ஞாயிறு, ஜூலை 21, 2019

இன்னும் பாடம் கற்க இயலாத பேரிடர்

 இன்னும் பாடம் கற்க இயலாத பேரிடர்

மு.சிவகுருநாதன் 

(நண்பர் 'பஞ்சு மிட்டாய்' பிரபு கும்பகோணம் தீவிபத்து பற்றிய கருத்துகள் சிலவற்றை 'பஞ்சுமிட்டாய்' இணையதளத்தில் வெளியிட்டார். அதில் இடம் பெற்ற எனது கருத்துகள். பிறவற்றுக்கு இணைப்பைச் சொடுக்கவும்.) 





          

     கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 94 உயிர்கள் கருகி 15 ஆண்டாகிறது. இதிலிருந்து நாம் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தீ விபத்திற்கு கீற்றுக் கொட்டகைதான் காரணம் என்ற அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்ததாயிற்று. நீதிபதி சம்பத் ஆணையம் வந்தது; ஏதோ அறிக்கை தந்தது. எல்லாம் கண்துடைப்பாக முடிந்துபோனது

             தென்னங்கீற்றின் இடத்தை ஆஸ்பெட்டாஸ் பிடித்தது. புற்றுநோய் உள்ளிட்ட பல தீமைகளால் உலக நாடுகள் தடைசெய்தது குறித்த கவலையெல்லாம் நமக்கு இல்லை. இன்றும் ஆஸ்பெட்டாஸ் கூரைகள் இருக்கத்தான் செய்கின்றன. இவை தீப்பிடிக்காத பொருளா என்ன

            இப்போது மாடிக்கட்டட வகுப்பறைகள் ஊழலால் மோசமான தரத்தில் கட்டப்படுகின்றன. ஒருநாள் இவையும் இடிந்து விழக்கூடும். அப்போது மாடிக்கட்டடங்களும் லாயக்கற்றவை என்று சொல்லப்படுமா? பிறகு வேறு எதை நாடுவது? இந்த மனிதப் பேரிடர் வெறும் நிர்வாகப் பேரிடர் மட்டுமல்ல; மதப்பேரிடரும் கூட. இரண்டு முதன்மைக் காரணங்களைச் சுட்ட முடியும்

           ஒன்று, 15 ஆண்டுகளுக்கு முன்பு அன்று ஆடிவெள்ளி. எனவே பல ஆசிரியர்கள் தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்ற பள்ளியை விட்டு வெளியேறிவிட்டனர். கல்விக் கடமையைவிட இது பெரிதாகப் போய்விட்டது. இவர்கள் வளாகத்தில் இருந்திருந்தால் உயிரிழப்புகள் குறைந்திருக்கும். கடவுள் மீது பழியைபோட ஊடகங்கள் உள்பட யாரும் முன்வரவில்லை. இன்று அத்திவரதருக்கு ஊடகங்கள் எவ்வளவு பாடுபடுகின்றன என்று பார்க்கிறோமல்லவா

         இரண்டு, உதவிபெறும் பள்ளிக்குள்ளாகவே அவர்களது நிர்வாகத்தில் ஒரு சுயநிதிப்பள்ளி செயல்பட அனுமதித்த அரசின் குற்றம்

          இந்தக் குற்றச்செயல் இன்னும் கூடுதலாக ஒவ்வொரு உதவிபெறும் பள்ளியிலும் கல்வி வணிகம் மிகப்பெரிய அளவில் நடக்கிறது. உதவிபெறும் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் சென்னையின் பூர்வகுடிகளைப் போல விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களது வசதிகளை சுயநிதிப்பிரிவு மாணவர்களிடம் இழந்து நிற்கக்கூடிய சூழல் உள்ளது. கல்வி வணிகமயமாகும் பேரபாயம் ஒருபுறமிருக்க, அரசு உதவிபெறும் பள்ளிகள் தங்களது வளாகத்தில் சுயநிதி வணிக்கத்தை அனுமதிக்காமல் இருந்தால் இந்த உயிரிழப்புகளையாவது தடுத்திருக்கலாம்

        கடந்த 15 ஆண்டுகளில் இன்று இந்த வணிகம் மிகக் கடுமையாக வளர்ந்துள்ளது. இன்றும்கூட பலர் கண்டுகொள்ள மறுக்கும் செய்தியாகவே இது இருக்கிறது. எனவேதான் நாம் பாடம் கற்கவேப் போவதில்லை என்று உறுதிபடச் சொல்லமுடிகிறது. இதைவிட மெழுகுவர்த்தி ஏந்துவதும் அஞ்சலிப் பதாகைகள் வைப்பதும் மிக எளிதாக இருப்பது நமது இயலாமையை அடையாளப்படுத்துகிறது.

இணைப்பு:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக