திங்கள், பிப்ரவரி 07, 2011

34-வது சென்னை புத்தகக் கண்காட்சி :- சில பார்வைகள்

34-வது சென்னை புத்தகக் கண்காட்சி :-

சில பார்வைகள்       - மு.சிவகுருநாதன்









            தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ((BAPASI) நடத்தும் 34-வது சென்னை புத்தகக் கண்காட்சி இவ்வாண்டு ஜனவரி 04, 2011 முதல் ஜனவரி 17, 2011 முடிய 14 நாட்கள் நடைபெற்றது.   12 லட்சம் பேர் பார்வையிட்ட இக்கண்காட்சியில் 25 லட்சம் புத்தகங்கள் 7.5 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



            600க்கு மேற்பட்ட அரங்குகள் என்று கணக்கு சொல்லப்பட்டாலும் 200 அரங்குகள் நான்கு சேர்ந்த 50 பெரிய அரங்குகளாகும்.  இரண்டு இணைந்த அரங்குகள் 150 க்கு மேல் உள்ளது.  மல்லூரி போன்ற தனியார் அரங்குகள், தினமணி, தினமலர், தினத்தந்தி போன்ற நாளிதழ் அரங்குகள், பொதிகை, மக்கள் போன்ற தொலைக்காட்சி அரங்குகள், விளம்பரத்திற்காகவும் துண்டுப் பிரசுரங்கள் அளிக்கவும் அமைக்கப்பட்ட அரங்குகள் போன்றவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் 200 அரங்குகள் மட்டுமே மிஞ்சும்.  அவற்றில் ஆங்கிலப் பதிப்பகங்களையும் நீக்கிவிட்டால் சுமார் 100 கடைகள்தான் தேறும்.   அதிலும் அரசியல், சமூகம், கலை, இலக்கியம், வரலாறு போன்ற பிரிவுகளில் ஓரளவிற்கு நல்ல நூற்களை வெளியிடும் பதிப்பகங்களை 50ற்குள் அடக்கிவிடலாம்.



            வெளியூரிலிருந்து வரும் வாசகன் இந்தக் கடைகளை ஒரே நாளில் சுற்றிப் பார்த்து தனக்குத் தேவையான புத்தகங்களைத் தேர்வு செய்ய முடியாது.   விடுமுறை நாட்களில் வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தில் சிக்குண்டு எவ்விதத் தேடலையும் நடத்துவது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று.   இந்த முறை நான் ஜனவரி 10, 11, 12 ஆகிய மூன்று வேலை நாட்களில் கூட்ட நெரிசல் இல்லாத தருணங்களில் புத்தகக் கண்காட்சியைப் பார்த்துத் திரும்பினேன்.



            இந்த ஆண்டு வாசகர்களுக்கு குழப்பம் ஏற்படாமிலிருக்க 10 பாதைகளுக்கு பாரதி,
ஷேக்ஸ்பியர்,இளங்கோ,விவேகானந்தர்,அவ்வை திருவள்ளுவர், தாகூர், கம்பர்,  ஷெல்லி, பாரதிதாசன் எனப் பெயரிட்டிருந்தனர்.  இலக்கியம், மொழி, கணிப்பொறி, அகராதிகள், தேசப்படங்கள், நாளிதழ்கள் மற்றும் இதழ்கள், தொலைக்காட்சிகள், மருத்துவம் மற்றும் மூலிகைகள் என்று தனித்தனியே துறை வாரியாக ஓரளவுக்காவது பிரித்து அதன்படி கடைகளை அமைத்தால் வாசகர்கள் கால் வலிக்க தேடுவது கொஞ்சம் மிச்சமாகும்.



            ஜோதிடம், சமையல் மற்றும் சுய முன்னேற்ற நூல்களளைப் போல இவ்வாண்டு குழந்தை இலக்கிய நூற்கள் விற்பனையில் சற்று முன்னேறியிருந்ததாகக் கூறுகிறார்கள்.  இது நல்ல சேதியாகப் படுகிறது.   ஆனால் குறிப்பிட்ட ஒரு சில பதிப்பகங்களைத் தவிர எஞ்சியவை பீர்பால், தெனாலிராமன் போன்ற நீதிக்கதைகள், மதம் சார்ந்த இந்துத்துவ நம்பிக்கைகளை உயர்த்திப் பிடிக்கும் கதைகள் போன்றவையே சிறுவர் இலக்கியம் என்ற நம்பிக்கையிலிருந்து இன்னும் விடுபடவில்லை.   இந்தக் கழிசடைகளின் ஊடாக சிறுவர் இலக்கியத்தைத் தேடுவது ஒரு கடினமான பணி.



            நல்லி சில்க்ஸ், பாரதி புத்தகாலயம் இணைந்து ஆங்கிலத்தில் வெளியிட்ட வாசகர் கையேடு கிடைத்தது.   கண்காட்சிக்கு வந்திருந்தோரில் பலர் கடைகளைத் தேடி அலைந்ததைப் பார்க்க முடிந்தது.  புத்தகக் கண்காட்சிக்காக எவ்வளவோ விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.   இந்தக் கையேட்டை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிட்டு நுழைவுச் சீட்டுடனே இணைத்து விநியோகம் செய்தால் நன்றாக இருக்கும்.



            அண்மைக் காலமாக தமிழில் நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றன.  பிழையின்றித் தெளிவான அச்சமைப்புடன் செம்மையான நூற்களையே காண முடிவதில்லை.  முற்றிலும் வியாபார நோக்கில் ஏனோதானோவென்று  நூற்கள் வெளியாகி சந்தையை அடைத்துக் கொண்டு நிற்கின்றன.  பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களின் எண்ணிக்கை, விளம்பரம், வியாபாரம் போன்றவற்றை மட்டும் கணக்கில் கொள்கின்றனவே தவிர நூலாக்கம் மற்றும் உள்ளடக்கத்தின் தரத்தைக் கண்டு கொள்வதேயில்லை.   எனவே தான் தரமற்ற  ஆயிரக்கணக்காக நூற்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.   இவற்றையயல்லாம் ஒதுக்கி நல்லனவற்றைத் தேடிப் பிடித்து வாங்குவதென்பது முடியாத காரியமாகவே உள்ளது.



            புத்தகங்களின் விலை அவற்றை வாங்க யோசிக்க வைக்கின்றன.  நாவல்கள் பல நூறு அல்லது ஆயிரம் பக்கங்களில் எழுதப்படுகின்றன.   அவற்றின் விலை முந்நூற்றைத் தாண்டுகிற போது நூலகங்களில் நாவல்கள் மேற்பார்வை நூற்கள் வரிசையில் வைக்கப்படுகின்றன.    வாசகன் அவற்றைப் படிக்க வேண்டுமானால் நூலகத்திலேயே குடியிருக்க வேண்டும்.  ஒரு காலத்தில் மக்கள் பதிப்பு என்று குறைந்த விலையில் நூற்களை அளிக்கும் நிலை இருந்தது.   இன்று பதிப்புலகம் முற்றிலும் ‘கார்ப்பரேட்’ மயமாகிப் போனதால் அதற்கு வாய்ப்பே இல்லாமற் போய் விட்டது.



            ஏற்கனவே வெளியாகியிருக்கின்ற  நூற்களை அவற்றைப் பற்றிய எவ்வித குறிப்பும் இல்லாமல் முதல் பதிப்பு என்று தொடர்ந்து பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன.  நூலக ஆணையை பெறுவதற்காக இவ்வாறு செய்வதாக பதிலும் சொல்லப்படுகிறது.  பதிப்புத் துறையில் இவை போன்ற பல்வேறு அறங்களுக்கு இன்று இடமேயில்லை.



            மயிலை. சீனி. வேங்கடசாமியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட போதிலும் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகத்தை’ விடியலை பதிப்பகமும் ‘பெளத்தமும் தமி
ழும்’-ஐ என்.சி.பி.எச்-ம் வெளியிட்டுள்ளன.  ஏனைய பிற நூற்களை தகுந்த முறையில் செம்மையாக பதிப்பித்து யாரும் வெளியிட விரும்பவில்லை.   பூம்புகார் பதிப்பகமும் 2006-இல் வெளியிட்ட ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ ஒரு பிரதி மட்டுமே இருந்தது; வாங்கி விட்டேன். இது ஓர் உதாரணந்தான்.   இதைப் போல எண்ணற்ற நூற்கள் மறுபதிப்பு காணாமலும் எங்கோ மறைந்து கிடக்கின்றன.



            பிரமிளுக்கு ஓர் கால.சுப்ரமணியம் கிடைத்தது போல் பலர் இவ்வாறு உழைத்து அச்சில் இல்லாத நூற்களை முயற்சிக்க வேண்டும்.  இம்மாதிரியான முயற்சிகளுக்கு பதிப்பகங்கள் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்.



            எவ்வளவோ நவீன வசதிகள் இருந்தும் அட்டைப் படத்திற்குச் செலுத்தும் கவனத்தை பிழைகளைக் களைவதில் பதிப்பகங்கள் காட்டுவதில்லை என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது.  முறையான திட்டமிடல் ஏதுமின்றி சந்தைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற உந்துதலால் அவசர கோலத்தில் தயாரிக்கப்படும் புத்தகங்கள் பிழைகள் மலிந்து விடக் காரணமாக இருக்கின்றன.



            புத்தகக் கண்காட்சியையயாட்டி சில பெரிய நிறுவனங்கள் குளிரூட்டப்பட்ட அரங்குகளை நூல் வெளியீட்டு விழாக்களை நடத்துதலிலும் ஊடகத் துறையினரை ‘நல்ல’ முறையில் கவனித்து தங்களது பதிப்பகங்களுக்கும் நூற்களுக்கும் விளம்பரம் தேடிக் கொண்டார்கள்.  பாபாஸியில் உறுப்பினரல்லாதவர்கள் எதிரே உள்ள மேடையில் நூலை வெளியிட பல ஆயிரங்கள் கொடுக்க வேண்டியிருந்தது.   வசதியற்ற பதிப்பகங்கள் நூலை வெளியிட ஒரே வழி புத்தகக் கண்காட்சி அரங்குகள்தான்.



            புத்தகச் சந்தைக்கு வரும் பார்வையாளர்களுக்கான வசதிக் குறைவு எப்போதும் போல் தொடர்கிறது.  கேண்டீனில் நட்சத்திர ஓட்டலின் விலையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன.  உள்ளே போதுமான குடிநீர் வசதிகள் இல்லை.  அங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.



            போதிய கழிவறை வசதிகள் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்வதாக நினைத்துக் கொண்டு திறந்த வெளியில் ஒரு குழிவெட்டி கொஞ்சம் தடுப்புக்களை மட்டும் வைத்து திறந்த வெளிக் கழிவறையை வைத்து நாறடித்து விட்டார்கள்.   அங்கு போதுமான தண்ணீர் வசதி இல்லை.  திறந்தவெளி குழி நிரம்பி அப்பகுதி முழுவதும் மலம் மற்றும் மூத்திரம் ஆறாக ஓடி பெரும் சுகாதாரக் கேட்டை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.  நடமாடும் கழிவறையை வாகனங்கள் மூலம் அமைத்து கழிவுகளை எந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணிகளைச் செய்திருக்க வேண்டும்.   பணம் பண்ணுவதிலேயே குறியாக இருக்கும் நிர்வாகம் இது குறித்த சிந்திக்கவேயில்லை.  மேலும் ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் நகராட்சி / மாநகராட்சி கட்டணக் கழிவறையின் அவலத்தைப் போலவே இந்த மாதிரியான செயலையும் கண்டும் காணாமல் இருந்து விடுகிறோம்.



            புத்தகம் வாங்குபவர்களை விட வேடிக்கைப் பார்க்கவும் Time Pass-க்காவும் வரும் கூட்டமே மிகுதி.   சந்தையைப் பார்வையிட்ட 12 லட்சம் பேர்களும் தலா ரூ.100/-க்கு சராசரியாக புத்தகம் வாங்கியிருந்தால் விற்பனை 12 கோடியைத் தாண்டியிருக்கும்.  ஆனால் 7.5 கோடி ரூபாய்க்கு விற்பனை என்று சொல்லும் போது ஒருவர் சராசரியா ரூ.60/-க்கான புத்தகம் வாங்கியிருப்பதாகவே சொல்ல முடியும்.   ஆயிரம், பத்தாயிரங்களுக்கு நூற்கள் வாங்கியவர்கள் இருக்கும் போது பல லட்சம் பேர் வெறுமனே வந்து சென்றவர்கள் என்பதே உண்மை.



            25 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியிருப்பதால் தமிழகத்தில் பெரும் அறிவுப் புரட்சி நடைபெற்று விட்டது என்றெல்லாம் கனவு காண வேண்டியதில்லை.  இவற்றில் முக்கால் பங்கு நூற்கள் மக்களின் அறிவை மழுங்கடிக்கச் செய்யும் பாவனை நூற்களாகவே இருக்கிறது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.   நமது பாடத்திட்டமும், கல்வி - சமூக அமைப்பும், ஊடகங்களும் நல்ல நூற்களின் பால் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கெதிராகவே செயல்படுகின்றன.



            சென்னையைத் தவிர மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, காரைக்குடி, தஞ்சை என பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளது.   ஏதேனும் ஒன்றிரண்டு புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பதிப்பகத்தார் இந்த சந்தைகளில் பங்கேற்காததால் அவற்றைத் தேடி வாங்க முடிவதில்லை.  சந்தையில் தேடாமல் அவர்களைத் தேடினால்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது.  பிரம்மாண்டம், அதிக எண்ணிக்கையிலான கடைகள் என்ற சில காரணங்கள் மட்டுமே புத்தகச் சந்தையை வாசகர்களுக்கானதாக மாற்றாது என்பது உறுதி.



            இந்த புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய சில நூற்பட்டியலுடன் இப்போதைக்கு முடித்துக் கொள்கிறேன்.  சில குறிப்பிடத்தகுந்த நூற்களைப் பற்றிய பதிவுகளை பிறகு எழுதுகிறேன்.



            விடியல்

1. கிராம்
ஷி - புரட்சியின் இலக்கணம் - எஸ்.வி. ராஜதுரை - வ.கீதா.

2. டிராட்ஸ்கி - என் வாழ்க்கை-(மொ) - துரை. மடங்கன்

3. சென்னகரம்பட்டி கொலை வழக்கு (தொ) - பொ. இரத்தினம்

4. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை. சீனி. வேங்கடசாமி

5. ஷோபியன் - காஷ்மீரின் கண்ணீர் கதை - எஸ்.வி. ராஜதுரை

6. இந்தியா ஒரு வல்லரசு - வேடிக்கையான கனவு - அருந்ததி ராய்

7. பேக்கன் முதல் மார்க்ஸ் வரை - தேவி பிரசாத் சட்டோபாத்யாயா



            நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

8. பண்டைய இந்தியா - டி.டி.கோசாம்பி

9. வாத்தியார் - ஆர்.எஸ். ஜேக்கப்

10. உலகாயதம் - பண்டைக்கால இந்தியப் பொருள் - முதல் வாதம் பற்றிய ஆய்வு - தேவி பிரசாத் சட்டோபாத்யாயா

11. 1857 - சுரேந்திரநாத் சென்



            காலச்சுவடு


12. கோவில் - நிலம் - சாதி - பொ. வேல்சாமி

13. பொற்காலங்களும் இருண்ட காலங்களும் - பொ. வேல்சாமி

14. பொய்யும் வழுவும் - பொ. வேல்சாமி

15. ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி

16. காந்தியை அறிதல் - தரம்பால்

17. மந்திரமும் சடங்குகளும் - ஆ. சிவசுப்பிரமணியன்

18. வரலாறும் வழக்காறும் - ஆ. சிவசுப்பிரமணியன்

19. ஆகஸ்ட் போராட்டம் - ஆ. சிவசுப்பிரமணியன்

20. உப்பிட்ட வரை . . . . . - ஆ. சிவசுப்பிரமணியன்

21. தமிழகத்தில் அடிமை முறை - ஆ. சிவசுப்பிரமணியன்

22. கிருத்தவமும் தமிழச்சூழலும் - ஆ. சிவசுப்பிரமணியன்



            அடையாளம்

23. இந்திய விடுதலை வெற்றி - மெளலானா அபுல்கலாம் ஆஸாத்

24. மேயோ கிளினிக் - உடலநலக் கையேடு

25. மேயோ கிளினிக் - நீரழிவைச் சமாளிப்பது எப்படி?



            எழுத்து

26. பஞ்சமி நில உரிமை - முதல் தொகுதி

27. தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்

28. தலித் மக்களும் கல்வியும்

29. பெருந்தலைவர் எம்.சி. ராஜாவின் சிந்தனைகள்



            கருப்புப்
பிரதிகள்

30. சாதி - எதிர் வர்க்கம் - (மொ) - ம. மதிவண்ணன்

31. போர் இன்னும் ஓயவில்லை - ஷோபா சக்தியுடன் உரையாடல்கள்

32. நான் எப்போது அடிமையாயிருந்தேன் - நேர்காணல்கள் தொகுப்பு - ஷோபாசக்தி

33. இந்து ஆன்மீகமே பாசிசம்தான் - காஞ்
சாய்லைய்யா நேர்காணல்



            புதுமைப்பித்தன் பதிப்பகம்

34. ஔரங்கசீப் - ஸ்டேன்லி லேன் ஃபூல்

35. யுவாங் சுவாங் இந்தியப் பயணம் - இரண்டாம் தொகுதி



            திராவிடர் கழகம்

36. அசல் மனுதரும சாஸ்திரம்

37. டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள்



            கீழைக்காற்று

38. விடுதலைப் போரின் வீர மரபு

39. அருந்ததிராய் - கரண்தபார் விவாதம்



            அலைகள்

40. வரலாறும் வக்கிரங்களும் - ரொமிலா தாப்பர்

41. அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் - ஆனந்த் டெல்டும்ப்டே

            சீனி. விசுவநாதன்

42. மகாகவி பாரதி வரலாறு



            பாலை

43. குற்றப்பரம்பரை அரசியல் - (மொ) - சா. தேவதாஸ்
(பெருங்காமநல்லூரை முன் வைத்து)



            கிழக்கு

44. இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு... - தொகுதி 2 - ராமச்சந்திர
குஹா



            வம்சி

45. அனுபவங்களின் நிழல் பாதை - ரெங்கையா முருகன், வி. ஹரிஹரன்



            சந்தியா

46. மகாகவி பாரதியார் - வ.ரா.



            பாரதி புத்தகாலயம்

47. மார்க்சிய அரசியல் பொருளாதாரம் - வெங்கடேஷ் ஆத்ரேயா

48. வரலாறு / சமூகம் / நில உறவுகள் - இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

49. நிலவுக்குள் ஒரு பயணம் - த.வி. வெங்கடேஸ்வரன்



            தலித் முரசு

50. சாதியை ஒழிக்கும் வழி - டாக்டர். அம்பத்கர்



            மீனாள்

51. அன்புள்ள அய்யனார் - சுந்தர ராமசாமியின் 200 கடிதங்கள் 



            எதிர் வெளியீடு

52. சுதந்திரக் காற்று - பேபி காம்ப்ளி



            பரிசல்

53. மரண தண்டனை என்றொரு குற்றம் - ஆல்பெர் காம்யு



            புலம்

54. ஐந்தாறு வகுப்பறைகளும் பத்து பதினைந்து காக்கைகளும் - ஈஸ்வர சந்தான மூர்த்தி



            அகம்புறம்

55. அம்பர்தோ எகோ - சில நேர்காணல்களின் மொழி பெயர்ப்பு (மொ) - ரஃபேல்



            வடலி

56. தேவதைகளின் தீட்டுத் துணி - யோ. கர்ணன்



            முரண்

57. சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும் வளர்ச்சி-இடப் பெயர்வு - மறுவாழ்வு - அ. மார்க்ஸ்



            பயணி

58. பாபர் மசூதி - ராமஜென்ம பூமி:- தீர்வும் தீர்ப்பும் - அ. மார்க்ஸ்



            உயிர்மை

59. தேகம் - சாரு நிவேதிதா



            நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்

60. அயோத்தி தாசர் சிந்தனைகள் - 3



            தமிழோசை பதிப்பகம்

61. சிந்துசமவெளி எழுத்து - அஸ்கோ பர்போலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக