வெள்ளி, அக்டோபர் 07, 2016

தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் ரத்து: சில கருத்துகள்


தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் ரத்து: சில கருத்துகள்

- மு.சிவகுருநாதன்



                பல்வேறு குளறுபடிகள் காரணமாக இம்மாதத்தில் நடைபெறவிருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் நேற்று (அக். 04) உத்தரவிட்டுள்ளார். குளறுபடிகளுள் ஒன்று பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப் படவில்லை என்பது.


            அ.இ.அ.தி.மு.க. வும் தி.மு.க. வும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தை தங்கள் வீட்டுச் செல்லப் பிராணிகள் போல் வைத்துக்கொண்டுள்ளது. அதிகாரிகளும் தங்களது நன்றிக்கடனைச் செலுத்த போட்டி போடுகின்றனர். முன்பு இருந்த ஒரு தேர்தல் ஆணையர் ஓய்வுபெற்றவுடன் அ.இ.அ.தி.மு.க. வில் இணைந்து பதவி பெற்றது பழங்கதை.


             ஒப்பீட்டளவில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஓரளவிற்கு சுதந்திரமாகச் செயல்படுகின்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற பல தேர்தல்கள் மூலம் இதன் மீது பெருங்கறை படிந்துள்ளது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அளவிற்கு மோசமில்லை என்று சொல்லிக்கொள்ளலாம். இதை ஏன் சுயேச்சையான ஆணையமாக மாற்றியமைக்கக் கூடாது? திருடர்கள் வீடு பூட்டப்படுவதை விரும்ப மாட்டார்கள் தானே!


             தமிழ்நாட்டிற்கு இன்னொரு பெருமையும் உண்டல்லவா? கர்நாடகத்தில் கூட லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டு ஊழல்கள் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன. தமிழகத்தில் இதெல்லாம் நடக்குமா?  ஊழல், மோசடி, அதிகார போதை, டாஸ்மாக் எல்லாவற்றிலும் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள்  கொஞ்சநஞ்சமல்ல.


          இதில் இடஒதுக்கீடு மோசடியும் வருவதால் அதைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். அரசுப்பணிகளில் இடஒதுக்கீட்டில் பெரும் மோசடி நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) நடைபெற்ற இடஒதுக்கீட்டு மோசடியை இதே சென்னை உயர்நீதிமன்றம் சரியாக கையாளவில்லை. சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படும் ஒரு நீதிபதியை நம்பி ஏமாந்த கதையை நாடறியும்.


          69% இடஒதுக்கீடு தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. மீதமுள்ள 31% பொதுப்போட்டி (Open Catagory). அது இங்கே உயர்த்தப்பட்ட வகுப்பாருக்கான (Forward Caste) ஒதுக்கீடாக புரிந்துகொள்ளப் படுகிறது; மோசடி செய்யப்படுகிறது.
31% பொதுப் போட்டியில் தேர்வாகும் SC, ST, MBC, BC வகுப்பார் அவர்களுக்குரிய 69% இடஒதுக்கீட்டில் கணக்கு காட்டப்படும் மோசடி தொடர்ந்து அரங்கேறுகிறது. இதை அரசோ, நீதிமன்றமோ கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை.


          அதிகாரத்தில் இருக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான சக்திகள் இந்த மோசடியைத் துணிந்து செய்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் வரும்போது பலநேரங்களில் நீதிமன்றமும் இம்மோசடிக்குத் துணைபோகிறது. ஏதோ இம்முறை நல்ல உத்தரவு கிடைத்துள்ளது.
இடஒதுக்கீடு முற்றிலும் அமல் செய்யாத களங்கள் பலவுண்டு.


          வேலை வாய்ப்பில் மட்டுமல்ல; கல்வியிலும் இடஒதுக்கீடு அமலாக வேண்டுமல்லவா! +1 சேர்க்கையில் தமிழகத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப் படுவதேயில்லை. இதில் இடஒதுக்கீடு முழுதாக புறக்கணிக்கப்பட்டு பத்தாம் வகுப்பில் 450 க்கு மேல் பெற்றவர்கள் மட்டும் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவுகளைத் தேர்வு செய்யும் நிலை உள்ளது.


          புதிய கல்விக் கொள்கை - 2016 இன் அடித்தட்டு மக்களை வடிகட்டும் பாசிசத்தை எதிர்க்கும் நிலையில்,  இப்போதுள்ள சூழலிலேயே அடித்தட்டு மக்களின் குழந்தைகளை +1 கணிதம் மற்றும் அறிவியல் பிரிவுகளிலிருந்து வெளியேற்றும் நிலைமை இங்கு கண்டுகொள்ளப் படாமல் இருக்கிறது.


          இடஒதுக்கீட்டுக்கு எதிராக, சாதிய வன்மத்துடன் செயல்படும் அதிகார வர்க்க மோசடியாளர்கள் நிறைந்த உலகத்தை, எப்போது நாம் விடுவிக்கப் போகிறோம்? விளிம்பு நிலை மக்களுக்கு உரிய பங்கு கிடைப்பதில் உள்ள தடைகள் எப்போது தகர்க்கப்படும்? இது வெறும் ஏக்கமாகவே எஞ்சி நிற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக