புதன், அக்டோபர் 26, 2016

இந்துத்துவ ஆபத்துகளும் வேத-சமஸ்கிருத-குருகுல-புராண அபத்தங்களும்46. இந்துத்துவ ஆபத்துகளும் வேத-சமஸ்கிருத-குருகுல-புராண அபத்தங்களும்

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)

(பாரதி புத்தகாலயம் வெளியீடாக செப்டம்பர் 2016 –ல் வந்துள்ள அ.மார்க்சின் ‘புதிய கல்விக்கொள்கை: அபத்தங்களும் ஆபத்துகளும்’  என்ற நூல் பற்றிய அறிமுகப்பதிவு.)      தமிழகத்தில் பெரியாரைச் சொல்லிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் வெறும் பெயரளவிலான எதிர்ப்பு என்ற அளவோடு அடங்கிப்போக, ஆசிரிய இயக்கங்களும்கூட இதன் விளைவுகளைப்  பெரிதும் உணராத நிலையில், எப்போதும் போல வீரியமான விவாதங்கள், நூல்கள், கருத்தரங்குகள் என புதிய கல்விக் கொள்கை குறித்த எதிர்ப்புச் செயல்பாடுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் கல்விக்கொள்கை, குலக்கல்வித்திட்டம், இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்ற எதிர்கொண்ட நீண்ட பாரம்பரியம் உண்டல்லவா! இவற்றில் இடதுசாரி இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் பங்கேற்பு மெச்சத்தக்கது.  முன்னாள் NCERT தலைவர் டாக்டர் அர்ஜூன் தேவ் பத்தாண்டுகளுக்கு முன்பு சொன்னது இப்போதும் தமிழகத்திற்கு பாராட்டாகிறது (பக். 12).

      அ.மார்க்ஸ் தனக்கே உரித்தான பாணியில் இந்துத்துவக் கல்விக் கொள்கையை அம்பலப்படுத்துகிறார். கல்வியில்,  பாடத்திட்டத்தில் இந்துத்துவ அபாயம் குறித்து தொடர்ந்து கரிசனத்துடன் பல நூல்களை எழுதியுள்ளதை யாரும் அறியாமலிருக்க இயலாது. ஆகஸ்ட் மாதத்தில் அவரது முகநூல் பக்கத்தில் இதிலுள்ள 19 கட்டுரைகளும் வெளியாகி பரவலான கவனிப்பைப் பெற்றது. உடனடி அவசியம் கருதி இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. 

   முன்னாள் அரசு அதிகாரிகள் நால்வரும் ஒரு இந்துத்துவப் பின்புலம் கொண்ட கல்வியாளர் (!?) ஒருவரும் இணைந்து தேசிய கல்விக் கொள்கையை வடிவமைத்த அபத்தம். தொடக்கக் கல்வி முதல் பல்கலைக் கழகங்கள் வரை சம்ஸ்கிருதம் பயில வசதி என்று ஆட்சியாளர்களின் நோக்கங்கள் வெளிப்படையாகவும், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிப்பாடம் என்று நோக்கம் இல்லாமல் முன்வைக்கும் தன்மை எடுத்துக்காட்டப்படுகிறது. இந்தியாவில் தற்போது இருக்கும் 1,721 தாய்மொழிகளில் 122 மொழிகளே ஓரளவு வளர்ச்சியடைந்தவை. மீதமுள்ள 1,599 மொழிகளை ஐந்தாம் வகுப்பு வரை பாடமொழியாக்க, நூல்களை உருவாக்க என்ன திட்டம் இருக்கிறது என்று சொல்லாதபோது, இது அவர்களது நோக்கமில்லை என்பது தெளிவாகிறது. இவ்வாறு ஆர்ப்பட்டமான முன்மொழிவுகள், அலங்கார வார்த்தையாடல்கள் ஆகியற்றின் ஊடாக அவர்கள் மறைத்து, நசுக்கி, பூடகப்படுத்தி முன்வைக்கும் உண்மை நோக்கங்களை அறிவது ஒன்றும் கடினமான காரியமில்லை, என்றும் முன்னுரையில் சொல்கிறார். 

    ‘இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ எனப்படும் குஜராத்தில் கல்விச் சீரழிவுக் காரணங்களைப் பின்வருமாறு முன்வைக்கிறது.


 • கல்வியில் ஆர்வமற்ற (ஏழை/அடித்தளச் சாதி) பிள்ளைகள்.
 • கல்வி அறிவற்ற (ஏழை/அடித்தளச் சாதி) பெற்றோர்கள்.
 • ஒழுங்காகப் பணி செய்யாத ஆசிரியர்கள்.
 • பெண் ஆசிரியைகள்.


   “பழியை இப்படி மக்கள் மீது சுமத்திவிட்டு, கல்வியைத் தனியார்மயமாக்குவதும், உள்ளடக்கத்தை இந்துத்துவமயமாக்குவதுமே அதன் நோக்கம்”, (பக். 15) இதன்மூலம் தெளிவாக உணர்த்தப்படுகிறது. 

    “இந்த அறிக்கையில் ஒன்றும் பூதம் இல்லையே!”, என்று சொன்ன மகேஷின் ‘தி இந்து’ கட்டுரைக்கு மறுப்பாக, “இந்திய மரபு ஒற்றை மரபு இல்லை. இந்திய மரபு என்று சொல்வதைக் காட்டிலும் ‘இந்திய மரபுகள்’ என்று சொல்வதே சரி. அவர்கள் சுட்டிக் காட்டும் ஆரிய வைதிக மரபு தவிர தனித்துவத்துடன் கூடிய ஒரு திராவிடத் தமிழ் மரபு இங்கு உண்டு. எண்ணற்ற அடித்தள பழங்குடி மரபுகள் உண்டு. இஸ்லாமிய, கிறிஸ்தவ, சூபி மரபுகள் உண்டு. இராவணனின் கொடும்பாவியை எரித்துக் கொண்டாடும் மரபு ஒருபக்கம் உண்டென்றால், இன்னொருபக்கம் இராவணனைத் தம் ஆதி மூதாதைகளில் ஒருவராக வணங்கிக் கொண்டாடும் கோண்டு இன மரபும் இந்திய மரபுதான். இந்தப் பன்மைத் தன்மையை ஏற்காமல், “ஆர்யபட்டா சாணக்கியா மதன் மோகன் மாளவியா” என ஒரு இந்து மரபைக் கட்டமைப்பது அப்பட்டமான ஒரு இந்துத்துவ அஜென்டா அன்றி வேறென்ன?. என்று வினா எழுப்புகிறார். (பக். 18)

      உள்ளீடுகள் அறிக்கையின் தொடக்கமே மிகப்பெரிய அபத்தம்,  “தொல் இந்தியாவில் முதலில் உருவான கல்வித்திட்டம் வேதக்கல்வி எனப்படும் … ‘குருகுலக்கல்வி’”, என்று  சொல்வதிலிருந்து எளிதில் விளங்குகிறது. குருகுலக் கல்வியில் பெண்களுக்கும் அடித்தளப் பிரிவைச் சேர்ந்த ஏகலைவர்களுக்கும் இடமில்லை. குருகுல முறை  வெறும் அச்சுப்பதிவுகளைத்தான் உருவாக்குமே ஒழிய சிய சிந்தனையுடைய அறிவாளிகளை உருவாக்கும் வாய்ப்பு குறைவு என்பதற்கு உ.வே.சாமிநாதய்யரும் அவரது குருவான மாயூரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் சுட்டப்படுகிறார்கள். 

   “ஒரே நேரத்தில் பல ஆசிரியர்களிடம் பல மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதுதான் சிறந்த கல்விமுறை. வைதீகத்தை மறுத்தெழுந்த நம் அவைதீக பாரம்பரியமான பவுத்த/சமணக் கல்விமுறை அத்தகையதே. அது ஒரு monastic கல்விமுறை”, என்று சொல்லி, “பள்ளி, கல்லூரி எனும் இரு சொற்களும் பாலி மொழியின் கொடையல்லவா? சமஸ்கிருதம் அத்தகைய சொற்களை நமக்குத் தரவில்லையே. அந்தக்  கல்விமுறை சமணம் சார்ந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். உறுதியாக அது பார்ப்பன குருகுல முறை அல்ல”, என்பது விளக்கப்படுகிறது.

      14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குடும்பத் தொழில்களில் வேலை செய்ய அனுமதிக்கும், 1986 –ம் ஆண்டு குழந்தை ஒழிப்புச் சட்டத்திருத்தம் செய்த இவர்களின் முதன்மை நோக்கமே குலக்கல்வி தவிர வேறில்லை, என்பது   வலியுறுத்தப்படுகிறது. மாணவர்களைத் தரம்பிரிக்கும் இக்கொள்கை ஏன் பத்ரி சேஷாத்ரிகளால் கொண்டாடப்படுவதையும், ”மாணவர்களைத் தரம் பிரிப்பது சமூகச் சீரழிவுக்கே இட்டுச் செல்லும்”, என்ற பேரா.ஜோ.போலர் அவர்களின் கருத்தும் விளக்கப்படுகிறது. 

     கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு முடிய (14 வயது) அனைவருக்கும் தேர்ச்சியளிப்பது கல்வியின் தரத்தைக் குறைப்பதாகவும் எனவே மீண்டும் 5 –ம் வகுப்புக்குப் பிறகு ‘ஃபெயில்’ முறை அமலாகும். இச்சட்டம் அமலுக்கு வந்தபோது இந்தியாவெங்கும் இருந்த 12 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்க ஏதும் செய்யாமல், ஃபெயிலாக்கும் நோக்கம், “பெருந்திரளான அடித்தளச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை உயர்கல்வியிலிருந்து விலக்கி தொழிற்பயிற்சியில் தள்ளுவது”, என்கிற சூழ்ச்சி உணர்த்தப்படுகிறது. 

    ஆர்.எஸ்.எஸ்சின் பரிந்துரைகள் கல்விக்கொள்கையில் இடம் பெறுகிறது. பள்ளிகளில் விழுமியக் கல்வியை (value education) புகுத்துவது, தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது, எட்டாம் வகுப்பு முடிய தேர்ச்சியளிப்பதை ஒழிப்பது, சமஸ்கிருதக் கல்விக்கு ஊக்கமளிப்பது போன்ற பரிந்துரைகள் அப்படியே ஏற்கப்பட்டுள்ளன.  கல்வி காவிமயமாவதற்கு இதைவிட வெறென்ன சான்று வேண்டும்?  

     சமஸ்கிருதம் என்னும் செத்துப்போன மொழியை, பிணத்தைத் தூக்கிப் பிடிப்பதன் ஊடாக, தாய்மொழிக்கல்வி எனும் தேன் தடவிய நஞ்சை இவர்கள் பரிமாறுகிறார்கள். இது உள்ளூர் தமிழ் தேசியர்களுக்கு மிகவும் உவப்பானதாக இருக்கிறது. தாய்மொழிக் கல்வியை ஆதரிக்கும் இவர்கள் மொழிவாரி மாநிலக் கொள்கைக்கு எதிரானவர்களாக இருப்பது, மொழிப்பற்று மற்றும் அடையாளம் மத அடிப்படையில் இந்துக்களைத் திரட்டுவதற்குத் தடையாக இருக்கும் என்ற ஆர்.எஸ்.எஸ். அணுகுமுறையும், குறிப்பிடப்படுகிறது. 

    2009 கல்வி உரிமைச்சட்டத்தின் பிரிவு 12 (1) c பற்றிப் பேசும் கட்டுரையில், சிறுபான்மை மக்களைச் சீண்ட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வலிமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்துத்துவ அரசின் விசுவாசமான ஓய்வுபெற்ற அதிகாரிகள், சிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை மற்ற பெரும்பான்மை மக்களுடன் பொருளாதாரத்தில் சமநிலை வகிப்பவர்களாக அணுகும் நேர்மையற்ற அணுகுமுறையை சுட்டிக்காட்டுகிறார். சச்சார் குழு, ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் தொடங்கி பல்வேறு ஆய்வுகளில் முஸ்லீம்களின் பின்தங்கிய பொருளாதார நிலை நிறுவப்பட்டுள்ளதை கல்விக்கொள்கை எப்படி மறுக்க இயலும்?

    “எளிய மக்களுக்கு 25 சத ஒதுக்கீட்டை ஏற்பதில் பிடிவாதம் காட்டி பொதுப் போக்கிலிருந்து விலகி நிற்காமல் சிறுபான்மை நிறுவனங்கள் இதை ஏற்று மைய நீரோட்டத்தில் இணைய வேண்டும்”, என்று அ.மா. சொல்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

   புதிய கல்விக்கொளகையின் ஆபத்துகள் பற்றி இந்நூல் வெளிப்படுத்தும் இதர அம்சங்களை சுருக்கமாகத் தொகுத்துக் கொள்வோம்.


 • உயர்கல்வியிலிருந்து தொழிற்பயிற்சிக்கு அனுப்புதல், மீண்டும் ஒரு வருணப் பிரிவினை, வருண அடிப்படையில் தொழிற்பிரிவினை ஆகியவற்றை சாத்தியமாக்கும் கருவியாக இது இருக்கும்.
 • திறன் இந்தியா என்கிற பெயரில் சான்றிதழ் இல்லாத திறன் நீக்கம் செய்யப்படும் தொழிலாளிகளாக மாறி, தொழிலாளர் சட்டப் பாதுகாப்பு, குறைந்தபட்ச கூலி முதலியவற்றை இழக்கும் நிலை ஏற்படும்.
 • மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதைக் காரணம் காட்டி அரசுப்பள்ளிகளை மூட வழிவகுக்கும்.
 • பல்கலைக் கழக மானியக்குழுவின் அதிகாரம் பறிக்கப்பட்டு,  முற்றாக ஒழிக்கப்படும்.
 • கல்வியாளர்கள் வெளியேற்றிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். (இந்துத்துவ) ஆதரவாளர்களால் அவ்விடங்கள் நிரப்பப்படும். (IES – INDIAN EDUCATIONAL SSERVICE) உருவாக்கப்பட்டு, கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவ ஆட்களால் கல்வித்துறை கல்வி நீக்கம் செய்யப்படும்.
 • மாணவர்களின் கல்வி மற்றும் கருத்துரிமைகள் முற்றாக மறுக்கப்படும். JNU மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அனைத்து கல்வி நிறுவனங்கள் மீதும் நடக்கும்.
 • கல்வியில் இடஒதுக்கீடு என்கிற பேச்சே இருக்காது.
 • அரசே தரம் பிரித்து வேறுபாட்டை அதிகரிக்கும்போது, கல்விக்கூடங்களில் தீண்டாமை போன்ற ஒதுக்கல்கள் அதிகமாகும். இதைப் பற்றியெல்லம் இக்குழு கவலைப்படவில்லை. மாறாக மவுனம் சாதிக்கிறது
 • ஆசிரியர்கள் பலிகடாவாக்கப்படுவார்கள். இவர்கள் கார்ப்பரேட் கலாச்சாரத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.       மொத்தத்தில் பன்மைத்துவ இந்தியாவை மறுதலித்து, ஒற்றை வைதீக இந்துத்துவ கலாச்சாரத்தைப் பேணவும், இந்தியக் கல்வியை வியாபாரமாக்கும் WTO / GATS ஒப்பந்தத்திற்கு திறந்துவிட்டு, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு செவை செய்வதன் தந்திரமே இக்கல்விக் கொள்கை. இதன் ஊடாக தமது கருத்தியல் உள்ளீடுகளைக் கல்விக் கொள்கையின் உள்ளீடுகளாக இணைக்கும் அயோக்கியத்தனத்தை இந்நூல் வெளிப்படுத்துகிறது; நம்மை எச்சரிக்கவும் செய்கிறது. 


புதிய கல்விக் கொள்கை: அபத்தங்களும் ஆபத்துகளும்

அ.மார்க்ஸ்

வெளியீடு: 

பாரதி புத்தகாலயம்

முதல்பதிப்பு: செப்டம்பர்  2016
பக்கம்: 80
விலை:  ரூ. 50

தொடர்பு முகவரி: 

பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக