சனி, பிப்ரவரி 12, 2011

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ‘திக் விஜயமும்’ நாகர்கோவில் வடசேரி உழவர் சந்தையும்

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ‘திக் விஜயமும்’ நாகர்கோவில் வடசேரி உழவர் சந்தையும்         - மு. சிவகுருநாதன்





          சுமார் 2270 ஆண்டுகளுக்கு முன்பு பேரரசன் அசோகன் தன்னுடைய திக் விஜயங்களைக் கைவிட்டு விட்டு தர்ம விஜயங்களை நடத்தி இந்தியாவில் முதல் பெரும் மக்கள் நல அரசை (Welfare State)  ஏற்படுத்தினான்.


             63 ஆண்டு கால சுதந்திர, ஜனநாயகப் பெருமை பேசும் நமது நாட்டில் தலைவர்களும் அதிகாரிகளும் நடத்தும் திக் விஜயங்கள் அளவில்லாதவை.   தமிழகத்தில் முதல்வரோ, அமைச்சர்களோ வருகிறார்கள் என்றால்தான் அப்பகுதியில் சாலைகள் போடப்படுகின்றன.  எங்கும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு அந்த இடமே சுகாதாரமயமாக காட்சியளிக்கிறது.


            இந்த நவீன மன்னர்கள் உலா வரும் இடங்களில் மக்களின் நடமாட்டம் தடுக்கப்படுகிறது.  அவர்கள் போகும் சாலைகளில் இதர வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.  அக்கால மன்னர்கள் கூட இவ்வளவு கொடூர திக் விஜயங்களை நிகழ்த்தியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது.


            சாலைகளில் குழி தோண்டி, மறைத்து வரவேற்பு வளைவுகளும் பதாகைகளும் அமைக்கப்படுகின்றன.    அப்பாவி பொதுமக்களின் அன்றாட இயல்பு வேலைகள் முற்றிலும் பாதிக்கும் வகையில் இதெல்லாம் நடக்கிறது.  இவையனைத்தையும் பார்த்துப் பார்த்து சகித்துக் கொள்ளும்  மனநிலையை பொதுமக்கள்  பெற்றிருப்பதோடு ஒரு வகையில் சுரணையற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.   இவை மட்டுமல்ல,  ஊழல் போன்ற எதுவும் இவர்களைப் பாதிப்பதில்லை.  ‘தேனெடுப்பவன் புறங்கையை நக்காமலா இருப்பான்’ என்று சொல்லி சமாதானம் அடையும் நிலைதான் இருக்கிறது. 


            மாநிலமெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை அமைத்து விட்டால் சாதியொழிந்து சமத்துவம் நிலவுகிற மாதிரி ஒரு கனவை ஆட்சியாளர்கள் காணுவது மட்டுமல்லாது மக்களையும் காண வலியுறுத்துகிறார்கள்.  நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு அளவில்லை.  உத்தப்புரம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தீண்டாமைக் கொடுமைகளை அரசு எந்திரம் கண்டு கொள்வதேயில்லை.


            இதேபோல் உழவர் சந்தைகளும் உழவர் பெருமக்களுக்கான இயங்குவதாக யாரும் கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை.   நிறைய இடங்களில் உழவர் சந்தைகள் பாழடைந்து கிடக்கின்றன.  அப்படிச் செயல்படும் சிலவற்றிலும் வியாபாரிகள்தான் ஆக்ரமித்திருக்கிறார்கள்.  உண்மையான உழவர்கள் பலர் சாலையோரங்களில்தான் காய்கறி மற்றும் கீரைகளை விற்கும் நிலை உள்ளது.


            சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  , நாகர்கோவில்  வடசேரி உழவர் சந்தையை ஆய்வு செய்தாராம்.  பொதுமக்கள் காய்கறி வாங்க ஏதுவாக டிராலியை அறிமுகம் செய்து, அதைத் தள்ளிக் கொண்டு போய் தனக்குத் தேவையான காய்கறிகளை வாங்கியதாக படத்துடன் தினசரிகளில் செய்தி வெளியானது.  அந்தப் படத்தில் காய்கறி விற்கும் உழவர்கள் (!?) கையுறைகள் அணிந்த வண்ணம் இருக்கின்றனர்.  இது தமிழ்நாட்டில் நடக்கிறதா என்று யாரும் வியப்படைய வேண்டாம்.   அரசியல்வாதிகளுக்கு நிகராக அதிகாரிகள் நடத்தும் ‘திக் விஜயங்களின்’ ஒரு பகுதி என்பது சொல்லாமலே விளங்கும். 

  
            டிராலியில் தள்ளிக் கொண்டு சென்று தூக்க முடியாத அளவிற்கு காய்கறி வாங்க அதன் விலை ஈடு கொடுக்குமா?  மாவட்ட ஆட்சியர் வேண்டுமானால் டிராலியில் காய்கறி வாங்க முடியும்.  பொதுமக்களுக்கு சாத்தியப்படக் கூடிய ஒன்றா என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.இவர்கள் எப்போதுதான் திருந்துவார்கள் என்று தெரியவில்லை.   திருந்தாவிட்டால் திருத்தப்போவது யாரென்றும் புரியவில்லை.

            இதோ ஒரு பழைய உதாரணம்.  அடுக்கடுக்காக சுய முன்னேற்ற நூற்களை எழுதிக் குவிப்பவரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான வெ. இறையன்பும் மற்றும் பலரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் நடந்த சுனாமி பாதிக்கப்பட்டோருக்கான படகு வழங்கும் விழாவில் அந்தப் படகில் நின்று கொண்டு பயணித்து விபத்துக்குள்ளாகி மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர்.  ஒரு சிறிய படகில் பல பேர் நின்று கொண்டு பயணம் செய்தால் சம நிலை குலையும் என்ற எளிய உண்மையைக் கூட தெரியாத இவர்கள் புத்தி ஜீவிகளாக வலம் வருவதுதான் வேடிக்கையானது.  ஊருக்குத்தான் உபதேசம்?     
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக