சனி, பிப்ரவரி 19, 2011

ஊழலுக்காக பொய் பேசும் பிரதமர் மன்மோகன் சிங்

ஊழலுக்காக பொய் பேசும்  பிரதமர் மன்மோகன் சிங்

- மு. சிவகுருநாதன்
          சில ஆண்டுகளாக இந்தியாவெங்கும் பேசப்பட்டு வரும் இமாலய ஊழல்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வாய் திறப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.  அதை சரிசெய்வதாக நினைத்துக்கொண்டு தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுக்கான நேர்காணல் ஒன்று ஏற்பாடு செய்து நேரலை மூலம் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.  முன்கூட்டியே எழுதி வாங்கப்பட்ட வினாக்கள், அதற்கு  முன் தயாரிப்பான பதில்கள் என்ற நாடகத்தில் பர்கா தத், வீர் சங்வி போன்றோருக்கு இடமளிக்காமல் பார்த்துக் கொண்டார்கள்.

             பிரதமர் மன்மோகன் சிங் மிகப் பெரிய அறிவாளி, வெளிநாட்டில் படித்த மேதை ( உள்நாட்டில் படித்தால் அவன் பேதை.) சிறந்த பொருளாதார வல்லுநர், இந்திய ரிசர்வ் வங்கி, உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர், நிதியமைச்சராக இருந்ததன் மூலம் உலகமயத்தைக் கொண்டு வந்து இந்தியாவில் புரட்சி செய்தவர்,சராசரி அரசியல்வாதியாக மாறாத உத்தமர்,திருவாளர் பரிசுத்தம்   என்றெல்லாம் ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்ட கற்பனைகள் இங்கு நிறைய உண்டு.    தனக்கு எதுவும் தெரியாது என்று குழந்தை போல்  ஒப்பிக்கும் ‘அப்பாவித்தனம்’ என்ற அசிங்கத்தையும் இதனோடு அவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
             2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிதி அமைச்சகம், தொலைத் தொடர்பு அமைச்சகம்,  தொலைத் தொடர்பு ஆணையம், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (TRAI) ஆகியன ஒப்புதல் அளித்துவிட்டதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கைவிரிக்கிறார்.  அமைச்சரவையின் தலைவர், கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றுக்கு என்ன பதில்?  ஆ. ராசா தவிர பிறர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை தொடங்கப்படவில்லை.  இதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் கூட  ‘அப்பாவித்தனத்திற்கு’ ஊடகங்களோடு  சேர்ந்து நாமும் வாழ்த்துப்பா பாடலாம். 

             தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின்(CAG)  இழப்பு கணக்கீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.   இழப்பு ஏற்பட்டதை 
CAG  மட்டுமல்ல   CBI -யும்  ஒத்துக் கொண்டாயிற்று.  தன்னைப் போன்ற ஒரு பெரிய பொருளாதார வல்லுநரை வைத்து உண்மை இழப்பைக் கணக்கிட்டுத்தான் பார்க்கலாமே!  இதற்கும் அடுத்த பிரதமரின் உளறல்தான் பாசிசத்தின் உச்சம்.  இதற்கு கபில்சிபல் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

            உணவு மானியமாக ரூ. 80 ஆயிரம் கோடியும் உர மானியமாக ரூ. 60 ஆயிரம் கோடியும் எரிவாயு, மண்ணெண்ணெய் மானியமாக பல்லாயிரம் கோடியும் ஒதுக்கப்படுகிறது.  அதைப் போலத்தான் இதுவும் என்கிறார்.  எனவே இதை எப்படி இழப்பு என்று சொல்ல முடியும்? என்று எதிர் கேள்வி கேட்கிறார்.இஸ்ரோ தேவாஸ் மல்டி மீடியாவுக்கு தாரை வார்த்த 2 லட்சம் கோடியும் மானியந்தானோ!  டாடா, அம்பானி போன்ற பிச்சைக்காரர்களுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளதை கேட்டு நாமெல்லாம் மகிழ்ச்சி  அடையவேண்டியதுதான்!   இதைக் கேட்ட செய்தியாளர்கள் துணைக் கேள்வி ஒன்றை கேட்டிருக்க வேண்டுந்தானே! முன்னதாகவே ஒத்திகை பார்க்கப்பட்ட இந்நாடக அரங்கேற்றத்தில் இதற்கெல்லாம் சாத்தியமில்லை என்பது யாருக்கு விளங்கப் போகிறது?.
  
           இஸ்ரோ நிறுவனம் தனது வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனத்துடன் 2005-இல் முறைகேடாக செய்து கொண்ட எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பொய் சொல்கிறார்.  2 ஜி அலைக்கற்றை ஊழலில் பிரதமரின் பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர் இதில் தனது துறையின் பொறுப்பையும் நிர்மூலமாக்குகிறார்.  தனக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மறுப்பவர் உண்மையில் யாருக்கு  தொடர்பு என்பதைக் கண்டறிய ஏன்  நேர்மையான விசாரணை ஏன் மேற்கொள்ளவில்லை?  6 ஆண்டு காலமாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? என்ற கேள்விகளையும் எதிர் கொண்டிருக்க வேண்டும்.  70 நிமிடப் பேட்டியில் இதற்கு நேரமில்லை போலும்.  இஸ்ரோவின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் மட்டும் இழப்பு,ஊழல் இல்லை என்றாகிவிடுமா?. சாமானிய  குற்றவாளிகளுக்கு மட்டும் நார்கோ அனாலிசிஸ்,பிரெயின் மேப்பிங் என்றெல்லாம் உண்மை கண்டறியும் சோதனைகளை நடத்துவதுபோல் இவர்களுக்கும் நடத்தப்போவது எந்நாளோ? 

            நாடாளுமன்றக் கூட்டுக் குழு (JPC)விசாரணைக்கு நான் தயார் என்றும், அதற்கு நான் தடையாக இல்லை என்றும் கூறும் பிரதமர் அதற்கு யார் தடையாக இருந்தார்கள் என்பதை சொல்வதற்கு ஏன் இவ்வளவு நாட்களானது என்பது பற்றியும் வாய் திறப்பதில்லை.

            கூட்டணி ஆட்சியில் அதிகாரம் என் கையில் இல்லை;  கூட்டணி தர்மத்தில் நாம் நினைத்ததையெல்லாம் சாதிக்க முடியாது; விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும் என்று பாடம் நடத்தும் பிரதமர் இந்தியாவை முழுவதுமாக அந்நிய மற்றும் உள்நாட்டு முதலாளிகளிடம் விற்க முனைவதையும் கூட்டணி தர்மம் என்றும் விட்டுக் கொடுத்தல் என்றும் சொல்ல விரும்புகிறாரா?

             ப. சிதம்பரம் உள்துறை அமைச்சரான பிறகு காஷ்மீர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு மேம்பட்டிருக்கிறது என்று சொல்லும் பிரதமர் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி ஏற்பட உல்பா தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதைக் குறிப்பிடுகிறார்.   ஆனால் ஏன் மாவோயிஸ்டுகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்பதைத் தெளிவுப்படுத்தவில்லை. 

             வளைகுடா நாடுகளில் உள்ள 50 லட்சம் இந்தியர்கள் பற்றி கவலைக் கொள்வதாகவும் எகிப்தில் நடந்தது போன்ற கிளர்ச்சி இந்தியாவில் சாத்தியமில்லை என்பதிலும் பிரதமர் தெளிவாக இருக்கிறார்.  எவ்வளவு ஊழல் செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கிறது.  வாக்குக்குப் பணம் என்பதன் மூலம் ஊழலில் குடிமக்களும் பங்கு பெறுவதை உணராதவரா அவர்?

                         செய்தியாளர்கள், ஊடகங்கள் ஊழலை வெளிக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றுகிறீர்கள் என்று சொல்லி நன்றி தெரிவிக்கும் பிரதமர் இவைகளை பெரிதுபடுத்தி எழுதி உலக அரங்கில் இந்தியாவின் புகழைக் கெடுத்து விடாதீர்கள் என்று செய்தியாளர்களைச் செல்லமாக தட்டிக் கொடுக்கிறார்.

             நான் பதவி விலகமாட்டேன், எனது பணியை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.   அணுசக்தி இழப்பீடு மசோதா போன்று அமெரிக்காவிடம் ஒத்துக் கொண்ட பணிகளும் அலைக்கற்றை போன்ற நவீன இயற்கை வளங்களும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் மாவோயிஸ்ட்களின் தண்டகாரண்யப் பகுதியில் இன்னும் மீந்திருக்கும் கனிம வளங்களையும்  தனியாருக்கு தாரை வார்த்தல் போன்ற பல்வேறு பணிகள்  இன்னும் முடிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதைத்தான் அவர் இவ்வாறு சொல்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக