திங்கள், அக்டோபர் 10, 2016

01. பாடநூற்களில் மொழிக் (பெயர்ப்புக் கலை) கொலை


01.                பாடநூற்களில் மொழிக் (பெயர்ப்புக் கலை) கொலை 
 

- மு.சிவகுருநாதன் 


       எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது முகநூல் பக்கத்தில் (செப். 27, 2016)  ‘எதிர் வெளியீட்’டின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்று குறித்து கடுமையாக திட்டி எழுதியிருந்தார். ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முராகாமியின் ‘நோர்வீஜியன் வுட்’ டை க.சுப்பிரமணியன் மொழிபெயர்ப்பில் ‘எதிர்’ வெளியிட்டது. 


       ‘Universal Reaction’ – என்பதை ‘பிரபஞ்ச பிரதிவினை’ என்று மொழிபெயர்க்க, அதை  ‘மொழிக்கொலை, வன்கலவி’ என்று சாரு காடுமையாக சாடியிருந்தார். ‘பிரபஞ்சப் பிரதிவினை’, என்றுகூட இல்லை என்று கிண்டல் செய்திருந்ததார். 


    மேலும் ஜி.குப்புசாமி, எஸ்.வி.ராஜதுரை, கவிஞர் சுகுமாரன் ஆகியோரது மொழிபெயர்ப்புகளைக் ஒப்பிட்டும் வெகுவாக சிலாகித்தும் எழுதியிருந்தார். அத்துடன்  ஜி.குப்புசாமியின்  மொழிபெயர்ப்பில் ஹாருகி முராகாமியின் ‘விநோத நூலகம்’ என்னும் ‘கல்குதிரை’ சிற்றிதழில் வெளியான சிறுகதையையும் முகநூலில் நன்றியுடன் வெளியிட்டும் இருந்தார். 


     மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைந்தால் அது ஒரு கலை; இன்றேல் கொலைதான். ஒரு படைப்பாளிக்கு இன்னொரு படைப்பு கொலை செய்யப்படுவதையும், தனது மொழி இன்னலுக்கு ஆளாவதையும் பொறுக்க முடியாத காரணத்தால் இத்தகைய எதிர்வினை எழுகிறது. 


   நமது பள்ளிப் பாடநூல்களில் மொழிக்கொலைக்கு முதலிடம். எந்தவித மொழியறிவும், நுட்பமும் அற்றவர்கள் பாடநூற்கள் தயாரிப்பதன் விளைவு இது. ஓர் உதாரணம் மட்டும் இங்கே.


     எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவ சமூக அறிவியல் பாடநூலின் வரலாற்றுப் பகுதியில் உள்ள ஆங்கில, தமிழ் வடிவத்தை அப்படியே கீழே தருகிறேன்.


       “In  order  to  remove  the  defects    of   the  Regulating  Act,  the  British  Prime  minister  William  Pitt,  the   younger,  passed   the  Pitt’s  India  Act   in 1784”.
 (page :   144 . Social    science,   second semester,  VIII STD.)

இதன் தமிழ் வடிவம் கீழே:

    “இந்தச் சட்டத்தின் குறைகளைப் போக்குவதற்காகக்  கி.பி. 1784 ஆம் ஆண்டு, ஆங்கிலேயப்  பிரதமர் இளைய பிட் என்பவர், பிட் இந்தியச் சட்டத்தைக் கொண்டுவந்தார். (.பக். 153, சமூக அறிவியல் இரண்டாம் பருவம், எட்டாம் வகுப்பு) 

    ஷேக்ஸ்பியரை ‘செகப்பிரியர்’ என்று மொழிபெயர்ப்பவர்கள் ஆயிற்றே! எனவே சொல்லவா வேண்டும்? ‘William  Pitt,  the   younger’  இளைய பிட் ஆகிவிட்டார். மேலும், “போக்குவதற்காகக்  கி.பி. 1784 ஆம் ஆண்டு”, என்று வல்லினம் எங்கெங்கெல்லாம் மிகுகிறது பாருங்கள்! 

    அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் என்றொரு குடியரசுத்தலைவர் இருந்தார். பிற்காலத்தில் அவரது மகன் ஜார்ஜ் வில்லியம் புஷ் அமெரிக்க குடியரசுத் தலைவரானார். இவர் ஜூனியர் புஷ் என்றழைக்கப்பட்டார். இவரை இளைய புஷ் என்று யாரும் மொழிபெயர்க்கவில்லை. 

    William  Pitt  –ன் தந்தையான William  Pitt   -ம் பிரிட்டன் முன்னாள் பிரதமர்,   அவர் William  Pitt,  the   elder   என்றும் மகன் William  Pitt,  the   younger என்றும் அழைக்கப்படுவது வழக்கம். இதை எப்படி இளைய பிட், முதிய பிட் என்று மொழிபெயர்ப்பது என்று விளங்கவில்லை. 

    ஆங்கிலத்திலுள்ள ‘வில்லியம்’ தமிழில் ஏன் காணாமற்போகிறது? பிரிட்டிஷ் பிரதமர் ஏன் ஆங்கிலேயப் பிரதமர் ஆகிறார்? பரங்கியர்கள் என்றுகூட ஒரு காலத்தில் பாடநூல்கள் எழுதின. இன்றும் அவ்வாறு எழுதிக்கொண்டிருக்க வேண்டுமா?

    இங்குகூட தாத்தா பெயரை பெயரனுக்கு வைக்கும் பழக்கம் காரணமாக, முதலாம், இரண்டாம், மூன்றாம் என்று அழைக்கப்படுவதுதானே வழக்கம். வயதான ராஜராஜன், நடு ராஜராஜன்,  இளைய ராஜராஜன் என்றெல்லாம்  சொல்லப்படவில்லையே!

   பள்ளிப் பாடநூற்கள் இவ்வாறு பக்கத்துப் பக்கம் பல்வேறு குறைபாடுகளுடன் மாணவர்கள் கைகளில் இருக்கிறது. இவற்றை என்ன செய்யப் போகிறோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக