40. காஷ்மீர் பிரச்சினையை நாம் எப்போது புரிந்துகொள்ளப்
போகிறோம்?
மு.சிவகுருநாதன்
(இந்நூல் என் வாசிப்பில்... தொடர்)
(இந்நூல் என் வாசிப்பில்... தொடர்)
எலி ஒழிப்பிற்கு ஒரு திட்டமுண்டு. கொல்லுகிற
எலிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊக்கத்தொகை உண்டு. அதற்காக கொல்லப்பட்ட எலிகளின் வால்களை
அறுத்து எண்ணிக்கை காட்டுவார்கள். அதைப்போல
காஷ்மீர் மக்கள் யாரை வேண்டுமானாலும் சுட்டுக்கொன்று, தீவிரவாதி முத்திரை குத்தி, ராணுவத்தினர்
பதவி உயர்வுகளும் பணப்பரிசும் பெறுவது வழக்கமாகவே ஆகிவிட்டது. இது எவ்வளவு பெரிய கொடுமை?
பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் தலைவர்கள்
சொல்வதே அப்படியே பலரது பொதுப்புத்தியில் ஏறிக்கிடக்கிறது. இந்த மாயைகளும் புனைவுகளும்
தகர்க்கப் படப்போவது எப்போது? காஷ்மீர் சிக்கலை உணர்ந்து நாம் முழுமையாக உணர்ந்து கொள்ளப்
போகிறோம்? அதற்கு இம்மாதிரியான நூற்கள் பெரிதும் உதவும். காஷ்மீர் குறித்த கரிசனம்,
தீர்வுகளை நோக்கிய அணுகல் என்பன அ.மார்க்சின் எழுத்துகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது.
1999 -ல் விடியல் பதிப்பகம் வெளியிட்ட வெ.கோவிந்தசாமி
மொழிபெயர்ப்பில் உண்மையறியும் குழுவினரின் அறிக்கைகள் ‘காஷ்மீர் – தொடரும் துயரம்’
நூல் வெளியானது. அதில் அ.மார்க்ஸ் நீண்ட முன்னுரை எழுதியிருப்பார். பின்பு 2008 –ல்
புதுவை கோ.சுகுமாரன் போன்றவர்களுடன் இந்திய அளவிலான உண்மையறியும் குழுவில் பங்கேற்றுத்
திரும்பிய பிறகு, ‘காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?’ என்னும் நூல் வெளிவந்தது.
தற்போது மிகச்சுருக்கமாக 9 தலைப்புகளில் அங்கு
நடக்கும் அக்கிரமங்களையும் பிரச்சினைக்கு தீர்வுகளையும் சொல்கிறது இக்குறுநூல். 32 பக்கம் உள்ள இந்நூல்
இந்திய சமூக விஞ்ஞானக் கழகம், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலக்குழுவும் இணைந்து ஏற்பாடு
செய்த கருத்தரங்க உரையை பாரதி புத்தகாலயம் நூலாக வெளியிட்டுள்ளது.
“Kashmir is an integral part of India”, 370 வது
பிரிவு என காஷ்மீர் பற்றிய தப்பெண்ணங்களுக்கு அளவில்லை. இவைகளை இந்நூலிலுள்ள கட்டுரைகள்
தகர்க்கின்றன.
புர்ஹான் வானி படுகொலைக்குப் பிந்தைய காஷ்மீர் மக்களின் எழுச்சியை, பீரங்கிகள், துப்பாக்கிகள்,
பெல்லட் குண்டுகளை வெறும் கற்களால் எதிர்கொண்ட அசாதரண சூழலை விவரிக்கிறது. அந்த 22
வயது இளைஞன் செகுவேரா அளவிற்கு விடுதலை நாயகனாகக் கொண்டாடப்படுவதன் பின்னணியை விளக்குகிறது
இந்நூல்.
ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் (AFSPA) போன்ற பல்வேறு கொடிய அடக்குமுறைகளையும்
கண்களைக் குருடாக்கும் பெல்லட் குண்டுகளும் அவர்களது விடுதலை உணர்வை அசைத்துவிடவில்லை.
இன்றைய இந்த எழுச்சி காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தின் நான்காம் கட்டமாக வருணிக்கப்படுகிறது
(பக். 12).
1947 முதல் 1989 வரை நடந்த அமைதிப் போராட்டம்
முதல் கட்டம்; 1989 இல் தொடங்கி 2003 வரை நீடித்த ஆயுதப் போராட்டம் இரண்டாம் கட்டம்;
2008 க்குப் பிறகு அங்கு மீண்டும் தொடங்கிய எழுச்சி மூன்றாவது கட்டம். இந்த மூன்றாவது
கட்டப் போராட்டங்கள் முற்றிலும் வேறுபட்டவை,
இளைஞர்கள், பெண்கள் முன்னெடுத்த இப்போராட்டத்தில் இவர்களது கையில் கொலை ஆயுதங்கள் இல்லை.
இவர்கள் இந்தியப் படைகளை எதிர்கொண்டது வெறும் கற்களால் மட்டுமே.
2016 இல் நடக்கும் நான்காவது கட்டப் போராட்டத்தில்
ஈடுபடும் இளைஞர்கள் எவ்வித வழிகாட்டுதல்களும் ஆயுதப் பயிற்சியும் பெறாத இளைஞர்கள்.
“எல்லோருக்கும் ஒரு நிழல்தான், ஆனால் காஷ்மீரிக்கு மூன்று நிழல்கள். மற்ற இரண்டு நிழல்களில்
ஒன்று இந்திய உளவுத்துறையுடையது; மற்றது பாக். உளவித்துறையுடையது”, (பக். 13) என்றும்
புழங்கும் சொலவடையைக் கொண்டே இதன் தீவிரத்தை உணரலாம்.
காஷ்மீர் சிக்கலின் பின்னணியில் ஜம்மு காஷ்மீர்
மக்கள் செய்து கொண்ட அமிர்தசரஸ் உடன்படிக்கை (1846), இணைப்பு ஒப்பந்தம் (1947, அக்.
26), அசையா நிலை ஒப்பந்தம் (1947, டிச. 31) ஆகிய மூன்று ஒப்பந்தங்கள் பற்றிச் சுருக்கமாக
விளக்கப்படுகின்றன.
“காஷ்மீர் ஒரு தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைக்குரிய
பகுதி (Disputed Aera)”, என்பது, “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி (Kashmir
is an integral part of India)”, என்று திரிக்கப்பட்டது மனங்கொள்ளத்தக்கது.
இப்பிரச்சினையில் காஷ்மீர் மக்கள், இந்திய அரசு,
பாகிஸ்தான் அரசு என முத்தரப்பு உண்டு என்பதையும் மறைத்து இது இந்தியாவின் உள்நாட்டுப்பிரச்சினை
என்று ஊடகங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் செய்யும் பொய்ப் பரப்புரை இன்று நீடிப்பது
எவ்வளவு பெரிய வன்முறை?
காஷ்மீர் இணைப்பு முற்றிலும் தற்காலிகமானது மட்டுமல்ல;
இதற்கு இதற்கு அடைப்படையாகவும் நிபந்தனையாகவும் இந்திய அரசியல் சட்டத்தின் 370 வது
பிரிவு உருவாக்கப்பட்டதை மறைத்து, அப்பிரிவை முற்றிலும் நீர்த்துப்போகச் செய்த அவலம்
இந்தியப் பேரினவாத ஒடுக்குமுறையில்லாமல் வெறென்ன?
“இன்று இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில் 260 பிரிவுகள் ஜம்மு காஷ்மீருக்கும்
பொருந்தும். மீதமுள்ள 135 பிரிவுகளும் கூட ஏற்கனவே இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளதால்
இஅவை இருந்தும் பயனில்லை” (பக். 21) என்று அ.மார்க்ஸ் சொல்வது காஷ்மீர் மக்கள் ஏமாற்றப்பட்ட
கதையை நமக்கு விளக்குகிறது.
கருத்துக் கணிப்பு நடத்தி அம்மக்களின் விருப்புறுதியை
நிறைவேற்றப் படவேண்டும் என்ற வாக்குறுதி காற்றில் மிதக்கவிடப்பட்டது. 1995 வரை ஒரு
லட்சம் பேர் கொல்லப்பட்டும் 8000 பேர் காணமலடிக்கப்பட்டும் உள்ள நிலையில் இன்றும் கொடிய
வன்முறைகளும் மரணங்களும் அரங்கேற்றப்படுகின்றன. இதற்கு என்னதான் தீர்வு?
மிகவும் எளிமையாகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கும் உச்சபட்சத் தீர்வுகள் (maximalist) எந்த
அளவிற்கு நியாயமானதாக, அனைவரும் ஏற்கக்கூடியதாக இருக்குமா? என்பது கேள்விக்குறி. எனவே
இம்மாதிரியான நீண்டகாலப் பிரச்சினைகளுக்குக் குறைந்தபட்ச தீர்வுகளே (minimalist) பலன்
தருவதாக இருக்கும் என்று அ.மா. வலியுறுத்துகிறார்.
புவியியல் அடிப்படையில் 5 பகுதிகளாக இருக்கும்
பன்மைத்துவ ஜம்மு காஷ்மீரில், ‘மாநில சுயாட்சிக் குழு’ அளித்த அரிக்கையில் (1996) சொன்னபடி,
370 வது பிரிவில் வரையறுக்கப்பட்ட அனைத்து உரிமைகளை அம்மக்களுக்கு திரும்ப வழங்குவது
தீர்வுக்கான முதல்படியாக இருக்க முடியும். (பக். 29)
இந்திய அரசின் கைவசம் இருக்கும் காஷ்மீருக்கும்
ஆசாதி காஷ்மீருக்கும் இடையில் உள்ள எல்லைக்கோடு இரு தரப்பும் கடக்கக்கூடியதாக ஆக்கப்படவேண்டும்,
ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், பொதுப் பாதுகாப்புச் சட்டம், கலகப் பகுதிகள்
சட்டம் ஆகியன உடன் நீக்கப்படுதல், மனித உரிமை மீறல்களை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டித்தல்,
பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குதல், பண்டிட்களை மீண்டும் பாதுகாப்புடன் மீண்டும்
குடியமர்த்துதல் (பக். 32) என்று தீர்வுகளை நோக்கி நம்மை நகர்த்துகிறது இக்குறுநூல்.
இந்தியப் பன்மைத்துவத்தை மறுத்து ஒற்றைத் தேசியச்
சொல்லாடல்களைக் கட்டமைக்கும் அனைத்து வகையான பாசிச, மதவாத சக்திகளுக்கும் இந்நூல் சாட்டையடி
கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.
(இன்று அக். 04, பேரா. அ.மார்க்ஸ்
அவர்களின் 67 வது பிறந்த நாள். அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளோடு இப்பதிவு இடப்படுகிறது.)
காஷ்மீர்
பிரச்சினையும் அரசியல் தீர்வுகளும்
– அ.மார்க்ஸ்
வெளியீடு:
இந்திய சமூக விஞ்ஞானக் கழகம், திருநெல்வேலி,
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு
இணைந்து
பாரதி புத்தகாலயம் வெளியிட்டது..
முதல்பதிப்பு: ஆகஸ்ட். 2016
பக்கம்: 32
விலை:
ரூ. 20
தொடர்பு முகவரி:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
தொலைபேசி: 044 24332424, 24332924,
24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக