வெள்ளி, அக்டோபர் 14, 2016

41. ஆட்டிசத்தை எதிர்கொள்வோருக்கான கையேடு



41. ஆட்டிசத்தை எதிர்கொள்வோருக்கான கையேடு 

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)



     ஸ்டீபன் வில்ட்ஷையர் உலங்கு வானூர்தி வழியாக, பருந்துப் பார்வையாக தான் கண்ட காட்சிகளை எவ்வித அவுட்லைனும் இன்றி பேனாவில் ஓவியமாகக் வரைந்துவிடுகிறார். லண்டன், ரோம், டோக்கியோ, பாங்காக் ஆகிய பல நகரங்களின் பறவைப் பார்வையை ஓவியமாக்கும் இவர் லண்டன், நீயூயார்க் ஆகில இடங்களில் ஆர்ட் கேலரி நடத்துகிறார். 

   பாஸ்டனில் பிறந்து கொலராடோ பல்கலைக் கழகத்தில் விலங்கியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் டெம்பிள் கிராண்டின், விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.   2010 இல் டைம் இதழில100 சிறந்த மனிதர்களில் ஒருவராகத் தேர்வானவர்.  இவர் உருவாக்கிய ‘ஹக் எந்திரம்’ (Hug Machine)  உருவாக்கும் அதிகபட்ச அழுத்தம் ஆட்டிசக் குழந்தைகளின் புலனுணர்வுப் பிரச்சினைகளுக்கு ஆறுதல் தருகிறது. 

   அமெரிக்கா வாழ் இந்தியத் தம்பதிகளுக்குப் பிறந்த கிருஷ்ணா நாராயணன் இன்று நான்கு நூல்களின் ஆசிரியர். 

   மேலே சொன்ன மூவருக்கும் ஒரு ஒற்றுமையும் உண்டு. இவர்கள் ஆட்டிசக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, அதையும் மீறி சாதனை புரிந்திருப்பவர்கள். 

   இவர்கள் மட்டுமா? சார்லஸ் டார்வின், சர் ஐசக் நீயுட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், கணிதமேதை ராமானுஜன், மைக்கேல் ஏஞ்சலோ, தாமஸ் ஜெஃபர்சன், ஜார்ஜ் ஆர்வெல், ஹிட்லர் போன்ற பிரபலங்கள் ஆட்டிசப் பாதிப்புடையவர்களே, என்று  அவர்களுடைய  வாழ்க்கைப் பதிவுகளைக் கொண்டு ஆய்வு செய்த மனோதத்துவ நிபுணர் மைக்கேல் ஃபிட்ஸ்ஜெரால்ட் என்பவர் கணிக்கிறார்.  இது உண்மையாகக் கூட இல்லாமலிருக்கலாம். ஆட்டிசத்தைத் திறம்பட கையாண்டால் அவர்களும் மேதையாகலாம், இல்லாவிட்டால்லும் சராசரி வாழ்க்கைக்கு வழிகோலலாம், என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.  

      ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் ஆட்டிசம் குறித்த பல கட்டுரைகள் வெளியாகி உள்ளது. ஆட்டிசக் குறைபாடுடைய குழந்தையின் பெற்றோர் படும் அவலங்களை அவற்றைக் கண்டறிந்து சரிசெய்யும் முறைகளை பல கட்டுரைகள் விளக்கின. தமிழில் இக்குறைபாடு பற்றிய புரிதல்கள் மிகக்குறைவாகவே உள்ளது. பொதுவாக தமிழில் மருத்துவ நூல்களும், குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் பற்றிய நூற்களக்குப் பஞ்சமே. எழுத்தாளரும் ஊடகவியலாளருமான யெஸ்.பாலபாரதி தனது குழந்தையின் ஆட்டிசக் குறைபாடு குறித்த தேடல், இக்குறைபாடு உடைய  குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயன்படும் வகையில் இக்குறுநூலை எழுதியிருக்கிறார். 

    ஆட்டிசத்தை உணர 20 வழிகள் இங்கு சுட்டப்படுகின்றன. இவை படவிளக்கங்களுடன் உள்ளன. 


  •        ஒதுங்கி இருப்பது.
  •       பொருள்களைப் பொருத்தமில்லாது பற்றுவது.
  •      கண்களைப் பார்த்துப் பேசத் தவிர்ப்பது.
  •         பிற குழந்தைகளுடன்  பழக, விளையாட ஆர்வமின்மை.
  •        அச்சமின்மை.
  •         ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப செய்வது.
  •        அதீத பதற்றம், அதீத மந்தம்.
  •        மாற்றங்களை விரும்பாமை.
  •         சில வேளைகளில் தொடப்படுவதியோ, அணைக்கப்படுதலோ விரும்பாமை.
  •         காரணமின்றி அழுவது.
  •         வலியை உணராமை.
  •         கற்றலில் ஈடுபாடின்மை.
  •       கைகளைத் தட்டுவது, குதிப்பது போன்ற வித்தியாசமான நடத்தைகள்.
  •      சுழலும் பொருள்களை ரசித்து, அதனுள் மூழ்குதல்.
  •         சொற்களை அர்த்தமின்றி திரும்பச் சொல்வது.
  •     சமூகப் புரிதலின்றி இருப்பது.
  •        சுட்டிக் காட்டத் தெரியாமை.
  •        அழைத்தும் காது கேளாது போல் இருத்தல்.
  •       காரணமில்லாத சிரிப்பு.


   ‘ஆட்டிசம்’ என்ற சொல்லை 1943 –ல் முதன் முதலில் அறிமுகப்படுத்திய டாக்டர் லியோ கானர் தொடங்கி ஆட்டிச வரலாறு சொல்லப்படுகிறது. 

   குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள்  ASD (Autism Spectrum Disorder) என்று சொல்லப்படுகின்றன. அவற்றுள் சில.



  • ஆட்டிசம்.
  • அஸ்பெர்ஜர் சின்ட்ரோம் என்னும் பிறருடன் உறவாடாமல் இருப்பது.
  • பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள்.
  • ரெட் சின்ட்ரோம் என்னும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் தலை வளர்ச்சிப் பிரச்சினை.
  • குழந்தைப் பருவ ஒத்திசைவின்மைக் குறைபாடு.


     இம்மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ளடஆட்டிசம் தொடர்பான பல்வேறு மூடநம்பிக்கைகளைக் களைய வேண்டும். ஆட்டிசம் என்பது நோயல்ல; ஒரு குறைபாடு. இவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல என்பது போன்ற தவறான மாயைகள் விளக்கப்படுகின்றன. 

    இக்குழந்தைகளின் புலனுணர்வு சிக்கலை,


  •       பார்வை.
  •         சத்தம்.
  •       தொடுகை.
  •        சுவை.
  •       முகர்தல்.
  •     சமநிலை.
  •    உடலை உணரும் திறன் என்று 7 பிரிவாக விளக்கப்படுகின்றன.
  •  

   நடத்தை, வளர்ச்சி, கல்வி, பேச்சு என நான்கு வகையான முதன்மை சிகிச்சை முறைகள் விரிவாக சொல்லப்படுகின்றன. குழந்தைக்குப் பேச்சு வரவில்லை என்றால் அது செவித்திறன் குறைபாடு என்று வழக்கமாகக் கருதி காது கேட்கும் கருவியைப் பொருத்தும் அவலமும் மருத்துவத்துறையில் உண்டு. இதை மிகச்சரியாக கண்டறிவது பெற்றோரால் இயலக்கூடியது என்றும் விளக்கப்படுகிறது. 
.
   ஆட்டிசம் பற்றிப் புரிந்து கொள்ளுதல், உங்கள் குழந்தையைப் புரிந்து கொள்ளுதல், உண்மையை ஏற்றல், மனம் தளராதிருத்தல், கால அட்டவணை கடைபிடித்தல், ஊக்கப்பரிசுகள் மூலம் கற்பித்தல், சமிக்ஞைகளை உணர்தல், புலனுணர்வுக்கு உரிய வேலை கொடுத்தல், விதிகளாக்கிக் கற்பித்தல், பிரித்துச் சொல்லிக் கொடுத்தல், தன்னிச்சையாக இயங்கப் பழக்குதல், சக பெற்றோருடன் தொடர்பில் இருத்தல் என ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விதிகளாக உணர்த்தப்படுகின்றன. 

  புலனுணர்வுச் சிக்கலுக்குத் தகுந்தவாறு வேண்டாதவைகளை விலக்குதல், உடல்ரீதியான ஒவ்வாமைப் பொருள்களை இனம் கண்டு தவிர்த்தல் போன்றவற்றின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது.

   தனது குழந்தை ஆட்டிசக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதை எண்ணி துயறும் பெற்றோர்களுக்கும் அக்குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த சிறுநூல் ஒரு தொடக்கநிலை கையேடாக விளங்கும். 


ஆட்டிசம்: சில புரிதல்கள்


யெஸ்.பாலபாரதி 

வெளியீடு: 

புக் ஃபார் சில்ரன்
பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..


முதல்பதிப்பு: மார்ச் 2013
பக்கம்: 80
விலை:  ரூ. 50


தொடர்பு முகவரி: 


பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.


தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
 
இணையம்: www.thamizhbooks.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக