ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்
- மு. சிவகுருநாதன்
திருவாரூர் மாவட்டம் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தியானபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கெளசிகன் (15) நேற்று (27.02.2012) மதிய உணவு இடைவேளையின்போது பியர் குப்பிகள் வாங்கிக் கொண்டு சைக்கிளில் செல்லும்போது அப்பாட்டில்கள் வெடித்துச் சிதறி அம்மாணவன் மாண்டு போயுள்ளான்.
சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் வகுப்பறையிலேயே ஆசிரியையைக் கொலை செய்த நிகழ்வை ஊடகங்கள் பெரும் விவாதப் பொருளாக ஆக்கியுள்ள சூழலில் திருவாரூரில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதெல்லாம் 1 லி., 2 லி. என பிளாஸ்டிக் பாட்டில்களில் கோக்கோ, பெப்ஸி ஆகியவை வராத காலம் என்று நினைக்கிறேன். கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு 300 மிலி பெப்ஸி பாட்டில்களை 10 க்கு மேல் குடித்தவுடன் ஓர் மாணவர் மயங்கி விழுந்து இறந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.
நமது உடலில் - ரத்தத்தில் உள்ள கார்பன் - டை - ஆக்ஸைடு குறிப்பிட்ட அளவை விட தாண்டக் கூடாது என்ற பால பாடம் கூட கல்லூரி மாணவர்களுக்குத் தெரியாமற் போனதுதான் வேதனை. நமது கல்வி முறை ஏட்டுக் கல்வியையும் நடைமுறை வாழ்க்கைப் பயனுடைமையையும் இணைக்காமற் போனதும் ஒரு காரணம்.
இதைப் போலவே சோடா, பியர் போன்ற பானங்களில் கார்பன் - டை - ஆக்சைடு அதிக அழுத்தத்தில் இருக்கும் என்பது தெரியாமற் போனது ஏன்? கிரிக்கெட் மோகத்திற்கு அடிமையாயிருக்கும் நமது இளைய சமுதாயம் கிரிக்கெட் மைதானங்களில் பீச்சியடிக்கப்படும் புட்டிகளுக்கும் அடிமையாக மாறியிருக்கிறது. இவர்களுக்கு ஏன் அவ்வாறு பீய்ச்சி அடிக்கிறது என்பதற்கான அறிவியல் காரணங்கள்தான் எட்டுவதில்லை.
இம்மாணவனின் இறப்புக்குப் பின்னாலுள்ள அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகளை ஆய்வு செய்ய வேண்டிய சமூக அக்கறை உடைய அனைவரின் கடமையும் பொறுப்புமாகும்.
ஒன்பதாம் வகுப்பு என்பது பள்ளி மாணவர்கள் பியர் குடிக்கப் பழகத் தொடங்கும் பருவமாகும். இந்த மட்டுமல்லாது சிகரெட், பான் பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை மற்றும் போதைப் பொருட்களையும் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இத்தகைய பொருட்களை 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று சட்டமிருக்கிறது. இந்த அறிவிப்பைக் கூட ஒவ்வொரு பெட்டிக் கடையிலும் காண முடியும்.
இந்த விதிமுறை அரசு கடைகளுக்கு (TASMAC- TAMIL NADU STATE MARKETING CORPORATION LIMITED ) பொருந்தாமற் போன காரணம் என்ன? இந்த மாணவன் இறப்புக்குக் காரணமான டாஸ்மாக் ஊழியர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமலிருக்க அரசோ,சமூகமோ என்ன மாதிரியான எதிர்வினையாற்றப் போகிறது? இதெல்லாம் எதிர்பார்ப்பது நமக்கு பெருத்த ஏமாற்றமாகவே முடியும்.
இந்த விதிமுறை அரசு கடைகளுக்கு (TASMAC- TAMIL NADU STATE MARKETING CORPORATION LIMITED ) பொருந்தாமற் போன காரணம் என்ன? இந்த மாணவன் இறப்புக்குக் காரணமான டாஸ்மாக் ஊழியர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமலிருக்க அரசோ,சமூகமோ என்ன மாதிரியான எதிர்வினையாற்றப் போகிறது? இதெல்லாம் எதிர்பார்ப்பது நமக்கு பெருத்த ஏமாற்றமாகவே முடியும்.
இறந்த இம்மாணவன் பள்ளிச் சீருடையில் டாஸ்மாக் சென்று இந்த மதுப்புட்டிகளை வாங்கியுள்ளான். அங்குள்ள அரசு ஊழியர்தான் இதை அவனுக்கு விற்றுள்ளார். 'வயது வந்தோருக்கு மட்டும்' (A - ADULTS ONLY) சான்று பெற்ற இந்திய - தமிழ்த் திரைப்படங்களைக் குழந்தைகள் பார்க்க எவ்விதத் தடையுமில்லை. ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் ஈழத்தமிழர் ஒருவர் இத்தகைய ஒரு தமிழ்ப் படத்தை குழந்தைகளுடன் சென்று பார்க்க அனுமதிக்காமல் திருப்பியனுப்பியதை தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த IMFL (Indian Made Foreign Liquor) மதுக்கடைகளை நடத்தும் (TASMAC) தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு லாட்டரிக்கு தடை விதித்தது போல பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருள்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் இவ்வுத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் இல்லையெனத் தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம்.
மாறி மாறி தமிழகத்தை ஆளும் இரண்டு திராவிடக் கட்சிகளும் மதுவிலக்கை அமல் செய்வதில்லை என்பதில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். மதுவிலக்கு அமல் செய்யப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகும் என்று சொல்லும் இவர்கள் பனை, தென்னை மரங்களிலிருந்து இயற்கையாகப் பெறப்படும் கள் எனும் போதை பானத்தையும் தடை செய்திருக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் அடிக்கடி கள்ளச்சாராய சாவுகள் நடந்த வண்ணமே உள்ளன. தமிழக காவல்துறைக்கு இதில் பெரும்பங்கும் வருவாயும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. டாஸ்மாக்கின் IMFL சரக்குகளி ல் போலி, கலப்படம் இல்லையென்று அரசால் உறுதி கூற முடியாது.
புதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம், கடலூர், காரைக்காலை ஒட்டியுள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புதுச்சேரி தயாரிப்பு சாராயம் ஆறாக ஓடுகிறது. அத்துடன் IMFL-ன் போலித் தயாரிப்பு ஆலைகள் இருக்கின்றன. இந்த போலி சரக்குகள் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளிலும் விற்பனையாகிறது.
குடி நல்லதா கெட்டதா என்ற விவாதங்கள் ஒரு புறமிருக்க இன்றைய யதார்த்த சூழலை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டாக தமிழக அரசு மது விற்பனை வருவாயை மட்டும் நம்பி செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. அரசு கள்ளை அனுமதிக்கவோ அல்லது மதுவிலக்கை அமல்படுத்தவோ செய்யவோ தயாராக இல்லை. காரணம் இதன்மூலம் கிடைக்கும் அபரிமிதமான வருவாய்ப் பெருக்கமே.
மேலை நாகரிகம் மோசமானது என்று நம்மூர் அடிப்படைவாதிகள் சொல்லிக் கொண்டிருந்தாலும் குடிப்பது உள்ளிட்ட சில செயல்களுக்கு, அந்த நாடுகளில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனின் மகள்கள் பார் சென்று மது அருந்தியதற்கு அபராதம் விதிக்கப்பட்ட செய்திகளை நாம் அறிவோம்.
நமது நாட்டில் மட்டும் கட்டாயக் கல்வி, குழந்தைத் தொழிலாளர்கள் போன்றவற்றில் வயது நிர்ணயம் பல்வேறு குளறுபடிகளை உள்ளடக்கியதாக உள்ளது. 14 வயது வரை கட்டாயக் கல்வி என்றும் 16 வயது வரை மட்டுமே குழந்தைத் தொழிலாளர் என்றும் சொல்வது மிகவும் மோசமான ஒன்று. 18 வயது பூர்த்தியடையாத வரை குழந்தையாகவே கருத வேண்டும்.
புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, உள்ளூர் திருவிழாக்கள், பள்ளி ஆண்டு விழாக்கள், கல்வி உதவித்தொகை பெரும் நாட்கள் போன்றவை பள்ளி மாணவர்களின் கொண்டாட்டத்திற்குரியதாக மாறி விட்டது. இத்தகைய விழாக்களின் மூலம்தான் மாணவர்கள் முதன் முதலாக ஆல்கஹாலை சுவைக்கத் தொடங்குகின்றனர். இவர்கள் இவைகளை வாங்குவதற்கும் நுகர்வதற்கும் சமூகத்தில் எவ்வித தடைகளும் இருப்பதில்லை.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்கள் விடுமுறை நாட்களில் பல்வேறு பணிகளுக்குச் செல்கின்றனர். அதன் மூலம் சொற்ப வருவாய் அவர்களுக்குக் கிடைக்கிறது. இத்தகைய பணத்தினால்தான் மது நுகர்வு அவர்களுக்கு சாத்தியமாகிறது.
தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு முறை சொன்னது போல மிகக் குறைந்த தயாரிப்புச் செலவு கொண்ட இந்த சரக்குகளை அதிக விலைக்கு விற்று நமது அரசு லாபம் ஈட்டுகின்றன. இந்த கொள்ளை லாபத்தில்தான் தமிழக அரசு இலவசத் திட்டங்களை போட்டிப் போட்டுக்கொண்டு அறிவித்து செயல்படுத்துகின்றன. இந்த வருவாயில் ஒரு சிறிய தொகையைக் கூட மதுவின் தீமைகளை பரப்புரை செய்ய அரசு செலவிடுவதில்லை. மது வீட்டுக்கும் நாட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று மதுப்புட்டிகளில் அச்சிடுவதோடு அரசின் பணி முடிந்து விடுகிறது. எய்ட்ஸ் , புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் துளி கூட மதுவுக்கு எதிராக நடத்தப்படுவதில்லை. தமிழக அரசு தனது வருவாயை இழக்க விரும்பாததுதான் காரணம்.
அரசு கடைகளைத் திறந்து வைத்துவிட்டு இலக்கு நிர்ணயம் செய்து விற்பனையைப் பெருக்கும் வழிகளைத்தான் தேடுகிறதே தவிர மதுவின் தீமைகளை பரப்புரை செய்ய மறுக்கிறது. மதுவிலக்கையும் அமல் செய்யவும் போவதில்லை. இந்த மாதிரியான இறப்புக்களைத் தவிர்க்க அரசு குறைந்தபட்சம் இதையாவது செய்யலாம்.
01. பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் போதைப் பொருட்கள் அரசு, தனியார் என்று எந்தக் கடைகளிலும் விற்பனை செய்யாமலிருக்க நடவடிக்கை தேவை.
02. மதுவின் வருவாயை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கி மதுவுக்கு எதிரான பரப்புரை செய்யவும் மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் செலவிடுதல் வேண்டும்.
03. பள்ளி மாணவர்களுக்கு உளவியல் மருத்துவர்களைக் கொண்டு உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும்.
04. ஆல்கஹால் போன்று உடலுக்கு அதிகம் தீங்கு செய்யாத பனை, தென்னை மரக் கள்ளுக்கு அனுமதி வழங்கலாம்.
இதைச் செய்ய எந்த அரசும் முன் வருமென்று நமக்குத் தோன்றவில்லை. எனவே அரசு இதையாவது செய்யலாம். குடிமக்கள் அனைவருக்கும் எப்படிக் குடிப்பது என்பது குறித்த பயிற்சி அளித்தலே அது.
சளி, இருமல் மருந்துகளில் கூட வயதுக்குத் தகுந்த அளவு, எப்படி உபயோகிப்பது என்ற குறிப்பு இருக்கும். ஆனால் IMFL போத்தல்களில் எச்சரிக்கை வாசகம் மட்டுமே காணப்படுகிறது. இது ஏன்?
வழக்கமாக அரசின் டாஸ்மாக் கடைக்குச் செல்லும் குடிமகன் ரூ. 70க்கு அங்கு வாங்கும் மிக மோசமான, கலப்படம் நிறைந்த அல்லது போலியாக தயாரிக்கப்பட்ட சரக்கை வாங்கி தண்ணீர் கூட கலக்காமல் அப்படியே குடித்து விடுகிறான். அடுத்த சில நிமிடங்களில் அவர்களால் சில மீட்டர் தூரமே நடக்க முடிகிறது. பின்பு அவர் மயங்கி சாலையோர சாக்கடையில் விழுந்து விடுகிறார். பல மணி நேரம் கழித்து போதை தெளிந்துதான் அவரால் வீட்டுக்குச் செல்ல முடியும். ஏனிந்த நிலை?
சாராயத்தை விற்கும் அரசு அதைக் குடிக்கும் முறைகளைச் சொல்லித் தருவதில் தவறில்லை. இல்லையென்றால் மதுவிலக்கை அமல் செய்யட்டும். பள்ளி, கல்லூரிகளில் சாராயத்தில் உள்ள வேதிப் பொருட்கள், அது நமது உடலுக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை உண்டு பண்ணுகிறது, அதை எப்படி, எவ்வளவு உபயோகிப்பது என்று கூட சொல்லித் தரலாம்.
வேதியியலில் மெத்தனால், எத்தனால் பற்றி வருகிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அவற்றை உட்கொள்ளும் போது நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள், எவ்வளவு அளவு, எந்த முறையில் எடுத்துக் கொள்வது குறித்த பயிற்சிகள், வழிமுறைகள் அதில் இருப்பதில்லை.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் இன்டேன் சிலிண்டர்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் நாம் பியர் பாட்டிலை எப்படித் திறப்பது, எப்படி எடுத்துச் செல்வது, பல்லால் கடித்துத் திறக்கக் கூடாது என்று சொல்வதில் தவறென்ன இருக்கிறது?
இதைப்படிக்கும் போது சிலர் கோபமடையலாம். அமைதியாக யோசியுங்கள். பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் தனியாரை நடத்தச் சொல்லிவிட்டு மதுக்கடைகளை மட்டும் அரசே நடத்தும் நிலையில் நாம் வேறு என்னதான் செய்ய முடியும்?
5 கருத்துகள்:
நல்ல கட்டுரை!
சிந்திக்க வைக்கும் பல விஷயங்கள் இருந்தாலும் கீழ்கண்ட கருத்தில் மட்டும் நான் உடன்பட முடியவில்லை
//02. மதுவின் வருவாயை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கி மதுவுக்கு எதிரான பரப்புரை செய்யவும் மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் செலவிடுதல் வேண்டும்.//
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
மிக நல்ல கட்டுரை. ஆழ்ந்த கருத்துக்கள்.
"மாறி மாறி தமிழகத்தை ஆளும் இரண்டு திராவிடக் கட்சிகளும் மதுவிலக்கை அமல் செய்வதில்லை என்பதில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். "
தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தால் ஒழிய இப் பேய்களிடமிருந்து தமிழக மக்கள் தப்ப முடியாது.
"தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு முறை சொன்னது போல மிகக் குறைந்த தயாரிப்புச் செலவு கொண்ட இந்த சரக்குகளை அதிக விலைக்கு விற்று நமது அரசு லாபம் ஈட்டுகின்றன."
இவர் கோவைக்கருகில் சிவா டிஸ்டிலிரிஸ் என்ற பீர் கம்பெனியைத் தொடங்கியவர் தானே! இவருக்கு மது விலக்கைப் பற்றிப் பேச சற்றும் தகுதி இல்லாதவர்.
அன்புத்தோழர் கரிகாலன்!
வணக்கம்.
நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு அற மதிப்பீடுகள் உண்டு.ஆனால் ராஜகத்திற்கு அறம் (ethics) கிடையாது. அவர்களுக்கு நாய் விற்ற காசு குறைக்காது ; கருவாடு விற்ற பணம் நாற்றமடிக்காது.
சீரழிவு சக்திகளான சினிமா,கிரிக்கெட் எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களில் தோன்றுவதை நம்மால் மவுனமாகப் பார்க்கத்தானே முடிகிறது.
மதுவின் வருமானம் வேறு காரியங்களுக்கு செல்வதைவிட இந்த விழிப்புணர்வு பரப்புரைகளுக்கும் மருத்துவ வசதிகளுக்கும் பயன்பட்டால் என்ன குறைந்துவிடப்போகிறது?
எனது பதிவைப் படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
அன்புடன்...
மு.சிவகுருநாதன்
அன்புத்தோழர் கரிகாலன்!
வணக்கம்.
நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு அற மதிப்பீடுகள் உண்டு.ஆனால் ராஜகத்திற்கு அறம் (ethics) கிடையாது. அவர்களுக்கு நாய் விற்ற காசு குறைக்காது ; கருவாடு விற்ற பணம் நாற்றமடிக்காது.
சீரழிவு சக்திகளான சினிமா,கிரிக்கெட் ஆட்கள் எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களில் தோன்றுவதை நம்மால் மவுனமாகப் பார்க்கத்தானே முடிகிறது.
மதுவின் வருமானம் வேறு காரியங்களுக்கு செல்வதைவிட இந்த விழிப்புணர்வு பரப்புரைகளுக்கும் மருத்துவ வசதிகளுக்கும் பயன்பட்டால் என்ன குறைந்துவிடப்போகிறது?
எனது பதிவைப் படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
அன்புடன்...
மு.சிவகுருநாதன்
அன்புத்தோழர் செந்தில்!
வணக்கம்.
தாங்கள் அளித்த தகவலுக்கு மிக்க நன்றி.
எனது பதிவைப் படித்து கருத்து சொன்னதற்கு மீண்டும் நன்றிகள்!
அன்புடன்...
மு.சிவகுருநாதன்
கருத்துரையிடுக