ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

சிற்றிதழ் அறிமுகம் :- மணற்கேணி - இரு மாத இதழ்

சிற்றிதழ் அறிமுகம் :- மணற்கேணி  - இருமாதஇதழ்    - மு. சிவகுருநாதன்          “நாயக வழிபாட்டு மனோபாவம் அனைத்துத் தளங்களையும் ஊடுருவிச் சீரழித்துக் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் தமிழக வரலாற்றின் ‘அத்தாரிட்டி’ களாகச் சில ‘வழிபாட்டுருக்கள்’ மேலெழுந்து வருவதைப் பார்க்கின்றோம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் புனித அங்கீகாரம் வழங்கும் ஆன்மீக அதிகார மையங்களின் தேவை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது” என்று கண்ணை மூடிக் கொண்டு தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக் கொள்ளும் விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமாரின் மணற்கேணி இரு மாத இதழ் வெளிவந்துள்ளது. முதல் இதழ் கிடைக்கவில்லை.   இதழ் 2 மற்றும் 3 புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது.   இமையம், அ. ராமசாமி, தேன்மொழி, அழகரசன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் பங்கு பெறும் இவ்விதழ் அழகான வடிவம், தாள் மற்றும் அச்சில் 120 பக்கங்களில் வெளிவந்துள்ளது.  மேலே குறிப்பிட்ட வாசகங்கள் இரண்டாவது இதழின் தலையங்கத்தில் காணப்படுபவை.


            மூன்றாவது இதழில் ஆசிரியர் குழுவைக் காணவில்லை.   தலையங்கம் ரவிக்குமார் பெயரில் இருக்கிறது.  இதழ்களின் தலையங்கங்கள் ஆசிரியர் குழு அல்லது ஆசிரியரால் எழுதப்படுவதாகவே நாம் கருதி வந்திருக்கிறோம்.    ரவிக்குமார் ஆசிரியராக இருக்கும் இதழில் அவரை மறைமுகமாகத் திட்டி தலையங்கம் வெளிவருவது ஆச்சரியமாக உள்ளது.  அதனால்தான் என்னவோ ஆசிரியர் குழு காணாமற் போய்விட்டது.


            தலையங்கம் ஆசிரியரால் எழுதப்படுகிறது என்ற மரபை தொடர்ந்து உடைத்து வருவது ‘தமிழினி’ இதழ் என்று நான் கருதுகிறேன்.  அவ்விதழில் ஆசிரியர் நா. விஸ்வநாதன், சந்தாவுக்கு வ. சரவணன் ஆகிய பெயர்களிருந்தும் கரு. ஆறுமுகத்தமிழன்தான் எப்பொழுதும் தலையங்கம் எழுதி வருகிறார்.


            வங்க இலக்கியம், பாகிஸ்தானிய இலக்கியம் என சிறப்புப் பகுதிகள் மொழி பெயர்ப்பில் வெளி வருவது பாராட்டுக்குரியது.  இந்திரா பார்த்தசாரதி, எச்.எஸ். வெங்கடே­ மூர்த்தி, பர்த்தா சேட்டர்ஜி ஆகியோரின் நேர்காணல்கள் இரு இதழ்களில் இருக்கின்றன. தமிழ் பதிப்புத் துறை பற்றிய ‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரை தமிழாக்கப்பட்டுள்ளது.  இவரது ‘சொல்வலை வேட்டுவன்’ நூலுக்கு மதிப்புரையும் உள்ளது.  ரவிக்குமாரின் ‘சூலகம்’ நூலுக்கு தேன்மொழியும் ‘மழை மரத்திற்கு’ சேரனும் மதிப்புரை (வெளியிடப்படாத முன்னுரை) எழுதியிருக்கிறார்கள்.   வெளிவர இருக்கும் ரவிக்குமாரின் நூலிற்கு இந்திரா பார்த்தசாரதி எழுதிய முன்னுரையும் இடம் பெற்றுள்ளது. 


            இமையம், அ. ராமசாமி ஆகியோரின் தன் வரலாற்றுக் கட்டுரைகளும் தேன் மொழியின் சிறுகதைகளும் உள்ளன.  தஞ்சைப் பெரிய கோயில் பற்றிய சுரேஷ் பிள்ளை மற்றும் பர்ட்டன் ஸ்டெய்ன் கருத்துக்களின் முக்கியத்துவத்தை விளக்கி எழுதப்பட்ட ரவிக்குமாரின் கட்டுரை ஒன்று பவுத்த, சமணக் கோயில்கள் இடிக்கப்பட்டு சைவக் கோயில்கள் கட்டப்பட்டது பற்றிய ஆதாரங்களை 1000 மாவது ஆண்டுக் கொண்டாடும் நேரத்திலாவது விவாதிக்கப்பட வேண்டும் என்கிறது.


            மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களின் (இதைத் தான் ரவிக்குமார் விரும்புகிறார்.  நான் முன்பு வெறுமனே பெயரை மட்டும் பயன்படுத்தி விட்டேன்.  மன்னிக்கவும்)  நிறைய மொழி பெயர்ப்பு இதழெங்கும் காணப்படுகின்றன.   பியரெத் ஃப்லுசியோவின் நாவல் மொழி பெயர்ப்புக்கு மொழி பெயர்ப்பாளர் வெ. ஸ்ரீராம் எழுதிய பின்னுரையும் இந்த இதழலில் உள்ளது.


            கிரந்த யூனிக்கோடு விவாதம் பற்றிய தொகுப்புக்களையும் ரவிக்குமாரின் விளக்கங்களையும் படிக்கும் போது மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினரும் கவிஞர் கனிமொழியும் தமிழுக்காக ஆற்றும் பணி நம்மையெல்லாம் புல்லரிக்க வைக்கிறது.  இந்த விவகாரத்தால் தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் தீபாவளி கூட கொண்டாட முடியாமல் போன கதையை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் ம. ராசேந்திரன் தனது தினமணி கட்டுரை மூலம் நீங்களும் அறிந்திருக்கலாம்.


            ஃபூக்கோ போன்ற சிந்தனையாளர்கள் தமிழில் இருந்தால் இவ்விதழ் உருவாகக் காரணமான அதிகார உறவுகள், இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் அதிகார உருவாக்கம், அதன்  நிர்ணயம் மற்றும் செயலாக்கத்தில் கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொள்ளலாம்.   ஆனால் என்ன செய்வது? அதிகாரங்களை அண்டிப் பிழைக்கும் தமிழ்ச் சூழலில் அதற்கான வாய்ப்பே இல்லை.  விமர்சனங்களிருப்பினும் வாசிக்கத் தவற விட வேண்டியதில்லை.  ‘மணற்கேணி’ அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு சிற்றிதழ்.  என்னைப் போன்று சிற்றிதழ்களைத் தேடிப் பிடித்து வாசிக்கும் ஒரு வித ‘மனநோய்க்கு’ ஆளானவர்களுக்கு வேறு என்னதான் வழி?

விலை: ரூ 40 ,
ஆண்டு சந்தா: ரூ 240
தொடர்பு முகவரி 
மணற்கேணி பதிப்பகம்,
முதல் தளம்,அறை எண்:2 ,
புதிய எண்: 10 ,பழைய எண்: 228 ,
டாக்டர் நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை-600005 .
செல்:9443033305
e .mail :manarkeni@gmail .com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக