வழி 24 பாடங்கள் எனவும் மாணவர்களின் விருப்பத்தேர்வு
என்பதும் ஏமாற்று நடவடிக்கை. அந்த வயதில் எதிர்காலத்தை திட்டமிட இயலாது; ஒரு விருப்பத்
தேர்வு மூலம் பிற வழிகள் அடைக்கப்படும் அபாயம் குழந்தைகளிடம் பல்வேறு வகையான உளவியல்
சார்ந்த நெருக்கடிகளை உற்பத்தி செய்யும். இத்தகைய வழிமுறைகள் ‘நவீன குலக்கல்வித் திட்டமாக’வே
இருக்கும்.
பள்ளிக்கல்வியில் எத்தனைத் தேர்வுகள் இருப்பினும்
அவை உயர்கல்விக்கான வாய்ப்பைத் தராது என்பது எவ்வளவு பெரிய கொடுமை! ‘நீட்’ போன்று அனைத்து
வகையான படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வுகளும் தகுதித்தேர்வுகளும் கட்டாயமாக்கப்படுவதால்
கல்வி இனி சமூக, பொருளாதார நிலைகளில் உயர்த்தப்பட்டோருக்கு மட்டும் கிடைக்கும் என்கிற
நிலை உருவாகும். மத்திய தேர்வு முகமைகளால் நடத்தப்படும் இவை மாநிலப் பாடத்திட்டதைப்
பின்பற்றியோ, மாநில மொழியிலோ இருக்காது. மேலும் இவைகளில் தேர்ச்சிபெற லட்சக்கணக்கில்
பணம் கொட்டி ‘கோச்சிங் சென்டர்களில்’ படிக்க வேண்டும். ‘நீட்’ தேர்வுகளில் இது யாருக்கு
சாத்தியானது என்று உணர்ந்துள்ளோம்.
இவ்வரைவில் நல்ல கூறுகள் இல்லையா என்று கேட்கலாம்.
6-14 என்ற கல்வி உரிமைச்சட்ட வரம்பை 3-18 ஆக உயர்த்துதல் போன்ற நல்ல அம்சங்கள் சில
இருக்கலாம். ஆனால் நச்சுணவின் மேலே தூவப்படும் இவற்றால் எவ்விதப் பயனுமில்லை. எனவே
இந்த வரைவை எதிர்க்க வேண்டியது நமது கடமையாகிறது. மாநில அரசுகளும்
சமூகம், குழந்தைகள், பன்மைத்தன்மை ஆகியவற்றில் அக்கறை கொண்ட கல்வியாளர்களும் வரைவு குறித்து உரிய கவனம் செலுத்தவும்
மத்திய அரசின் ஒற்றையதிகாரத்தையும், வரம்புகளை மீறிய பாசிசச்
சொல்லாடல்களையும் முறியடிக்கவும் ஒன்று திரள
வேண்டும்.
நன்றி: குங்குமச்சிமிழ் – கல்வி
வேலை வழிகாட்டி – ஜூலை 01-15, 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக