புதன், பிப்ரவரி 16, 2011

தமிழில் கல்வியியல் சிந்தனைகள் / ஆய்வுகள் / விமர்சனங்கள்

தமிழில் கல்வியியல் சிந்தனைகள் / ஆய்வுகள் / விமர்சனங்கள்.                - மு. சிவகுருநாதன்






(மக்கள் கல்விக் கூட்டமைப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வி மற்றும் செயல்வழிக் கல்வி  பற்றிய நான்கு  குறுநூற்கள் குறித்த  விமர்சனப் பதிவு.)








           தமிழில் குழந்தை இலக்கியத்தைப் போல கல்வி சார்ந்த நூல்களுக்கும் எப்போதும் பற்றாக்குறைதான்.  அதுவும் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வி பாடத்திட்டங்கள், பாடநூற்கள், பயிற்று முறைகள் போன்றவை குறித்தான ஆய்வுகள் விமர்சனங்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

            ‘சமச்சீர் கல்வி’ என்ற பெயரில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு புதிய பாடநூற்கள் வெளிவந்து ஓராண்டு ஆகப் போகிறது.  2, 3,4, 5, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடநூற்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.  இப்பாடநூற்களின் தரம் குறித்து யாரும் அதிகம் வாய் திறப்பதில்லை.   இப்போது நடைமுறையில் இருக்கும தமிழ்ப் பாடநூற்கள் பற்றிய தனது ஆதங்கத்தை எழுத்தாளர் பிரபஞ்சன் காலச்சுவடு ஜுன் 2010 இதழில் வெளிப்படுத்தியிருந்தார்.

             பாடநூற்களைப் போலவே கல்வியில் கற்பித்தல் - கற்றல் முறைகளும் மிகவும் முக்கியமானவை.  அவைகளைப் பற்றியும் நேர்மையான ஆய்வுகள் நடப்பதில்லை.   கல்வியைப் பற்றி சிந்திக்காத சமூகம் எப்படி வளர்ச்சியை எட்டுமெனத் தெரியவில்லை.



01.செயல்வழிக் கற்றலை சரியான முறையில் அமல்படுத்துதல்.

02.ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 ஐ அமல் செய்தல்.

03.தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்குதல்.

04.சமச்சீர் கல்வியை விரைவில் அமல் செய்தல்.

05.தமிழ் வழிக் கல்வியை அனைத்து நிலைகளிலும் அமல் செய்தல்.

06மேல்நிலைக் கல்வியில் இரண்டு ஆண்டுகளிலும் பொதுத் தேர்வு நடத்துதல்
    மற்றும் +2 வகுப்புக்களை இளநிலைக் கல்லூரியாக மாற்றுதல்.

07.மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வியிலும் மற்றும் அனைத்துப்
     பட்டப் படிப்புகளிலும் கிராமப்புற மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு அளித்தல்.

08.காப்பியடிக்கும் கலாச்சாரத்தை ஒழித்து கல்வித் தரத்தை உயர்த்துதல்.

09.மேல்நிலை வகுப்புகளில் இட ஒதுக்கீட்டு ஆணையை சரியாக அமல்   செய்தல்.

10.விதிகளுக்குப் புறம்பாக பணம் பறிக்கும் பள்ளி நிர்வாகிகள் மீதும் தனிப்  பயிற்சிஎடுக்கும் ஆசிரியர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்தல்.

11.ஆதி திராவிடர் / பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நலப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம் அமைத்தல்.

12.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல்.

13.அனைத்திந்திய அளவில் நடைபெறும் அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் தமிழிலும் வினாத்தாள் வழங்குதல்.

14.சிறப்புக் கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியைக் கைவிடுதல்.

15.மத்திய - மாநில அரசுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%ஐ கல்விக்கு ஒதுக்கீடு செய்தல்.


                         தமிழக பள்ளிக் கல்வி எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்சினைகளை தகுந்த முறையில் அடையாளம் காட்டியிருக்கும் வகையில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.  செயல்வழிக் கற்றல் - எதிர்பார்ப்புகளும் சில உண்மைகளும், குழந்தைகள் கொண்டாடும் செயல்வழிக் கல்வி, நல்ல காலம் பிறந்து விடும் ஆகிய மூன்று குறுநூற்களும் செயல் வழிக் கற்றலின் (ABL - Actitivity Based Learning)  பெருமையைப் பேசுவதாக உள்ளன.   செயல்வழிக் கற்றலில் நல்ல அம்சங்கள் உள்ளதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.  ஆனால் பாவ்லோ ப்ரெய்ரேவின்  மாற்றுக் கல்வி அளவிற்கு இதை கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை. 

                         ஒன்று  முதல் நான்கு வகுப்புக்களுக்கு ABL முறையும் ஐந்தாம் வகுப்பிற்கு SALM முறையும் ஆறு முதல் எட்டு வகுப்புகளுக்கு படைப்பாற்றல் கல்வி முறையும் (ALM-Active Learning Methodology) ஒன்பதாம் வகுப்பிற்கு மட்டும் ALM+ -ம் கற்பித்தல் முறைகளாக இன்று அரசால் அமல் செய்யப்பட்டு வருகின்றன. 6 - 9 தமிழ் பாடத்திற்கு  போன்ற எவ்வித முறையும் நடைமுறையில் இல்லை.  10, 11, 12 ஆகிய வகுப்புக்களுக்கு எப்போதும் போல தேர்வுக்கு தயார் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.   அரசு பொதுத் தேர்வு, மதிப்பெண்கள் என்று வருகிற போது மட்டும் ஆகச் சிறந்ததாக சொல்லும் முறைகளை ஏன் கடைபிடிப்பதில்லை என்று கேட்டால் யாரிடமும் விளக்கம் கிடைக்காது.
  
                        சென்னை மாநகராட்சியில் திருவான்மியூர் குப்பம் தொடக்கப் பள்ளி போன்ற ஒரு சில இடங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ABL முறை வெற்றி பெற்று விட்டதாகச் சொல்ல முடியாது.   இந்தத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், நிர்வாக குளறுபடிகள், அதிகார மோதல்கள் பற்றியெல்லாம் இந்த நூற்கள் பேசாதது பெருங்குறையாகும்.

            அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டத்திற்கென ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார வள மையம் (BRC) செயல்படுகிறது.   தனியே ஒரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளார்.  1 முதல் 8 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார வள மையம், மாவட்ட கல்வி மற்று பயிற்சி நிறுவனம் (DIET)ஆகியன பல்வேறு பயிற்சிகளை நடத்துகின்றன. இது ஓராண்டுக்கு 30 நாட்களுக்கு மேலாக நடைபெறுகிறது.   இந்தப் பயிற்சிகள் அனைத்தும் நேரத்தையும் நாட்களையும் போக்குவதற்காக அமைந்தவை.  எந்த விதத் திட்டமிடலும் முறையான பயிற்சியும் நடைமுறைப் பயனுடைமையும் இல்லாததாகவே இவைகள் அமைகின்றன.   நிதியாண்டின் இறுதி வந்து விட்டால் பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் முடிந்த வரையில் அனைத்துப் பயிற்சிகளையும் நடத்தி நிதியைக் காலி செய்யும் முறையைத் தான் அதிகாரிகள் பின்பற்றுகிறார்கள்.

            விடுமுறை நாட்களில் பயிற்சியளிப்பது தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு சனி, ஞாயிறும் பயிற்சி என்றால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை யாரும் கண்டு கொள்வதில்லை.  அரசு ஊழியர்களைப் போல வேலை நாட்களை அதிகப்படுத்தினால் அரசு ஊழியர்களுக்கு ஈடாக ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டி வரும்.  ஒவ்வொரு மாதத்திலும் 5 நாட்கள் ஏதோ ஒரு பயிற்சி என்று சொல்லி வீணாகப் பொழுதைக் கழிக்கும் நடைமுறைதான் தற்போது வழக்கத்தில் உள்ளது.

            தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, அனைவருக்கும் தொடக்கக் கல்வி ஆகிய மூன்று துறைகளிலும் மேலிருந்த கீழ் வரை அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரப் போட்டி, பணம் சம்பாதிப்பதில் போட்டி போன்றவற்றால் ஆசிரியர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  ஒரே நேரத்தில் இரு அமைப்புகள் பயிற்சியை நடத்தும்.   வராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டும்.  இயக்குநர்களுக்கிடையே ஏற்பட்ட போட்டி பல நேரங்களில் வெளிப்படையாகவே அரங்கேறுகிறது. 

            பயிற்சிதான் 30 நாட்கள் என்றால் இவர்கள் கேட்கும் புள்ளி விவரங்களைத் தயார் செய்வதே பல வேலை நாட்களை விழுங்கி விடுவதாக இருக்கிறது.   எதற்காக திரும்பத் திரும்ப இத்தகைய புள்ளி விவரங்களைக் கேட்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.  ஒரு பக்கம் வட்டார வள மையம், மறுபுறம் உதவித் தொடக்கக் கல்வி / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள்.  இவர்கள் கேட்கும் புள்ளி விவரங்களைத் தயார் செய்யவும் அவற்றை அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் பல வேலை நாட்கள் போய் விடுகிறது.  தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இந்த தபால்காரர் வேலையைத்தான் பார்த்து வருகிறார்கள்.

             2, 3 ஆசிரியர்கள் இருக்கும் தொடக்கப் பள்ளிகளின் நிலை என்னவாக இருக்கும்? 5 ஆசிரியர்கள் இருக்கும் தொடக்கப் பள்ளிகள், 8 ஆசிரியர்கள் இருக்கும் நடுநிலைப் பள்ளிகள் ஆகிவற்றில் கூட எப்போதும் பயிற்சிகள், புள்ளி விவரங்கள் போன்றவற்றிற்காக பலர் வெளியே சென்று விடும்போது பள்ளிகளில் ஒரு சிலர்தான் கற்றல் - கற்பித்தல் பணிகளில் ஈடுபட முடியும்.

            எனவே அரசு இந்தத் திட்டங்களின் மூலமும் கற்பித்தல் முறைகளின் வாயிலாகவும் பல் வகுப்பு கற்பித்தலை நிரந்தரமாக்கி விடுகிறது.  ஆசிரியர் மாணவர் விகிதம் 1 : 20 என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசு 1 : 40 என்ற நிலையில் ஒன்று முதல் 4 வகுப்பு வரை ஒன்றாக வைத்து பல் வகுப்பு கற்பித்தலை பாடத்திட்டமாக வைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

            1 முதல் 4 வகுப்புக்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பாடத்திட்டம், பல் வகுப்பு கற்பித்தல் போன்றவையெல்லாம் கூட இருந்து விட்டு போகட்டும்.  மாணவர்களின் எண்ணிக்கை 40ஐயும் தாண்டுகிற போது இது போன்ற எந்த அதி நவீன முறைகளினால் என்ன பலன் உண்டாகும் என்பதை கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

            SSA திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடம் மாணவர்களை பள்ளியை நோக்கி ஈர்க்கிறது என்று ‘தினமணி’ ஒரு முறை எழுதியது.  இந்த பள்ளிக் கட்டிடங்கள் அனைத்தும் மிக மோசமான நிலையில் கட்டப்படுகின்றன.  சில ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்காத நிலையில் மிக மோசமாக உள்ளன.  கட்டிடங்கள் மட்டும் இருந்து என்ன பயன்?  அவற்றின் தரத்தை யார் பரிசோதிப்பது?

            மாற்றுத் திறனாளிகள், நரிக்குறவர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளை தனியார் தொண்டு நிறுவனங்களிடம் அரசு ஒப்படைத்திருக்கிறது.  விழுப்புரம் கோலியனூர் நரிக்குறவர் காலனியில் ஒரு உண்டு உறைவிடப் பள்ளி எவ்வித வசதியும் இன்றி சுமார் 50 மாணவர்களுடன் செயல்படுகிறது.  +2 முடித்த இரு பெண்கள்தான் இங்கு ஆசிரியைகளாக பணி செய்கின்றனர்.  10 மாணவர்களுக்குக் கூட SSA தொடக்கப் பள்ளியைத் திறந்து நடத்தும் அரசு இந்த மாதிரியான விளிம்பு நிலைக் குழந்தைகளுக்கான பள்ளிகளை அரசு நடத்த ஏன் விரும்பவில்லை?

            பழைய பாடத்திட்டங்கள் மிகவும் மோசம் என்பதை ஒத்துக் கொள்ளும் நாம் தற்போது சமச்சீர் கல்வி என்ற பெயரில் வெளிவந்துள்ள பாடநூற்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.   அது சரியல்ல.  முதல் வகுப்பு பாடநூற்களில் உள்ள தன்மை 6-ம் வகுப்பில் இல்லை.   கல்வியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பங்கேற்பை அரசு நாடாததுதான் இக்குறைபாடுகளுக்குக் காரணமாகும்.
              
           6 முதல் 8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி (ALM) தமிழ் தவிர்த்த இதர பாடங்களுக்கு மட்டுந்தான் என்று சொல்லப்படுகிறது.   ALM+ -ம் அப்படித்தான்.  தமிழப்பாடத்திற்கு இம்முறை தேவையில்லையா அல்லது ஒத்து வராதா என்பது விளங்கவில்லை.  அரசுப் பொதுத் தேர்வு நடைபெறும் வகுப்புக்களுக்கு எந்த முறையும் வேண்டாம், தேர்ச்சி விழுக்காட்டை அதிகரித்தால் போதுமென கல்வித் துறையும் அரசும் கல்வி அதிகாரிகளும் விரும்புகிறார்கள்.   மத்திய அரசு 10 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமெனச் சொன்னால் மட்டும் உடனே எதிர்க்கிறார்கள்.   கல்வி பற்றிய என்ன கொள்கை வைத்திருக்கிறார்கள் என்பது விளங்கவேயில்லை.

            தமிழகப் பள்ளிக்கல்வி
த்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு கல்வியில் ஏதோ புரட்சி நடந்து விட்டதாக ஊடகங்களும் வெகுசிலரும் ஒரு மாயையைப் பரப்பி வருகிறார்கள்.  கல்வித்துறை மிகவும் ஊழல் மலிந்ததாக உள்ளது என்பதே உண்மை.   கலந்தாய்வு மூலம் ஆசிரியர்களுக்கு வெளிப்படையான பொது மாறுதல் அளிப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆயிரக்கணக்கான நிர்வாக மாறுதல்கள் தொடர்ந்து   வழங்கப்பட்டு வருகின்றன.  ஆசிரியர்களுக்கு ஏன், எதற்கு நிர்வாக மாறுதல்கள் வழங்கப்பட வேண்டும்? நிர்வாக மாறுதல் வழங்கக் காரணம் என்ன? கடந்த கல்வியாண்டுகளில் எவ்வளவு பேருக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டுள்ளது? என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் யாரேனும் கேட்டால் ஒரு வேளை தகவல்கள் கிடைக்கக் கூடும்.  அப்போது உண்மைகள் வெளிவர வாய்ப்பு உண்டு.

            செயல் வழிக் கல்வித் திட்டங்கள், கற்பிக்கும் முறைகள், மாணவர் மையமாக விளையாட்டு முறையில் அமைய வேண்டிய கல்வி போன்றவற்றில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.  மாறாக அதிகார வர்க்கம் இத்திட்ட அமலாக்கத்தினால் செய்யும் முறைகேடுகள், அத்துமீறல்கள், ஊழல்கள் போன்றவையும் கல்வியாளர்களால் கண்டிக்கப்பட வேண்டும்.

            காலச்சுவடு (அக்டோபர் 2008) இதழில் கல்வியாளர் வசந்திதேவி குறைகளாகச் சுட்டிக்காட்டிய சில அம்சங்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதைக் காட்டமாக விமர்சிப்பதால் மட்டுமே செயல்வழிக் கற்றல் நடைமுறையில் உள்ள குறைபாடுகள் இல்லாமற் போய்விடாது.  ஒரு குழுவாக சேர்ந்து தயாரிக்கப்படும் அறிக்கையும் அக்குழுவில் உள்ள ஒரு தனிநபர் அப்பிரச்சினை பற்றி தனியே எழுதும் ஒரு கட்டுரையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வகை நியாயம் என்று தெரியவில்லை.   மூன்று, ஐந்து நீதிபதிகள் குழுவாக ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும்போது அவர்களிடத்தில் முரண்பட்ட தீர்ப்புகள் வருவதுண்டு தானே!.  இதை ராமானுஜம் அணிந்துரையில் புரிந்து கொண்டிருப்பது தெரிகிறது.   ஆனால் பதிப்புரை செயல்வழிக் கற்றலுக்கெதிரான தவறான விமர்சனங்களாகச் சுட்டுகிறது. 

                        இந்த நூற்களெல்லாம் ஆசிரியர்கள் பார்வைக்குச் செல்ல வேண்டும்.   பெரும்பாலான ஆசிரியர்கள் படிப்பதேயில்லை என்பதால் இதை சாத்தியமாக்குவது அவ்வளவு எளிதானதல்ல.  இந்தக் கல்வியாண்டு (2010 - 2011) முதல் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (RMSA) கீழ் ஒவ்வொரு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளுக்கும் நூல்கள், இதழ்கள் வாங்க ரூ. 10,000/- அளிக்கப்பட்டுள்ளது.   இதன் மூலம் தினத்தந்தி, தினகரன், தினமலர் போன்ற குப்பை நாளிதழ்களும் நாலாந்தர வணிக வார, மாத இதழ்கள் மட்டுமே வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை நிலவரம்.
 

            புதிய பாடநூற்கள், பாடத்திட்டங்கள், கற்பிக்கும் முறைகள் போன்றவற்றை ஆய்வு செய்து வெளியிடப்படும் நூற்கள் நிறைய வெளியாக வேண்டும்.   அந்த வகையில் இம்முயற்சியை பாராட்ட வேண்டும்.  கல்வி குறித்து சமூகம் இனியாவது  சிந்திக்க தொடங்க வேண்டும்.


            1. தமிழகப் பள்ளிக் கல்வி - பிரச்சினைகளும் தீர்வுகளும். (தொ) 

                 பக். 72   விலை ரூ. 35.
            2. செயல்வழிக் கற்றல் எதிர்ப்புகளும் சில உண்மைகளும் - வே. சுடர்ஒளி
                 பக். 56. விலை ரூ. 20
            3. குழந்தைகள் கொண்டாடும் செயல் வழிக் கல்வி. (தொ)
                பக். 48.  விலை ரூ. 15
            4. நல்ல காலம் பிறந்து விடும். (தொ)
               பக். 32.  விலை ரூ. 10.

            வெளியீடு:

                        மக்கள் கல்விக் கூட்டமைப்பு,
                        சாந்தி நிலையம்,
                        10 விஸ்வலிங்கம் தெரு,
                        விழுப்புரம் - 605 602,

                        செல்:   94433 28740
                                      94426 22970


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக