43. தேசிய ‘சல்லடை’க் கொள்கை - 2016
(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்)
மு.சிவகுருநாதன்
(தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செப்டம்பர், 2016 இல் வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை நூல் வரிசையில்
மூன்று குறுநூற்கள் குறித்த பதிவு.)
“ நமக்கான வரலாற்றை நாமே எழுதிக் கொள்ளவேண்டும்”,
என்கிற ஆர்.எஸ்.எஸ்.சின் குருஜி கோல்வால்கர் சொன்னபடி ‘அவர்களுக்கான’ கல்விக்கொள்கையை
புதிய கல்விக்கொள்கை 2016 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது இந்துத்துவ வலதுசாரி பா.ஜ.க.
அரசு. ஒருவகையில் இந்த வரைவுக் கொள்கை அரசியல் சட்டத்திற்கும் அடிப்படை உரிமைகளுக்கும்
எதிரானதும்கூட.
நமது அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீட்டை
ரத்து செய்தல், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 போன்றவற்றின் மூலம் அளிக்கப்பட்ட
ஓரளவுக்கான உரிமைகளை முற்றாகப் பறித்தல் என்பதாக இவர்களது செயல்பாடுகள் அமைந்துள்ளன.
வேதக்கல்வி,
குருகுலக் கல்வியுன் புகழ்பாடும் இந்தக் கொள்கை முன்னெடுப்புகள் யாருக்கானது என்று
விளக்கத் தேவையில்லை. இந்தியாவில் கல்வி என்பது சிந்துவெளி நாகரீகத்திலிருந்து (கி.மு.
3250 – கி.மு. 2750) அல்லது அதற்கு முன்னர் கூட தொடங்கியிருக்கலாம். ஆனால் இவர்களுக்கோ
வேதகாலத்தில்தான் (கி.மு. 2000 – கி.மு. 600) எல்லாம்! இதுவே இவர்களது முகமுடியைக்
களையப் போதுமானது.
புதிய கல்விக் கொள்கை குறித்து வந்துள்ள பல நூற்களில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட மூன்று குறுநூற்களை மட்டும் இங்கு எடுத்துக்கொள்வோம்.
முதல் நூலில் ‘விழுது’ இதழில் வெளியான கல்விக் கொள்கை குறித்த சில கட்டுரைகளை தேனி
சுந்தர் தொகுத்துள்ளார்.
‘மகாராஜவின் ஆடை’ என்னும் பேரா. ச. மாடசாமி அவர்களின்
முகப்புக் கட்டுரை, அவருக்கே உரித்தான் நையாண்டியுடன் மிளிர்கிறது.
“value, moral,
culture என்று கல்விக்கொள்கை முழங்குகையில் – சிலர் மத்தியதரவர்க்கப் புளங்காங்கிதங்களுக்கு
ஆளாகலாம். வார்த்தைகளுக்கு ஒற்றை அர்த்தமா என்ன? Moral என்பது சிலருக்கு சமூக சிந்தனை;
வேறு சிலருக்கு அது கடவுள நம்பிக்கை. Moral education என்றால் சாமி கதைகளைச் சொல்ல
ஆரம்பித்துவிடுவார்கள்.
பண்பாடு
என்பது மானுடவியலாளர்க்கு – கூடிவாழும் வாழ்க்கை; அவ்வாழ்க்கை வழி உருவாகும் உறவுகள்;
உரையாடல்கள்; பழக்கவழக்கங்கள்ள். வர்ணாசிரமவாதிகளுக்குப் பண்பாடு என்பது – பேதங்கள்;
பிரிவுகள்; வன்மங்கள்!
தேசப்பற்று என்பது சிலருக்கு – ஒடுக்கப்பட்ட மக்களுக்கான
சேவை; வேறு சிலருக்கு – தேசப்பற்று என்பது மதம் சார்ந்த வன்முறை; வன்முறைக்கான வாய்ப்பு.
ஒவ்வொருவருக்கும் ஓர் அர்த்தம்; மகாத்மாவுக்கு
ஓர் அர்த்தம்; கொலைகாரனுக்கு ஓர் அர்த்தம். அரசின் கையில் இருப்பது யாருடைய டிக்னரி
என்று நமக்குத் தெரியாதா?” (பக். 08) என்று விரிவாக, இனிமையாகச் சொல்லிக்கொண்டே போகிறார்.
ஹேன்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் ‘மகாராஜாவின் புதிய
ஆடை’ கதையைச் சொல்லி இவ்வாறு முடிக்கிறார்.
“கூட்டத்தில் இருந்த ஒரு குழந்தை, “அய்யய்யே!
ராஜா மேலே ஆடையே இல்லை!”, என்று கைதட்டிச் கூச்சலிடுகிறது”.
வெறென்ன?
புதிய கல்விக்கொள்கை - மகாராஜாவின் புதிய ஆடை!
தலைகவிழ்கிறோம்.
நிர்வாணம் ஓங்கரிக்கிறது… (பக்.13)
“முதல் தேசிய கல்விக்கொள்கை 1968 ஆம் ஆண்டில்
வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்டது. அப்போது 1947 முதல் 1968 வரை கல்விக்கொள்கையே
இல்லையா?”, (பக். 14) என மூத்த கல்வியாளார் எஸ்.எஸ்.இராஜகோபாலன் வினா எழுப்புகிறார்.
இதுகூட நல்லாத்தானே இருக்கு!
“கல்விக்கொள்கை என்பது வெறும் தேவையற்ற சம்பிரதாயமே.
அரசியல் உறுதியும் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி என்பதில் ஒரு உறுதியே அவசியம்”,
(பக். 18) என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
‘பற்றி எரியும் ரோம்… நாடு சுற்றும் நீரோ..’
(பக். 19) என்னும் கட்டுரையில் கல்வியில் இதுவரை ஆளும் வர்க்கம் செய்தத் துரோக வரலாறு
எடுத்துரைக்கப்படுகிறது. இந்திய சட்டக்குழுவில் அண்ணல் அம்பேத்கர் கொண்டுவந்த தீர்மானத்தைத்
தோற்கடித்த துரோகம் இன்றும் தொடர்கதையாக மாறுகிறது, என்பதை விரிவாக விளக்குகிறார்.
“குறைந்த கூலியில் உழைக்கும் திறன்கொண்ட
104.62 மில்லியன் வேலையாட்கள் (work force) 2022 இல் தேவை என அறிவிக்கும் ஆவணம் எவ்வளவு
முடியுமோ, அவ்வளவு விரைவாக மாணவர்களின் திறன்களை மேம்பாடு அடைய வைத்து அவர்களை கார்ப்பரேட்
தொழில்நிலைய அடிப்படைக் கூலிகளாக்கும் அவசர நிர்ப்பந்தத்தை பள்ளிகளுக்கு ஏற்படுத்தும்
முனைப்பில் உள்ளதைச்”, (பக். 35) சுட்டிக்காட்டத் தவறவில்லை.
“இக்கல்வியின் நோக்கங்கள் குருகுலவாச அடித்தளமாகக்
கொண்டவை. அதாவது தரமான மேட்டுக்குடிப் பிள்ளைகளுக்கு அனைத்து வகைக்கல்வியும் திறன்களும்
கற்றுத்தந்து, அவர்களிடமிருந்து தொலைவில் உள்ள சாதாரண மக்களை இந்து தர்மப்படி ஆளும்
விதத்தில் தயார் செய்தல். அதற்காக மிகவும் பின்தங்கிய மக்களுக்கு நாகரீகம் கற்றுத்தர
வந்த மதபோதகர்களாகத் தங்களை நியமித்துக்கொள்ள ஆட்சியாளர்கள் தயாராகிறார்கள். எனினும்
மோதல் தவிர்க்க இயலாதது”, (பக். 38) என்று பிரகடனம் செய்கிறார்.
இந்த அறிக்கையின் மையமான பரிந்துரைகளில் ஒன்றான,
இந்தியக் கல்விச் சேவையில் IES (Indian Educational Service) அதிகாரிகளை உருவாக்கும்
யோசனை, மாணவர்களையும் ஆசிரியர்களையும் மேல்தட்டு ஆளுகைக்குள் தள்ளிவிடும் (பக். 44) என எச்சரிக்கிறார் பேரா.ஆர்.ராமானுஜம்.
“நமது நாட்டுக்கு சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஒரு
புதிய கல்விக் கொள்கை தேவை. இது அடுத்த இரு பத்தாண்டுகளுக்கு வழிகாட்டுவதாக. ஆனால்
இந்தியக்கல்வி அமைப்பில் சிக்கல்களாக உள்ள ஏராளமான பிரச்சினைகளுக்கு மையமான தீர்வு
அளிக்கக்கூடியதாக இது இருக்கவேண்டும்”, (பக். 45) என்று இவர் மேலும் கருத்துரைக்கிறார்.
“எந்தத் தொழிலை இழிவானது என முத்திரை குத்தி, வளரவிடாமல்
அடக்கி, ஒடுக்கி வைத்திருந்தார்களோ, அதே தொழிலை திறமை எனப் பாசாங்கு செய்து, அதிலேயே
அழுத்தப் பார்க்கிறது. இதுதான் குலக்கல்வித்திட்டம்”, (பக். 50) என்று திட்டவட்டமாக
நிராகரிக்கும், பேரா.என்.மணி, “சற்று யோசனையின்றி ஐந்தாம் வகுப்புகூடத் தேர்ச்சி அடைய
முடியாது என முத்திரை குத்தப்பட்ட ஒரு குழந்தை வேறு தொழில்களை எப்படிக் கற்றுகொள்ளும்?
படிப்பு வரவில்லை என முத்திரை குத்தி அவர்தம் குலத்தொழிலைக் கற்க அனுப்புதல் எவ்வளவு
கொடுமை”, (பக். 50) என்றும் விளக்குகிறார்.
“கல்வியை வணிகப் பொருளாக்கி வாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு
மட்டுமே கல்வி எனும் நிலை உருவாக வழிவகுக்கும்
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்விக் கொள்கை முன்மொழிவு வரைவு
அறிக்கையினை நிராகரிப்போம்”, (பக். 53) என்று பு.ப.பிரின்ஸ் கஜேந்திர பாபு அறைகூவல்
விடுக்கிறார்.
‘மூன்று
முன்னோட்டங்களும் முக்கிய கேள்விகளும்’ என்ற
இரண்டாவது நூலில் கேள்வி பதில் பாணியில் புதிய கல்விக்கொள்கை வரைவை விமர்சனத்திற்குட்படுத்துகிறது.
கள அளவிலான கருத்துக் கேட்பு, (கல்வியாளர்கள் அல்லாத
4 பேர் கொண்ட) ஐவர் குழுவின் முன்வரைவு, சில உள்ளீடுகள் மீதான கருத்துக் கேட்பு என
மூன்று முன்னோட்டங்களைக் குறிப்பிட்டு இவர்களது வேடத்தை அம்பலப்படுத்துகிறது பொ.இராஜமாணிக்கத்தின்
இக்குறுநூல்.
வேதகால, குரு சிஷ்ய பாரம்பரியத்தை விதந்தோதித்
தொடங்கும் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் செய்த
பரிந்துரைகள் சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இறுதியாக உள்ளீடுகளில் உள்ள பரிந்துரைகளும்
சொல்லப்படுகின்றன.
ஐந்தாம் வகுப்பில் பெயிலாக்குவது, தொழிற்கல்வியை
தனியே பிரிப்பது, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, பன்மைத்தன்மையை மறுக்கும் மதவாத நன்னெறிக்
கல்வி ஆகியன தடுத்து நிறுத்தப்படவேண்டும், நமது அரசியல் அமைப்புச்சட்டம் 51 A (h) .
-ல் குறிப்பிட்டவாறு அறிவியல் கண்ணோட்டத்துடன் கூடிய கல்வியை அனைத்துப் பாடங்களுக்கும்
இணைக்கவேண்டும் என்றும் இறுதியாக நிறைவு செய்கிறார்.
‘’கார்ட்டூன்
வழி கல்விக் கொள்கை’, இறுநூலில் 16 கேலிச்சித்திரங்கள் வழியே கல்விக் கொள்கையின் தீய
நோக்கங்கள் விளக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு ஒன்று:
பரிந்துரை:
வேதகாலக் கல்வி முறையே சிறந்த கல்விமுறை.
“என்னடா
குகா.. மார்க் ஷீட்ட லேமினேட் பண்ணிட்ட..”
ஆமாண்டா ராமா.. நான் நல்ல மார்க் வாங்கினதப் பாத்து
ஏகலைவன் கட்டை விடலை வெட்டின மாதிரி கோபம் வந்து வாத்தியார் மார்க் ஷீட்ட கிழிச்சுட்டா…? - (பக். 05)
இம்மாதிரியான முயற்சிகள் மற்றும் குறுநூற்கள்
வெளியீடு போன்றவை பிரச்சினையின் தீவிரத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல முதன்மையானப்
பங்காற்றும் என்பதில் அய்யமில்லை.
நூல்
01: மகாராஜாவின் புதிய ஆடை (தொ) தேனி சுந்தர்
பக்.:
56, விலை: ரூ. 40
நூல்
02: மூன்று முன்னோட்டங்களும் முக்கிய கேள்விகளும்
பொ.இராஜமாணிக்கம்
பக்.:
24, விலை: ரூ. 15
நூல்
03: கார்ட்டூன் வழி கல்விக் கொள்கை
பொ.இராஜமாணிக்கம்
பக்.:
16, விலை: ரூ. 10
வெளியீடு:
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்
முதல்பதிப்பு: செப்டம்பர், 2016
தொடர்பு முகவரி:
அறிவியல்
வெளியீடு:
245, அவ்வை சண்முகம்
சாலை,
கோபாலபுரம்,
சென்னை – 86.
தொலைபேசி: 044 28113630
இங்கும்
தொடரலாம்:
மு.சிவகுருநாதன்
திருவாரூர்
https://twitter.com/msivagurunathan
பன்மை
மின்னஞ்சல்:
musivagurunathan@gmail.com
வாட்ஸ் அப்: 9842802010
செல்: 9842402010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக