பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி
(மகாத்மாவின் கதை தொடரின் நான்காவது அத்தியாயம்)
மு.சிவகுருநாதன்
சைவ உணவாளர்கள் சங்கத்தின் (Vegetarian Federal Union - VFU) நிர்வாகக் குழுவிற்கு காந்தி தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டங்களின் தவறாமல் கலந்துகொண்ட காந்தி அவற்றில் பேசுவதை மட்டும் முற்றாகத் தவிர்த்தார். டாக்டர் ஓல்டுபீல்டு (Dr. Josiah Oldfield 1863 –1953), “நீங்கள் என்னுடன் மிக நன்றாக உரையாடுகிறீர்கள். ஆனால் குழுக் கூட்டங்களில் வாய் திறப்பதே இல்லை. தேனீக்களில் ஆண் ஈ போலிருக்கிறீர்களே”, என்று கிண்டல் செய்தார். தேனீக்களில் ஆண் ஈக்கள் சோம்பேறிகள் என்பதை அனைவரும் அறிவர்.
காந்திக்குப் பேசாமலிருக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை. சரியாகப் பேசத் தெரியாத குறையும் கூச்ச மனப்பான்மையும் அவரைத் தடுத்தன. ஒரு சமயம் சைவ உணர்வாளர்களின் ஒழுக்கம் சார்ந்த கொள்கைகள் பற்றிய பிரச்சினை எழுந்தது. சைவ உணவு உண்போர் இச்சங்கத்தில் இருக்கலாம். அவர்களை ஒழுக்கம் சார்ந்த கருத்துகளைக் காரணம் காட்டி சங்கத்திலிருந்து நீக்க வேண்டாம் என்பது காந்தியின் யோசனை. ஆனால் இக்கருத்துகளை கூட்டத்தில் எழுதிவைத்துக் கொண்டுகூட பேச இயலவில்லை. இவரது தரப்பு தோற்றும் போனது. இங்கிலாந்தில் இருந்தவரையில் காந்தியின் கூச்சம் குறையவே இல்லை. சாதாரணமாக நண்பர்களைச் சந்திக்கும் போதுகூட ஐந்து பேருக்கு மேல் இருந்தால் காந்தி மௌனமாகிவிடுவார்.
ஒருநாள் மஜூம்தாருடன் வெண்ட்னருக்குச் சென்று அங்குள்ள சைவக் குடும்பத்தினருடன் தங்கினார். ‘உணவு முறையின் அறம்’ என்ற நூலின் ஆசிரியர் ஹோவார்டு வில்லியம்ஸ் (Howard Williams) அங்கு தங்கியிருந்தார். அவர் கூட்டம் ஒன்றில் பேச அழைத்தார். அங்கு கூட்டத்தில் பேச வேண்டிய செய்திகளை எழுதிப் படிப்பதுத் தவறாகக் கருதப்படாது என்பதையறிந்து அவ்வாறு செய்ய முடிவெடுத்தார். ஆனால் உடம்பெல்லாம் நடுங்கி, கண்கள் மங்கலாகி எழுதிவைத்த அந்த ஒரு பக்கத்தையும் படிக்க இயலவில்லை. இறுதியில் அக்குறிப்பை மஜூம்தார் வாசித்தார்.
சைவ உணவாளர்களுக்கு ஹால்பர்ன் ஓட்டலில் விருந்து ஒன்றை காந்தி ஏற்பாடு செய்கிறார். நமது நாட்டில் விருந்து என்பது வெறும் உணவுண்ணும் இன்பத்திற்காக மட்டுமே. ஆனால் மேலை நாடுகளில் விருந்தை ஒரு கலையாக வளர்த்துள்ளனர். ஆடம்பரம், இசை, சொற்பொழிவுகள் என விருந்தை அழகூட்டுகின்றனர். இந்த விருந்தில் உரையாற்ற சிறு குறிப்பைத் தயாரிக்கிறார். அதுவும் தோல்வியில் முடிந்து மீண்டும் பிறரின் நகைப்பிற்கு ஆளான வெற்றி கிடைத்தது என்கிறார். தென்னாப்பிரிக்காவில் இந்த கூச்ச உணர்வு குறைந்தது என்றாலும் முற்றாக மறைந்து விடவில்லை. முன் தயாரிப்பு இல்லாமல் எந்தக் கூட்டங்களிலும் அவரால் பேச முடிந்ததில்லை.
பொதுவாக பேச்சாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் பார்வையாளர்கள் எண்ணத்தை மீறியும் தொடர்ந்து பேசுவதால் காலவிரயமே ஏற்படுகிறது. எனவே சத்தியத்தை நாடுபவர்களின் விதிமுறைகளில் ஒன்றாக மௌனமும் இருக்கிறது என்று வலியிறுத்தினார். உண்மையில் தனக்கிருந்த கூச்சம் தனக்கு கவசமானது; வளர்ச்சியடைய அனுமதித்தது; சத்திய ஆராய்ச்சிக்கு உதவியது என்கிறார் காந்தி.
பள்ளி, கல்லூரிப் படிப்புகளுக்கு மண வாழ்க்கைத் தடை என்பது மேலை நாடுகளில் நிலவிய கருத்தாகும். எனவே திருமாகாதவர்களே அங்கு படித்தனர். இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் நடைமுறையில் இருந்ததால் பெரும்பாலும் திருமணமானவர்களே இங்கு படித்தனர். கூச்சம் மற்றும் அங்குள்ள பெண்களிடம் பழக வேண்டியும் உண்மையை யாரும் வெளியே சொல்வதில்லை. காந்தியும் கூச்சத்தால் திருமணம் பற்றி சொல்லவில்லை. லண்டனில் ஒரு மூதாட்டியின் எண்ணத்தை அறிந்த காந்தி அவருக்கு கடிதம் மூலம் தனக்கு மணமாகிவிட்டதைத் தெரிவிக்கிறார். இதன்மூலம் பொய்மையின் புரையோடியப் புண் அகன்றது என்று மகிழ்ச்சியடைகிறார்.
காந்திக்கு இங்கிலாந்தில் பிரம்ம ஞான சங்கத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் பழக்கம் கிடைத்தது. அவர்கள் இருவரும் மணமாகாதவர்கள். சர். எட்வின் அர்னால்டு மொழிபெயர்த்த ‘கீதை’யை (Bhagavad-Gita Tranlated by Sir Edwin Arnold) அவர்கள் வாசித்துக் கொண்டிருந்தனர். சமஸ்கிருத மூலநூலை வாசிக்க அவர்கள் காந்தியை அழைத்தனர். காந்தி ‘கீதை’யை சமஸ்கிருதம் அல்லது குஜராத்தியில் முன்பே வாசித்திருக்கவில்லை. காந்திக்கிருந்த கொஞ்ச சமஸ்கிருத அறிவுடன் ‘கீதை’யை அந்நண்பர்களுடன் வாசிக்கத் தொடங்கினார். அப்போது ‘கீதை’யை முழுமையாகக் கற்காவிடினும் பின்னர் நாள்தோறும் ஆழ்ந்து கற்றார். ‘கீதை’யைப் பிறர் புரிந்துகொண்டதற்கும் காந்திக்கும் நுட்பமான வேறுபாடுகள் இருப்பதை அவரது எழுத்துகள் மற்றும் செயல்கள் வழியே நாம் உணரமுடியும்.
அச்சகோதரர்கள் சர். எட்வின் அர்னால்டு (Sir Edwin Arnold) எழுதிய ‘ஆசிய ஜோதி’ (The Light of Asia) என்ற நூலையும் படிக்க வலியுறுத்தினர். இது புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூலாகும். கவிதை நடையிலான இந்நூலை கவிமணி தேசிக விநாயகம் தமிழில் ‘ஆசிய ஜோதி’ எனும் பெயரில் மொழிபெயர்த்தார். ‘கீதை’யைவிட கூடுதல் கவனத்துடன் காந்தி ஆங்கில நூலைப் படித்தார். அதைக் கையில் எடுத்துவிட்டால் மீண்டும் கீழே வைக்க முடிவதில்லை என்கிறார் காந்தி. அவர்கள் காந்தியை பிளாவட்ஸ்கி விடுதிக்கு அழைத்துச் சென்று எலனா பிளாவட்ஸ்கியையும் (Helena Blavatsky) டாக்டர் அன்னிபெசன்டையும் (Annie Wood Besant) அறிமுகம் செய்துவைத்தனர். அவரது ‘பிரம்ம ஞானத் திறவுகோல்’ (The Secret Doctrine) என்னும் நூலையும் படித்தார். அன்னிபெசன்ட் அப்போது பிரம்ம ஞான சங்கத்தில் இணைந்திருந்தார். இச்சங்கத்தில் சேர அந்த நண்பர்கள் வலியுறுத்தியபோது, “என் மதத்தைப் பற்றியே இன்னும் சரியாக அறிந்துகொள்ளாத நிலையில் மத நிறுவனத்தில் சேர விரும்பவில்லை”, என்று மரியாதையுடன் மறுத்துவிட்டார்.
அதே நேரத்தில் மான்செஸ்டரிலிருந்த வந்த கிருஸ்தவர் ஒருவரை சைவ உணவு விடுதியில் சந்திக்கிறார். அவருடனான விவாதத்தில் எங்கள் வேதம் மாமிசம் சாப்பிடச் சொல்லவில்லை. எனவே தயவுசெய்து பைபிளைப் படியுங்கள் என்று வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்ற காந்தி பைபிளை படிக்கத் தொடங்கினார். பழைய ஏற்பாட்டைப் (Old Testament) படித்துப் புரிந்துகொள்ள அவரால் இயலவில்லை. ஆனால் புதிய ஏற்பாட்டில் உள்ள மலைச் சொற்பொழிவு (The Sermon on the Mount) அவரை மிகவும் கவர்ந்தது. அதைக் ‘கீதை’யுடன் ஒப்பீட்டுப் பார்த்தார்.
“தீமைக்குப் பதிலாகத் தீமையை செய்யாதே, உனது வலது கன்னத்தில் யாரேனும் அறைந்தால் இடது கன்னத்தையும் காட்டு, எவனாவது உனது சட்டையை எடுத்துக்கொண்டால் அவனுக்கு உனது போர்வையும் கொடு”, போன்ற அறிவுரைகள் காந்தியை மகிழ்ச்சியின் எல்லைக்கு அழைத்துச் சென்றன. கீதை, ஆசிய ஜோதி, மலைச் சொற்பொழிவு ஆகிய மூன்றும் ஒன்றெனக் கருத காந்தியின் இளமனது முயன்றது. துறவறமே சமயத்தின் தலைசிறந்த அம்சம் என்பது காந்தியை மிகவும் கவர்ந்தது.
இவற்றைப் படித்ததால் பிற சமயத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பயில வேண்டும் என்கிற ஆவல் உண்டானது. நண்பரின் ஆலோசனைப்படி தாமஸ் கார்லைல் (Thomas Carlyle: 1795-1881) எழுதிய ‘வீரர்களும் வீரர் வழிபாடும்’ (On Heroes, Hero-Worship, and the Heroic in History) என்ற நூலை வாசித்தார். இதன் மூலம் முகமது நபியின் பெருமைகள், வீரம், எளிய வாழ்க்கை ஆகியவற்றை அறிந்துகொண்டார்.
சமயங்களைப் பற்றி அறிந்துகொள்ளும்போது நாத்திகத்தைப் பற்றியும் அறிய வேண்டுமல்லவா! சார்லஸ் பிராட்லா (Charles Bradlaugh:1833-1891) எழுதிய நாத்திகம் தொடர்பான நூல் ஒன்றையும் வாசித்தார். இவர் பகுத்தறிவாளர். National Secular Society என்ற மதச்சார்பற்ற அமைப்பைத் தோற்றுவித்தவர். நார்த்தாம்டன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ‘ஒரு நாத்திக வேண்டுகோள்’ (A Plea for Atheism) போன்ற பல்வேறு பகுத்தறிவு சார்ந்த நூல்களை எழுதியவர். தான் முன்பே நாத்திகம் என்னும் பாலைவனத்தைக் கடந்துவிட்டதால் இதன்மீது ஈர்ப்பு ஏற்படவில்லை என்கிறார் காந்தி. பிராட்லா இறந்தபோது அவரது உடலடக்க நிகழ்வில் காந்தியும் பங்கேற்றார். அங்கு வந்திருந்த பாதிரியார் ஒருவரிடம் நாத்திகவாதி ஒருவர் செய்த விவாதம் காந்தியின் நாத்திக வெறுப்பை மேலும் அதிகப்படுத்தியது.
இந்து மற்றும் உலக சமயங்கள் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டிருந்தாலும் மனிதனுக்கு ஏற்படும் சோதனைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள அவை போதாது என்பதையும் காந்தி உணர்ந்திருந்தார். சமய அறிவு வேறு; சாதனை வேறு. சாதனையில்லாத சமய அறிவு வெறும் உமியாகத் தோன்றும் என்று காந்தி கருதினார்.
இங்கிலாந்து வந்த குஜராத்தி எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் நாராயண ஹேமச்சந்திரர் (1855-1904) சந்திக்கிறார். இவர் பயண ஆர்வலரும் கூட. ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பல வங்க மொழிப் படைப்புகளை குஜராத்திக்குக் கொண்டு சென்றவர். அவர் மிகவும் எளிமையான மனிதர். அவரது உடை எழுத்துகூட மிக எளிமையானது. மராத்தி, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் பெரும்பங்காற்றியவர்.
ஹேமச்சந்திரர் லண்டனில் சிறிதுகாலம் தங்கிவிட்டு பாரிஸ் சென்று பிரெஞ்சு மொழி கற்று அம்மொழி நூல்களையும் மொழிபெயர்க்கத் தொடங்கினார். அவை நேரடி மொழிபெயர்ப்பாக இல்லாமல் நூலின் மையக்கருத்தை ஒட்டி அமைந்தவை. உலகமெங்கும் பயணித்து பல மொழிகளைக் கற்று அம்மொழி இலக்கியங்களை தாய்மொழிக்குக் கொண்டு சேர்க்கும் தீராத ஆவல் கொண்டிருந்த அவருக்கு இலக்கணம் பற்றியெல்லாம் துளியும் கவலையில்லை. பள்ளிக்கூடம் சென்று முறையாகப் படிக்காத தான் அரிய கருவூலங்களிலிருந்து மையக்கருத்தை மட்டும் கொண்டு சென்றால் போதுமானது என்று கருதினார்.
ஹேமச்சந்திரர் மிக எளிய உடையணிந்து கார்டினல் மானிங்கை (Henry Edward Manning) முறைப்படி அனுமதி பெற்று சந்தித்ததுடன் அவரது ஜீவகாருண்யம், துறைமுகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல் போன்ற பணிகளை பாராட்டிவிட்டு திரும்பினார். காந்தி கோட்–சூட் அணிந்து அவருக்கு மொழிபெயர்ப்பாளராக சென்றார். தொடர்வண்டியில் மூன்றாம் வகுப்பில் செல்லும் ஹேமச்சந்திரர் கப்பலிலும் கடைசி வகுப்பில் செல்வேன் என்று தான் சொன்னபடியே புதிய உலகமான அமெரிக்கா சென்றடைந்தார். ஆனால் அங்கு அவரது எளிய உடை அமெரிக்கர்களுக்கு ஆபாச உடையாகிப்போனது. எனவே அதற்காக கைது செய்து விசாரணைக்குப் பின்னர் விடுதலையானார்.
1890 இல் பாரிசில் பெரிய கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடானது. காந்திக்கு பாரிஸ் செல்லவும் மிகப்பெரிய ஈபிள் கோபுரத்தைக் (Eiffel Tower) காணவும் ஆசை இருந்தது. பாரிசில் சைவ உணவு விடுதி உள்ளதாகக் கேள்விப்பட்டு அதில் அறையெடுத்துத் தங்கிப் பாரிசைச் சுற்றிப் பார்த்தார். ஈபிள் கோபுரத்தின் அடுக்குகளில் மதிய உணவருந்த 7 ஷில்லிங் செலவு செய்தார். பாரிசின் ஒவ்வொரு தெருக்களையும் சுற்றிப் பார்த்தார். பாரிஸ் நகரிலுள்ள மிகப்பழமையான தேவாலயங்களின் பிரமாண்டமான தோற்றமும் அங்கு நிலவிய அமைதியும் காந்தியை மிகவும் கவர்ந்தன. பாரிஸ் நகர இதர தெருக்களின் கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களுக்கு மாற்றாக இவை இருந்தன. இவற்றில் நுழையும் ஒருவன் வெளியிலுள்ள இரைச்சல்களை மறந்து மண்டியிட்டுத் தொழும்போது அவனை முற்றாக மாற்றிவிடும் என்று நினைத்தார். இது மூடநம்பிக்கையல்ல என்ற எண்ணமும் காந்திக்கு தோன்றியது.
ஈபிள் கோபுரத்தைப் பலர் போற்றிப் புகழ்ந்தாலும் காந்தி மிகவும் மதிக்கும் எழுத்தாளர் டால்ஸ்டாய் இவற்றைக் குறை கூறியவர்களுள் ஒருவர். இது மனிதன் செய்யும் தவறுகளுக்கான சின்னமே தவிர அன்றி அவனுடைய அறிவுக்கான சின்னமல்ல என்பது அவருடைய விமர்சனமாக இருந்தது. அக்கோபுரம் மனிதனுக்கு ஒரு விளையாட்டுப் பொம்மை போலத்தான்.
பாரிஸ்டர் (Barrister) படிப்பை நிறைவு செய்ய இரண்டு நிபந்தனைகள் உண்டு. ஒன்று ‘முறை’களைக் கடைப்பிடிப்பது; மற்றொன்று தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது. ‘முறை’ என்பது மூன்று ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்வதாகும். இவ்வாறு நடக்கும் 24 விருந்துகளில் குறைந்தபட்சம் ஆறிலாவது கலந்து கொள்ள வேண்டும். விருந்துகளில் உணவு, மது எல்லாம் பரிமாறப்படும். உணவுக்கான செலவைவிட மதுபானச் செலவு அதிகமிருந்தது காந்திக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
மாணவர்களுக்கு அளிக்கும் விருந்தைவிட நீதிபதிகளுக்கு அளிக்கும் விருந்து உயர்தரமாக இருக்கும். காந்தியும் ஒரு பார்சி மாணவரும் சைவ உணவிற்கு மனு செய்து அனுமதி வாங்கினர். நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவில் இரண்டு பாட்டில்கள் ஒயின் கிடைக்கும். மதுவருந்தாத இவர்களைத் தங்கள் குழுவில் இணைத்துக் கொண்டால் இரண்டு பாட்டில்கள் ஒயின் கிடைக்கும் என்பதால் இவர்களுக்கு நல்ல வரவேற்பிருந்தது.
இந்த விருந்துகள் பாரிஸ்டர் தகுதியை எவ்வாறு வளர்க்கும் என்பது காந்திக்கு விளங்கவே இல்லை. நாகரீகம், நடை, உடை பாவனைகள், உலக அறிவு, பேச்சுத்திறன், நீதிபதிகளுடன் உரையாடுதல், சொற்பொழிவு போன்றவற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்ற கற்பிதம் இருந்தது. நீதிபதிகளுக்கு தனி உணவு மேசைகள் போடப்படுவதால் அதற்கான வாய்ப்புகள் காந்திக்கு கிடைக்கவே இல்லை.
பாரிஸ்டர் தேர்வுக்குரிய பாடங்கள் மிகவும் எளிமையானவை. எனவே ‘விருந்து பாரிஸ்டர்கள்’ என்று கிண்டலடிப்பதும் உண்டு. ரோமன் சட்டத் தேர்வு, பொதுச் சட்டத் தேர்வு என இரு தேர்வுகள் உண்டு. பாடங்களை முழுமையாகப் படிக்காமல் வெறும் குறிப்புகளைக் கொண்டே தேர்வில் வெற்றியடையலாம் என்கிற நிலை இருந்தது. பாடங்களை முழுமையாகப் படிக்காமலிருப்பது பெரும் மோசடி என்று கருதிய காந்தி அதிக பணம் மற்றும் நேரம் செலவிட்டு அனைத்து நூல்களையும் வாங்கிப் படித்தார். பாடங்களுடன் கூடவே பல்வேறு சட்ட நூல்களையும் படித்து தேர்வை திறம்படச் செய்தார். இது பிற்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் பணிசெய்ய பேருதவியாக அமைந்தது.
1891 ஜூன் 10 அன்று காந்தி பாரிஸ்டர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அடுத்த நாள் ஜூன் 11 உயர்நீதிமன்றத்தில் பாரிஸ்டராக பதிவு செய்துகொண்டார். மறுநாள் ஜூன் 12 இந்தியாவிற்கு எஸ்.எஸ். அஸ்ஸாம் என்ற கப்பலில் ஏறினார். காந்தி பயணம் செய்த கப்பல் மும்பை அடைந்தபோது துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்ததால் நீராவிப்படகு மூலம் கரையை அடைந்தார்.
(தொடரும்…)
நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் ஏப்ரல் 2023