அம்பேத்கரும் கல்வியும்
மு.சிவகுருநாதன்
கல்வி என்றால் என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொள்வது நல்லது. அதாவது, கல்வி ஒருவருக்கு நிர்வாணமான சிந்தனா சக்தியை அளிக்க வேண்டும். பற்றற்ற நிலையிலிருந்து சிந்திக்கத் தக்கவராக அவரை ஆக்க வேண்டும் என்று பெரியார் சொன்னார். இக்கருத்துகள் இங்கு சிந்திக்கத் தக்கன.
கல்வியின் நோக்கம் ஏதேனும் ஒன்றை திணிப்பதல்ல. மாறாக ஏற்கனவே இந்த சமூகத்தால் திணிக்கப்பட்டிருப்பதை வெளிக்கொணர்ந்து விடுவித்து அவர்களை நிர்வாணமாக்குவதே கல்வி. எத்தகைய பற்றுகளும் முன்முடிவுகளும் துறந்து நிர்வாணமாவதே கற்றலில் முதல்படி. அப்படி ஒன்றை அணுகும்போதுதான் சரியான முடிவுக்கு நாம் வர இயலும். இதைத்தான் திருவள்ளுவர் “மெய்ப்பொருள் காண்பது அறிவு”, என்கிறார். (குறள் எண்:423)
பற்றற்ற நிலை, நிர்வாண சிந்தனை என்பனவெல்லாம் பவுத்தம் நமக்களித்த கொடைகள். நிர்வாணம் என்பது ஆடைகள் இல்லாமல் இருப்பது அல்ல. ஒன்றை நீ சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நீ முதலில் உன் மனதில் கொண்டிருக்கும் எந்த நம்பிக்கையையும் இல்லாமல் உன்னை நிர்வாணம் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
“அறிந்தவற்றிலிருந்து விடுதலை” - என்பது ஒரு மிக முக்கியமான பவுத்தக் கோட்பாடு. நமது பெற்றோர்கள், நமது ஆசிரியர்கள் நம் மனதில் பதித்தவை, பாடநூல்கள், இதர நூல்கள், திரைப்படங்கள், சமூகம் போன்றவை நம்மிடம் திணித்த கருத்தாக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு முற்றிலும் முன் விருப்பு வெறுப்புகள் இன்றி எதையும் அணுகவேண்டும் என்பதே இதன் பொருளாகும். பவுத்தம், அம்பேத்கரியம், பெரியாரியம் ஆகியன ஒன்றுபடும் புள்ளிகளில் ஒன்றாக இதனைச் சுட்டலாம்.
அம்பேத்கருக்கு இருந்தபல்வேறு பணிச்சுமைகளுடன் சூத்திரர்கள் பற்றிய ஆய்வு நூலையும் மிகுந்த உழைப்பைக் கொடுத்து எழுதி முடிக்கிறார். “சூத்திரர்களின் தோற்றம் பற்றி ஆராய்வது வரவேற்கத்தக்கதே என்று ஒப்புக்கொள்ளப்பட்டாலும், இந்த விஷயத்தை கையாள்வதற்கு எனக்குள்ள தகுதி பற்றி சிலர் ஐயப்படக்கூடும். இந்திய அரசியல் பற்றிப் பேசுவதற்கு எனக்கு உரிமை இருந்தபோதிலும், சமயமும் இந்தியாவின் சமய வரலாறும் எனது துறை அல்ல என்று ஏற்கனவே நான் எச்சரிக்கப்பட்டுள்ளேன்.” என்று குறிப்பிடும் அம்பேத்கர், “தேவதைகள் தூங்கச் சென்று விடும்போது அல்லது உண்மையைக் கூறுவதற்குத் தயாராக இல்லாதபோது ஒரு முட்டாளுக்குக்கூட அவன் செய்யவேண்டிய கடமை இருக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”, என்று இந்த ஆய்வில் இறங்கியதாகச் சொல்கிறார்.
இதைப்போலவே பெரியாரும், “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்தநாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்”, என்று சுயமதிப்பீடு செய்துகொண்டு வாழ்ந்தார்.
தமிழகத்தில் தந்தை பெரியாருக்குக் கிடைக்காத நல்வாய்ப்பாக அண்ணல் அம்பேத்கரின் பேச்சுகள் எழுத்துகள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்கள் முழுமையும் 37 தொகுதிகளாக பல்லாயிரம் பக்கங்கள் மலிவு விலையில் இந்திய அரசால் வெளியிட்டது. அம்பேத்கரின் (1891-1956) நூற்றாண்டை ஒட்டி 1990களில் இவை தமிழ்நாட்டில் பரவலான வாசிப்பு மற்றும் விவாதங்களுக்கு வழிவகுத்தன. ஆனால் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்று பார்த்தால் தனஞ்செய கீரின் நூல் மட்டுமே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் சவார்க்கர் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்பதால் அதிலுள்ள போதாமைகளை இட்டு நிரப்ப தற்போது தமிழில் வழி நூல் இல்லை.
சி.பி. கேர்மோட் என்பவர் அம்பேத்கர் வாழ்க்கையை மிக விரிவாக 14 தொகுதிகளில் வெளியிட்டுள்ளார். அவை இனிமேல்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் தமிழுக்கு வரவேண்டும். ஆனந்த் டெல்தும்ப்டே போன்ற அம்பேத்கரிய ஆய்வாளர்கள் எழுதியுள்ள சில நூற்கள் தமிழில் கிடைக்கின்றன.
அம்பேத்கரின் இளமைக்காலம், அவர் பட்ட துன்பங்கள், கல்வி, பரோடா மன்னர் உதவி பெற்று வெளிநாடு சென்று படித்து பலதுறைகளில் மேதையாகவும் இந்தியாவின் தலைசிறந்த அரசியல் தலைவராகவும் உருவான வரலாறு நமக்குத் தெரியும். அவர் தனக்கு உதவிய ஆசிரியர் ஒருவர் பெயரைத் தமக்குச் சூட்டிகொண்டார் என்ற ஒரு கருத்து பல்லாண்டாக பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மையல்ல என்பதை ‘கழுவப்படும் பெயழுக்கு’ என்ற யாக்கனின் ஆய்வுநூல் தெளிவு படுத்துகிறது. அவரது இளவயதிலேயே கல்வி மூலம் முன்னேறும் எண்ணமும் அதற்கான உந்துதலும் பலமாக இருந்தன.
அம்பேத்கர் சட்டம், பொருளியல், வரலாறு, தத்துவம், மானுடவியல், சமூகவியல், கல்வியியல் போன்ற பல்வேறு துறைகளில் தலைசிறந்த அறிஞராகத் திகழ்ந்தவர். அவர் தாம் பெற்ற கல்வியை அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலையினர் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பியவர். அவர் அதற்கான முயற்சிகளில் வாழ்நாள் முழுதும் ஈடுபட்டவர்.
1920களின் பம்பாய் மாகாண சட்ட மேலவை விவாதங்களில் பங்கேற்று அம்பேத்கர் பேசிய உரைகளில் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப கல்விக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும், இடைநிற்றல் குறைக்கப்பட வேண்டும், உயர்கல்வி குறைந்த செலவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தொடக்கக் கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை முன்வைக்கிறார். இவை அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என பெருவிருப்பம் கொண்டிருந்தார்.
இந்தியர்களின் கல்வி நிலை குறித்து பம்பாய் மாகாண சட்டமன்ற மேலவையில் 1927 மார்ச் 12 ஆம் தேதி பேசும்போது, “கல்விக்கு தனிநபருக்கு 14 அணா மட்டுமே பம்பாய் மாகாணம் செலவழித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், கலால் வரியாக 35 அணா வசூலிக்கப்படுகிறது. மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் கலால் வரி அளவுக்கேனும் கல்விக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும்” என்று வாதிட்டார். அதே கூட்டத்தில், “எழுத்தறிவு பெற்று தொடக்கப் பள்ளியை விட்டுச் செல்வதும், வாழ்நாள் முழுவதும் எழுத்தறிவோடு திகழ்வதுமே தொடக்கக் கல்வியின் நோக்கமாகும். ஆனால், புள்ளிவிவரங்களின்படி தொடக்கப் பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கும் 100 குழந்தைகளில் 18 குழந்தைகள் மட்டுமே நான்காம் வகுப்பை எட்டுகின்றனர். மீதமுள்ள 82 பேர் எழுத்தறிவின்றித் தவிக்கின்றனர்” என்றார்.
அண்ணல் அம்பேத்கர் ‘மூக் நாயக்’ (குரலற்றவர்களின் தலைவன்) என்ற இதழையும் ‘பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா’ (Bahishkrit Hitaharini Sabha) என்ற அமைப்பையும் தொடங்கினார். இந்த அமைப்பு 1924 ஜூலை 20 இல் மும்பையில் தொடங்கப்பட்டது. புறக்கணிக்கப்பட்டோருக்கு (ஒடுக்கப்பட்டோருக்கு) இதமளிக்கும் (விடுதலை) இயக்கமே ‘பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா’ (Bahishkrit Hitaharini Sabha) என்றழைக்கப்படுவது. இதன் புகழ் பெற்ற முழக்கமே ‘கற்பி, ஒன்று சேர், போராடு’ என்பதாகும்.
இம்முழக்கத்திற்கேற்ப ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியைப் பரப்ப மாணவர் விடுதிகள், நூலகங்கள், படிப்பு வட்டங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாக இவ்வமைப்பு கொண்டிருந்தது. அதன்படி ஷோலாப்பூருக்கு அருகே இலவச மாணவர் விடுதியும் பைகுல்லா என்னுமிடத்தில் நூலகமும் ‘வித்யா விலாஸ்’ என்ற மாத இதழையும் இந்த அமைப்பு நடத்தியது. பின்னாளில் (1928) சைமன் குழுவிடம் கல்வி மேம்பாட்டிற்காக விரிவான அறிக்கை ஒன்றையும் தயாரித்து அளித்தார்.
1928இல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் கல்விக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி ஐந்து இலவச மாணவர் விடுதிகளை நடத்தினார். 1945 ஜூலை 8இல் மக்கள் கல்விச் சங்கம் (People’s Education Society) என்ற அமைப்பை உருவாக்கி, அதன் வழியே மும்பையில் கல்லூரி ஒன்றைத் தொடங்குவதற்கு ஆறு லட்சம் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தார். இது போதாது, 15 லட்சங்கள் தேவை என்கிற நிலையில், எஞ்சிய தொகை நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்டன. இன்றும் இந்த அமைப்பின் சார்பில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் என மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன.
அம்பேத்கர் ஜனநாயகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அம்பேத்கர் தனது லட்சியங்களை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கையில் கண்டார். இவற்றைத் தாம் பிரஞ்சுப் புரட்சியிலிருந்து பெறவில்லை; மாறாக புத்தரின் போதனைகளிலிருந்து பெற்றதாகக் கூறுகிறார். வன்முறை, ரத்தம் சிந்தும் புரட்சி போன்றவற்றில் உடன்பாடில்லாத நிலை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உள்ளிட்ட எந்தவகையான சர்வாதிகாரத்தையும் அவர் ஏற்க தயாராக இல்லை.
அரசியல் சட்ட வரைவுக் குழுவிற்குத் தலைமையேற்ற அம்பேத்கர் கல்வி போன்றவற்றை அடிப்படை உரிமையாக்கப் போராடினார். அது முடியாத காரணத்தால் வழிகாட்டு நெறிமுறைகளில் வைத்தார். 2010 இல் அவரது கனவு 6-14 வயதெல்லைக் குழந்தைகளுக்கு மட்டும் அமலானது. அடிப்படை உரிமைகளுக்கு உள்ள சட்ட அங்கீகாரம் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இல்லை. எனவேதான் சாதித் தொழில்கள், மதுவிலக்கு, பசுப் பராமரிப்பு, எல்லா மதத்தினருக்கு பொது சிவில் சட்டம் போன்ற கோரிக்கைகள் வழிகாட்டும் நெறிமுறைகளில் சேர்த்திடவும் அம்பேத்கர் காரணமாக இருந்தார். பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (Bahishkrit Hitaharini Sabha) என்ற இயக்கம், சுதந்திரத் தொழிலாளர் கட்சி, அட்டவணைச் சாதிக் கூட்டமைப்பு ஆகிய இரண்டு கட்சிகளை மட்டுமல்ல; பின்னாளில் இந்தக் கூட்டமைப்பை இந்தியக் குடியரசுக் கட்சியாகவும் அம்பேத்கர் மாற்றினார்.
இந்து மதத்தில் இருந்து கொண்டு உரிமைகளுக்கான போராடிப் பின்னர் வெளியேறுதல் என்ற நிலை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்திலிருந்து சுதந்திரத் தொழிலாளர் கட்சி தொடங்கி இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட்ட நிலை, மீண்டும் பட்டியல் சாதி கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலில் பங்கேற்று தோல்வியுற்ற நிலை, அரசியல் சட்ட அவையில் தனித்துவமான பங்களிப்பு செய்தல், நேரு அமைச்சரவையிலிருந்து விலகி ‘பட்டியல் சாதி’ என்ற குறுகிய அடையாளத்திலிருந்து குடியரசுக் கட்சி என்ற விரிவான அடையாளத்தை நோக்கி நகர்தல் என அம்பேத்கர் வாழ்வில் கவனம் குவிக்க வேண்டிய சில அம்சங்களாக காண முடிகிறது.
தீண்டத்தகாத மனிதராக, கல்வியில் சிறந்தவராக, பிரிட்டிஷ் வைஸ்ராயின் நிர்வாக சபை உறுப்பினராக, அரசியல் சட்ட வரைவுக்குழுத் தலைவராக, நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக, புத்த மதத்தில் தன்னை இணைத்துகொண்ட ஆன்மீகவாதியாக என இருந்த அம்பேத்கரில் எவற்றை நினைவுகூர்வது என பேரா. உபேந்திரா பக்சி எழுதுகிறார். நாம் இதோடு சேர்த்து பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா, சுதந்திரத் தொழிலாளர் கட்சி, அட்டவணை சாதியினர் கூட்டமைப்பு, குடியரசுக் கட்சி ஆகிய வேறுசில அம்பேத்கர்களையும் இணைத்துப் பார்க்கலாம்.
மதக் கோட்பாடுகளுக்குப் பாடத்திட்டத்தில் இடமில்லை என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். நாட்டைப் போல கல்வியும் மதச்சார்ப்பற்றதாக இருக்க வேண்டும், வட்டார மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றார். அதே வேளையில், ஆங்கிலக் கல்வி அவசியம் என்பதையும் வலியுறுத்தினார். பாட்த்திட்டங்கள் அறிவியல்பூர்வமாகவும் முற்போக்கானதாகவும் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.
இந்தியாவிலிலுள்ள படிநிலைச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடினர் மற்றும் குற்றப்பரம்பரையினர் ஆகியோர் வளர்ச்சியில் சமமற்ற நிலையில் உள்ளனர். இவர்களது கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் அரசு கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் என்று போராடினார்.
அம்பேத்கர் தமது இறுதிக்காலத்தில் 1956இல் நாக்பூரில் ஓர் அரசியல் பயிற்சிப் பள்ளியை நிறுவினார். ‘Training School for Entrance to Politics’ என்பது இதன் பெயர். இதன் மூலம் நவீன இந்தியாவிற்கு சிறந்த அரசியல்வாதிகளை உருவாக்க விரும்பினார். கல்வியை அடுத்தகட்ட நகர்விற்கு ஆயத்தப்படுத்த விரும்பினார். இப்பள்ளியில் மேடைப்பேச்சுக் கலை, பவுத்த தத்துவப் பார்வை, சமூக அறிவியல் பாடங்கள், நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியன கற்பிக்கப்பட்டன. 15 மாணவர்களுடன் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டன. அம்பேத்கர் 1956 டிசம்பர் 06 மரணமடைந்த பிறகு இப்பள்ளி செயல்படாமல் போய்விட்டது.
கல்வி என்பது பட்டம் பெறுதலும் அதன்வழியே பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகோலுவது மட்டுமன்று. சமூகச் சமத்துவம், சமூக முன்னேற்றம், சமூக, அரசியல், பொருளாதார உரிமைகள் பெறுதல், பிறருக்குக் கல்வி தருதல், அவர்களை இயக்கமாக்கி ஒன்றிணைத்தல், உரிமைகளுக்கான குரலெழுப்புதல் போன்றவற்றின் விளைச்சலாக அவர் கல்வியைக் கண்டார். ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள், பெண்கள், தொழிலாளர்கள் போன்றோரின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். இதற்கு கல்வியை அடிப்படை ஆதாரமாகக் கொண்டார். அவரைப் பயில்வதும் கல்வியில் உயர்ந்து சமூகத்தை உயர்த்துவதும் நாம் அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக