வியாழன், அக்டோபர் 27, 2016

47. பறவைகளை உற்றுநோக்கல்



47. பறவைகளை உற்றுநோக்கல்

மு.சிவகுருநாதன்


                (இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)


(புக் ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ள ஆதி வள்ளியப்பனின் ‘நாராய் நாராய் .. பறவை சரணாலயங்கள் வழிகாட்டி’ சூழலியல் நூல் பற்றிய அறிமுகப்பதிவு.)




     பறவைகளைக் கவனித்தல் அல்லது உற்றுநோக்கல் என்பது இனிமையான ஓர் அனுபவம் மட்டுமல்ல; அது கானுயிர் அறிவியலின் ஒரு பிரிவு.  இதற்கு ஓர் இருநோக்கியும் (Binocular) அதற்கான மனநிலை மட்டுமே தேவை. பறவையியல் அறிஞர் டாக்டர் சாலீம் அலி இவ்வகையில் நமக்கு முன்னோடி.   இயற்கையோடு இணைந்து வாழ, முதலில் அவற்றை உற்றுநோக்க, ரசிக்கக் கற்றுத் தரவேண்டும். இதற்கு கல்வியில் உள்ள இடம் கேள்விக்குறியே. இம்மாதிரியான நூல்கள் அந்த வேலையைச் செய்வதில் முக்கியப் பங்காற்றுவதை மறுக்க இயலாது. 

   பத்தரிக்கையாளரும் கானுயிர் ஆர்வலருமான ஆதி வள்ளியப்பன் தமிழகத்திலுள்ள 12 புகலிடங்களையும் அங்குள்ள பறவைகள் மற்றும் சுற்றுப்புறத்தில் நாம் கவனிக்க மறந்த பறவையினங்கள் பலவற்றை நினைவிற்குள் கொண்டுவருகிறார். இன்னும் விரிவாக எழுதவேண்டிய தலைப்பு என்றாலும் குழந்தைகளுக்கான அறிமுகம் என்ற வகையில் இதன் பயன் உணரப்படும். தமிழகத்தில் 12 பறவைகள் புகலிடங்கள்தான் உள்ளவனா? கோடியக்கரை (நாகப்பட்டினம்) இந்தப் பட்டியலில் இல்லை. 

      தமிழ்நாட்டிலுள்ள 12 பறவைகள் புகலிடங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதுபோல வடுவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இல்லை; திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. கரைவெட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் இல்லை;  அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. மாவட்டங்கள் பிரிக்கும்போது அதைக்கணக்கில் கொண்டு திருத்தம் செய்யவேண்டும். அப்போதுதானே உண்மையான வழிகாட்டியாக இருக்கமுடியும்? பாடநூற்களில் இம்மாதிரி நூற்றுக்கணக்கில் பிழைகள் மலிந்துள்ளன. நாமும் அவற்றைக் கடத்தக்கூடாது. 

     இந்த வகைப்படுத்தலிலும் சிக்கல் இருக்கிறது. பறவைகள் புகலிடத்தில் வராத இதர புகலிடங்களுக்கும் பறவைகள் வருவது உண்டுதானே! கோடியக்கரை (நாகப்பட்டினம்)  புகலிடத்திற்கு நூற்றுக்கணக்கான பறவைகள் ஆண்டுதோறும் வருகின்றனவே. அது ஏன் தவிர்க்கப்பட்டது என்று தெரியவில்லை? கானுயிர்களை தனித்தனியேப் பிரித்து அணுகுவதும் முறைதானா என்று சிந்திக்கவேண்டும். 

புகலிடங்களின் பட்டியல்  (அடைப்புக்குறிக்குள் மாவட்டம்)


  • வேடந்தாங்கல் (காஞ்சிபுரம்)
  • வேட்டங்குடி   (சிவகங்கை)
  • கரிக்கிளி  (காஞ்சிபுரம்)
  • பழவேற்காடு (திருவள்ளூர்
  • கஞ்சிராங்குளம் (ராமநாதபுரம்)
  • சித்திரங்குடி (ராமநாதபுரம்
  • உதயமார்த்தாண்டபுரம்  (திருவாரூர்)
  • வடுவூர்  (திருவாரூர்)
  • கூந்தங்குளம் (திருநெல்வேலி)
  • கரைவெட்டி  (அரியலூர்)
  • வெள்ளோடு (ஈரோடு)
  • மேல்செல்வனூர், கீழ்செல்வனூர் (ராமநாதபுரம்)
  • கோடியக்கரை (நாகப்பட்டினம்)


   சத்திமுத்தப் புலவரின் ‘நாராய் நாராய்.. ‘ எனத் தொடங்கும் சங்கப்பாடலில் செங்கால் நாரை (White Stork), புறநானூற்றில் 67 வது பாடலில் பூநாரை (Flamingo), பரணரின் அகநானூறு 276 வது செய்யுளில் சாம்பல் நாரை  (Eastern Grey Heron)  பற்றிய பதிவுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அறியாமையால் இவைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதையும் தெரிவிக்கிறது.

   பறவைகளை நோக்குதல் மேட்டுக்குடியினரின் பொழுதுபோக்கு போலவே அடையாளப் படுத்தப்பட்டுவிட்டது என்று ஆசிரியர் கூறுகிறார். சூழலியல் கூட மேல்தட்டு அடையாளத்தில்தான் இயங்குகிறது. இதன் காரணமாகவே தொல்குடிகளை இயற்கைக்கு எதிராக நிறுத்தும் போக்கு இன்று அதிகரித்துள்ளது. இதை இயற்கை மற்றும் மக்கள் சார்ந்த சூழலியலாக வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

     திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம் பறவைகள் புகலிடத்தில் மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork), கூழைக்கடா, நீர்க்காகம், புள்ளிமூக்கு வாத்து, பாம்புத்தாரா, கொக்குகள் என பல பறவைகள் இருந்ததையும் காப்பாளர் (Watcher) ‘பறவை மனிதன்’ பால்பாண்டியின் பறவைகள் பற்றிய பட்டறிவு பெரிதும் பயன்பட்டதைச் சொல்கிறது. வேடந்தாங்கல் ஏரியைவிட கூந்தங்குளம் ஏரி பெரியது. சாலை வசதி, கோபுரம். தொலைநோக்கி இல்லையென்ற குறையைப் பதிவு செய்கிறார். மிகைப்படுத்தப்பட்ட சுற்றுலா முன்னேற்றங்கள் கானுயிருக்குக் கேடாக முடிவதையும் இங்கு நாம் கவனிக்கவேண்டும். 

   பறவைகளின் ஒலிகள், எச்சங்கள், கூடுகளின் மணம் ஆகியவற்றை இம்மக்கள் தொந்தரவாகக் கருதுவதில்லை. ஏரியில் பெருமளவு மீன் பிடிப்பதில்லை. தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது வெடி வெடிப்பதில்லை. இப்படிபட்டக் கட்டுபாடுகளால் பறவைகள் இன்னலுக்கு உள்ளாவதில்லை. கூந்தங்குளம் மக்கள் வெளிப்படுத்தும் பண்புகள், இயற்கையை சுரண்டாமல். அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு, இணக்கமாக வாழும் மூதாதைப் பண்பை வெளிப்படுத்துவதாகக் குறிக்கிறார். இன்னும் ஒருபடி மேலே கரிக்கிளியில் (காஞ்சிபுரம்) வெடி மட்டுமல்ல; மேளம்கூட வாசிப்பதில்லை. வலசைக்காலம் முடிந்தபிறகே ஊர்த் திருவிழா நடத்தப்படுகிறது. 

     மஞ்சள் மூக்கு நாரை, நத்தைக்குத்தி நாரை, சாம்பல் நாரை, குருட்டுக்கொக்கு, இராக்கொக்கு, சின்னக்கொக்க்கு, உண்ணிக்கொக்கு, கூழைக்கடா, நீர்க்காகம், சிறகி, முக்குளிப்பான், அருவா மூக்கன் (அன்றில் – Black Ibis) ஆகிய இனங்களை காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் புகலிடத்தில் காணமுடிந்தது விளக்கப்படுகிறது. மஞ்சள் மூக்கு நாரைகளும் அரிவாள் மூக்கன்களும் கூடுகட்ட பச்சை மரக்கிளைகளை முறித்துச் சென்றதும் சொல்லப்படுகிறது. 

     வேடந்தாங்கல் பறவைகள் புகலிடம் 1798 –ல் அமைக்கப்பட்ட மிகப் பழமையானதாகும். இங்கு வரும் பெரும்பாலான பறவைகள் நீர்ப்பறவைகளே. இவைகளின் எச்சம் மண்ணை வளமாக்குகிறது. மாறாக செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்ல்லிகள் பறவைகளுக்கு எமனாக இருக்கின்றன. எல்லா வலசைப் பறவைகளும் வெளிநாடுகளிலிருந்து வருவதில்லை. உள்நாட்டு வலசைப் பறவைகளும் உண்டு என்பது போன்ற  தகவல்கள் கூறப்படுகின்றன. 

     இந்தியாவின் இரண்டாவது பெரிய உவர்நீர் ஏரி (Lagoon) பழவேற்காடு. பூநாரைகள்  (Flamingo) அதிகம் வரக்கூடிய இங்கு இறால் பண்ணைகள், எண்ணூர் அனல்மின் நிலையம், ரியல் எஸ்டேட் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுவது பதிவாகிறது. 

     வேட்டங்குடி (சிவகங்கை), வடுவூர் (திருவாரூர்) போன்ற பறவைகள் புகலிடங்களும் பேசப்படுகின்றன. “மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும். பறவைகள் இன்றை மனிதர்கள் வாழமுடியாது”, என்கிற சாலிம் அலியின் கருத்து பறவைகளில் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. 

  பின்னிணைப்பாக, மேற்கு வங்க நாரை கிராமம் (ஜாக்யநகர்), கர்நாடக கூழைக்கடா கிராமம் (கோக்கரே பெல்லூர்), ராஜஸ்தான் ‘கொக்குக் கிராமம்’ கிச்சன், நேபாளத்தில் பாறுகள் (பிணந்திண்ணிக் கழுகுகள்) க்காக உணவகம் போன்றவை சொல்லப்படுகின்றன. 

    டைக்ளோபெனாக் மருந்து கொடுக்கப்பட்ட, இறந்த கால்நடைகளை இந்தக் கழுகுகள் உண்பதால் அழிகின்றன. இந்த மருந்து கொடுக்கப்பட்ட கால்நடைகள் இந்த உணவகம் மூலம் அவைகளுக்கு வழங்கப்படுகின்றனவாம். இறந்த மனித உடலை பறவைகளுக்கு உணவாக்குவது நமது தொல்குடி வழக்கங்களுள் ஒன்று. இந்தியாவில் வசிக்கும் பார்சிகள் (ஜொராஸ்டிரிய மதம்) இதைச் செய்வது பற்றிய குறிப்பும் இதில் உண்டு. 

    பறவைகள் புகலிடங்கள் குறித்த விரிவான, முழுமையான வழிகாட்டி என்று சொல்லமுடியாவிட்டாலும், தொடக்கநிலை கையேடு என்ற வகையில் இதன் பயன்பாடு இருக்கும் என்று நம்பலாம். கானுயிர் ஆர்வத்தைத் தூண்டவும், இயற்கையை நேசிக்கவும்  இதுபோன்ற நூல்கள் பயன்படும்.
   

நாராய் நாராய் .. பறவை சரணாலயங்கள் வழிகாட்டி

ஆதி வள்ளியப்பன் 

வெளியீடு: 

பூவுலகு மற்றும் 

புக் ஃபார் சில்ரன் 

பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..

முதல்பதிப்பு: ஜூலை 2016
பக்கம்: 64
விலை:  ரூ. 50

தொடர்பு முகவரி: 

பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக