ஞாயிறு, ஜூலை 28, 2019

ஆசிரியர்களின் பயிற்சியின் ஊடாக… புதிய கல்விக்கொள்கை-2019 வரைவும் புராணக்குப்பைகளும்


ஆசிரியர்களின் பயிற்சியின் ஊடாக…
புதிய கல்விக்கொள்கை-2019 வரைவும் புராணக்குப்பைகளும் 

மு.சிவகுருநாதன்

     (பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடத்திற்கான இரு நாள்கள் (ஜூலை 24, 25 – 2019) பயிற்சி திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடந்தது. அப்பயிற்சியின் அனுபவப் பகிர்வு மற்றும்  புதிய கல்விக்கொள்கை -2019 வரைவில் ஆசிரியர்களின் ஈடுபாடு, எதிர்ப்பாளர்களின் சகிப்பின்மை  குறித்தும் இக் கட்டுரை பேசுகிறது.)




          நாம் இதுவரையில் பல்வேறு பயிற்சிக் கதைகளைப் பேசியுள்ளோம். பொதுவாக ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் எவ்விதப் பயிற்சிகளும் திக்கின்றி அமைவதை நோக்கமாகக் கொண்டவை. இவைகள் அவ்வாறே இருக்க வேண்டி வடிவமைக்கப்பட்டதாக இருக்கிறது. ‘கூலிக்கு மாரடித்தல்’ எனும் சொலவடைக்கேற்ப இது நடக்கிறது.

     பத்தாம் வகுப்பிற்கான பாடநூல் பயிற்சி எனில் அங்கு கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு மாணவர்களாகக் கருதப்படுவர். எனவே பாடநூலிலுள்ள பாடங்கள் பக்கம் பக்கமாக விரிவுரை முறையில் நடத்தப்படும். அதைக் கேட்டுக் கலைந்து, அவற்றை மாணவர்களிடம் கடத்துவதே பொதுவான நிலையாக இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை 35 மதிப்பெண்கள் பெற வைத்து தேர்ச்சிக்குள்ளாக்குவது எப்படி? எந்தக் கையேடு அல்லது கட்டகம் பயன்படும்? முதன்மையான  வினாக்கள் எவை என்ற வழமையான பாதையில் இப்பயிற்சிகள் பயணிக்கின்றன.

     இவற்றிற்கு மாறாக கலைத்திட்ட மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு, புதிதான அணுகுமுறைகள், புதிய சிந்தனைகள், புதிய உத்திகள், கற்பித்தல் - கற்றல் மேம்பாட்டு முறைகள், மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் இனிய கற்பித்தல் முறைமைகள், பாடநூல் பிழைகளைத் தொகுத்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு  (SCERT) அனுப்பி அடுத்த பதிப்பில் உரிய திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுத்தல் போன்ற செயல்பாடுகள் இருந்தால் அது பாராட்டிற்குரியது. அம்மாதிரியான செயல்பாடுகளுக்கு இன்றைய கல்வி உலகில் இடமில்லை என்பதே வேதனையான உண்மை நிலவரம். 

    முதல்நாள் (24.07.2019) முதல் அமர்வில் திரு முத்துராஜா  உலக வரலாற்றுச் சூழல், கான்ஸ்டாண்டிநோபிள், கடற்பயணங்கள், வணிகம், பட்டு, மிளகுப் பாதைகள், உலகப்போர்கள், பாசிசம், மார்க்சியம், ரஷ்யப் புரட்சி  போன்ற பலவற்றை விரிந்த தளத்தில் அறிமுகம் செய்தார்.  அது நமது ஆசிரியப் பெருமக்களை பெருமளவு ஈர்க்கவில்லை போலும்! பாடத்தை நடத்தச் சொல்லிச் சிலர் கேட்டதாகத் தெரிகிறது. முன்பொருமுறை முதுகலை வேதியியல் ஆசிரியரான மாநிலக் கருத்தாளர் மிளகை (மிளகுப் பாதை) எடுத்துக்காட்டாகக் கொண்டு உலக வரலாற்றை அணுகியபோது பயிற்சி நடத்த வரலாறு படித்தவர்கள் இல்லையா என எதிர்க்குரல் எழுந்தது. நாம் மாற்றுச் சிந்தனைகளை உள்வாங்குகிறோம், எதிர்கொள்கிறோம் என்பதற்கு இதைச் சான்றாகக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.  

    அன்று மதியம் திரு வள்ளி மணவாளன் புவியியல் பகுதியில் ‘இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு’ என்னும் முதல் பாடத்தை நடத்தினார். அப்பாடம் வட இந்திய ஆறுகளில் புனல் (நீர்) மின்சாரம் தயாரிக்க இயலாது என்கிறது. அவர் பேசியபோது, பாடநூலில் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்தினால் பாடநூல் பற்றிய தவறான எண்ணமே முன்னிற்கும். எனவே அவற்றைத் தவிர்க்குமாறு மாவட்டக் கருத்தாளர்களுக்கான  பயிற்சியில் கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். 

     இரண்டாம் நாள் (25.07.2019) அமர்வில் திரு முத்துவேல் புவியியல் பாடம் பற்றியும் திரு முத்துராஜா மொழி தெரியாத இடங்களில் தனது மாலத்தீவு அனுபவங்கள் பற்றியும் பேசினார். நேற்றே பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திரு பாண்டியன், திரு முத்துராஜா ஆகியோர் கேட்டுக்கொண்டபடியும்,  வரலாற்றுப் பாடம் குறித்து சில கருத்துகளை சொல்லவும் என்னை அழைத்தனர். 

      புதிய கல்விக்கொள்கை 2019 வரைவு வெளியாகியுள்ளது. அதன் தலைவர் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கனின் நேர்காணலின் மொழிபெயர்ப்பு இன்று (25.07.2019) ‘இந்து தமிழ் திசை’ வந்திருப்பதையும் சுட்டிக் காட்டி சில கருத்துகளைப் பகிர்துகொண்டேன். 

     விடுதலைக்குப் பிந்தைய கல்விக்குழுக்கள் பற்றியும் 1968, 1986, 1992 (PoA), 2016, 2019 ஆகியவற்றின் அம்சங்கள் சிலவற்றை எடுத்துக் காட்டினேன். பொதுவாக கல்விக்குழு அறிக்கைகளில் நல்ல அம்சங்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை. டாக்டர் கோத்தாரி அறிக்கையின் முதன்மை அம்சங்கள் அருகாமைப்பள்ளிகள், மொத்த நாட்டு வருமானத்தில் 6% கல்விக்கு நிதி ஒதுக்கீடு போன்றவை நிராகரிக்கப்பட்டன. 1986 இல் இவை நவோதயா பள்ளிகள் போன்ற மேட்டுக்குடிப் பள்ளிகளாக (Elite Schools) உருவெடுத்தது. உலகமயச் சூழலில் தொழிலாளர்கள் தேவைக்கேற்ப 1992 இல் திருத்தம் பெற்றது. 2016 கல்விக் கொள்கை சில உள்ளீடுகளின் தொடர்ச்சியாக இப்புதிய கல்விக் கொள்கை வரைவு 2019 வெளியாகியுள்ளது. 

    இவ்வரைவில் 10+2 க்கு மாற்றாக 5+3+3+4 முறை பரிந்துரைக்கப்படுகிறது. 3,5,8 வகுப்புகளில் பொதுத்தேர்வு, மூன்றாவது மொழி, சமஸ்கிருதப் பெருமைகள், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றைக் கலாச்சார சொல்லாடல்களை எடுத்துக்காட்டி இந்தியச் சிந்தனை மரபில் தமிழுக்கு இடம் உண்டு எனவும், ஆரியப்பட்டர், பாஸ்கரர் மட்டுமல்ல; திருவள்ளுவர். தொல்காப்பியர் போன்றோருக்கும் இந்தியச் சிந்தனைமரபில் இடமுண்டு என்றும் சொன்னேன். ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் 484 பக்கமுள்ள மிக விரிவான இவ்வரைவை முழுமையாக படித்து, கருத்துரைக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டேன். 

    கல்விக்கொள்கைகளை நடைமுறைப்படுத்த கலைத்திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. 2005 இல் பேரா. யஷ்பால் தலைமையிலான குழு கலைத்திட்டம் (NCF-2005) ஒன்றை வடிவமைத்தது. இன்றும் அதனடைப்படையிலேயே பாடத்திட்டங்களும் பாடநூல்களும் உருவாக்கப்படுகின்றன. நமது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) 2016 இல் புதிய பாடத்திட்டம் தயாரிக்கும்போது ஒவ்வொரு பாடத்திற்கும் நிலைப்பாட்டு அறிக்கை (Position Paper) வெளியிட்டது. சமூக அறிவியல் பாடம் குறித்த அறிக்கை 15 பக்கங்களில் தமிழில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (அன்று இரவே அவ்வறிக்கையை வாட்ஸ் அப்பில் சமூக அறிவியல் ஆசிரியர் குழுக்களுக்கு அனுப்பி வைத்தேன்.) 

     இதனடிப்படையில் பாடநூலை உருவாக்கும்போது எவ்வித சிக்கலுக்கும் இடமில்லை. பாடநூலை உருவாக்கிய பலர் NCF-2005 ஐ வாசிக்கவே இல்லை. அதனால் பல்வேறு முரண்பாடுகள், சிக்கல்கள், பிழைகள் உற்பத்தியாகின்றன. 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் தொகுதியில் அலகு 05 ’19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்’ என்னும் பாடத்தைப் பற்றியும் அதிலுள்ள திருத்தங்கள் பற்றியும் எடுத்துக்காட்டினேன். அயோத்திதாசரை இறுதியாகச் சொல்லாமல் பிரம்ம ஞான சபையுடனும் அதன் பவுத்த புத்துயிர்ப்பு நடவடிக்கைகளையும் இணைத்துச் சொல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன். சீர்திருத்தங்களுக்கு எதிராகவே பழமைவாதிகள் இருப்பர். அவர்கள் மனதை வள்ளலாரின் சிந்தனைகள் ‘ஆழமாகப் புண்படுத்தினால்’, சாதி, மதம் என்கிற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்கள் திரள் எவ்வளவு துன்பங்களுக்கு ஆட்பட்டிருக்கும்? இப்பாடத்தில் சமய சீர்திருத்தங்களுக்கு அளிக்கப்ப்பட்ட முக்கியத்துவம் சமூக சீர்த்திருத்தங்களுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டேன்.

      ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இழிவைப் போக்க இஸ்லாம், கிறித்தவம், பவுத்தம் போன்ற மதங்களுக்கு மாறுவதும் கடவுளின் அவதாரமாகக் கொள்வதும் வரலாற்றில் எப்போதும் நடைபெறுகிறது. வங்காளத்தில் சண்டாளர்கள் என்று இழிவு செய்யப்பட்டவர்கள் ‘நாமசூத்திரர்கள்’ என்ற இயக்கமாகத் திரண்டனர். வைகுண்ட சுவாமிகளின் அய்யாவழி,  அய்யன்காளியின் சாது ஜன பரிபாலன சங்கம் போன்றவற்றை இதனடிப்படையில் அணுகவேண்டும்.

    அப்போது நண்பர் திரு ஜெகதீசன் பெரியாரை ஏன் இப்பாடத்தில் இணைக்கவில்லை என்று கேட்டார். பெரியாரது அரசியல் செயல்பாடுகள் 1920 களில் தொடங்குகின்றன. 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அவரது சமூக, அரசியல் பணிகள் தொடங்கவில்லை என்றே சொல்ல வேண்டும். 1925 இல் பெரியார் ‘சுயமரியாதை இயக்கத்தை’த் தொடங்குகிறார். இதே காலகட்டத்தில்தான்  இந்தியாவில் அம்பேத்கரின் ‘பகிஷ்ஹரித் ஹிதகரிணி சபா’, கம்யூனிஸ்ட் கட்சி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆகியன தொடங்கப்படுகின்றன என்றும் சொன்னேன். 

      சென்னை இலெளகிக சங்கத்தின் (Madras Secular Society) செயல்பாடுகள், அவர்கள் வெளியிட்ட ‘தத்துவ விவேசினி’ எனும் தமிழ் இதழ், ‘The Thinker’ என்ற ஆங்கில இதழ், அதில் வெளியான  சிறப்பான கட்டுரைகள், இதன் துணை அமைப்பான மால்தூசியன் சங்கத்தில் பவுத்த அறிஞர் பொக்காலா லட்சுமி நரசு செயலாளராக இருந்துள்ளார். அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், ம.சிங்காரவேலர் போன்ற பலரது பங்களிப்பில் வங்காளத்தைவிட சற்றே மேம்பட்ட பகுத்தறிவாத சிந்தனைக்கு சென்னை களமாக இருந்ததையும் எடுத்துச் சொன்னேன்.  இக்கருத்துகள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியானவையே. இவற்றின் இணைப்பைக் கீழே தருகிறேன். 

சமூகச்சீர்திருத்தங்களில் தமிழகத்தின் முன்னோடிப்பங்கை பாடநூல்கள் மறுக்கலாமா?

      நமது பாடநூலில் பல்வேறு குறைகள் இருந்தபோதிலும் இவற்றை இன்னும் செம்மைப்படுத்தவும் முதலிடத்தில் வைக்கவும்தான் சில விமர்சனங்கள் வைப்பதாகவும் எனது பார்வையில் அரசுப்பாடநூல்கள் தரமானவை என்றும் சொன்னேன். மத்தியக் கல்வி வாரியத்தால் (CBSE) அங்கீகரிக்கப்பட்டு நொய்டா ‘மதுபன் எஜுகேஷன்ஸ் புக்ஸ்’ வெளியிட்ட ‘தமிழ் அருவி; எனும் பெயரிலான தமிழ்ப்பாடநூல்கள் மிக மோசமான புராணக்குப்பைகளைப்  பாடமாகவும் வரலாறு, மொழி ஆகியவற்றைத் திரிக்கும் வேலைகளைச் செய்வதையும் குறிப்பிட்டேன். திருநள்ளாறு (4 தமிழ்), சிதம்பரம் (5 தமிழ்) போன்ற கோயில்கள் பற்றி அறிவுக்கும் அறிவியலுக்கும்  புறம்பான பொய்ச் செய்திகள் இடம்பெற்றுள்ளதை எடுத்துக்காட்டினேன். இது பற்றிய எனது இரு கட்டுரைகளின் இணைப்பு கீழே உள்ளது. மூன்றாவது கட்டுரை அடுத்து வரவிருக்கிறது. 

தனியார் பாடநூல் சர்ச்சை: நாசா வியந்த திருநள்ளாறு – சில குறிப்புகள்

புராணக் குப்பைகளைப் பாடமாக்கி பிஞ்சுகளிடம் நஞ்சேற்றும் கொடுமை

     பெரியார், பகுத்தறிவு போன்ற சொற்கள் ஒருசில ஆசிரியர்களை மிக்கடுமையாகப் பாதித்துவிட்டது போலும்! மதிய அமர்வில் பொருளாதாரப் பாடம் நடத்த திரு சூரியக்குமார் என்பவர் அழைக்கப்பட்டார். அவர் பட்டிமன்றப் பேச்சாளர், பக்திச் சொற்பொழிவாளர், பல நூல்களை எழுதியவர் என்று திரு முத்துராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். 

      “ஒரு வீட்டில் அப்பா சாமி கும்பிட மாட்டார். அவரது மனைவி, மகன்,மகள் எல்லாரும் கோயிலுக்கு போவாங்க, சாமி கும்பிடுவாங்க. என்ன நடக்கும்? அவரு ரொம்ப மோசமானவர்ன்னு அவர் பேச்சை யாரும் கேட்க மாட்டாங்க”, என்று பேசத்தொடங்கினார். கல்விக்கொள்கை பற்றிப் பேசுவதற்கான இடம் இதுவல்ல. நான் கல்விக்கொள்கையை ஆதரித்துப்ப் பல இடங்களில் பேசியுள்ளேன். வ.கீதாவின் பேச்சை மறுத்துப் பேசி கைத்தட்டு வாங்கியிருக்கிறேன். பிரின்ஸ் கஜேந்திர பாபுவுடன் ஒரு கூட்டத்தில் பேசி, விவாதிக்க இருக்கிறேன் என்றெல்லாம் பட்டியலிட்டார். இந்நிலையில் நண்பர் திரு காமராஜ் கல்விக்கொள்கையைப் பேச, விவாதிக்க ஆசிரியர்கள் இருக்கும் மேடையே மிகச்சரியானது என வாதிட்டார். 

    கல்விக்கொள்கையில் திருக்குறளை இணைக்க வேண்டும் என்று சொன்னது சரியானது என்றும் நானும் நீதிபதி மகாதேவனும் திருக்குறளைப் பாடத்தில் இணைக்கக் காரணமாக இருந்தோம் என்றார். திருக்குறளை கல்விக்கொள்கையில் இணைக்கச் சொல்லவில்லை, இந்திய சிந்தனை மரபில் திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றின் இடம் மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினேன் என்று உடனே மறுத்தேன். இந்திய வரவு செலவு அறிக்கையில் புறநானூற்றுப்பாடல் இடம்பெற்றதும் நம்மவர்கள் அடைந்த பெருமைக்கு அளவில்லை. மேற்கோள் காட்டுவது முக்கியமல்ல. முற்றாக வேத, சமஸ்கிருத மரபை முன்னுறுத்துவதே இங்கு சிக்கல். (12 ஆங்கிலப் பாடத்தில் இடம்பெறுவது சமஸ்கிருதத் தொன்மைச் சிக்கலைத் தனியே ஆராய்வோம்.)

     பாடநூல் உருவாக்கத்தின்போது  என்னை அதில் இணைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அரசுக்கு உத்தரவிட்டார். அதன்படி பாடநூல் உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். எனது திருக்குறள் உரைநூலை நீதிபதி மகாதேவன் வெளியிட்டார். திருக்குறளை மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஆணையிட்டவரும் இவரே, என தனது பெருமைகளையும் பெருமிதங்களையும் பட்டியலிட்டார். மேலும் தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்டத்திற்கு பணிமாறுதல் பெற்று வந்துள்ளதாகவும் கூறினார். கனவு ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்ற இவர் சிதம்பரம் நடராசர் சிலையில் அறிவியல் உண்மை ஒளிந்துள்ளது. அதனால்தான் நாசாவில் வாசலில் நடராஜர் சிலையை வைத்துள்ளனர் என்றார். இதற்கான அறிவியல் ஆதாரங்கள்ளைக் கேட்டபோது, எல்லாம் இருக்கு, என்றார். 

      அமெரிக்காவின் வாஷிங்டனில் ‘நாசா’வின் தலைமையகம் அமைந்துள்ளது. CERN ஆய்வுக்கூடம் சுவிட்ஜர்லாந்தின் ஜெனிவாவிற்கு அருகில் உள்ளது. நாசா ஒரு விண்வெளி ஆராய்ச்சிக் கூடம். CERN ஒரு அணு ஆராய்ச்சிக் கூடம். இந்தியாவின் அன்பளிப்பாக வந்து சேர்ந்த சிலையை CERN வில் வைத்துள்ளனர். இந்தியச் சிலைகள் மீது ஐரோப்பியர்களுக்கு உள்ள ஈர்ப்பு உலகறிந்தது. இதன் சந்தை மதிப்பு மிக அதிகம். அதனால்தான் இங்கிருந்து சிலைகள் களவாடப்படுகின்றன. 

     பாடத்தலைப்பை விட்டு நான் வேறு எதுவும் சொல்ல மாட்டேன் என்று அடிக்கடிக் கூறிக்கொண்டேயிருந்த இவர், நமது நாட்டின் பொருளாதாரம் ‘அறம் சார்ந்த  பொருளாதாரம்’ மற்றும் ‘GDP’ என்ற சொற்களை மட்டும் நூற்றுக்கணக்கான முறை பயன்படுத்திவிட்டு பல்வேறு பட்டிமன்ற, சுயபெருமைக் கதைகளை அளந்தார். பொருளியல் பாடப்பகுதிலுள்ள இடம் பெற்றுள்ள இரு பாடங்களைப் பற்றி, திரு ஜெகதீசன் வலியுறுத்திக் கேட்டபிறகும்கூட,  இறுதிவரையில் ஒன்றுமே சொல்லவில்லை. சில ஆசிரிய நண்பர்களுக்கு இதுவே உவப்பானதாக இருக்கக்கூடும். ஒரு நாளை இனிமையாக்க, பொழுதைப் போக்க இது உதவக்கூடுமல்லவா! 

    இறுதி அமர்வில், திரு முத்துராஜா, குடிமையியல் ‘இந்திய அரசியயமைப்பு’ பாடம் பற்றி பேசினார். அப்போது அம்பேத்கர் பெயரைச் சொல்லி ஆசிரியர்கள் பெருமைப்படத்தக்க செய்தி, அவரது ஆசிரியர் பெயரை தனக்குச் சூட்டிக்கொண்டது என்றார். அம்பேத்கர் என்னும் பெயர் அவருடைய பார்ப்பன ஆசிரியடையது என்கிறப் புனைவும் இங்கு நெடுங்காலமாக உலவி வருகிறது. இது அவருடைய தந்தையாரின் பெயரின் பின்னொட்டுதான் என்பதை ‘அம்பேத்கர் என்ற ஒரு பார்ப்பனருடையதா? - கழுவப்படும் பெயரழுக்கு’, என்னும் யாக்கனின் நூல் உரிய அம்பேத்கரின் கல்விச் சான்றாதாரங்களுடன் விவரிக்கிறது. (பக்.64, விலை: ரூ. 50, இரண்டாம் பதிப்பு: டிச. 2018, கலகம் வெளியீட்டகம், 1/7, அப்பாவு தெரு, எல்லீசு சாலை, சென்னை - 600002, பேச: 044-42663840)   

     ஆசிரியர் ஒருவர் கல்விக்கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பது அவரது உரிமை. அதுகுறித்து இங்கு பேச ஒன்றுமில்லை. ஆனால் அதை எதிர்ப்பவர்களை கொச்சையான கதைகள் மூலம் அவதூறு செய்வதும், மிகத் தவறான புரிதல்களுடன் ஆதாரமற்ற குப்பைகளை அறிவியலாக முன்னுறுத்துவதும், கிடைக்கின்ற வாய்ப்பைச் சுயபெருமைகளைப் பட்டியலிடப் பயன்படுத்துவதும் மிகக் கொடியது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம், மற்றும் ஏ.பி.வி.பி. அமைப்பு போன்ற இந்துத்துவக் களங்களில் பயிற்சிபெற்ற சிலர் இவ்வாறு கல்விக்கொள்கைகளை ஆதரிக்கவும் அதை எதிர்க்கும் நடிகர் சூர்யா போன்றவர்களை மீது அவதூறு செய்யவும், ஹெச்.ராஜாவின் தரத்தில் இழிவான முறையில் பேசவும், சமூக வலைப் பக்கங்களில் எழுதவும் தயாரிக்கப்பட்டுள்ளனர். அதைப்போன்று ஆசிரியர் ஒருவர் செயல்படுவது வருந்தத்தக்கது. ஆசிரியர்கள் அறிவுக்கு ஒவ்வாத புராணச் செய்திகளை மாணவர்களிடம் பரப்புவாரேயானால் எதிர்காலத் தல்லைமுறைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். பாடநூலுக்கு அப்பால் சென்று அறிவை மேம்படுத்துவதான போர்வையில் இவ்வாறு மத மேன்மைகளைப் பேசிப் புனைவுகளைப் பரப்புரை செய்யும் போக்கு கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.  

   அடுத்து நண்பர்  ஒருவர் (பெயர் தெரியவில்லை) சில கேள்விகளை முன்வைத்தார். பதில் அளிப்பதற்கான வாய்ப்பும் நேரமும் இல்லை. எனவே அதற்கு இங்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன். 


  • கல்விகொள்கையின் நல்ல அம்சங்களை ஏன் குறிப்பிடவில்லை?
 
     484 பக்கங்கள் கொண்ட கல்விக்கொள்கை வரைவை சில நிமிடங்களில் ஆய்வு செய்திட இயலாது. சுமார் 30 பக்கங்களில் தமிழில் வழங்கப்பட்டச் சுருக்க வரைவின் மூலம் கல்விக்கொள்கையின் அடைப்படைகளை உணர முடியாது. கல்வியுரிமைச் சட்டத்தின் வயதெல்லை 6-14 இலிருந்து 3-18 ஆக உயர்த்தப்படுதல், கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு போன்றவற்றை வரவேற்கலாம். எனது முந்தைய கட்டுரைகளில் அது குறித்து எழுதியுள்ளேன். தொடக்க நிலையில் அதாவது இரண்டாம் வகுப்பு முடிய, 3-8 வயதெல்லைக் குழந்தைகளுக்கு மட்டும் தாய்மொழிக் கல்வியைப் பரிந்துரை செய்கிறது. தொடக்கப் பள்ளிகளில் தற்போது 5 வகுப்பு முடிய தாய்மொழி வழிக்கல்வி வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையை அரசும், பெற்றோர்களில் பலரும்  கண்டுகொள்ளாத நிலைதான் உள்ளது. எனவே இது ஒன்றும் புரட்சிகரமானது இல்லை. 


  • ஒவ்வொரு மாநிலங்களும் சொந்தமாகப் பாடத்திட்டம், பாடநூல்கள் தயாரிக்கும் உரிமைகள் பறிக்கப்படவில்லை. இதை ‘இந்து தமிழ் திசை’ நேர்காணலில் கே.கஸ்தூரிரங்கன் கூறியுள்ளாரே?. 

    மத்தியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பாடநூல்களை வெளியிடுகிறது. அதை CBSE மற்றும் பிற பள்ளிகள் பயன்படுத்துகின்றன. இனி அனைத்து மொழிகளிலும் இவை வெளியிடப்படும் என்று இவ்வரைவு சொல்கிறது. NCERT தமிழில் பாடநூல்கள் வெளியிடும் நேரத்தில், ‘நீட்’ போன்ற அச்சுறுத்தல்கள், நிதிச்செலவீனம் போன்ற காரணங்களுக்காக  அவற்றை அப்படியேப் பய்னபடுத்திக்கொள்ள மாநில அரசு முன்வரலாமல்லவா!  அப்போது கல்வியில்  மைய ஆதிக்கம் உறுதியாகும். அயோத்திதாசர், வள்ளலார், வைகுண்ட சுவாமிகள் போன்றோர் பாடநூல்களில் காணமற்போகும் நிலை உருவாகும்.   


  •  நவோதயாப் பள்ளிகள் எப்படி மேட்டுக்குடிப் (Elite Schools) பள்ளிகளாகும்?


      மாவட்டத்திற்கு ஒன்று என 1986 இல் ராஜூவ்காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது இப்பள்ளிகள். தமிழ்நாட்டில் இவை கிடையாது. கேந்திரிய வித்யாலயா போன்றவையும் Elite Schools தான். கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்றவற்றில் கல்வியுரிமைச் சட்டத்திற்கு இடமில்லை. இவை எத்தனை அடித்தட்டுக் குழந்தைகளுக்கு இடமளித்திருக்கின்றன. கேந்திரிய வித்யாலயாவின் ஒதுக்கீடுகள் பல லட்சங்களில் விற்பனையாவது அனைவரும் அறிந்த ரக்சியம்! 1986 இன் இந்த தேசியக் கல்விக் கொள்கைதான்   ICSE எனப்படும் ‘Indian Certificate of Secondary Education’ (ICSE) தனியார் கல்வி வாரியத்தை அனுமதித்தையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இவை இன்று பல்கிப்பெருகியுள்ளன. (எ.கா.) வேலம்மாள் பள்ளிகள், இன்டர்நேஷனல் பள்ளிகள் என்ற பெயரில் இயங்குபவை.  


  • பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை மிகப் பிற்பட்டோர் பட்டியலில் இணைக்க வைக்கும் கோரிக்கை குறித்து…?

      சாதியடிப்படையில் இழிவுபடுத்தப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள் திரள் தங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்க வரலாற்றில் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மதமாற்றம், பிறப்பு பற்றிய தொன்மக்கதைகள், ஆண்ட அரச வம்சங்களும் தங்களை அடையாளங்காணல், சாதிபெயர் மாற்றம் ஆகியன அவற்றுள்  சில. இச்செயல்பாடுகள்  மூலம் அவர்களது இழிவு நீங்கியதா, சமூக வாழ்வில் முன்னேற்றம் காணப்பட்டதா என்பதற்கு காலந்தான் பதில் சொல்லவேண்டும். இது சரியா, தவறா என்று தீர்ப்பெழுதும் நீதிபதியாக ஒரு வரலாற்று ஆய்வாளன் இருக்க முடியாது.  

       இறுதியாக, ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்: 

     படித்துப் பல பட்டங்கள் பெற்றுவிட்டோம் என்று அறிவு நிரம்பி வழிபவர்களாக இருக்க வேண்டாம். புதிய சிந்தனைகள், கருத்துகளை மனம் திறந்து விவாதியுங்கள். நிறைய வாசியுங்கள். அதுவும் தரமான நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கவும், குப்பைகளைப் புறந்தள்ளவும்  கற்றுக்கொள்ளுங்கள். புராண, இதிகாசக் குப்பைகளைக் கவனமுடன் எதிர்கொள்ளுங்கள். அச்சில் சொல்லப்பட்டவையெல்லாம் வேதங்களோ, சட்டங்களோ அல்ல, அவற்றை முடிந்தவரையில்  மீளாய்விற்கு உட்படுத்துங்கள். “மெய்ப்பொருள் கண்பது அறிவு” என்பது வெறும் முழக்கமல்ல; அறிவுத்தேடலின் பாதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக