செவ்வாய், பிப்ரவரி 15, 2011

குரு சீடனிடம் அன்பைப் பொழியும் கடிதங்கள்

குரு சீடனிடம் அன்பைப் பொழியும் கடிதங்கள்
      - மு. சிவகுருநாதன்







(பவுத்த அய்யனார் தனக்கு சுந்தர ராமசாமி எழுதிய 200 கடிதங்களை ‘சுந்தர ராமசாமியின் கடிதங்கள்’ என்று தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கிறார்.  அந்நூல் குறித்த ஒரு விமர்சனப் பதிவு)
           வாழ்நாள் முழுவதும் ஒரு எழுத்தாளனுடன் தங்கி குருகுல வாழ்க்கை மேற்கொள்ளும் நினைப்புடன் சுந்தரராமசாமியை சந்தித்து திரும்பிய அய்யனார் 1986 முதல் சுரா மரணமடையும் 2005 வரை பல நூறு கடிதங்கள் மூலமும் நேரிலும் தனது உறவைத் தொடர்ந்திருக்கிறார்.23 வயதில்  தொடங்கிய சந்திப்பில் சுரா காட்டிய மதிப்பும் அன்பும் கருணையும் இறுதி வரையிலும் தொடர்ந்திருக்கிறது.  இதை எழுத்தாளன் - வாசகன், தந்தை - மகன், தோழன் என்ற நிலையை விட குரு - சீடன் என்ற உறவு நிலை நிலவியதாகவே நாம் இந்த கடிதங்களினூடாக அவதானிக்க முடிகிறது.

            ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், சாதி, மதம் இப்படி எதையும் பார்க்காமல் அனைவரிடமும் ஒரே விதமான அன்பைப் பொழியும் சுராவின் நினைவை என்றும் பாதுகாக்க அவர் இறந்த பிறகு ஒரு வேஷ்டி, சட்டையை  வாங்கி வந்து பத்திரப்படுத்தும் உறவை தந்தை - மகன் உறவு என்று கூட சொல்ல வாய்ப்புண்டு.  அதற்கு மேலான தோழமையை இங்கு காண முடியவில்லை. 

            தமிழ்ச் சூழலில் எளிய வாசகனான அய்யனாருக்கு, எழுத்தாளன் என்பவன் சாதாரண மனிதனிலிருந்து  உசத்தி என்பதிலிருந்து மீள முடியவில்லை.   எனவே, எழுத்தாளனை ஓடி ஓடி சந்திப்பதும், கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதும், கடிதம் எழுதுவதும் நேர்காணல் எடுப்பதும் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.  இதே மாதிரியான எண்ணத்தைத்தான் எழுத்தாளரான சுராவும் கொண்டிருந்தது வியப்பில்லைதான்.

             புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்கள் வெளியிடப்பட்டு நூலானது.  கல்யாண்ஜி, கி. ராஜநாரயணன், கு. அழகிரிசாமி போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் கடிதங்கள் நூலாக்கம் பெற்றிருக்கின்றன.  அ. மார்க்ஸ்-க்கு டேனியல் எழுதிய கடிதங்களை தனி நூலாக்கி வெளியிடப்பட்டது.  அதைப் போலவே இந்த நூலும் அய்யனாருக்கு சுரா எழுதிய கடிதங்களின் தொகுப்பாக உள்ளது.  ஒரே நபருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் என்பதால் ஒரே மாதிரியான விவரணைகள் மட்டுமே உள்ளன.  சுராவின் ஆளுமையை முழுவதுமாக இக்கடிதங்களின் ஊடே கண்டடைய வாய்ப்பில்லை.

            புதுமைப்பித்தன், கல்யாண்ஜி ஆகியோரின் கடிதங்கள் வெளியிடப்பட்டது பற்றி சுராவிற்கு நல்ல அபிப்ராயம் இல்லை.  அதில் பொது வி
­யங்கள் இல்லையென எளிதில் கடந்து போய்விடுகிறார்.  தனது மகன் கடிதங்களை வெளியிட வேண்டுமென சொன்னவுடன் உடனே ஒத்துக் கொள்கிறார். அவர்களின் கடிதங்களில் பொது வி­ஷயம் இல்லை என்று சொன்னவர் தன் கடிதங்களில் பொது வி­ஷயம் இருக்கிறதா என்று பார்க்க முயலவில்லை.

            இருவர் படத்தைப் பற்றி எழுதும்போது மொத்த விமர்சனத்திற்கு மேலாக அவர் (கலைஞர் மீதா அல்லது மணிரத்னம் மீதா! தெளிவில்லை.) முகத்தைத் தார் பூசிக்காட்ட வேண்டுமென்ற மனோபாவம் எனக்கு உவப்பாக இல்லை என்கிற சுரா தனது நினைவோடைகள் மூலம் பல ஆளுமைகளின் முகத்தில் தார்பூச என்றுமே தயங்கியதில்லை.  சுரா எப்போதுமே தனக்கென வகுத்துக் கொண்ட உண்மைகளை பிறருக்கும் உண்டென்பதை உணரத் தவறியவர்.  அவரது மதிப்பீடுகள் பல ஜனநாயகமற்றவை.   அதைத்தான் கண்ணன் காலச்சுவடு மூலம் மாதாமாதம் இன்னும் பல மடங்குகள்  அதிகமாக செய்து கொண்டிருக்கிறார்.

             சுரா அய்யனாரை மதிப்புரை, அனுபவக்குறிப்புகள்,  இறுதியாக நாவல் என தொடர்ந்து எழுத வலியுறுத்தி வருகிறார்.   மதிப்புரை எழுத, “ உங்களிடம் உண்மை இருக்கிறது.  பாரபட்சம் இல்லாமல் செயல்படும் மனம் இருக்கிறது.   விமர்சனத்துக்கு ஆதாரமான தூண்கள் இவை.” எனச் சொல்வதுடன் தமிழ்ச் சூழலில் ‘அறிவாளிகளிடம்’ உண்மையில்லை என்றும் தைரியமளிப்பதுடன் அதை தனக்கும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறார்.   இதில் சுரா சொல்லும் உண்மை எது என்பதில் சிலருக்காவது மாற்றுக் கருத்து இருக்கும்.

            முதல் கடிதத்திலிருந்து இறுதிக் கடிதம் வரை புத்தக அறிமுகம், படிப்பு, படித்ததைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கமான நலம் விசாரிப்புகள் என கடிதங்கள் நீண்டு கொண்டேயிருக்கின்றன.  புத்தகம் படித்தல், வேலை, திருமணம், சைக்கிள் வாங்குதல், அச்சுத் தொழிலைப் பரிந்துரைத்தல், முத்துவைச் சேர்தல் / பிரிதல் போன்ற எதுவானாலும் உடனுக்குடன் தகுந்த ஆலோசனைகளைச் சொல்லி உறவை வலுப்படுத்தவும் பாசத்தைப் பகிரவும் செய்கிறார்.  தன் கடிதத்தை எதிர்பார்க்காமல் அய்யனார் தொடர்ந்து எழுத வேண்டுமென ஆசைப்படுகிறார்.

             பெண்கள் ஆடிய பறையாட்டம் எனக்குப் புதிய செய்தி.  இந்த மண்ணுக்குரித்தான கலைகளைக் கூடப் பார்க்காமல் 63 வயதில் வந்து நிற்கிறேன் என்பது வெட்கத்தைத் தரும் வி­ஷயம்தான் என்றும் தமிழக கிராமத்தைப் பற்றிய என் கற்பனை அபத்தமானது என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க சுரா தவறவில்லை.   தான் உட்பட தமிழ் எழுத்தாளர்களின் சொல்லுக்கும் செயலுக்குமான முரண்பாடுகள் வினோதமானவை என ஒத்துக் கொள்ளும் சுரா பிறிதோரிடத்தில் கிராமம் எப்படி இருக்கிறது?  பாரதிராஜாவின் சினிமா போல் இருக்குமா? என்று கேட்கிறார்.

            குடும்பம், இலக்கியம், படிப்பு, தொழில் சார்ந்த வேலைப்பளு நிரம்ப இருப்பதையும் உடல் / மனம் சார்ந்த உபாதைகள், மருத்துவம் செய்து கொண்ட விவரங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதன் வாயிலாக ஒரு வித சுமையிறக்கம் அவருக்கு சாத்தியமாயிருக்கும் என்று தோன்றுகிறது.  சிறு வயதில் தன்னைப் பாதித்த இளம்பிள்ளை வாதம், இருதய நோய்க்கு நீண்ட காலமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரை மூலம் மூச்சுப்பைகளில் டாக்ஸின் பாதிப்பு, பேருந்து பயணத்தின் அவஸ்தை போன்ற உடல் சார்ந்த பிரச்சினைகளும் குடும்பம், தொழில் ஆகியவற்றால் ஏற்படும் மனம் சார்ந்த பிரச்சினைகளையும் இறக்கி வைக்க
அய்யனார் பயன்பட்டிருக்கிறார்.

            சுராவிற்கு சாவைப் பற்றிய சஞ்சலம் இருக்கிறது.   ஆனால் வேறு பல பயங்களுடன் ஒப்பிடும்போது இது குறைவானதுதான் என்று எழுதுகிறார்.    சார்வாகன் இறந்ததாக வல்லிக்கண்ணன் தவறுதலாக இரங்கல் குறிப்பு எழுத, எனக்கும் இறந்து போகாமல் இறந்து போய்  என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பதைத் தெரிவிக்கிறார்.  இந்த ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஆசையாக இருக்கிறது.  2003 சென்னைப் புத்தகக் கண்காட்சி பெற்ற வரவேற்பினால் எனக்கு ஆயுள் ஐந்து வருடங்களாவது கூடியிருக்கும் என்றும் எல்லாவிதமான கஷ்ட நஷ்டங்களை அனுபவித்த நான் வறுமையை மட்டும் இன்னும் அனுபவிக்கவில்லை.   இன்னும் 25 அல்லது 30 வருடங்கள் ஆயுள் இருந்தால் எதுவும் வரலாம் என்றும் விருப்பப்படுகிறார். 

            கனிமொழி அரசியலுக்கு வரக்கூடாது என்றும் விரும்பும் சுரா சல்மா மந்திரியாவார் என்று கணிப்பதுடன் தனக்கும் மந்திரி சபையில் இடமளித்து மனநல மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றின் பொறுப்பைத் தந்தால் சிறப்பான சாதனைகள் செய்வேன் என சல்மாவிடம் கூறியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.  (சல்மா இன்று தேர்தலில் தோற்ற காரணத்தால் அமைச்சராக முடியாமல் போனாலும் அமைச்சருக்கு நிகரான பதவியில் இருக்கிறார்)

            இனி, புதுயுகம் பிறக்கும், சுபமங்களா போன்றவை நின்று போகிற வருத்தம் சுராவிற்கு உண்டு.  தன்னுடைய காலச்சுவட்டை சிறப்பாகக் கொண்டுவருவதற்கு அவர் செய்யும் முயற்சிகள் பல கடிதங்களில் வெளிப்படுகிறது.   ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு தன் மகனான கண்ணன் சொத்து வாரிசு மட்டுமல்ல; இலக்கிய வாரிசும் கூடத்தான் என்பதை அவர் கண்டடைகிறார்.  தம் மகனைப் பற்றிய உயர்வான பிம்பத்தை பல கடிதங்களில் கட்டமைக்கிறார். 

            கண்ணனை சார் என்று அழைக்காமல் உரிமையோடு கண்ணா என்று அழைக்க வேண்டும் என்று விரும்பும் சுரா, காலப்போக்கில் கண்ணனது பணிகள் நிலைப் பெற்று தமிழ்ச் சமுதாயத்தைப் பாதிக்கும் என்பதை உறுதியாக நம்புகிறார்.   இப்பொழுதும், இனியும் கண்ணன் வெளியிட இருக்கும் புத்தகங்களில் ஒன்று கூட நான் வெளியிட நினைத்தவை அல்ல.  கண்ணன் தேடிப் படித்து வெளியிடுகிறான் என்றும் இரண்டு காதுகளிலும் இரண்டு போன்களை வைத்துப் பேசக்கூடிய காலம் அவனை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் போது பெருமிதம் பீறிடுகிறது. 

            ஜெயா டி.வி.யில் வெளியான அய்யனார் பேட்டியைப் பற்றி எழுதும்போது, “என் பெயர், கண்ணன், காலச்சுவடு ஆகிய பெயர்களைக் கூறுவதை சற்று குறைத்துக் கொண்டிருக்கலாம்.  நீங்கள் யதார்த்தமாக பேசுகிறீர்கள்.  சூழல் அப்படியில்லையே?” என்று வருத்தப்படுகிறார்.  தமிழ் இனி, காலச்சுவடு சம்பந்தப்பட்ட காரியங்களையெல்லாம் கண்ணன் கவனித்துக் கொள்ளட்டும் என்று  முடிவு எடுக்கிறார்.  கண்ணனுக்கு எதிராக அய்யனாரை மாற்ற சிண்டு முண்டு முடிகிறவர்கள் சென்னையில் இருப்பதைக் கண்டு எச்சரிக்கை செய்கிறார். 

                       வெளி வேலைகளில் ஏற்பட்ட நெருக்கடிகளையெல்லாம் சுராவிடம் விலாவாரியாக பகிர்ந்து கொண்டிருந்த அய்யனார், 2002இல் உலகத் தமிழ் மற்றும் காலச்சுவடு இதழ்ப்பணிக்காக கண்ணனிடம் சேர்ந்தபோதும் 2005 பிப்ரவரியில் வெளியேறிய போதும் ஏற்பட்ட சங்கடங்களைப் பகிர்ந்து கொண்டதில்லையாம்.  எனவே இதுபற்றிய சுராவின் நிலைப்பாடு தெரியாமற்போய் விட்டது.  கண்டிப்பாக மகனுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருக்கமாட்டார் என்று நம்பலாம்.

            வல்லிக்கண்ணன், சிவசங்கரன், பிரமிள், ஞானக்கூத்தன், மாலன், சுஜாதா, சா. கந்தசாமி, நகுலன், நீல. பத்மநாபன், அ. மார்க்ஸ் போன்ற பலரும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் என்னை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்படும் சுரா இவர்களைப் பற்றி மோசமாக எழுத எப்போதும் தயங்கியதில்லை.   அதற்கு இத்தொகுப்பிலிருந்தே பல உதாரணங்களைக் காட்ட முடியும். 

            ஞானக்கூத்தனின் ‘கவிதைக்காக’ நூலில், தனக்கு வேண்டியவர்களை அவர் தூக்கும் விதத்தைச் சொல்லிவிட்டு, நான் அறிந்திராத பல வி­யங்களை அவர் கற்றிருக்கிறார் என ஞானக்கூத்தனைக் கிண்டல் செய்கிறார்.   பிரமிள் ரவிசுப்ரமணியன் பற்றி உயர்வாக சில அபிப்ராயங்களைச் சொன்னதாக கண்ணன் கூறக் கேட்டும், பிரமிள், அநேகமாக அப்படியெல்லாம் எழுதியிருக்கமாட்டார் என்று முடிவு செய்கிறார்.

            அசோகமித்திரனின் ‘மானசரோவர்’, ஆ. மாதவனின் ‘தூவனம்’ ஆகியவற்றைப் படித்துவிட்டு, தரமான எழுத்தாளர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்படி எழுதுகிறார்களே என்று வருந்தி, நாமும் நமக்குத் தெரியாமல் இந்த வகையாக எழுதத் தொடங்கி விடுவோமோ, என்று கவலையும் கொள்கிறார்.   அசோகமித்திரனைப் பாராட்டித்தான் பேசினேன் என்று சொல்லி அதற்குள் பொடி வைத்து பேசும் கலை சுராவிற்கு மட்டுமே  வாய்க்கப்பெற்றது. 

            தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’ நாவலை வெங்கட்சாமிநாதன் பாராட்டும் போது ஏமாற்றமடைந்து அந்நாவலில் ஒன்றுமே இல்லை என்கிறார்.  அதைப் போலவே பாமாவின் ‘கருக்கு’ முக்கியமான படைப்புத்தான், சில குறைகள் இருந்தாலும்..... என்று இழுக்கிறார்.  நாவல் என்பது ஆற்றல் மிகுந்த தனியான கலை உருவம்.  அந்த ஆற்றலை அலட்சியம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்.   இந்த எச்சரிக்கை பாமா, சிவகாமி உள்ளிட்ட தலித் எழுத்துக்களும் பிற நவீன எழுத்து வகைக்குமென நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.  தனக்கு கிராம வாழ்க்கை தெரியாது என ஒத்துக்கொள்ளும் சுரா சிவகாமியின் ‘ஆனந்தாயி’ நாவலுக்குத் தேவையான பல வலுக்கள் இருந்தும் நல்ல நாவலாக நிமிரவில்லை என்று கறாரான விமர்சனம் செய்கிறார்.  இதைப் போலவே தமிழவனின் நாவல் நாவலாக உருப்பெறவில்லை என்கிறார்.

                        ஆனால் தன்னுடைய எழுத்தின் மீது சுராவிற்கு அபரிமிதமான நம்பிக்கை இருக்கிறது.  தன்னுடைய மதிப்புரைகள் உண்மைகளை மட்டும் பேசுவதாக திடமாக நம்புகிறார்.  தனது இலக்கியத் தரத்திற்கு காலச்சுவடே அவருக்கு உரைகல்லாக இருக்கிறது.  
அய்யனாரின் கட்டுரைகள் காலச்சுவடு தரத்தை எட்டவில்லை.   கணையாழி தரத்திற்கு இருக்கிறது என்று சொல்லி நல்ல இலக்கியத்திற்கான ‘அக்மார்க்’ முகவராக தன்னை நிறுத்திக் கொள்ள பெரும் பிரயத்தனம் செய்கிறார்.

            பிறர் மீது தான் வைக்கும் எவ்வித விமர்சனங்களையும் ஏற்க வேண்டும் என்று விரும்பும் சுரா தன்னுடைய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், உரைகள் போன்றவற்றின் மீது சிறு விமர்சனம் செய்வதையும் ஏற்றுக் கொள்ள அவரது மனம் விரும்பவில்லை.

            தரவுகளை நினைவு வைத்துக் கொள்ளும் நரம்பு என் மூளையில் சுத்தமாக இல்லை என்று சொல்லி தனது மறதிகளை நியாயப்படுத்தும் சுரா இலக்கிய மதிப்பீடு சார்ந்த அபிப்ராயங்களில் வெளிப்படும் முரண்பாடுகளைப் பார்க்கும் மூளை நரம்பு அய்யனாருக்கும் தனக்கும் இருப்பதை அறிந்து கொள்ளும் அவர் தன் படைப்புக்களின் முரண்களை அறிய மறுத்ததுதான் மிகப் பெரிய சோகம்.

             அ. மார்க்ஸ் தொடர்ந்து என் கருத்துகளைத் திரித்துக் கூறி வருகிறார்   அதை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்குத் தெரியவில்லை என சுரா வருந்துகிறார்.  ஆனால் அவரது மகனான கண்ணன் இதைத்தான் இன்றுவரை தொழிலாகக் கொண்டுள்ளார்.

            நம்பகமான மருந்துக் கடையை தெரிந்து கொள்ள அளிக்கும் ஆலோசனையாகட்டும் அய்யனார் தம்பதிகளின் புகைப்படத்தில் அய்யனார் தொப்பியுடன் நவீன உடையணிந்து இருக்க வேண்டும் என்பதலாகட்டும் திருமணத்தில் எந்தவிதமான தொப்பி வைத்துக் கொள்வீர்கள்? என்று கேட்பதிலாகட்டும், டி.வி.எஸ். 50இல் வாகன நெரிசலில் வெட்டி வெட்டி திறமையாக அய்யனார் செல்வதைக் கற்பனை செய்வதிலாகட்டும் சுரா ஒரு குழந்தையாகிவிடுகிறார்.

             தோசை மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்.   ஓட்டல் தோசை தோசையின் பிணம் என்கிறார்.   தோசை என்றைக்கு வெறுக்கிறதோ அதற்கு மறுநாள் நான் இறந்து போய் விடுவேன் என்று நினைப்பதாக எழுதுகிறார்.    இந்த வகையில் சுராவின் சில முகங்களை இத்தொகுப்பு நமக்குக் காட்டுகிறது. 

             இறுதியாக, “தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது என்பது ஒரு விதி.   இடம், சந்தர்ப்பம் பார்த்தாவது செய்யத் தெரியவேண்டும் என்பது மற்றொரு விதி.   இந்த இரண்டாவது விதியையாவது நீங்கள் பின்பற்ற வேண்டும்.  நான் முதல் விதியைப் பின்பற்றுபவன் அல்ல.” என்று தன்னைப் பற்றி சொல்லும் சுரா தன்னைத் தவிர அனைவரும் முதல் விதியைப் பின்பற்ற வேண்டுமெனவும் தன்னையும் தனது படைப்புக்களையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகவும் நினைத்து, வாழ்ந்து முடித்த ஒரு படைப்பாளியாகவே தெரிகிறார். 

பின்குறிப்பு:

            நூலில் ஏராளமாக எழுத்துப் பிழைகள் மலிந்துள்ளன.   சரி செய்திருக்கக் கூடாதா?  தெரியாத சில பெயர்களைப் பற்றிய குறிப்புகள் தேவை.   கனிமொழி மக்களவை உறுப்பினர் அல்ல.   மாநிலங்களவை உறுப்பினர்.

சுந்தரராமசாமியின் கடிதங்கள் (தொ) - பவுத்த அய்யனார்.  

பக். 272, டிசம்பர் 2010, விலை ரூ. 150

வெளியீடு:


                        மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ்,
                        3/363, பஜனை கோவில்தெரு,
                        கேளம்பாக்கம், சென்னை - 603 103
                        செல்: 9688086641.

                   e-mail: ayyapillai@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக