02.
இப்படி
மொழிபெயர்க்க எவ்வளவு அறிவும் திறமையும் தேவைப்படும்?
- மு.சிவகுருநாதன்
நாமும் பாடநூல் பிழைகளைச் சுட்டிக்
காட்டிக்கொண்டே இருக்கிறோம். ஆண்டுதோறும் பாடநூற்களின் ‘திருத்திய பதிப்புகள்’
வெளியிடப்படுகின்றன. “மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும்”, என்பார்களே, அதைப்போல
பிழைகள் களையப்பட்ட பாடில்லை.
பாலை நிலமக்கள் முன்பு ‘கள்ளர்’ என்று எழுதிய
தவறை ‘கள்வர்’ தமிழ் வழியில் என்று திருத்தியபோதிலும், ஆங்கிலப் பதிப்பில்
இன்றும் ‘Kallar of Paalai’ (page: 14, 9 th social science, III rd semester, Corrected
Edition: 2016.) என்றே இருக்கக் காணலாம்.
இவ்வளவு காலமும் ‘பெயின்டராக’ இருந்த
ஹிட்லர் இவ்வாண்டேனும் ‘ஓவியராக’ மாறியதற்காக நாம் மகிழ்ச்சியடையலாம். நாகப்பட்டினம்
மாவட்டம் என்றிருந்த வடுவூர் பறவைகள் புகலிடம் திருவாரூர் எனவும், அதைப் போல கோடியக்கரை – தஞ்சாவூர் மாவட்டம்
என்றிருந்தது நாகப்பட்டினம் மாவட்டம் எனவும்
சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் நரிமணம் (பனங்குடி) பெட்ரோலிய சுத்திகரிப்பாலை
இன்னமும் திருவாரூர் மாவட்டத்தில்தான் உள்ளது!
கங்கைகொண்டான் வனவிலங்கு சரணாலயம்
திருவாரூர் மாவட்டத்தில் இருப்பதாக புதிதாக இணைத்திருக்கிறார்கள். இது என்ன
புதுக்கதை? திருநெல்வேலி மாவட்டத்தில் அல்லவா கங்கை கொண்டான் சரணாலயம் (மான்கள்)
உள்ளது. இதை எப்போது திருவாரூக்கு மாற்றினார்கள்? இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
நாம்
வலைப்பூவில் (06.02.2015) சுட்டியிருந்த மொழிபெயர்ப்புக் குளறுபடியைச்
சுருக்கமாகப் பார்ப்போம்.
“During
the age of tamil empires, the Bhakthi movement, the Nayanmars and Alwars
accommodated the Vedar, Putayar and Parayar as Bhakthas, yet did not argue for
their access to education, offices and temples",
(திருத்தப்படாத பாடநூலில்), இதன் தமிழாக்கம்
“பக்தி
இயக்கத்தின் போதும் சாதிப்பகுபாடு இல்லாமல் வேடர், புலையர்,
பறையர் போன்றவர்களையும் பக்தர்களாக ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஏற்றுக்கொண்ட போதிலும் அவர்களுக்கு கல்வி, கோயில்,
அரசுப்பணிகளில் உரிய பங்கினைத் தருவதற்கான கோரிக்கைகள் எழவில்லை”,
என்ற வரிகளில் இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள்? புலையர்
எப்படி Putayar என்றானது? பாடம்
முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது என்பது உறுதியாகிறது. அதிலும்
அவ்வளவு அபத்தங்கள், குளறுபடிகள்.
கண்ணப்ப நாயனார் (வேடர்),
நந்தனார் என்னும் திருநாளைப்போவார் (பறையர்/புலையர்), திருக்குறிப்புத் தொண்ட நாயனார் (வண்ணார்),
அதிபத்த நாயனார் (பரதவர்)
போன்ற நாயன்மார்களும் திருப்பாணாழ்வார் (பாணர்
– தலித்) என்ற ஆழ்வாரும் அடித்தள சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள்
பற்றிய புனைவுகளை உருவாக்கி பெரும் மக்கள் திரளை இந்துமதம் தக்கவைத்துக் கொண்டதுதான் வரலாறு. இவர்களை
எப்படி ‘அவர்களே’ ஏற்றுக்கொள்ள
முடியும்? சைவமும்
வைணவமும் ஏற்றுக் கொண்டாதாக சொன்னால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தெற்கு வாசல் ஏன் அடைபடவேண்டும்? தலித்கள்
போராடவே இல்லையா? இவர்கள்
தங்களுடைய கோரிக்கைகளை யாரிடம் வைத்திருக்க வேண்டும்?”,
(06.02.2015
அன்று எனது வலைப்பூவில் வெளியான பதிவின் ஒரு பகுதி. இணைப்பு கீழே)
http://musivagurunathan.blogspot.in/2015/02/blog-post_66.html
இக்குளறுபடியைச் சரி செய்வதாக நினைத்துக்
கொண்டு மீண்டும் இவர்கள் செய்த அட்டூழியத்தைப் பாருங்கள்.
“During the age of Tamil
Empires, the Bhakthi movement, the Nayanmars and Alwars accommodated all the
communities as Bhakthas”, (page: 14, 9 th social science, III rd semester, Corrected
Edition: 2016.)
“பக்தி இயக்கத்தின் போது சாதிப்
பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பக்தர்களாக ஆழ்வார்களும், நாயன்மார்களும்
ஏற்றுக் கொண்டனர்”, (பக். 16, 9 –ம் வகுப்பு சமூக அறிவியல், மூன்றாம் பருவம்,
திருத்தப்பட்ட பதிப்பு: 2016.)
“சமணம். பவுத்தம்
ஆகியவற்றுடன் அஜிவிகைசம் (Ajivikaism) என்றொரு சமயத் தத்துவம் கூறப்படுகிறது. இப்படியான
தத்துவம் உண்டா என்பதை எழுதியவர்கள்தான் விளக்கவேண்டும். புத்தரின்
சமகாலத்தவராக இருந்து அவரிடமிருந்து பிரிந்து சென்ற மற்கலி கோசலர் தோற்றுவித்த ஆசிவகம் (அஜிவகம்)
என்ற தத்துவப்பிரிவே இப்படி மாற்றிச் சொல்லப்படுவதாகத் தோன்றுகிறது”,
(06.02.2015 அன்று எனது வலைப்பூவில் வெளியான பதிவின் ஒரு
பகுதி.)
“Jainism, Buddhism and Ajiviaism made inroads into Tamil society during
Sangam age”, (page: 15, 9 th social
science, III rd semester, Corrected Edition:
2016.)
“சங்க காலத்தில் சமணம், பெளத்தம், அஜீவகைசம் போன்ற சமயத்தத்துவங்கள் தமிழ்ச்
சமுதாயத்தில் இடம் பிடித்தன,”
(பக். 17, 9 –ம் வகுப்பு சமூக அறிவியல், மூன்றாம்
பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016.)
ஆங்கிலத்தில் செய்த எழுத்துப்
பிழைகளை அப்படியே தமிழில் மொழிபெயர்க்கும் இந்தக் கொடுமையை என்னவென்பது?
பாடநூற்களிலுள்ள இத்தகைய மொழிபெயர்ப்புப்
புரட்டை தயவு செய்து அனைவரும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுகிறேன்.
இங்கும் தொடரலாம்:
மு.சிவகுருநாதன்
திருவாரூர்
https://twitter.com/msivagurunathan
பன்மை
மின்னஞ்சல்:
musivagurunathan@gmail.com
வாட்ஸ் அப்: 9842802010
செல்: 9842402010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக